Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 122

ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல்.

122 ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது
    நான் மிகவும் மகிழ்ந்தேன்.
இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே
    நின்றுகொண்டிருக்கிறோம்.

இது புதிய எருசலேம்.
    ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு.
    கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள்.
    அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
அங்கு ராஜாக்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள்.
    தாவீதின் குடும்பத்து ராஜாக்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.

எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.
    “உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.
உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன்.
    உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”
என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக,
    இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக,
    இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன்.

எஸ்தர் 9:1-5

யூதர்களுக்கு வெற்றி

ஆதார் என்னும் 12ஆம் மாதத்தின் 13வது நாள், ஜனங்கள் ராஜாவின் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும். அன்றுதான் யூதர்களின் பகைவர்கள் அவர்களைத் தோற்கடிக்க நம்பியிருந்த நாள். இப்பொழுது அந்த நிலைமாறி யூதர்கள் தம்மை வெறுத்த பகைவர்களைவிட பலமுள்ளவர்களானார்கள். யூதர்கள் அகாஸ்வேரு ராஜாவின் நாடுகளில் எல்லாம் ஒன்று கூடினர். நம்மை அழிக்க நினைத்தவர்களைத் தாக்க போதுமான பலமுடையவர்களாயினர். எனவே, அவர்களுக்கு எதிராக நிற்க எவருக்கும் பலமில்லை. அந்த ஜனங்கள் யூதர்களுக்குப் பயந்தனர். எல்லா மாகாணங்களின் அதிகாரிகளும், தலைவர்களும், ஆளுநர்களும், யூதர்களுக்கு உதவினார்கள். ஏனென்றால் அவர்கள் மொர்தெகாய்க்கும் பயந்தனர். ராஜாவின் அரண்மனையில் மொர்தெகாய் மிக முக்கியமான நபராகிவிட்டான். ராஜாவின் மாகாணங்களிலுள்ள அனைவரும் அவனது பெயரையும், அவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதையும் அறிந்திருந்தனர். மொர்தெகாய் மேலும், மேலும் அதிகாரம் உள்ளவன் ஆனான்.

யூதர்கள் தம் பகைவர்கள் அனைவரையும் தோற்கடித்தனர். அவர்கள் தம் பகைவரைக் கொன்று அழிக்க வாளைப் பயன்படுத்தினார்கள். தம்மை வெறுத்த ஜனங்களைத் தம் விருப்பம்போல் யூதர்கள் செய்தார்கள்.

எஸ்தர் 9:18-23

பூரீம் விழா

18 சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 13 மற்றும் 14ஆம் நாட்களில் ஒன்று கூடினார்கள். 15வது நாள் அவர்கள் ஓய்வெடுத்தனர். அவர்கள் 15வது நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினர். 19 எனவே, நகரங்களிலும் கிராமங்களிலும் வாழ்ந்த யூதர்கள் 14வது நாளை பூரீம் விழாவாகக் கொண்டாடினார்கள். அதனை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினார்கள். அன்று விருந்தும் ஒருவர்கொருவர் அன்பளிப்பும் கொடுத்து மகிழ்ந்தனர்.

20 மொர்தெகாய் நிகழ்ந்த எல்லாவற்றையும் எழுதினான். பிறகு அவன் அகாஸ்வேரு ராஜாவின் மாகாணங்களில் உள்ள அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அருகிலும் தொலைவிலும் உள்ள அனைவருக்கும் கடிதம் அனுப்பினான். 21 மொர்தெகாய் அதில் யூதர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆதார் மாதத்தின் 14 மற்றும் 15ஆம் நாட்களில் பூரீம் விழாவை கொண்டாடும்படி எழுதினான். 22 யூதர்கள் அந்நாட்களைக் கொண்டாடினார்கள். ஏனென்றால், அந்நாட்களில் அவர்கள் தம் பகைவர்களை அழித்தனர். அம்மாதத்தில் அவர்களின் துயரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறியதால் அம்மாதத்தைக் கொண்டாடினார்கள். இம்மாதத்தில் அவர்களது அழுகை மாறி குதூகலமாய் கொண்டாடும் மாதமாக மாறிற்று. மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் கடிதம் எழுதினான். அவன் அவர்களிடம் அந்நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாளாக கொண்டாடச் சொன்னான். அவர்கள் ஒருவருக்கொருவர் விருந்தும் அன்பளிப்பும் கொடுத்து, ஏழைகளுக்குப் பரிசு கொடுத்து அந்த நாளை கொண்டாடச் சொன்னான்.

23 எனவே யூதர்கள் மொர்தெகாய் எழுதியவற்றை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் தொடங்கிய விழாவை தொடர ஒப்புக்கொண்டனர்.

லூக்கா 12:4-12

தேவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள்

(மத்தேயு 10:28-31)

பின்பு இயேசு மக்களை நோக்கி, “எனது நண்பர்களே! மக்களுக்கு அஞ்சாதீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன். மக்கள் உங்கள் சரீரத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதற்கு மேல் உங்களுக்கு அவர்கள் வேறெதையும் செய்ய முடியாது. நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டுமோ அவரை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களைக் கொல்வதற்கும் நரகத்தில் தள்ளுவதற்கும் ஆற்றல் வாய்ந்தவருக்கு (தேவனுக்கு) நீங்கள் பயப்படவேண்டும். ஆம், நீங்கள் பயப்படவேண்டியவர், அவர் மட்டுமே.

“பறவைகளை விற்கும்போது ஐந்து சிறியவைகள் இரண்டு காசுக்கு மாத்திரமே விலை பெறும். ஆனால், தேவன் அவற்றில் எதையும் மறப்பதில்லை. இதற்கும் மேலாக உங்கள் தலையில் இருக்கும் முடியின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் உங்கள் தகுதி மிகுதியானது.

இயேசுவைக் குறித்து வெட்கப்படாதீர்

(மத்தேயு 10:32-33; 12:32; 10:19-20)

“நான் உங்களுக்குச் சொல்வதாவது, பிறர் முன்னிலையில் ஒருவன் எழுந்து நின்று என்மீது அவனுக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறினால், நானும் அவன் எனக்குரியவன் என்பதைக் கூறுவேன். தேவதூதர்கள் முன்பாக இதைச் சொல்வேன். ஆனால் ஒருவன் மக்களுக்கு முன்பாக எழுந்து நின்று என்னை நம்பவில்லை என்று கூறுவானேயானால், அம்மனிதன் எனக்குரியவன் அல்லன். தேவ தூதர்களுக்கு முன்னிலையில் நான் இதைக் கூறுவேன்.

10 “மனித குமாரனுக்கு எதிராக ஒருவன் எதையேனும் கூறினால், அவன் மன்னிக்கப்படுவான். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவற்றை ஒருவன் பேசினால் அவன் மன்னிக்கப்படமாட்டான்.

11 “ஜெப ஆலயத்தில் தலைவர்களுக்கும், முக்கியமான மனிதர்களுக்கும் முன்பாக, உங்களைக் கொண்டு வரும்போது நீங்கள் எப்படி தற்காத்துக்கொள்வது அல்லது எதைக் கூறவேண்டும் என்று கலக்கம் அடையவேண்டாம். 12 அந்த வேளையில் பரிசுத்த ஆவியானவர் நீங்கள் கூற வேண்டியதை உங்களுக்குப் போதிப்பார்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center