Revised Common Lectionary (Semicontinuous)
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது.
57 தேவனே, என்னிடம் இரக்கமாயிரும்.
என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும்.
துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில்,
பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.
2 மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன்.
தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார்.
3 பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார்.
எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார்.
தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.
4 என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது.
என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள்.
அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும்,
அம்புகளைப் போலவும் கூர்மையானவை.
அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை.
5 தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர்.
உமது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
6 அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர்.
நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள்.
ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள்.
7 ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார்.
அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார்.
நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.
8 என் ஆத்துமாவே, எழுந்திரு.
வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக!
9 என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன்.
ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.
10 உமது உண்மையான அன்பு
வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
11 தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார்.
அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
யோவாப் தாவீதுக்கு செய்தியனுப்புகிறான்
19 சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் யோவாபை நோக்கி, “நான் ஓடிப்போய் தாவீது ராஜாவுக்குச் செய்தியைத் தெரிவிப்பேன். அவருக்காக பகைவனை கர்த்தர் தாமே அழித்தார் என்று சொல்வேன்” என்றான்.
20 யோவாப் அகிமாசிடம், “வேண்டாம், நீ இன்று தாவீதுக்குச் செய்தியைச் சொல்ல வேண்டாம். இன்றல்ல, இன்னொரு நாள் செய்தியைக் கொண்டு போகலாம். ஏனெனில், ராஜாவின் குமாரன் மரித்துவிட்டான்” என்றான்.
21 பின்பு யோவாப் கூஷியை நோக்கி, “நீ பார்த்த காரியங்களை ராஜாவிடம் போய்ச் சொல்” என்றான்.
கூஷியன் யோவாபை வணங்கினான். பின்பு அவன் தாவீதுக்குச் சொல்ல ஓடினான்.
22 ஆனால் சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் யோவாபை மீண்டும் வேண்டியவனாய், “எது நடந்தாலும் பரவாயில்லை. கூஷியன் பின்னால் ஓட என்னை அனுமதியுங்கள்!” என்றான்.
யோவாப், “மகனே, ஏன் நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டும் என நினைக்கிறாய்? நீ கூறப்போகும் செய்திக்கு எந்தப் பரிசையும் பெறமாட்டாய்” என்றான்.
23 அகிமாஸ் பதிலாக, “எது நடந்தாலும் பரவாயில்லை, நான் ஓடுவேன்” என்றான்.
யோவாப் அகிமாசிடம், “ஓடு!” என்றான்.
அப்போது அகிமாஸ் யோர்தான் பள்ளதாக்கு வழியாக ஓடினான். அவன் கூஷியனை முந்திவிட்டான்.
தாவீது செய்தியை அறிகிறான்
24 நகர வாயில்கள் இரண்டிற்கும் நடுவே தாவீது உட்கார்ந்திருந்தான். வாயில் மதிலின் கூரையில் காவலன் போய் நின்றான். ஒரு மனிதன் தனித்து ஓடிவருகிறதைக் காவலன் கண்டான். 25 காவலன் தாவீது ராஜாவிடம் உரக்கச் சொன்னான்.
தாவீது ராஜா, “அம்மனிதன் தனித்து வந்தால் அவன் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.
அம்மனிதன் அருகே வந்துக்கொண்டிருந்தான். 26 காவலன் மற்றொரு மனிதனும் ஓடி வருவதைக் கண்டான். காவலன் வாயிற் காப்போனிடம், “பார்! மற்றொருவனும் தனியாக ஓடிவருகிறான்!” என்றான்.
ராஜா, “அவனும் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.
27 காவலன், “சாதோக்கின் குமாரன் அகிமாசைப் போல் முதல் மனிதன் ஓடிவருகிறான்” என்றான்.
ராஜா, “அகிமாஸ் நல்ல மனிதன். அவன் நற்செய்தியைக் கொண்டு வரக்கூடும்” என்றான்.
28 அகிமாஸ் ராஜாவிடம், “எல்லாம் நல்லபடி நடந்தது!” என்றான். அகிமாஸ் ராஜாவை வணங்கினான். அவனது முகம் நிலத்திற்கு அருகில் வந்தது. அகிமாஸ், “உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்! எனது ராஜாவாகிய ஆண்டவனே, உங்களுக்கு எதிரான ஆட்களை கர்த்தர் தோற்கடித்தார்” என்றான்.
29 ராஜா, “இளம் அப்சலோம் நலமா?” என்று கேட்டான்.
அகிமாஸ் பதிலாக, “யோவாப் என்னை அனுப்பியபோது பெரிய சந்தடியிருந்தது. அது என்னதென்று எனக்குத் தெரியாது” என்றான்.
30 அப்போது ராஜா, “இங்கே வந்து நின்று காத்திரு” என்றான். அகிமாசும் தள்ளிப்போய் நின்றான்.
31 கூஷியன் வந்தான். அவன், “எனது ஆண்டவனாகிய ராஜாவுக்குச் செய்தி இது. உங்களுக்கு எதிரான ஜனங்களை கர்த்தர் இன்று தண்டித்தார்!” என்றான்.
32 ராஜா கூஷியனை நோக்கி, “இளம் அப்சலோம் நலமா?” என்றான்.
கூஷியன் பதிலாக, “உங்களுக்கு எதிராக வரும் பகைவர்களும் ஜனங்களும் இந்த இளம் மனிதனைப் (அப்சலோமைப்) போல தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்” என்றான்.
33 அப்போது அப்சலோம் மரித்துவிட்டான் என்பதை ராஜா அறிந்தான். ராஜா நிலை குலைந்தான். நகரவாயிலின் மேலிருந்த அறைக்கு அவன் சென்றான். அங்கே அவன் அழுதான். போகும்போது, “எனது குமாரன் அப்சலோமே, என் குமாரன் அப்சலோமே! நான் உனக்காக மரித்திருக்கலாம் என விரும்புகிறேன். என் மகனே, என் மகனே!” என்றான்.
14 எனவே அன்பான நண்பர்களே இவ்விஷயங்களுக்காக நீங்கள் காத்துக்கொண்டிருப்பதால், தேவனுடைய பார்வையில் கறை இல்லாமலும் குற்றம் இல்லாமலும் இருக்க உங்களால் முடிந்தவரைக்கும் உழைக்க வேண்டும். தேவனோடு சமாதானமாக இருக்க முயலுங்கள். 15 நம் கர்த்தரின் பொறுமையை இரட்சிப்பாக எண்ணுங்கள். தேவன் அளித்த ஞானத்தினால் நமது அன்பான சகோதரர் பவுல் உங்களுக்கு எழுதியபோது இதையே உங்களுக்குக் கூறினார். 16 பவுல் அவரது எல்லா நிருபங்களிலும் இக்காரியங்களைக் குறித்து இவ்வாறே எழுதுகிறார். புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் சில சமயங்களில் அவருடைய நிருபங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அறியாமை உள்ளவர்களும், விசுவாசத்தில் நிரந்தரமற்றவர்களும் அவ்விஷயங்களைத் தவறான முறையில் எடுத்துரைக்கிறார்கள். இதே முறையில் மற்ற வேதவாக்கியங்களையும் அவர்கள் தவறாக எடுத்துரைக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அவர்கள் தங்களையே அழித்துக்கொண்டிருக்கின்றனர்.
17 அன்பான நண்பர்களே, உங்களுக்கு ஏற்கெனவே இதைப் பற்றித் தெரியும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். தாங்கள் செய்கிற தவறான காரியங்களால் அத்தீய மக்கள் உங்களைத் தவறாக வழி நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உறுதியான நிலையிலிருந்து விழுந்து விடாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். 18 கிருபையிலும், நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும், வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்போதும் எப்போதும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
2008 by World Bible Translation Center