Revised Common Lectionary (Semicontinuous)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
125 கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள்.
அவர்கள் அசைக்கப்படுவதில்லை.
அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.
2 எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக் காப்பார்.
3 நல்ல ஜனங்களின் நாட்டைக் கொடிய ஜனங்கள் நிரந்தரமாக ஆளப்போவதில்லை.
அவ்வாறு நிகழ்ந்தால் நல்லோரும் கூட தீய காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.
4 கர்த்தாவே, நல்லோருக்கு நல்லவராக இரும்.
பரிசுத்த இருதயம் உள்ளோரிடம் நல்லவராக இரும்.
5 கொடிய ஜனங்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள்.
அக்கொடியோரை கர்த்தர் தண்டிப்பார்.
இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!
எலியாவும் பாகாலின் தீர்க்கதரிசிகளும்
18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், மழை பெய்யவில்லை. கர்த்தர் எலியாவிடம், “போய் ஆகாப் ராஜாவைப் பார். நான் மழையை அனுப்புவேன்” என்றார். 2 எனவே எலியா ஆகாப்பை சந்திக்கச் சென்றான்.
அப்போது, சமாரியாவில் உணவே இல்லை. 3 எனவே ராஜா அரண்மனை விசாரிப்புக்காரனான ஒபதியாவைத் தன்னிடம் வரவழைத்தான். (காரணம் ஒபதியா உண்மையான கர்த்தருடைய ஊழியன். 4 ஒருமுறை யேசபேல் கர்த்தருடைய எல்லா தீர்க்கதரிசிகளையும் கொன்றாள். எனவே ஒபதியா 100 தீர்க்கதரிசிகளை 2 குகைகளில் ஒளித்து வைத்தான். ஒவ்வொன்றிலும் 50 பேரை வைத்தான். அவர்களுக்கு உணவும், தண்ணீரும் அளித்தான்.) 5 ராஜா ஒபதியாவிடம், “இந்த நாட்டின் வழியாக என்னைப் போகவிடு. நாம் இங்குள்ள ஒவ்வொரு ஊற்றையும் ஆற்றையும் பார்ப்போம். நமது குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் புல் கிடைக்குமா என்று பார்ப்போம். கிடைத்தால் இந்த மிருகங்களைக் கொல்ல வேண்டாம்” என்றான். 6 நாட்டைப் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒரு பகுதிக்குத் தேடிப் போனார்கள். இருவரும் நாடு முழுக்கப் போனார்கள். ஆகாப் ஒரு திசையிலும் ஒபதியா இன்னொரு திசையிலும் போனார்கள். 7 ஒபதியா, எலியாவை சந்தித்தான். எலியாவைப் பணிந்து வணங்கினான். அவன், “எலியா? எஜமானரே! உண்மையில் நீங்கள் தானா?” என்று கேட்டான்.
8 அதற்கு எலியா, “ஆமாம்! நான்தான். நான் இங்கே இருப்பதாக உன் ராஜாவிடம் கூறு” என்றான்.
9 பிறகு ஒபதியா, “நீர் இங்கே இருப்பதைப் பற்றி நான் ராஜாவிடம் சொன்னால், அவர் என்னை கொல்வார்! நான் உங்களுக்கு எந்தத் தவறும் செய்யவில்லையே! ஏன் என்னை கொல்ல விரும்புகிறீர்கள்? 10 தேவனாகிய கர்த்தர் மீது ஆணையாகக் கூறுகிறேன். ராஜா உங்களை எல்லா இடங்களிலும் தேடினான்! எல்லா நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினான். ஒவ்வொரு நாட்டு ராஜாவிடம் நீர் அங்கே இல்லையென்று சத்தியம் செய்யும்படி செய்தான்! 11 நான் ராஜாவிடம் போய், நீங்கள் இங்கிருப்பதைச் சொன்னால் 12 பிறகு, கர்த்தருடைய ஆவி உங்களை இங்கிருந்து வேறு இடத்துக்குத் தூக்கிச் செல்லும். பிறகு, ராஜா உங்களைக் காணாமல் என்னைக் கொல்வான்! நான் சிறுவயது முதலே கர்த்தரைப் பின்பற்றி வருகிறேன். 13 நான் செய்ததை நீங்கள் அறிவீர்! யேசபேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றபோது நான் 100 தீர்க்கதரிசிகளை அழைத்துப் போய் 50 பேர் வீதம் இரண்டு குகைகளில் ஒளித்து வைத்தேன். உணவு கொடுத்து காப்பாற்றினேன். 14 இப்போது நீர் இங்கிருப்பதாக ராஜாவிடம் சொல்ல சொல்கிறீர். அவன் என்னைக் கொன்றுவிடுவான்!” என்றான்.
15 எலியாவோ, “சர்வவல்லமையுள்ள கர்த்தர் உறுதியாக வாழ்வதுபோல, நான் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று நான் ராஜா முன்பு நிற்பேன்” என்றான்.
16 எனவே ஒபதியா ராஜாவிடம் போய் எலியா இருக்கும் இடம்பற்றி கூறினான். ராஜாவும் எலியாவைப் பார்க்க வந்தான்.
17 ராஜா எலியாவைப் பார்த்ததும், “இது நீர்தானா? நீர்தான் இஸ்ரவேலில் எல்லா கஷ்டங்களுக்கும் காரணமானவரா?” என்று கேட்டான்.
18 அதற்கு எலியா, “இஸ்ரவேலின் துன்பத்திற்கு நான் காரணம் அல்ல. நீயும் உன் தந்தையின் குடும்பமும்தான் காரணம், நீங்கள் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. பொய்தெய்வங்களை பின்பற்றினீர்கள்.
முழு ஆயதங்களையும் அணியுங்கள்
10 இறுதியாக நான் எழுதுவது யாதெனில்: அவரது பெரும் பலத்தால் நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். 11 அவரது முழு ஆயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்களால் சாத்தானின் தந்திரங்களை எதிர்த்துப் போராட முடியும். 12 நமது போராட்டம் பூமியிலுள்ள மக்களை எதிர்த்தல்ல. நாம் இருட்டில் உள்ள ராஜாக்களையும், அதிகாரிகளையும், அதிகாரங்களையும் எதிர்த்தே போராடுகிறோம். வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கு எதிராகப் போர் செய்கிறோம். 13 அதனால்தான் தேவனின் முழுக் கவசங்களும் உங்களுக்குத் தேவை. அப்போது தான் உங்களால் தீங்கு நாளில் எதிர்த்து பலத்துடன் இருக்க முடியும். போர் முடித்த பிறகும் வல்லமையுடன் நிற்கமுடியும்.
14 எனவே உண்மை என்னும் இடுப்புக் கச்சையைக் கட்டிக்கொண்டு வலிமையாகுங்கள். சரியான வாழ்க்கை என்னும் கவசத்தை உங்கள் மார்பில் அணிந்துகொள்ளுங்கள். 15 சமாதானத்தின் நற்செய்தி என்னும் செருப்புகளை உங்கள் கால்களில் அணிந்துகொண்டு முழு தயார் நிலையில் நில்லுங்கள். 16 நம்பிக்கை என்னும் கேடயத்தைக் கைகளில் தாங்கிக்கொள்ளுங்கள். சாத்தான் எறியும் அம்புகளை அதனால் தடுத்துவிட முடியும். 17 தேவனின் வார்த்தை என்னும் தலைக்கவசத்தை அணிந்துகொள்க! ஆவி என்னும் வாளை எடுத்துக்கொள்க. அது தேவனின் போதகங்களாகும்.
2008 by World Bible Translation Center