Revised Common Lectionary (Semicontinuous)
சாலொமோனுக்கு.
72 தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும்.
2 ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
3 தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
4 ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும்.
திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
5 சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
6 வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும்.
பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
7 அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
2 அப்போது, கர்த்தருடைய செடியானது (யூதா) அழகாகவும் உயர்வாகவும் இருக்கும். இஸ்ரவேலில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்கள் தம் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைவார்கள். 3 அப்போது, சீயோனிலும் எருசலேமிலும் வாழ்கின்ற மீதியான ஜனங்கள் பரிசுத்தமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். சிறப்புப் பெயர் பட்டியலில் தம் பெயருள்ள அனைவருக்கும் இது நிகழும். பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.
4 சீயோன் பெண்களின் இரத்தத்தை கர்த்தர் கழுவிவிடுவார். எருசலேமில் உள்ள அனைத்து இரத்தக் கறைகளையும் கர்த்தர் கழுவி போக்குவார். தேவன் நீதியின் ஆவியினால் நியாயம்தீர்ப்பார். சுட்டெரிப்பின் ஆவியினால் அனைத்தையும் சுத்தப்படுத்துவார்.
5 அப்போது, தேவன் தன் ஜனங்களோடு இருப்பதை நிரூபிப்பார். அந்நாளின் பகலில், தேவன் புகை மேகத்தை தோன்றச் செய்வார். இரவில், தேவன் ஒளிரும் நெருப்புச்சுடரையும் தோன்றச் செய்வார். இச்சாட்சிகள் வானத்தில் ஒவ்வொரு கட்டிடத்தின் மேலும் சீயோன் மலையில் நடைபெறும் ஒவ்வொரு ஜனங்கள் கூட்டத்தின் மேலும் தோன்றும், ஒவ்வொருவரைச் சுற்றிலும் அவர்களைப் பாதுகாக்க ஒரு மூடி அமையும். 6 இம்மூடியானது பாதுகாப்புக்கான இடம். இது ஜனங்களை சூரியனின் வெப்பத்திலிருந்து காக்கும். இம்மூடி வெள்ளம் மற்றும் மழையிலிருந்து காத்துக்கொள்ள உதவும்.
புதிய அப்போஸ்தலர்
12 பின்பு ஒலிவ மலையிலிருந்து அப்போஸ்தலர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். (இம்மலை எருசலேமிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது) 13 அப்போஸ்தலர்கள் நகரத்திற்குள் சென்றனர். அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அந்த அறை மாடியிலிருந்தது. பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்படும் சீமோன் மற்றும் யாக்கோபின் குமாரனாகிய யூதாஸ் ஆகிய அப்போஸ்தலர்கள் அங்கிருந்தனர்.
14 அப்போஸ்தலர்கள் அனைவரும் சேர்ந்திருந்தனர். ஒரே குறிக்கோள் உடையோராக விடாது பிரார்த்தனை செய்துகொண்டேயிருந்தனர். இயேசுவின் தாயாகிய மரியாளும் அவரது சகோதரர்களும் சில பெண்களும் அப்போஸ்தலரோடு கூட இருந்தனர்.
15 சில நாட்களுக்குப் பிறகு விசுவாசிகளாக அவர்கள் ஒன்று கூடினர். (சுமார் 120 பேர் அக்கூட்டத்தில் இருந்தனர்.) பேதுரு எழுந்து நின்று, 16-17 “சகோதரர்களே! வேதவாக்கியங்களில் பரிசுத்த ஆவியானவர் சில காரியங்கள் நடக்கும் என்று தாவீதின் மூலமாகக் கூறினார். நமது கூட்டத்தில் ஒருவனாகிய யூதாஸைக்குறித்து அவன் கூறியுள்ளான். யூதாஸ் நம்மோடு கூட சேவையில் ஈடுபட்டிருந்தான். இயேசுவைச் சிறைபிடிக்க யூதாஸ் மனிதர்களுக்கு வழிகாட்டுவான் என்பதை ஆவியானவர் கூறியிருந்தார்,” என்றான்.
21-22 “எனவே இன்னொருவன் நம்மோடு சேர்ந்துகொண்டு இயேசு உயிரோடு எழுந்ததற்கு சாட்சியாக இருக்கட்டும். ஆண்டவராகிய இயேசு நம்மோடு இருந்தபோது எப்போதும் நம்மோடு கூட இருந்த மனிதர்களில் ஒருவனாக அவன் இருத்தல் வேண்டும். யோவான் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து இயேசு பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் நம்மோடு இருந்தவனாக அவன் இருக்க வேண்டும்” என்றான்.
23 அப்போஸ்தலர்கள் கூட்டத்திற்கு முன் இருவரை நிறுத்தினர். ஒருவன் யோசேப்பு பர்சபா என்பவன். அவன் யுஸ்து என அழைக்கப்பட்டான். மற்றவன் மத்தியா என்பவன். 24-25 அப்போஸ்தலர்கள், “ஆண்டவரே, நீர் எல்லா மனிதர்களின் உள்ளங்களையும் அறிந்தவர். இந்த இருவரில் உம் சேவைக்கு நீர் யாரைத் தேர்ந்தெடுக்கிறீர் என்பதை எங்களுக்குக் காட்டும். யூதாஸ் இதனைவிட்டு நீங்கித் தனக்குரிய இடத்திற்குச் சென்றுவிட்டான். ஆண்டவரே, எந்த மனிதன் அப்போஸ்தலனாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டும்!” என்று பிரார்த்தனை செய்தார்கள். 26 பின்னர் அப்போஸ்தலர்கள் அந்த இருவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க சீட்டுகள் எழுதிப் போட்டனர். அதன்படி ஆண்டவர் விரும்பியவராக மத்தியாவை சீட்டுகள் காட்டின. எனவே அவன் மற்ற பதினொருவரோடும் கூட ஓர் அப்போஸ்தலன் ஆனான்.
2008 by World Bible Translation Center