Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 46

அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்

46 தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார்.
    தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம்.
எனவே பூமி நடுங்கினாலும்,
    மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.
கடல் கொந்தளித்து இருள் சூழ்ந்தாலும்
    பர்வ தங்கள் நடுங்கி அதிர்ந்தாலும் நாம் அஞ்சோம்.

உன்னத தேவனுடைய பரிசுத்த நகரத்திற்கு,
    மகிழ்ச்சி அளிக்கிற ஓடைகளையுடைய நதி ஒன்று இருக்கிறது.
அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார்.
    சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.
தேசங்கள் பயத்தால் நடுங்கும்.
    கர்த்தர் சத்தமிடுகையில் அந்த இராஜ்யங்கள் விழும், பூமி சீர்குலையும்.
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

கர்த்தர் செய்யும் வல்லமை மிக்க காரியங்களைப் பாருங்கள்.
    அவர் பூமியின்மேல் செய்துள்ள பயத்திற்குரிய காரியங்களைப் பாருங்கள்.
பூமியில் எவ்விடத்தில் போர் நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நிறுத்த வல்லவர்.
    வீரர்களின் வில்லுகளை அவர் முறித்து அவர்கள் ஈட்டிகளைச் சிதறடிக்கிறார்.
    இரதங்களை நெருப்பினால் அழிக்க தேவன் வல்லவர்.

10 தேவன், “நீங்கள் சண்டையிடுவதை நிறுத்தி அமைதியாயிருந்து நானே தேவன் என உணருங்கள்!
    நான் பூமியில் பெருமையுற்று தேசங்களில் வாழ்த்தப்படுவேன்” என்று கூறினார்.

11 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
    யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

ஆதியாகமம் 1:1-2:4

உலகத்தின் தொடக்கம்

துவக்கத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது வெறுமையாக இருந்தது; தண்ணீரின்மேல் இருள் சூழ்ந்திருந்தது. தேவ ஆவியானவர் அந்தத் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

முதல் நாள்-வெளிச்சம்

அப்பொழுது தேவன், “வெளிச்சம் உண்டாகட்டும்” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. தேவன் வெளிச்சத்தைப் பார்த்தார். அது நல்லதென்று அறிந்துகொண்டார். பிறகு தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் “பகல்” என்று பெயரிட்டார். அவர் இருளுக்கு “இரவு” என்று பெயரிட்டார்.

மாலையும் காலையும் ஏற்பட்டது. இதுவே முதல் நாளாயிற்று.

இரண்டாம் நாள்-வானம்

பிறகு தேவன், “இரண்டு பாகமாக தண்ணீர்ப் பகுதி பிரிந்து ஆகாய விரிவு உண்டாகக்கடவது!” என்றார். தேவன் காற்றின் விரிவை உருவாக்கி, தண்ணீரைத் தனியாகப் பிரித்தார். தண்ணீரில் ஒரு பகுதி காற்றிற்கு மேலேயும், மறுபகுதி காற்றிற்குக் கீழேயும் ஆனது. தேவன் காற்றின் விரிவுக்கு “வானம்” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது இரண்டாம் நாள் ஆகும்.

மூன்றாம் நாள்-வறண்ட நிலமும் செடிகொடிகளும்

பிறகு தேவன், “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அவ்வாறே ஆயிற்று. 10 தேவன் அந்த காய்ந்த நிலத்துக்கு “பூமி” என்று பெயரிட்டார். ஒன்று சேர்ந்த தண்ணீருக்கு தேவன் “கடல்” என்று பெயரிட்டார். தேவன் இது நல்லது என்று கண்டார்.

11 பிறகு தேவன், “பூமியில் புல்லும் விதைகளைத் தரும் செடிகளும் கனிதருகிற மரங்களும் உருவாகட்டும். கனிமரங்கள் விதைகளை உடைய கனிகளை உருவாக்கட்டும். ஒவ்வொரு செடிகொடிகளும் தங்கள் இனத்தை உண்டாக்கக்கடவது. இவை பூமியிலே வளரட்டும்” என்று சொன்னார். அவ்வாறே ஆயிற்று. 12 பூமி புல்லையும் தானியங்களைக் கொடுக்கும் செடிகளையும் முளைப்பித்தது. பூமி விதைகளைக்கொண்ட பழங்களைக் கொடுக்கும் மரங்களை முளைப்பித்தது. ஒவ்வொரு செடியும் தனக்கேயுரிய இனத்தை உருவாக்கியது. தேவன் இது நல்லதென்று கண்டார்.

13 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது மூன்றாம் நாளாயிற்று.

நான்காவது நாள்-சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்

14 பிறகு தேவன், “வானத்தில் வெளிச்சம் உண்டாகட்டும், இந்த வெளிச்சமானது பகலையும் இரவையும் பிரிக்கட்டும். இந்த வெளிச்சங்கள் காலங்களையும் நாட்களையும் ஆண்டுகளையும் குறிப்பதாக இருக்கட்டும். 15 இந்த வெளிச்சங்கள் வானத்திலிருந்து பூமிக்கு ஒளி தரட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

16 தேவன் இரண்டு மகத்தான ஒளிச்சுடர்களை உண்டுபண்ணினார். தேவன் பெரிய ஒளிச்சுடரைப் பகலை ஆண்டுகொள்ளவும், சிறிய ஒளிச்சுடரை இரவை ஆண்டுகொள்ளவும் செய்தார். நட்சத்திரங்களையும் தேவன் உருவாக்கினார். 17 தேவன் இந்த ஒளிச்சுடர்களைப் பூமிக்கு வெளிச்சம் தரும்படி வானத்தில் வைத்தார். 18 இரவையும் பகலையும் ஆள்வதற்கு இந்த ஒளிச்சுடர்களைத் தேவன் வானத்தில் ஏற்படுத்தினார். இவை வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வேறுபாட்டை உண்டாக்கிற்று. இது நல்லது என்று தேவன் கண்டுகொண்டார்.

19 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது நான்காம் நாள்.

ஐந்தாம் நாள்-மீன்களும் பறவைகளும்

20 பிறகு தேவன், “தண்ணீரானது திரளான உயிரினங்களை தோற்றுவிப்பதாக, பூமியிலும் வானத்திலும் பறப்பதற்காக பறவைகள் உருவாகட்டும்” என்றார். 21 பிறகு தேவன் கடலில் வாழும் பெரிய உயிரினங்களை உருவாக்கினார். கடலுக்குள் அலைந்து திரிகிற ஏராளமான உயிரினங்களைப் படைத்தார். பல்வேறு வகையான கடல் வாழ் உயிர்களையும் படைத்தார். வானத்தில் பறந்து திரிகிறதற்கு பல்வேறுவகைப் பறவைகளையும் படைத்தார். தேவன் இது நல்லது என்று கண்டார்.

22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, இனப் பெருக்கம் செய்து, எண்ணிக்கையில் விருத்தியடைந்து கடல் தண்ணீரை நிரப்புங்கள், மேலும் பறவைகள் பூமியில் பெருகட்டும் என்று சொன்னார்.

23 மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஐந்தாம் நாள் ஆயிற்று.

ஆறாவது நாள்-மிருகங்களும் மனிதர்களும்

24 பிறகு தேவன், “பூமியானது, கால் நடைகள், ஊர்வன, காட்டு மிருகங்கள் முதலியனவற்றை அதனதன் இனத்திற்கு ஏற்ப தோற்றுவிப்பதாக” என்றார். அவை அப்படியே உண்டானது.

25 இவ்வாறு, தேவன் எல்லாவகையான மிருகங்களையும் படைத்தார். அவர் காட்டு மிருகங்களையும், வீட்டு மிருகங்களையும், பூமியில் ஊர்ந்து செல்லும் விதவிதமான உயிரினங்களையும் படைத்தார். இவை நல்லதென்று தேவன் கண்டுகொண்டார்.

26 அதன் பிறகு தேவன், “நாம் மனுக்குலத்தை நமது சாயலில் உருவாக்குவோம். மனிதர்கள் நம்மைப்போலவே இருப்பார்கள். அவர்கள் கடலில் உள்ள எல்லா மீன்களையும், வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளட்டும். அவர்கள் பெரிய மிருகங்களையும் தரையில் ஊரும் உயிரினங்களையும் ஆண்டுகொள்ளட்டும்” என்று சொன்னார்.

27 எனவே தேவன் தமது சொந்த சாயலிலேயே மனுகுலத்தைப் படைத்தார், தேவனுடைய சாயலாகவே அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். 28 தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களிடம், “பிள்ளைகளைப் பெற்று விருத்தியடையுங்கள், பூமியை நிரப்பி அதை ஆண்டுகொள்ளுங்கள். கடலில் உள்ள மீன்களையும் வானத்திலுள்ள பறவைகளையும் ஆண்டுகொள்ளுங்கள். பூமியில் அலைந்து திரிகின்ற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்றார்.

29 மேலும் தேவன், “நான் உங்களுக்குத் தானியங்களைத் தரும் அனைத்து வகைப் பயிரினங்களையும், எல்லாவகையான பழ மரங்களையும் தருகிறேன். அந்த மரங்கள் விதைகளோடு கூடிய கனிகளைத் தரும். அந்த விதைகளும் கனிகளும் உங்களுக்கு உணவாகும். 30 நான் புல் பூண்டுகளையெல்லாம் மிருகங்களுக்காகக் கொடுத்துள்ளேன். புல் பூண்டுகள் அவற்றுக்கு உணவாக இருக்கும். பூமியில் உள்ள அனைத்து மிருகங்களும் வானத்திலுள்ள அனைத்து பறவைகளும், தரையில் ஊர்கின்ற அனைத்து சிறு உயிரினங்களும் அவற்றை உணவாகக்கொள்ளும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

31 தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார்.

மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஆறாவது நாளாயிற்று.

ஏழாவது நாள்-ஓய்வு

பூமியும் வானமும் அவற்றிலுள்ள யாவும் படைக்கப்பட்டு முடிந்தது. தேவன் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார். ஆகையால் ஏழாவது நாள் அவர் ஓய்வெடுத்தார். தேவன் ஏழாவது நாளை ஆசீர்வதித்து அதனைப் பரிசுத்தமாக்கினார். அவர் அன்றைக்குத் தமது படைப்பு வேலைகளையெல்லாம் நிறைவு செய்துவிட்டு ஓய்வெடுத்ததால் அந்த நாள் சிறப்புக்குரியதாயிற்று.

மனித குலத்தின் தொடக்கம்

இதுதான் பூமி மற்றும் வானம் தோன்றின வரலாறாகும். இதுதான் தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது, நடந்தவற்றைப்பற்றிக் கூறும் விபரங்களாகும்.

ரோமர் 2:17-29

யூதர்களும் நியாயப்பிரமாணமும்

17 நீ என்ன செய்யப்போகிறாய்? நீ யூதனென்று சொல்லிக்கொள்கிறாய். நீ நியாயப் பிரமாணத்தில் விசுவாசம் வைத்து தேவனுக்கு நெருக்கமாய் இருப்பதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறாய். 18 தேவன் உனக்கு என்ன செய்ய விரும்புகிறார் என்று உனக்குத் தெரியும். நீ நியாயப்பிரமாணத்தைக் கற்றவனாதலால் உனக்கு எது முக்கியமானது என்றும் தெரியும். 19 என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிற மக்களுக்கு நீங்களே வழிகாட்டி என எண்ணிக்கொள்கிறீர்கள். பாவ இருட்டில் உள்ள மக்களுக்கு நீங்களே வெளிச்சம் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். 20 அறிவற்ற மக்களுக்குச் சரியானதைக் காட்ட முடியும் என்று கருதுகிறீர்கள். இன்னும் கற்கவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு நீங்களே குரு என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் நியாயப்பிரமாணம் இருப்பதால் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும், எல்லா உண்மைகளும் உங்களிடம் இருப்பதாகவும் எண்ணுகிறீர்கள். 21 நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள். நீங்கள் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? நீங்கள் மற்றவர்களிடம் களவு செய்யக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே களவு செய்கிறீர்கள். 22 நீங்கள் மற்றவர்களிடம் விபச்சாரம் செய்யக் கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே அதே பாவத்தைச் செய்யும் பாவிகளாக இருக்கிறீர்கள். சிலைகளை நீங்கள் வெறுக்கிறீர்கள். ஆனால் அதே கோவில்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். 23 நீங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள். ஆனால் அதை மீறி நடந்து தேவனுக்கு அவமானத்தை உருவாக்குகிறீர்கள். 24 “யூதர்களால்தான் யூதர் அல்லாதவர்கள் தேவனைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்” [a] என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.

25 நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடித்தால்தான் விருத்தசேதனம் செய்துகொண்டதில் பொருள் உண்டு. நீங்கள் சட்ட விதிகளை மீறுவீர்களேயானால் நீங்கள் விருத்தசேதனம் செய்தும் அது பயனற்றதாகிறது. 26 யூதர் அல்லாதவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களே. எனினும் அவர்கள் சட்டவிதிகளின்படி வாழ்வார்களேயானால் அவர்களும் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களாகவே கருதப்படுவர். 27 யூதர்களாகிய உங்களுக்கு எழுதப்பட்ட சட்டவிதிகளும், விருத்தசேதனமும் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் மீறுகிறீர்கள். எனவே தம் சரீரங்களில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாக இருந்தும் கூட சட்ட விதிகளை மதித்து நடப்பவர்கள் உங்கள் குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்.

28 சரீரத்தால் யூதனாகப் பிறந்தவன் எவனும் உண்மையில் யூதன் அல்லன். உண்மையான விருத்தசேதனம் என்பது சரீரத்தளவில் செய்யப்படுவது அல்ல. 29 மனத்தளவில் யூதனாக இருப்பவனே உண்மையான யூதன். உண்மையான விருத்தசேதனம் இருதயத்தில் செய்யப்படுவது. அது ஆவியால் செய்யப்படுவது. அது எழுதப்பட்ட ஆணைகளால் செய்யப்படுவதல்ல. ஆவியின் மூலம் இதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படும் ஒருவன் மக்களால் புகழப்படாவிட்டாலும் தேவனால் புகழப்படுவான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center