Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 129

ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.

129 என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர்.
    இஸ்ரவேலே, அந்தப் பகைவர்களைப்பற்றிச் சொல்.
என் வாழ்க்கை முழுவதும் எனக்குப் பகைவர்கள் பலர் இருந்தனர்.
    ஆனால் அவர்கள் என்னை மேற்கொள்ளவில்லை.
என் முதுகில் ஆழமான காயங்கள் ஏற்படும்வரை அவர்கள் என்னை அடித்தார்கள்.
    எனக்கு நீளமான, ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
ஆனால் நல்லவராகிய கர்த்தர் கயிறுகளை அறுத்துக்
    கொடியோரிடமிருந்து என்னை விடுவித்தார்.

சீயோனை வெறுத்த ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
    அவர்கள் போரிடுவதை நிறுத்தி, ஓடிப்போய்விட்டார்கள்.
அவர்கள் கூரையின் மேலுள்ள புல்லைப் போன்றவர்கள்.
    வளரும் முன்னே அப்புல் வாடிப்போகும்.
ஒரு வேலையாளுக்கு ஒரு கை நிரம்ப அந்த புல் கிடைக்காது.
    ஒரு குவியல் தானியமும் கிடைப்பதில்லை.
அவர்களருகே நடக்கும் ஜனங்கள், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறமாட்டார்கள்.
    ஜனங்கள், “கர்த்தருடைய நாமத்தில் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்று அவர்களிடம் வாழ்த்துக் கூறமாட்டார்கள்.

எரேமியா 38:14-28

சிதேக்கியா எரேமியாவிடம் மீண்டும் சில கேள்விகளைக் கேட்கிறான்

14 பிறகு, ராஜா சிதேக்கியா ஒருவனை தீர்க்கதரிசி எரேமியாவிடம் அனுப்பினான். கர்த்தருடைய ஆலயத்தின் மூன்றாவது வாசலுக்கு அவன் எரேமியாவை அழைத்தான். பிறகு ராஜா, “எரேமியா, நான் உன்னிடம் சிலவற்றைக் கேட்கப்போகிறேன். என்னிடமிருந்து எதனையும் மறைக்க வேண்டாம். எல்லாவற்றையும் நேர்மையாக எனக்குக் கூறு” என்றான்.

15 எரேமியா சிதேக்கியாவிடம், “நான் உனக்குப் பதில் சொன்னால் நீ உண்மையில் என்னைக் கொல்வாய். நான் உனக்கு அறிவுரைச் சொன்னாலும் நான் சொல்வதை நீ கேட்கமாட்டாய்” என்றான்.

16 ஆனால் சிதேக்கியா ராஜா இரகசியமாக எரேமியாவிடம் ஒரு உறுதிமொழி செய்து கொடுத்தான். சிதேக்கியா, “கர்த்தர் நமக்கு ஜீவனும் ஆத்துமாவைக் கொடுத்திருக்கிறார். கர்த்தர் ஜீவனோடு இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் உன்னைக் கொல்லமாட்டேன் என்பதும், உன்னைக் கொல்ல விரும்புகிற அந்த அதிகாரிகளிடம் உன்னைக் கொடுக்கமாட்டேன் என்றும் நான் வாக்குறுதி அளிக்கிறேன்” என்றான்.

17 பிறகு எரேமியா சிதேக்கியா ராஜாவிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர், கூறுகிறார், ‘நீ பாபிலோன் ராஜாவின் அதிகாரிகளிடம் சரணடைந்தால் உனது வாழ்க்கை காப்பாற்றப்படும். எருசலேம் எரிக்கப்படாமல் இருக்கும். நீயும் உனது குடும்பமும் காக்கப்படுவீர்கள். 18 ஆனால் நீ சரணடைய மறுத்தால், பிறகு பாபிலோனியப் படையிடம் எருசலேம் கொடுக்கப்படும். அவர்கள் எருசலேமை எரிப்பார்கள். நீ அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது’” என்றான்.

19 ஆனால் ராஜா சிதேக்கியா எரேமியாவிடம், “ஆனால் நான் பாபிலோனியப் படையுடன் ஏற்கனவே சேர்ந்துவிட்ட யூதாவின் ஆட்களைப்பற்றிப் பயப்படுகிறேன். வீரர்கள் என்னை அந்த யூதாவின் ஆட்களிடம் கொடுப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன். அவர்கள் என்னை மோசமாக நடத்தி என்னைத் தாக்குவார்கள்” என்றான்.

20 ஆனால் எரேமியா பதிலாக, “யூதாவின் ஆட்களிடம் அவ்வீரர்கள் உன்னைக் கொடுக்கமாட்டார்கள். சிதேக்கியா ராஜாவே, நான் என்ன சொல்கிறேனோ அதன்படி கர்த்தருக்கு கீழ்ப்படி. பிறகு எல்லாம் உனக்கு நன்மையாகும். உனது வாழ்வு காப்பாற்றப்படும். 21 ஆனால் பாபிலோனிய படைக்குச் சரணடைய மறுத்தால், கர்த்தர் எனக்கு என்ன நடக்கும் என்பதைக் காட்டியிருக்கிறார். இதுதான் கர்த்தர் எனக்குச் சொன்னது. 22 யூதா ராஜாவின் வீட்டில் விடப்பட்டுள்ள ஸ்திரீகள் எல்லாம் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோன் ராஜாவின் முக்கிய அதிகாரிகளிடம் கொண்டுவரப்படுவார்கள். உங்கள் ஸ்திரீகள் ஒரு பாடலால் பரிகாசம் செய்வார்கள். இதுதான் அப்பெண்கள் சொல்வது:

“உங்கள் நல்ல நண்பர்கள் உனக்கு தந்திரம் செய்தார்கள்.
    தீயக் காரியங்களை செய்யும்படி உன்னை மாற்றுகின்றனர்.
உங்கள் கால்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன.
    பின்னர் உன்னை தன்னந்தனியே அவர்கள் விட்டுவிட்டனர்.”

23 “உன் மனைவிகளும் குழந்தைகளும் வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோனியப் படையிடம் கொடுக்கப்படுவார்கள். நீங்கள் பாபிலோன் படையிடமிருந்து தப்பிக்க முடியாது. நீ பாபிலோன் ராஜாவால் கைப்பற்றப்படுவாய். எருசலேம் எரிக்கப்படும்” என்றான்.

24 பிறகு சிதேக்கியா எரேமியாவிடம், “நீ எவரிடமும் நான் உன்னோடு பேசினேன் என்று சொல்ல வேண்டாம். நீ அவ்வாறு செய்தால் நீ மரிப்பாய். 25 அந்த அதிகாரிகள் நான் உன்னிடம் பேசியதைக் கண்டுப்பிடித்துவிடலாம். பிறகு அவர்கள் உன்னிடம் வந்து, ‘எரேமியா, நீ ராஜா சிதேக்கியாவிடம் என்ன சொன்னாய் என்பதை எங்களிடம் கூறு. ராஜா சிதேக்கியா உன்னிடம் என்ன சொன்னான் என்பதையும் எங்களிடம் கூறு. எங்களோடு நேர்மையாக இருந்து எல்லாவற்றையும் சொல் அல்லது நாங்கள் உன்னைக் கொல்வோம்’ என்று சொல்வார்கள். 26 அவர்கள் இதனை உன்னிடம் சொன்னால், அவர்களிடம் சொல், ‘நான் ராஜாவிடம் மீண்டும் என்னை யோனத்தானின் வீட்டின் அடியில் உள்ள பள்ளத்திற்குள் அனுப்பவேண்டாம். நான் அங்கே திரும்பப்போனால் நான் மரித்துவிடுவேன்’” என்று கெஞ்சிக்கொண்டிருந்தேன்.

27 இது நிகழ்ந்தது. அந்த அரச அதிகாரிகள் எரேமியாவிடம் கேள்விகள் கேட்க வந்தனர். ராஜா என்ன பதில் சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தானோ அதனையே சொன்னான். பிறகு எரேமியாவை அந்த அதிகாரிகள் தனியே விட்டனர். எவரும் எரேமியாவும் ராஜாவும் என்ன பேசினார்கள் என்று கேட்கவில்லை.

28 எனவே எரேமியா ஆலய பிரகாரத்தின் காவல் அறையில் எருசலேம் கைப்பற்றப்படும்வரை இருந்தான்.

1 கொரி 6:1-11

பிரச்சனைகளைத் தீர்த்தல்

உங்களில் ஒருவனுக்கு இன்னொருவனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனை உருவாகும்போது நீதிமன்றத்திலுள்ள நியாயாதிபதிகளிடம் நீங்கள் போவதென்ன? தேவனோடு சரியானவராக அந்த மனிதர்கள் இருப்பதில்லை. ஆகவே அந்த மனிதர்கள் உங்களுக்கு நீதி வழங்க நீங்கள் அனுமதிப்பதேன்? தேவனுடைய மனிதர்கள் அதனைத் தீர்மானிக்க நீங்கள் சம்மதிக்காதது ஏன்? தேவனுடைய மனிதர்கள் உலகத்திற்கு நீதி வழங்குவர் என்பது கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் உலகத்திற்கு நீதி வழங்கக் கூடுமாயின் இத்தகைய சிறு பிரச்சனைகளையும் நியாயம் தீர்க்கமுடியும். எதிர்காலத்தில் நீங்கள் தேவ தூதர்களையே நியாயம் தீர்ப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இந்த வாழ்க்கையின் காரியங்களை நாம் நியாயம் தீர்க்க முடியும். எனவே நியாயம் தீர்க்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் உங்களிடையே இருக்குமானால், ஏன் அப்பிரச்சனைகளைச் சபையின் அங்கத்தினரல்லாத மனிதர்களிடம் எடுத்துச் செல்கிறீர்கள்? அந்த மனிதர்கள் சபையைப் பொறுத்த அளவில் பொறுப்பற்றவர்கள். நீங்கள் வெட்கப்படும்படியாக இதனைக் கூறுகிறேன். நிச்சயமாய் உங்கள் மத்தியிலேயே இரு சகோதரர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய ஞானமுள்ள சிலர் இருக்கிறார்கள். ஆனால் இப்போதோ ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகிறான். இயேசுவை நம்பாதவர்களான மனிதர்கள் அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும்படியாக எதற்காக அனுமதிக்கிறீர்கள்?

உங்களிடையே வழக்குகள் இருக்கிறது என்னும் உண்மை தோல்வியின் ஒரு குறியீடு ஆகும். அதைவிட மற்றொருவன் செய்யும் தவறுகளையும் ஏமாற்றுவதையும் பொறுத்துக்கொள்வதுமே மேலானதாகும். ஆனால் நீங்களே உங்களுக்குள் தவறிழைத்து ஏமாற்றுகிறீர்கள். கிறிஸ்துவுக்குள் உங்கள் சொந்த சகோதரர்களுக்கே இதைச் செய்கிறீர்கள்.

9-10 தவறிழைக்கும் மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் பங்கு இல்லை என்பது உங்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ஏமாற்றப்படாதீர்கள். பாலுறவில் பாவம் செய்யும் மக்களும், உருவங்களை வழிபடும் மக்களும், பிற பெண்களை நாடும் மனிதர்களும் மற்ற மனிதர்கள் தம்மை பாலுறவுக்காப் பயன்படுத்த அனுமதிக்கும் மனிதர்களும், பிற மனிதர்களோடு பாலுறவு கொள்ளும் மனிதர்களும், களவு செய்வோரும், தன்னலம் உடையோரும், குடிப்பழக்கம் உள்ளவர்களும், தீயவற்றை பிறருக்குச் சொல்லும் மனிதர்களும், ஏமாற்றுவோர்களுமாகிய மனிதர்களும் தேவனுடைய இராஜ்யத்தை அடையமாட்டார்கள். 11 முன்னர் உங்களில் சிலரும் அவ்வாறு வாழ்ந்தீர்கள். ஆனால் நீங்கள் தூய்மையாய்க் கழுவப்பட்டீர்கள். நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். கர்த்தரின் பெயரால் தேவனோடு சரியானவர்களாக நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center