Revised Common Lectionary (Semicontinuous)
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.
59 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னோடு போரிட வந்துள்ள ஜனங்களை வெல்வதற்கு எனக்கு உதவும்.
2 தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
அக்கொலைக்காரரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
3 பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் என்னைக் கொல்லக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் நான் பாவமோ குற்றமோ செய்யவில்லை.
4 அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
ஆனால் நானோ தவறேதும் செய்யவில்லை.
கர்த்தாவே, நீரே வந்து அதைப் பாரும்.
5 நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.
எழுந்து அந்த ஜனங்களைத் தண்டியும்.
அத்தீய ஏமாற்றுக்காரருக்கு இரக்கம் காட்டாதேயும்.
6 அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து
ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள்.
7 அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும்.
அவர்கள் கொடியவற்றைச் சொல்கிறார்கள்.
அவற்றை யார் கேட்டாலும் அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.
8 கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும்.
அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும்.
9 தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன்.
தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர்.
10 தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார்.
என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார்.
11 தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள்.
என் ஆண்டவரும் பாதுகாவலருமானவரே, உமது வல்லமையால் அவர்களைச் சிதறடித்துத் தோல்வியை காணச் செய்யும்.
12 அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர்.
அவர்கள் கூறியவற்றிற்காக அவர்களைத் தண்டியும்.
அவர்கள் அகந்தையே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்.
13 உமது கோபத்தில் அவர்களை அழியும்.
அவர்களை முற்றிலுமாக அழியும்!
யாக்கோபின் ஜனங்களையும், உலகம் முழுமையையும்,
தேவன் ஆளுகிறார் என்பதை அப்போது ஜனங்கள் அறிவார்கள்!
14 ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர்.
15 அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை.
அவர்களுக்கு உறங்க இடமும் இராது.
16 ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன்.
ஒவ்வொரு காலையும் உமது அன்பில் நான் களிகூருவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
தொல்லைகள் வரும்பொழுது நான் உம்மிடம் ஓடி வரலாம்.
17 உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன்.
ஏனெனில் நீரே உயர்ந்த மலைகளில் எனது பாதுகாப்பாயிருக்கிறீர்.
நீரே என்னை நேசிக்கும் தேவன்.
யெகூ யெஸ்ரயேலுக்குச் சென்றது
14 எனவே நிம்சியின் குமாரன் யோசபாத்தின் குமாரனான யெகூ யோராமுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான்.
அப்போது, யோராமும் இஸ்ரவேலரும் சேர்ந்து ஆராமின் ராஜாவாகிய ஆசகேலிடமிருந்து ராமோத் கீலேயாத்தை பாதுகாக்க முயன்றனர். 15 யோராம் ராஜா ஆசகேலுக்கு எதிராகப் போரிட்டான். ஆனால் ஆராமிய வீரர்கள் யோராமைக் காயப்படுத்தினார்கள். அவனும் குணப்படுத்திக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போனான்.
எனவே யெகூ, அதிகாரிகளிடம, “என்னை நீங்கள் புதிய ராஜாவாக ஏற்றுக்கொள்வதானால் நகரத்திலிருந்து எவரும் தப்பித்துப் போய் இந்தச் செய்தியை யெஸ்ரயேலின் சொல்லாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றான்.
16 யோராம் யெஸ்ரயேலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். எனவே யெகூ இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். அப்போது யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் யோராமைப் பார்க்க வந்திருந்தான்.
17 ஒரு காவல்காரன் யெஸ்ரயேல் நகரக் கோபுரத்தின் மீது நின்று பார்த்தான். யெகூவின் பெரிய கூட்டம் வருவதைக் கவனித்து, “ஒரு பெருங்கூட்டத்தைப் பார்க்கிறேன்” என்றான்.
யோராம், “சிலரைக் குதிரையில் அனுப்பி அவர்களை சந்தித்து, அவர்கள் சமாதானத்தோடு வருகிறார்களா என்று விசாரியுங்கள்” என்றான்.
18 எனவே, தூதுவன் யெகூவை சந்திக்க குதிரையில் சென்றான். தூதுவன், “நீங்கள் சமாதானத்தோடு வருகிறீர்களா? என்று ராஜா கேட்கச் சொன்னார்” என்று கேட்டான்.
அதற்கு யெகூ, “சமாதானத்துடன் எந்த சம்பந்தமும் உனக்கு இல்லை! என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.
காவல்காரன் யோராமிடம், “தூதுவன் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்துவிட்டான். அவன் திரும்பி வரவில்லை” என்றான்.
19 பிறகு யோராம் இரண்டாவது தூதுவனை குதிரையில் அனுப்பினான். அவன் யெகூவிடம் சென்று, “யோராம் ராஜா ‘சமாதானம்’ சொன்னான்” என்றான்.
அதற்கு யெகூ, “சமாதானத்திற்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்லை! என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.
20 காவல்காரனோ யோராமிடம், “இரண்டாவது தூதுவனும் கூட்டத்தோடு சேர்ந்துக் கொண்டான். அவனும் திரும்பி வரவில்லை. ஒரு பைத்தியக்காரனைப் போன்று ஒருவன் இரதத்தை ஓட்டுகிறான். நிம்சியின் குமாரனான யெகூவைப்போல அவன் தேரோட்டுகிறான்” என்றான்.
21 யோராம், “எனது இரதத்தைக் கொண்டு வா!” என்றான்.
வேலைக்காரர் ராஜாவின் இரதத்தைக் கொண்டு வந்தான். இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும் யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் யெகூவை சந்திக்கச் சென்றார்கள். அவர்கள் அவனை யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே சந்தித்தனர்.
22 யோராம் யெகூவைப் பார்த்து, “யெகூ, நீ சமாதானமாக வந்திருக்கிறாயா” என்று கேட்டான். அதற்கு யெகூ, “உன் தாயான யேசபேல் விபச்சாரமும் சூன்யமும் செய்து கொண்டிருக்கும்வரை சமாதானமாக இருக்கமுடியாது” என்றான்.
23 யோராம் குதிரையில் வேகமாகத் திரும்பினான். அவன் அகசியாவிடம், “அகசியா, இது தந்திரம்” என்றான்.
24 ஆனால் யெகூ தன் பலத்தையெல்லாம் கூட்டி வில்லில் அம்பை எய்தான். அம்பு அவனது முதுகில் துளைத்து இதயத்தின் வழியாகச் சென்றது. அவன் இரதத்திலிருந்து விழுந்து மரித்தான்.
25 யெகூ தனது இரத ஓட்டியான பித்காரிடம், “யோராமின் உடலை எடுத்து யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயலில் ஏறி. நானும் நீயும் யோரோமின் தந்தையான ஆகாபோடு பயணம் செய்யும்போது, இவனுக்கு இவ்வாறே நிகழும் என்று கர்த்தர் சொன்னதை எண்ணிப்பார். 26 கர்த்தர், ‘நேற்று நான் நாபோத் மற்றும் அவனது பிள்ளைகளின் இரத்தத்தைப் பார்த்தேன். நான் ஆகாபை இதே வயலில் தண்டிப்பேன்’, என்று சொன்னார்! எனவே, அவர் சொன்னபடியே, யோராமின் உடலை எடுத்து வயலுக்குள் வீசு!” என்றான்.
கிறிஸ்துவில் ஒன்றாகுதல்
11 நீங்கள் யூதர் அல்லாதவர்களாகப் பிறந்தீர்கள். உங்களை யூதர்கள் “விருத்தசேதனம் செய்யாதவர்கள்” என்று அழைக்கிறார்கள். அவர்கள் தங்களை “விருத்தசேதனம் செய்தவர்கள்” என்று அழைத்துக்கொள்கிறார்கள். இந்த விருத்தசேதனம் என்பது யூதர்கள் தங்கள் சரீரத்தில் செய்துகொள்ளும் ஏதோ ஒன்று தான். 12 கடந்த காலத்தில் கிறிஸ்து இல்லாமல் நீஙகள் இருந்தீர்கள் என்பதை நினைவுகூருங்கள். நீஙகள் இஸ்ரவேலின் மக்கள் அல்ல. தேவன் தம் மக்களுக்குச் செய்து கொடுத்த ஒப்பந்தத்தில் உங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. உங்களுக்குத் தேவனைப்பற்றித் தெரியாது. அவர் மீது நம்பிக்கையும் இல்லை. 13 ஆமாம், ஒரு முறை தேவனைவிட்டு வெகு தொலைவில் நீங்கள் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது தேவனோடு நெருக்கமாக இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் இரத்தமே உங்களை தேவனின் அருகில் கொண்டு வந்தது.
14 இப்பொழுது கிறிஸ்துவால் நமக்குச் சமாதானம் கிடைத்தது. கிறிஸ்து யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் ஒரே மக்களாக்கினார். இவர்களுக்கு இடையில் ஒரு சுவர் இருப்பது போலப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒருவரை ஒருவர் வெறுத்தனர். கிறிஸ்து தமது சரீரத்தைக் கொடுத்து பகை என்னும் சுவரை உடைத்தெறிந்தார். 15 யூதர்களின் சட்டங்கள் ஏராளமான கட்டளைகளையும், விதிகளையும் உடையன. ஆனால் கிறிஸ்து அச்சட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். யூதர், யூதர் அல்லாதவர் என்னும் இந்த இரு பிரிவுகளையும் ஒன்றாக்குவது அவர் நோக்கம். இதை அவர் சிலுவையில் இறந்ததன் மூலம் செய்து சமாதானத்தைக் கொண்டு வந்தார். 16 இரு பிரிவுகளுக்கும் இடையே இருந்த பகையைச் சிலுவையின் மூலம் முடிவடையச் செய்தார். 17 தேவனை விட்டு வெகு தொலைவில் இருந்த யூதர் அல்லாத உங்களிடம் கிறிஸ்து வந்து சாமாதானத்தை அறிவித்தார். அவர் தேவனுக்கு மிக நெருக்கமாய் இருந்த யூதர்களுக்கும் சமாதானத்தை அறிவித்தார். 18 ஆமாம்! கிறிஸ்து மூலமாக நாம் அனைவருக்கும் ஒரே ஆவிக்குள் பிதாவாகிய தேவனிடம் வருவதற்கு உரிமை பெற்றோம்.
19 ஆகவே யூதர் அல்லாதவர்களாகிய நீங்கள் இப்பொழுது அந்நிய தேசத்தில் பார்வையாளர்களோ அல்லது தற்காலிக குடிமக்களோ அல்ல. தேவனின் பரிசுத்தமான மக்களோடு நீங்களும் ஒரே குடிமக்களாகிவிட்டீர்கள். 20 விசுவாசிகளான நீங்கள் அவருக்குச் சொந்தமான கட்டிடத்தை போன்றவர்கள். அக்கட்டிடத்தில் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அஸ்திபாரக்கல்[a] போன்றவர்கள். கிறிஸ்து ஒருவர்தான் இக்கட்டிடத்தின் மிக முக்கியமான கல்லாவார். 21 அந்த முழுக் கட்டிடமும் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து அதனை வளர்த்து கர்த்தருக்குள் புனிதமான ஆலயமாக ஆக்கிவிடுகிறார். 22 கிறிஸ்துவுக்குள் நீங்களும் யூதர்களோடு சேர்ந்து கட்டப்பட்டிருக்கிறீர்கள். ஆவியால் தேவன் வாழும் ஆலயமாக நீங்களும் கட்டப்பட்டு வருகிறீர்கள்.
2008 by World Bible Translation Center