Revised Common Lectionary (Semicontinuous)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல்.
122 ஜனங்கள், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது
நான் மிகவும் மகிழ்ந்தேன்.
2 இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே
நின்றுகொண்டிருக்கிறோம்.
3 இது புதிய எருசலேம்.
ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
4 இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவதுண்டு.
கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள்.
அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
5 அங்கு ராஜாக்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள்.
தாவீதின் குடும்பத்து ராஜாக்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.
6 எருசலேமின் சமானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்.
“உம்மை நேசிக்கும் ஜனங்கள் அங்கு சமாதானத்தைக் காண்பார்கள் என நான் நம்புகிறேன்.
7 உங்கள் வீடுகளின் உள்ளே சமாதானம் நிலவும் என நான் நம்புகிறேன்.
உங்கள் பெரிய கட்டிடங்களில் பாதுகாப்பு இருக்கும் என நான் நம்புகிறேன்.”
8 என் சகோதரர்கள், சுற்றத்தினர் ஆகியோரின் நன்மைக்காக,
இங்கு சமாதானம் நிலவவேண்டுமென நான் ஜெபிக்கிறேன்.
9 நமது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தின் நன்மைக்காக,
இந்நகரில் நன்மைகள் நிகழ வேண்டுமென நான் ஜெபம் செய்கிறேன்.
ஆமான் தூக்கிலிடப்படுகிறான்
7 எனவே ராஜாவும், ஆமானும் இராணி எஸ்தரோடு விருந்து உண்ணச் சென்றனர். 2 பிறகு இரண்டாம் நாள் விருந்தில் அவர்கள் திராட்சைரசம் குடிக்கும்போது, ராஜா மீண்டும் இராணியிடம் கேள்வி கேட்டான். அவன், “எஸ்தர் இராணியே, நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்? எதை வேண்டுமானாலும் கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். உன்னுடைய விருப்பம் என்ன? எனது நாட்டில் பாதி வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
3 பிறகு, எஸ்தர் இராணி, “ராஜாவே, நீர் என்னை விரும்பினால், இது உமக்கு விருப்பமானால் என்னை வாழவிடுங்கள். எனது ஜனங்களையும் வாழவிடுங்கள் என்று கேட்கிறேன். அதுதான் உம்மிடம் வேண்டுகிறேன். 4 ஏனென்றால், நானும் எனது ஜனங்களும் அழியவும், கொல்லப்படவும் விற்கப்பட்டோம். அடிமைகளாக விற்கப்பட்டால் கூட நான் மௌனமாக இருப்பேன். ஏனென்றால் அது ராஜாவைத் துன்புறத்துகிற ஒரு பிரச்சினையாக இருக்கமுடியாது” என்றாள்.
5 பிறகு ராஜா அகாஸ்வேரு எஸ்தர் இராணியிடம், “இதனை உனக்குச் செய்தவன் யார்? உனது ஜனங்களுக்கு இத்தகைய கொடுமையைச் செய்ய துணிந்த மனிதன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.
6 எஸ்தர், “எங்களுக்கு எதிரானவன் எங்கள் பகைவன் இந்த கெட்ட ஆமான்தான்” என்றாள்.
பிறகு, ராஜா மற்றும் இராணி முன்னால் ஆமான் திகில் அடைந்தான். 7 ராஜா மிகவும் கோபம் அடைந்தான். அவன் எழுந்து திராட்சைரசம் விருந்தைவிட்டு, தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் ஆமான் உள்ளே இருந்து எஸ்தர் இராணியிடம் தன் உயிரைக் காப்பாற்றுமாறு கெஞ்சினான். அவன் தன் உயிருக்காக மன்றாடினான். ஏனென்றால், அவனைக் கொல்லுமாறு ஏற்கெனவே ராஜா முடிவுச் செய்துவிட்டதை அவன் அறிந்தான். 8 ராஜா தோட்டத்திலிருந்து திரும்பி விருந்து அறைக்குள்ளே நுழையும்போது, இராணி எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையில் ஆமான் விழுந்து கிடந்தான். ராஜா மிகவும் கோபமான குரலில், “நான் இந்த வீட்டில் இருக்கும்போதே நீ இராணியைத் தாக்குகிறாயோ?” எனக் கேட்டான்.
ராஜா இவ்வாறு சொன்ன உடனேயே வேலைக்காரர்கள் வந்து ஆமானின் முகத்தை மூடினார்கள். 9 பிரதானிகளில் ஒருவனான ராஜாவுக்கு சேவைச் செய்பவனின் பெயர் அற்போனா. அவன் ராஜாவிடம், “ஆமானின் வீட்டின் அருகில் 75 அடி உயரத்தில் ஒரு தூக்குமரம் கட்டப்பட்டுள்ளது. அதில் மொர்தெகாயைத் தூக்கிலிடவேண்டும் என்றே ஆமான் அதைக் கட்டினான். மொர்தெகாய் உமக்கு உதவிச் செய்த ஆள், உம்மை கொல்லத் திட்டமிட்டத் தீயர்வர்களைப்பற்றி உமக்குச் சொன்னவன்” என்றான்.
ராஜா, “ஆமானை அதே மரத்தில் தூக்கில் போடுங்கள்” என்றான்.
10 எனவே, அவர்கள் ஆமானை அவன் மொர்தெகாய்க்காக கட்டிய தூக்கு மரத்தில் போட்டனர். பிறகு ராஜா தன் கோபத்தை நிறுத்தினான்.
9 நான் யோவான், கிறிஸ்துவில் நான் உங்கள் சகோதரன். இயேசுவின் நிமித்தம் வரும் துன்பங்களுக்கும், இராஜ்யத்துக்கும், பொறுமைக்கும் நாம் பங்காளிகள். தேவனின் செய்தியைப் போதித்துக்கொண்டிருந்ததற்காகவும், இயேசுவைப் பற்றிய சாட்சியின் நிமித்தமாகவும் பத்மு[a] என்னும் தீவிற்கு நான் நாடுகடத்தப்பட்டேன். 10 கர்த்தருடைய நாளில் பரிசுத்த ஆவியானவர் என்னை ஆட்கொண்டார். அப்பொழுது ஒரு பெரிய சத்தத்தை எனக்குப் பின்பாகக் கேட்டேன். அது எக்காள சத்தம்போல் இருந்தது. 11 அந்த சத்தம், “நீ பார்க்கின்ற எல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் எழுது. அதனை ஏழு சபைகளுக்கும் அனுப்பு. அவை ஆசியாவில் உள்ள எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் நகரங்களில் உள்ளன” என்று கூறியது.
12 என்னோடு பேசிக்கொண்டிருந்தவர் யார் என அறிய நான் திரும்பிப் பார்த்தேன். நான் ஏழு பொன்னாலான குத்துவிளக்குகளைப் பார்த்தேன். 13 அவற்றுக்கு மத்தியில் “மனித குமாரனைப் போன்ற” ஒருவரைக் கண்டேன். அவர் நீண்ட மேல் அங்கியை அணிந்திருந்தார். அவர் மார்பில் பொன்னால் ஆன கச்சை கட்டப்பட்டிருந்தது. 14 அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப்போலவும், பனியைப்போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன. 15 அவரது பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்துகொண்டிருக்கிற ஒளிமிக்க வெண்கலம்போல் இருந்தன. அவரது சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. 16 அவர் தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் வாயில் இருந்து இருபக்கமும் கூர்மையுள்ள வாள் வெளிப்பட்டது. அவர் முகம் உச்சி நேரத்தில் ஒளிவீசும் சூரியனைப்போல ஒளி வீசியது.
17 நான் அவரைக் கண்டதும் இறந்தவனைப்போல அவரது பாதங்களில் விழுந்தேன். அவர் தனது வலது கையை என்மீது வைத்து, பயப்படாதே, நானே முந்தினவரும், பிந்தினவரும் ஆக இருக்கிறேன். 18 நான் வாழ்கிற ஒருவராக இருக்கிறேன். நான் இறந்தேன். ஆனால் இப்போது சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்கள் உள்ளன. 19 எனவே, நீ பார்த்தவற்றையெல்லாம் எழுது. இப்பொழுது நடப்பதையும், இனிமேல் நடக்கப்போவதையும் எழுது. 20 எனது வலது கையில் உள்ள ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும் ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது. நீ கண்ட ஏழு குத்து விளக்குகளும் ஏழு சபைகளாகும். ஏழு நட்சத்திரங்களும் அந்தச் சபைகளில் உள்ள தூதர்களாகும்.
2008 by World Bible Translation Center