Revised Common Lectionary (Semicontinuous)
21-22 நான் மூடனாக இருந்தேன்.
நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன்.
தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன்.
மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன்.
23 எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன.
நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன்.
தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்.
24 தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர்.
பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர்.
25 தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர்.
நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்?
26 என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம்,
ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர்.
என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.
27 தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள்.
உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர்.
28 என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது.
என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன்.
தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.
29 ஒருவன் எப்பொழுதும் பிடிவாதமானவனாக இருந்து, தன்னைச் சரிப்படுத்துவோரிடம் கோபித்துக்கொண்டே இருந்தால், அவன் திடீரென்று ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது.
2 ஆள்பவன் நல்லவனாக இருந்தால், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் தீயவன் ஆள வந்தால் ஜனங்கள் அனைவரும் புகார் சொல்வார்கள்.
3 ஒருவன் ஞானத்தை விரும்பினால் அவனது தந்தை மகிழ்ச்சி அடைவார். ஆனால் தன் செல்வத்தை விபச்சாரிகளிடம் செலவிடுபவன் தன் செல்வத்தை எல்லாம் இழப்பான்.
4 ராஜா நேர்மையுள்ளவனாக இருந்தால், நாடு பலமுடையதாக இருக்கும். ஆனால் ராஜா சுயநலக்காரனாக இருந்தால் எல்லாவற்றுக்கும் மக்கள் ராஜாவுக்குப் பணம் செலுத்தவேண்டியதாக இருந்தால், நாடு பலவீனமடையும்.
5 ஒருவன் தான் விரும்புவதைத் தந்திரமான வார்த்தைகளைப் பேசிப் பெறமுயன்றால் அவன் தனக்குத்தானே வலைவிரிக்கிறான்.
6 தீயவர்கள் தம் சொந்தப் பாவங்களாலேயே தோற்கடிக்கப்படுகிறார்கள். ஆனால் நல்லவர்களோ பாடிக்கொண்டும், மகிழ்ச்சியோடும் இருக்கிறார்கள்.
7 நல்லவர்கள் ஏழை ஜனங்களுக்கு நேர்மையான காரியங்களைச் செய்யவே விரும்புகின்றனர். தீயவர்களோ இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.
8 மற்றவர்களைவிடத் தான் பெரியவன் என்று நினைப்பவன் பல துன்பங்களுக்குக் காரணமாக இருக்கிறான். அவர்களால் முழு நகரத்தையுமே குழப்பத்தில் ஆழ்த்த முடியும். ஆனால் ஞானம் உள்ளவர்களோ சமாதானத்தை உருவாக்க முடியும்.
9 ஞானமுள்ளவன் முட்டாளோடு ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயற்சிசெய்தால், அந்த முட்டாள் வாதம்செய்து முட்டாள்தனமாகப் பேசுவான். இருவரும் எப்போதும் ஒத்துப்போகமாட்டார்கள்.
10 கொலைக்காரர்கள் நேர்மையானவர்களை எப்பொழுதும் வெறுக்கின்றனர். அவர்கள் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் கொலைசெய்யப் பார்க்கிறார்கள்.
11 ஒரு முட்டாள் விரைவில் கோபம் அடைகிறான். ஆனால் ஞானமுள்ளவனோ பொறுமையாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறான்.
12 ஆள்பவன் பொய்யைக் கேட்டுக்கொள்வானேயானால், அவனது அதிகாரிகளும் தீயவர்களாகிவிடுகின்றனர்.
13 ஏழையும் ஏழையிடம் திருடுபவனும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள். இருவரையும் கர்த்தரே படைத்துள்ளார்.
14 ராஜா ஏழைகளிடம் நேர்மையாக இருந்தால் அவன் நீண்டகாலம் ஆட்சி செய்வான்.
15 பிள்ளைகளுக்கு அடியும், போதனையும் நல்லது. தம் பிள்ளைகளை எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று பெற்றோர் விட்டுவிட்டால், அப்பிள்ளைகள் தம் தாய்க்கு அவமானத்தையே தருவார்கள்.
16 தீயவர்கள் நாட்டை ஆண்டால், எங்கும் பாவமே நிறைந்திருக்கும். இறுதியில் நல்லவர்களே வெல்வார்கள்.
17 உன் குமாரன் தவறு செய்யும்போது அவனைத் தண்டித்துவிடு. பிறகு அவனைப்பற்றி நீ பெருமைப்படலாம். அவன் உன்னை அவமானப்படுத்தமாட்டான்.
18 ஒரு நாடு தேவனால் வழி நடத்தப்படாவிட்டால், அந்நாட்டில் சமாதானம் இருக்காது. ஆனால், தேவனுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் நாடு மகிழ்ச்சி அடையும்.
19 நீ வெறுமனே பேசிக்கொண்டு மட்டும் இருந்தால் வேலைக்காரன் பாடம் கற்றுக்கொள்ளமாட்டான். அவன் உன் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளலாம், ஆனால் கீழ்ப்படியமாட்டான்.
20 சிந்தனை செய்யாமல் பேசுபவனுக்கு நம்பிக்கையில்லை. இதைவிட முட்டாளுக்கு நம்பிக்கையுண்டு.
21 நீ உனது வேலைக்காரனின் விருப்பப்படி எல்லாவற்றையும் கொடுப்பாயானால், இறுதியில் அவன் நல்ல வேலைக்காரனாக இருக்கமாட்டான்.
22 கோபமுள்ளவன் துன்பத்திற்குக் காரணமாகிறான். விரைவில் கோபம்கொள்கிறவன் பல பாவங்களுக்குப் பொறுப்பாகிறான்.
23 மற்றவர்களைவிடத் தன்னைப் பெரியவனாக ஒருவன் நினைத்துக்கொண்டால், அந்த எண்ணமே அவனை அழித்துவிடும். ஆனால் ஒருவன் பணிவாக இருக்கும்போது, மற்றவர்கள் அவனை மதிப்பார்கள்.
24 சேர்ந்து வேலைசெய்யும் இரண்டு திருடர்கள் பகைவர்களாக இருக்கிறார்கள். ஒருவன் அடுத்தவனை பயமுறுத்தி மிரட்டுவான். எனவே வழக்கு மன்றத்தில் உண்மையைச் சொல்லும்படி வற்புறுத்தப்பட்டால் அவன் வாயைத் திறந்து பேசவே பயப்படுவான்.
25 அச்சம் என்பது வலையைப் போன்றது. ஆனால் நீ கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தால் பாதுகாப்பாக இருப்பாய்.
26 ஆள்வோரோடு நட்புக்கொள்ள பலர் விரும்புவார்கள். ஆனால் கர்த்தர் ஒருவரே ஜனங்களைச் சரியாக நியாயந்தீர்க்கிறார்.
27 நேர்மையற்றவர்களை நல்லவர்கள் வெறுக்கின்றனர். தீயவர்களோ உண்மையுள்ளவர்களை வெறுக்கின்றனர்.
இயேசுதான் கிறிஸ்துவா?
25 எருசலேமில் உள்ள மக்களில் சிலர் “அவர்கள் கொலை செய்ய முயல்கிற மனிதர் இவர்தான். 26 ஆனால் இவரோ எல்லோரும் காணும்படியும் கேட்கும்படியும் உபதேசம் செய்துகொண்டிருக்கிறார். ஒருவரும் அவர் உபதேசிப்பதை நிறுத்திவிட முயற்சி செய்யவில்லை. ஒருவேளை, யூதத் தலைவர்கள் இவர்தான் உண்மையான கிறிஸ்து என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும். 27 ஆனால் இந்த மனிதர் எங்கிருந்து வருகிறாரென்று நாம் அறிவோம். ஆனால் உண்மையான கிறிஸ்து வரும்போது அவர் எங்கிருந்து வந்தார் என்பது எவருக்கும் தெரியாமல் இருக்கும்” என்றனர்.
28 இயேசு தேவாலயத்தில் தொடர்ந்து உபதேசம் செய்துகொண்டிருந்தார். “ஆம், நான் யார் என்பதையும் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. உண்மையான ஒருவரால் நான் அனுப்பப்பட்டேன். நீங்கள் அவரை அறியமாட்டீர்கள். 29 ஆனால் அவரை நான் அறிவேன். நான் அவரிடமிருந்தே வந்தேன். அவர் என்னை அனுப்பினார்” என்றார் இயேசு.
30 இயேசு இவ்வாறு சொன்னபிறகு மக்கள் அவரைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் ஒருவராலும் இயேசுவைத் தொடமுடியவில்லை. இயேசு கொல்லப்படுவதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை.
31 ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தார்கள். “நாங்கள் கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். கிறிஸ்து வந்தால், அவர் இந்த மனிதரைவிட அதிகமான அற்புதங்களைச் செய்வாரோ? இல்லை. எனவே, இந்த மனிதரே கிறிஸ்துவாக இருக்க வேண்டும்” என்றனர்.
இயேசுவைக் கைது செய்ய முயற்சி
32 இயேசுவைப்பற்றி மக்கள் பேசிக்கொள்வதைப் பரிசேயர்கள் அறிந்தனர். தலைமை ஆசாரியரும், பரிசேயரும் தேவாலயச் சேவகர்களை இயேசுவைக் கைதுசெய்ய அனுப்பினர். 33 இயேசு மக்களிடம், “இன்னும் கொஞ்சக் காலம் நான் உங்களோடு இருப்பேன். பிறகு நான் என்னை அனுப்பியவரிடம் திரும்பிப்போவேன். 34 அப்போது என்னை நீங்கள் தேடுவீர்கள். ஆனால் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. நான் இருக்கும் இடத்துக்கும் உங்களால் வர முடியாது” என்றார்.
35 “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி இவன் எந்த இடத்திற்குப் போகப்போகிறான்? இவன் நமது மக்கள் வாழ்கிற கிரேக்க நகரங்களுக்குப் போகப் போகிறானா? அல்லது அங்கேயுள்ள கிரேக்க மக்களுக்கு உபதேசிக்கப் போகிறானா? 36 ‘நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியாது’ என்று கூறுகிறானே. ‘நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்றும் கூறுகிறானே, அதற்கு என்ன பொருள்?” என்று யூதர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
2008 by World Bible Translation Center