Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 21

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

21 கர்த்தாவே, உமது பெலன் ராஜாவை மகிழ்விக்கிறது.
    நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.
நீர் ராஜாவுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர்.
    ராஜா சிலவற்றைக் கேட்டான்.
கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.

கர்த்தாவே, நீர் உண்மையாகவே ராஜாவை ஆசீர்வதித்தீர்.
    அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர்.
தேவனே ராஜா உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர்.
    நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர்.
வெற்றிக்கு நேராக நீர் ராஜாவை வழிநடத்தினீர்.
    அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர்.
    அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர்.
தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த ராஜாவை ஆசீர்வதித்தீர்.
    உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து ராஜாவைப் பாதுகாத்தீர்.
    ராஜா உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும்.
ராஜா கர்த்தரை நம்புகிறான்.
    உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.
தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர்.
    உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.
கர்த்தாவே, நீர் ராஜாவோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார்.
    அவர் தன் பகைவர்களை அழிப்பார்.
10 அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும்.
    அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.
11 ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள்.
    அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.
12 கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர்.
    நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர்.
அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர்.
    அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.

13 கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும்.
    கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!

ஏசாயா 24:1-16

தேவன் இஸ்ரவேலைத் தண்டிப்பார்.

24 பார்! கர்த்தர் இந்த நாட்டை அழிப்பார். இந்த நாட்டிலுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் துடைத்துவிடுவார். கர்த்தர் இங்குள்ள ஜனங்களை வெளியே துரத்துவார்.

அந்த நேரத்தில், பொது ஜனங்களும், ஆசாரியர்களும் சமமாக இருப்பார்கள். அடிமைகளும், எஜமானர்களும் சமமாக இருப்பார்கள். பெண் அடிமைகளும் அவர்களது பெண் எஜமானர்களும் சமமாக இருப்பார்கள். வாங்குபவர்களும், விற்பவர்களும் சமமாக இருப்பார்கள். கடன் வாங்கும் ஜனங்களும், கடன் கொடுக்கும் ஜனங்களும் சமமாக இருப்பார்கள். வட்டி வாங்கினவனும், வட்டி கொடுத்தவனும் சமமாக இருப்பார்கள். ஜனங்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அனைத்து செல்வமும் எடுக்கப்படும். இது நிகழும். ஏனென்றால், கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். இந்த நாடு காலியாகவும் துக்கமாகவும் இருக்கும். உலகமே காலியாகவும் பலவீனமாகவும் இருக்கும். இந்நாட்டு பெருந்தலைவர்கள் பலவீனமானவர்கள்.

ஜனங்கள் நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள். இது எப்படி நிகழ்ந்தது? தேவனுடைய போதனைகளுக்கு எதிராக ஜனங்கள் தவறானவற்றைச் செய்தனர். தேவனுடைய சட்டங்களுக்கு அவர்கள் அடி பணியவில்லை. நீண்ட காலத்துக்கு முன்பு தேவனோடு இந்த ஜனங்கள் ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்டனர். ஆனால், அந்த ஜனங்கள் தேவனோடுள்ள உடன்படிக்கையை முறித்துவிட்டனர். இந்நாட்டில் வாழும் ஜனங்கள் தீமைகளைச் செய்த குற்றவாளிகள். எனவே, தேவன் இந்நாட்டை அழிப்பதாக உறுதி செய்தார். ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். மிகச்சிலர் மட்டுமே உயிரோடு இருப்பார்கள்.

திராட்சைக் கொடிகள் வாடிக்கொண்டிருக்கும். புதிய திராட்சைரசம் மோசமாகும். கடந்த காலத்தில் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த ஜனங்கள் துக்கமாயுள்ளனர். ஜனங்கள் மகிழ்ச்சியாயிருப்பதை நிறுத்தியுள்ளனர். மகிழ்ச்சிகுரிய ஆரவாரங்கள் நிறுத்தப்பட்டன. வீணை மற்றும் முரசுகளிலிருந்து வரும் மகிழ்ச்சி இசையும் முடிக்கப்பட்டது. ஜனங்கள் தம் திராட்சை ரசத்தை குடிக்கும்போது, மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடமாட்டார்கள். இப்பொழுது மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசப்பாக இருக்கும்.

10 “மொத்த குழப்பம்” என்பது இந்நகரத்திற்கான நல்ல பெயராக உள்ளது. நகரம் அழிக்கப்பட்டிருக்கிறது. ஜனங்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது. கதவுகள் அடைப்பட்டிருக்கின்றன. 11 ஜனங்கள் இன்னும் சந்தை இடங்களில் திராட்சைரசத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டன. சந்தோஷம் வெகு தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. 12 நகரத்தில் அழிவு மட்டுமே விடப்பட்டுள்ளது. கதவுகள்கூட நொறுக்கப்பட்டுள்ளன.

13 அறுவடைக் காலத்தில், ஜனங்கள் ஒலிவமரத்திலிருந்து ஒலிவப் பழங்கள் உலுக்குவார்கள்.
    ஆனால், சில ஒலிவப் பழங்கள் விடப்பட்டிருக்கும்.
    இதுபோலவே, மற்ற தேசங்களால் சூழப்பட்டிருக்கும் இந்நாட்டில் ஜனங்களின் மத்தியிலும் இருக்கும்.
14 விடப்பட்ட ஜனங்கள் சத்தமிடத் தொடங்குவார்கள்.
    அவர்கள் கடலின் ஆரவாரத்தைவிட மிகுதியாகச் சத்தமிடுவார்கள்.
    கர்த்தர் பெரியவர் என்பதால் அவர்கள் மகிழ்வார்கள்.
15 அந்த ஜனங்கள், “கிழக்கில் உள்ள ஜனங்கள், கர்த்தரைத் துதிக்கிறார்கள்!
    தொலை நாட்டு ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிக்கின்றனர்” என்று சொல்வார்கள்.
16 பூமியிலுள்ள ஒவ்வொரு இடத்திலிருந்தும் தேவனைத் துதிக்கும் பாடலைக் கேட்போம்.
    இப்பாடல்கள் நல்ல தேவனைத் துதிக்கும்.
ஆனால், நான் சொல்கிறேன்:
    “போதும்! எனக்கு போதுமானது உள்ளது!
நான் பார்க்கின்றவை பயங்கரமாக உள்ளன.
    துரோகிகள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்பி, அவர்களைக் காயப்படுத்துகிறார்கள்.”

1 தெசலோனிக்கேயர் 4:1-12

தேவனை மகிழ்வூட்டும் வாழ்க்கை

சகோதர சகோதரிகளே! நான் உங்களுக்கு வேறு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். தேவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்குக் கற்பித்தோம். நீங்கள் அத்தகைய விதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மென்மெலும் அவ்வாறு வாழ கர்த்தராகிய இயேசுவின் பேரில் உங்களைக் கேட்டுக்கொள்வதோடு ஊக்கப்படுத்தவும் செய்கிறோம். நாங்கள் செய்யச் சொன்னவற்றை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தால் சொன்னோம். நீங்கள் பரிசுத்தமுடன் இருக்க தேவன் விரும்புகிறார். நீங்கள் பாலியல் குற்றத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். உங்கள் சரீரத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் சரீரத்தைத் தூய்மையாய் வைத்துக்கொள்ளுங்கள். அது தேவனுக்குப் பெருமை சேர்க்கும். உங்கள் சரீரத்தை வெறித்தனமான உணர்வுகளுக்கு ஒப்படைக்காதீர்கள். தேவனை அறிந்துகொள்ளாதவர்கள்தான் அதனை அதற்குப் பயன்படுத்துவார்கள். உங்களில் எவரும் கிறிஸ்துவுக்குள் இருக்கும் உங்கள் சகோதரர்களை இக்காரியத்தில் ஏமாற்றவோ, கெடுதல் செய்யவோ முயற்சி செய்யாதீர்கள். அவ்வாறு செய்பவர்களை கர்த்தர் தண்டிப்பார். இதைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி எச்சரித்திருக்கிறோம். நாம் பரிசுத்தமாய் இருக்கும்படி தேவன் அழைத்தார். நாம் பாவங்களில் வாழ்வதை அவர் விரும்பவில்லை. எனவே இந்தப் போதனைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறவன், மனிதருக்கு அல்ல, தேவனுக்கே கீழ்ப்படிய மறுக்கிறான். அவர் ஒருவரே நமக்கு பரிசுத்த ஆவியானவரைத் தர வல்லவர்.

கிறிஸ்துவுக்குள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் அன்பாய் இருங்கள் என்று உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் நேசிக்க தேவன் ஏற்கெனவே உங்களுக்குப் போதித்திருக்கிறார். 10 மக்கதோனியாவில் உள்ள எல்லா சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும் அன்பு செலுத்துகிறீர்கள். மேலும், மேலும் அன்பு செய்யுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.

11 சமாதானத்துக்குரிய வாழ்க்கையை வாழ நீங்கள் எல்லா செயல்களையும் செய்யுங்கள். உங்கள் சொந்தக் காரியங்களில் கவனமாய் இருங்கள், சொந்த வேலைகளைச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்யுமாறு ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். 12 இவற்றை எல்லாம் நீங்கள் செய்யும்போது விசுவாசமற்ற மக்கள் உங்கள் வாழ்வு முறையை மதிப்பார்கள். உங்கள் தேவைக்கு வேறு எவரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center