Revised Common Lectionary (Semicontinuous)
19 கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும்.
எனக்கு வீடு இல்லை.
நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும்.
20 நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்.
21 ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன்.
பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன்.
நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்:
22 கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை.
கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை.
23 ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்!
கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!
24 நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார்,
ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.
25 கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
கர்த்தர் அவரைத் தேடும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
26 ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள
கர்த்தருக்காக அமைதியாகக் காத்திருப்பது நல்லது.
12 நேபுசராதான், பாபிலோன் ராஜாவின் சிறப்பு காவல் படையின் தளபதி. அவன் எருசலேமிற்கு வந்தான். நேபுகாத்நேச்சாரின் 19வது ஆட்சியாண்டின் ஐந்தாவது மாதத்தின் 10வது நாளில் இது நடந்தது. பாபிலோனில் நேபுசராதான் ஒரு முக்கியமான தலைவன். 13 நேபுசராதான் கர்த்தருடைய ஆலயத்தை எரித்தான். அவன் எருசலேமில் ராஜாவின் அரண்மனையையும் இன்னும் பல வீடுகளையும் எரித்தான். எருசலேமில் உள்ள ஒவ்வொரு முக்கிய கட்டிடத்தையும் எரித்தான். 14 பாபிலோனியப் படை முழுவதும் எருசலேமைச் சுற்றியுள்ள சுவர்களை உடைத்தது. அப்படை அரசரது சிறப்புப் படையின் தளபதியின்கீழ் இருந்தது. 15 நேபுசராதான், தளபதி, எருசலேமில் மீதியாக இருந்த ஜனங்களைக் கைதிகளாகச் சிறைபடுத்தினான். பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும் அவன் அழைத்துக் கொண்டுப்போனான். எருசலேமில் மீதியாக இருந்த கைவினைக் கலைஞர்களையும் அவன் அழைத்துக்கொண்டுப்போனான். 16 ஆனால் நேபுசராதான் அந்நாட்டில் சில ஏழைகளை மட்டும் விட்டுவிட்டுப் போனான். திராட்சைத் தோட்டத்திலும் வயல்களிலும் வேலை செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டுப் போனான்.
17 பாபிலோனியப்படை ஆலயத்தில் உள்ள வெண்கலத்தூண்களை உடைத்தார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள தாங்கிகளையும் வெண்கலத்தொட்டியையும் உடைத்தார்கள். அவர்கள் பாபிலோனுக்கு அவ்வெண்கலத்தைக் கொண்டுப் போனார்கள். 18 பாபிலோனியப்படை ஆலயத்திலிருந்து கீழ்க்கண்டவற்றைக் கொண்டுப்போனது. செப்புச் சட்டிகள், சாம்பல் எடுக்கும் கரண்டிகள், வெட்டுக்கத்திகள், கலங்கள், கலயங்கள், ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகள், 19 ராஜாவின் சிறப்புக் காவல் படையின் தளபதி இவற்றையும் கொண்டுபோனான். கிண்ணங்கள், நெருப்புத்தட்டுகள், கலங்கள், சட்டிகள், விளக்குத் தண்டுகள், கலயங்கள், கரகங்கள், பான பலிகளின் காணிக்கை மற்றும் வெள்ளியாலும் பொன்னாலுமான எல்லாவற்றையும் அவன் எடுத்தான். 20 இரண்டு தூண்கள், கடல் தொட்டியும் அதனடியில் உள்ள பன்னிரெண்டு வெண்கல காளைகளும் நகரும் தாங்கிகளும் மிக கனமானவை. சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்காக செய்தான். எடை பார்க்க முடியாத அளவுள்ள வெண்கலத்தை இப்பொருட்கள் செய்ய பயன்படுத்தினான். 21 ஒவ்வொரு வெண்கலத் தூணும் 31 அடி உயரமுடையது. ஒவ்வொரு தூணும் 21 அடி சுற்றளவு உள்ளது. ஒவ்வொரு தூணும் உள்ளே வெற்றிடம் கொண்டது. ஒவ்வொரு தூணிண் சுவரும் 3 அங்குலம் உடையது. 22 முதல் தூணின் மேலிருந்த குமிழின் உயரம் 8 அடி உயரம் உடையது. அதைச்சுற்றிலும் வலைப் பின்னல்களாலும் மாதளம் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அடுத்தத் தூணிலும் மாதளம்பழ அலங்காரம் உண்டு. அது முதல் தூணைப்போன்றிருந்து. 23 மொத்தம் 96 மாதுளம்பழங்கள் தூணின் பக்கங்களில் தொங்கின. ஆக மொத்தம் 100 மாதுளம்பழங்கள் வலைப் பின்னலில் தூண்களைச் சுற்றி இருந்தன.
24 ராஜாவின் சிறப்புக் காவல்படை தளபதி செராயா மற்றும் செப்பனியாவை கைதிகளாகச் சிறைப்பிடித்தான். செராயா தலைமை ஆசாரியன், செப்பனியா அடுத்த ஆசாரியன். மூன்று வாயில் காவலர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். 25 ராஜாவின் சிறப்புக் காவல் படைத் தளபதி சண்டையிடுவோரின் மேலதிகாரியைச் சிறைப்பிடித்தான். அவர் ராஜாவின் ஏழு ஆலோசகர்களையும் சிறைப்பிடித்தான். எருசலேமில் அவர்கள் அப்பொழுதும் இருந்தனர். படையில் சேர்க்கின்ற எழுத்தாளனையும் அவன் பிடித்தான். அவன் நகரில் இருந்த சாதாரண ஆட்கள் 60 பேரையும் பிடித்தான். 26-27 நேபுசராதான் தளபதி இந்த அதிகாரிகள் எல்லோரையும் பிடித்தான். அவன் அவர்களை பாபிலோன் ராஜாவிடம் கொண்டு வந்தான். பாபிலோன் ராஜா ரிப்லா நகரில் இருந்தான். ரிப்லா ஆமாத் நாட்டில் இருக்கிறது. அந்த ரிப்லா நகரில், ராஜா அதிகாரிகளையெல்லாம் கொல்லும்படி கட்டளையிட்டான்.
எனவே யூதா ஜனங்கள் தமது நாட்டிலிருந்து பிடித்துச்செல்லப்பட்டனர். 28 நேபுகாத்நேச்சார் எத்தனை ஜனங்களைக் கைது செய்தான் என்னும் பட்டியல் இது:
நேபுகாத்நேச்சாரின் ஏழாவது ஆட்சியாண்டில் யூதாவிலிருந்து 3,023 ஆண்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
29 நேபுகாத்நேச்சாரின் 18வது ஆட்சியாண்டில் 832 ஜனங்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
30 நேபுகாத்நேச்சாரின் 23வது ஆட்சியாண்டில் நேபுசராதான் 745 பேரைக் கைது செய்து கொண்டுப்போனான்.
நேபுசராதான் ராஜாவின் சிறப்புக் காவல் படையின் தளபதி.
மொத்தம் 4,600 ஜனங்கள் சிறை செய்யப்பட்டனர்.
பெர்கமு சபைக்கு இயேசுவின் நிருபம்
12 “பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: இருபக்கமும் கூர்மையான வாளைக்கொண்டிருக்கிறவர் இதனை உங்களுக்குக் கூறுகிறார்.
13 “நீ எங்கே வாழ்கிறாய் என்று எனக்குத் தெரியும். சாத்தானுடைய சிம்மாசனம் இருக்கிற இடத்தில் நீ இருக்கிறாய். ஆனால் நீ எனக்கு உண்மையானவனாக இருக்கிறாய். அந்திப்பாசின் காலத்திலும் என்மீதுள்ள உன் விசுவாசத்தை நீ மறுத்ததில்லை. அந்திப்பா எனது உண்மையுள்ள சாட்சி. அவன் உங்கள் நகரத்தில் கொல்லப்பட்டான். உங்கள் நகரம் சாத்தான் வாழுமிடம்.
14 “ஆனாலும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உண்டு. உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் பிலேயாமின் உபதேசத்தைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிலேயாம் இஸ்ரவேலைப் பாவத்துக்கு வழி நடத்த பாலாக் என்பவனால் பலவந்தப்படுத்தப்பட்டவனாவான். இதனால் அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்டு, பாலியல் பாவங்களும் செய்தனர். 15 இதுபோலவே உங்கள் கூட்டத்தில் நிக்கொலாய் மதத்தவர்களின் போதகத்தைப் பின்பற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். 16 எனவே உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள். மாறாவிட்டால் நான் விரைவில் உங்களிடம் வருவேன். என் வாயின் வாளால் அவர்களோடு போரிடுவேன்.
17 “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்கவேண்டும்!
“ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைக் கொடுப்பேன்.[a] அதோடு அவனுக்கு வெள்ளைக் கல்லையும் கொடுப்பேன். அக்கல்லில் புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும். ஒருவருக்கும் அந்தப் பெயர் தெரியாது. அக்கல்லை எவன் பெறுகிறானோ அவன் ஒருவனே அந்தப் புதிய பெயரை அறிந்துகொள்வான்.
தியத்தீரா சபைக்கு இயேசுவின் நிருபம்
18 “தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: தேவனின் குமாரன் இவற்றைக் கூறுகிறார். அவர் ஒருவரே அக்கினிபோல ஒளிவிடும் கண்களையும், பிரகாசமான வெண்கலம் போன்ற ஒளி தரும் பாதங்களையும் கொண்டவர். அவர் உனக்குச் சொல்வது இது தான்.
19 “நீ செய்கின்றவற்றை நான் அறிவேன். நான் உன் அன்பையும், விசுவாசத்தையும், சேவையையும், பொறுமையையும் அறிவேன். துவக்கக்காலத்தை விட இப்போது நீ அதிகமாகச் செய்வதையும் நான் அறிவேன். 20 எனினும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உள்ளன. ஏசபேல் என்னும் பெண்ணுக்குத் தனது விருப்பம்போல வாழ நீ இடம் கொடுக்கிறாய். அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்கிறாள். அவள் தன் உபதேசத்தால் என் மக்களை என்னைவிட்டுத் தூரமாக்குகின்றாள். அவளால் அவர்கள் பாலியல் பாவங்களைச் செய்கிறார்கள். மற்றும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்கிறார்கள். 21 அவள் தன் மனதை மாற்றிக்கொள்ளவும், தன் பாவங்களில் இருந்து விலகவும் நான் அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவள் மாற விரும்பவில்லை.
22 “எனவே அவளையும், அவளோடு பாவம் செய்தவர்களையும் நான் அவளுடைய படுக்கையில் எறிந்து அவர்களை மிகவும் வருந்தச் செய்வேன். அவளுடைய செய்கைகளிலிருந்து அவர்கள் மாறாவிட்டால். 23 நான் இப்பொழுதே இதனை நிகழ்த்துவேன். அவளைப் பின்பற்றுகிறவர்களையும் நான் கொல்லுவேன். அப்பொழுது எல்லாச் சபைகளும், ‘நான் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் அறிந்துள்ளவர்’ என்பதை அறிவார்கள். உங்களில் ஒவ்வொருவருக்கும் உங்கள் செயல்களுக்கு ஏற்றபலன் தருவேன்.
24 “ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன். 25 நான் வருகிறவரை இதனையே தொடர்ந்து செய்துவாருங்கள்.
26 “இதில் இறுதிவரை இதுபோல் இருந்து வெற்றி பெறுகிறவர்களுக்கு மற்ற தேசங்களின் மேல் நான் அதிகாரத்தைக் கொடுப்பேன். 27 அவன் அவர்களை இரும்புக் கோலால் ஆள்வான். மண்பாண்டங்களைப்போல் தூள்தூளாக அவர்களை நொறுக்குவான்.[b] 28 “என் பிதாவிடமிருந்து இந்த வல்லமையை நான் பெற்றுக்கொண்டேன். மேலும் நான் அவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்.” 29 சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.
2008 by World Bible Translation Center