Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 140

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்.

140 கர்த்தாவே, என்னைப் பொல்லாதவர்களிடமிருந்து காப்பாற்றும்.
    கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
அந்த ஜனங்கள் பொல்லாதவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்கள்.
    அவர்கள் எப்போதும் சண்டையிட ஆரம்பிக்கிறார்கள்.
அவர்களது நாவுகள் விஷமுள்ள பாம்புகளைப் போன்றவை.
    அவர்களது நாவுகளின் கீழ் பாம்பின் விஷம் இருக்கும்.

கர்த்தாவே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    கொடியோரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
    அவர்கள் என்னைத் துரத்தி என்னைக் காயப்படுத்த முயல்கிறார்கள்.
அப்பெருமைக்காரர்கள் எனக்காக ஒரு கண்ணியை வைத்தார்கள்.
    என்னைப் பிடிக்க அவர்கள் ஒரு வலையை விரித்தார்கள்.
    அவர்கள் என் பாதையில் ஒரு கண்ணியை வைத்தார்கள்.

கர்த்தாவே, நீரே என் தேவன்.
    கர்த்தாவே, நீர் என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
கர்த்தாவே, நீர் என் பெலனான ஆண்டவர்.
    நீரே என் மீட்பர்.
    போரில் என் தலையைக் காக்கும் கவசத்தைப்போன்று இருக்கிறீர்.
கர்த்தாவே, அந்தத் தீய ஜனங்கள் பெற விரும்புகின்றவற்றை பெற அனுமதிக்காதிரும்.
    அவர்கள் திட்டங்கள் வெற்றியடையாமல் போகச் செய்யும்.

கர்த்தாவே, என் பகைவர்கள் வெற்றிப் பெறவிடாதேயும்.
    அந்த ஜனங்கள் தீய காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
    ஆனால் அத்தீமைகள் அவர்களுக்கே நேரிடுமாறு செய்யும்.
10 நெருப்புத் தழலை அவர்கள் தலையின் மீது ஊற்றும்.
    என் பகைவர்களை நெருப்பில் வீசும்.
    அவர்களைக் குழியில் தள்ளும்,
    அவர்கள் மீண்டும் வெளியேறி வராதபடி செய்யும்.
11 கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும்.
    அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும்.

12 கர்த்தர் ஏழைகளைத் தக்கபடி நியாயந்தீர்ப்பார் என நான் அறிவேன்.
    தேவன் திக்கற்றோருக்கு உதவுவார்.
13 கர்த்தாவே, நல்லோர் உமது நாமத்தைத் துதிப்பார்கள்.
    நல்லோர் உம்மைத் தொழுதுகொள்வார்கள்.

எஸ்தர் 5

எஸ்தர் ராஜாவிடம் பேசுகிறாள்

மூன்றாவது நாள், எஸ்தர் அவளுக்குரிய அரச உடைகளை அணிந்துக்கொண்டாள். பிறகு, அவள் ராஜாவின் அரண்மனை உட்பகுதிக்குள் போய் நின்றாள். அப்பகுதி ராஜாவின் சபைக்கு முன்னால் இருந்தது. ராஜா தனது சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் அரண்மனை வாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் இருந்தான். பிறகு, ராஜா எஸ்தர் இராணி முற்றத்தில் நிற்பதைப் பார்த்தான். அவன் அவளைப் பார்த்தபோது மகிழ்ச்சிடைந்தான். அதனால் அவன் அவளை நோக்கி தனது கையிலுள்ள செங்கோலை நீட்டினான். எனவே, எஸ்தர் அந்த அறைக்குள் சென்று ராஜா அருகில் போனாள். பிறகு அவள் ராஜாவின் பொற் செங்கோலின் முனையைத் தொட்டாள்.

பிறகு ராஜா, “எஸ்தர் இராணியே, நீ விரும்புகிறது என்ன? நீ என்னிடம் என்ன வேண்டுமென கேட்கிறாய்? நீ என்ன கேட்டாலும் நான் உனக்குத் தருவேன். எனது பாதி இராஜ்யம் கேட்டாலும் தருவேன்” என்றான்.

அதற்கு எஸ்தர், “நான் உங்களுக்கும் ஆமானுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்று அந்த விருந்துக்கு நீங்களும் ஆமானும் வரமுடியுமா?” என்று கேட்டாள்.

பிறகு ராஜா, “ஆமானை விரைவாக அழைத்து வா. எனவே எஸ்தர் என்ன கேட்கிறாளோ, அதன்படிச் செய்வோம்” என்றான்.

எனவே, ராஜாவும், ஆமானும் எஸ்தர் தயார் செய்த விருந்துக்குப் போனார்கள். அவர்கள் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போது ராஜா மீண்டும் எஸ்தரிடம், “இப்போது எஸ்தரே, என்னிடம் நீ என்ன கேட்க விருப்புகிறாய்? நான் அதனை உனக்கு கொடுப்பேன். நீ என்ன விரும்புகிறாய்? நீ என்ன விரும்பினாலும் அதனை நான் உனக்குக் கொடுப்பேன். நான் எனது பாதி இராஜ்யம்வரை கொடுப்பேன்.” என்றான். எஸ்தர், “இதுதான் நான் உம்மிடம் கேட்க விரும்பியது. ராஜா, எனக்கு ஆதரவு கொடுத்தால், ராஜா என்னிடம் தயவாக இருந்தால், ராஜாவும் ஆமானும் நாளையும் வரவேண்டும். நாளை ராஜாவுக்கும், ஆமானுக்கும் இன்னொரு விருந்து ஏற்பாடு செய்வேன். அப்பொழுது, நான் உண்மையில் என்ன விரும்புகிறேன் என்று சொல்வேன்” எனப் பதிலுரைத்தாள்.

மொர்தெகாய் மீது ஆமானின் கோபம்

அவனது வீட்டைவிட்டு ஆமான் மிகவும் மகிழ்ச்சியோடு சென்றான். அவன் நல்ல மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை ராஜாவின் வாசலில் பார்த்ததும் அவனுக்கு மொர்தெகாய் மீது கோபம் வந்தது. ஆமான் மொர்தெகாய் மீது மிகுந்த கோபமடைந்தான். ஏனென்றால், அவன் ஆமான் நடந்து வரும்போது எவ்வித மரியாதையையும் தரவில்லை. மொர்தெகாய் ஆமானைக் கண்டு பயப்படவில்லை. அது அவனை மேலும் கோபத்திற்குள்ளாக்கிற்று. 10 ஆனால் ஆமான் தனது கோபத்தைக் அடக்கிக்கொண்டு வீட்டிற்குப் போனான். பிறகு ஆமான் தனது நண்பர்களையும், மனைவி சிரேஷையும் அழைத்தான். 11 தான் எவ்வளவு செல்வமுடையவன் என்ற பெருமையோடு பேச ஆரம்பித்தான். அவன் தனது பல குமாரர்களைப் பற்றியும் ராஜா எவ்வழியில் எல்லாம் தன்னை பெருமைபடுத்துக்கிறான் என்பதைப் பற்றியும் பெருமையோடு பேசினான். மற்ற அதிகாரிகளைவிட தன்னை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருக்கிறான் என்பதையும் பெருமையோடு பேசினான். 12 ஆமான், “அதுமட்டுமல்ல, இராணி எஸ்தர் ராஜாவுக்குக் கொடுத்த விருந்தில் என்னை மட்டுமே அழைத்திருந்தாள். அவள் நாளை மீண்டும் விருந்துக்கு வருமாறு அழைத்தாள். 13 ஆனால் இவை யாவும் என்னை மகிழ்ச்சியடைய செய்யவில்லை. அந்த யூதனான மொர்தெகாய் ராஜாவின் வாசலில் உட்கார்ந்திருப்பதைக் காணும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்று சொன்னான்.

14 பிறகு ஆமானின் மனைவி சிரேஷ் மற்றும் நண்பர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அவர்கள், “யாராவது ஒருவரை, அவனைத் தூக்கிலிட கம்பம் கட்டச் சொல். அதனை 75 அடி உயரமுள்ளதாகச் செய். பிறகு, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கில் போடுமாறு ராஜாவை கேள். பிறகு, ராஜாவோடு விருந்துக்குப் போ. அப்போது உன்னால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியும்” என்றனர்.

ஆமான் இக்கருத்தை விரும்பினான். எனவே, அவன் சிலரிடம் தூக்கு மரக் கம்பம் செய்யுமாறு கட்டளையிட்டான்.

1 யோவான் 2:18-25

கிறிஸ்துவின் பகைவரைப் பின்பற்றாதீர்கள்

18 எனது அன்பான பிள்ளைகளே, முடிவு நெருங்குகிறது. போலிக் கிறிஸ்து வந்துகொண்டிருப்பதைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் பகைவர்கள் பலர் இங்கு ஏற்கெனவே உள்ளனர். எனவே முடிவு நெருங்குகிறது என்பதை நாம் அறிவோம். 19 நமது குழுவிலேயே கிறிஸ்துவின் பகைவர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் நம்மை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் நம்மோடு சேர்ந்தவர்களாக வாழவில்லை. உண்மையிலேயே நம் குழுவில் உள்ளவர்களாக அவர்கள் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் பிரிந்தனர். அவர்களில் ஒருவர் கூட நம்மோடு உண்மையாகச் சேர்ந்திருந்ததில்லை என்பதை இது காட்டுகிறது.

20 புனிதமான ஒருவர் உங்களுக்குக் கொடுத்த பரிசை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே உங்கள் எல்லோருக்கும் உண்மை தெரியும். 21 ஏன் நான் உங்களுக்கு எழுதுகிறேன்? நீங்கள் உண்மையை அறியாததால் எழுதுகிறேனா? இல்லை! நீங்கள் உண்மையை அறிந்திருப்பதாலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன். உண்மையிலிருந்து எந்தப் பொய்யும் வருவதில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

22 எனவே யார் பொய்யன்? இயேசுவை கிறிஸ்துவல்ல என்று கூறுபவனே பொய்யன். அவனே போலிக் கிறிஸ்து. அம்மனிதன் பிதாவிலோ அல்லது குமாரனிலோ நம்பிக்கை வைப்பதில்லை. 23 ஒருவன் குமாரனில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் அவன் பிதாவை உடையவனல்ல. குமாரனை ஏற்கிற ஒருவனுக்கு பிதாவும்கூட இருக்கிறார்.

24 துவக்கத்திலிருந்தே நீங்கள் கேட்ட போதனையைப் பின்பற்றுவதைத் தொடருங்கள். அப்போதனையைத் தொடர்ந்து பின்பற்றினால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25 நமக்கு குமாரன் வாக்களித்த நித்திய ஜீவன் இதுதான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center