Revised Common Lectionary (Semicontinuous)
16 தேவன் தீயோரைப் பார்த்து, “நீங்கள் எனது சட்டங்களைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
எனது உடன்படிக்கையைக் குறித்துப் பேசுகிறீர்கள்.
17 ஆனால் நான் உங்களைத் திருத்தும்போது அதை ஏன் வெறுக்கிறீர்கள்?
நான் கூறும் காரியங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
18 நீங்கள் ஒரு திருடனைப் பார்க்கிறீர்கள், அவனோடு சேர்வதற்காக ஓடுகிறீர்கள்.
விபச்சாரமாகிய பாவத்தைச் செய்கிறவர்களோடு நீங்களும் படுக்கையில் குதிக்கிறீர்கள்.
19 நீங்கள் தீயவற்றைப் பேசிப்
பொய்களைச் சொல்கிறீர்கள்.
20 உங்கள் சொந்த சகோதரரையும்
பிறரையும் குறித்து எப்போதும் தீயவற்றையே சொல்கிறீர்கள்.
21 நீங்கள் இத்தீய செயல்களைச் செய்கிறீர்கள், நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
நீங்கள் எதையும் சொல்லாதிருக்கிறீர்கள், நானும் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.
ஆனால் நான் அமைதியாக இரேன்!
நீங்கள் அதைத் தெளிவாக உணரும்படி நான் செய்வேன்.
உங்கள் முகத்திற்கெதிராக உங்களை விமர்சிப்பேன்!
22 நீங்கள் தேவனை மறந்திருக்கிறீர்கள்.
உங்களைக் கிழித்தெறியும் முன்னர்
நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்!
அது நிகழ்ந்தால் உங்களை மீட்பவர் எவருமில்லை!
23 எனவே ஒருவன் ஸ்தோத்திர காணிக்கை செலுத்தினால் அவன் என்னை உண்மையிலேயே மகிமைப்படுத்துகிறான்.
ஒருவன் அவனது வாழ்க்கையை மாற்றியமைத்தால் அப்போது நான் அவனுக்கு தேவனுடைய காக்கும் வல்லமையைக் காட்டுவேன்” என்கிறார்.
அம்னோனும் தாமாரும்
13 தாவீதுக்கு அப்சலோம் என்னும் பெயருள்ள குமாரன் இருந்தான். அப்சலோமின் சகோதரியின் பெயர் தாமார் ஆகும். தாமார் மிகுந்த அழகுடையவள். தாவீதின் மற்றொரு குமாரனாகிய அம்னோன் 2 தாமாரை விரும்பினான். தாமார் ஒரு கன்னிகை. அவளுக்கு எந்தத் தீமையையும் விளைவிக்க அம்னோன் நினைக்கவில்லை. எனினும் அவன் அவளை அதிகமாக நேசித்தான். நோயுறுமளவிற்கு அம்னோன் அவள் நினைவானான்.
3 சிமியாவின் குமாரனாகிய யோனதாப் அம்னோனின் நெருங்கிய நண்பன். (சிமியா தாவீதின் சகோதரன்) யோனதாப் மிகவும் புத்திசாலி. 4 யோனதாப் அம்னோனை நோக்கி, “நாளுக்கு நாள் நீ மெலிந்துக்கொண்டே வருகிறாய். நீ ராஜாவின் குமாரன்! உனக்கு உண்பதற்கு ஏராளமான பொருட்கள் இருந்தும், நீ ஏன் எடை குறைந்து காணப்படுகிறாய்? சொல்!” என்றான்.
அம்னோன் யோனதாபை நோக்கி, “நான் தாமாரை மிகவும் விரும்புகிறேன். அவள் எனது ஒன்று-விட்ட-சகோதரன் அப்சலோமின் சகோதரி” என்றான்.
5 யோனதாப் அம்னோனை நோக்கி, “படுக்கைக்குப் போ. நோயுற்றவன் போல் நடி. உன் தந்தை உன்னைக் காணவருவார். அவரிடம், ‘எனது சகோதரியாகிய தாமார் வந்து எனக்கு உணவு தரட்டும். அவள் என் முன்னே உணவு சமைக்கட்டும். அப்போது அதை நான் பார்த்து அவள் கையால் புசிப்பேன்’ என்று சொல்” என்றான்.
6 அவ்வாறே அம்னோன் படுக்கையில் படுத்து நோயுற்றவன்போல் நடித்தான். தாவீது ராஜா அம்னோனைப் பார்க்க வந்தான். அம்னோன் தாவீது ராஜாவிடம், “தயவு செய்து எனது சகோதரி தாமாரை உள்ளே வரச்செல்லுங்கள். அவள் என் முன்னே எனக்காக இரண்டு அப்பங்கள் சுட்டுதரட்டும். அப்போது அவள் கையால் ஊட்ட அவற்றை புசிப்பேன்” என்றான்.
7 தாவீது தாமாரின் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். செய்தி சொல்ல வந்த ஆட்கள் தாமாரிடம், “உனது சகோதரன் அம்னோன் வீட்டிற்குச் சென்று அவனுக்காக கொஞ்சம் உணவைத் தயாரித்துக் கொடு” என்றார்கள்.
8 எனவே தாமார் தன் சகோதரனாகிய அம்னோனின் வீட்டிற்குச் சென்றாள். அம்னோன் படுக்கையில் இருந்தான். தாமார் மாவை எடுத்து தன் கைகளால் பிசைந்து, அப்பங்களைச் சுட்டாள். அம்னோன் எதிரிலேயே இதனைச் செய்தாள். 9 சமையல் பாத்திரத்திலிருந்து அவற்றை எடுத்து, அம்னோன் உண்பதற்காகப் பரிமாறினாள். ஆனால் அம்னோன் சாப்பிட மறுத்தான். அம்னோன் தன் வேலையாட்களை நோக்கி, “இங்கிருந்து போங்கள், என்னைத் தனிமையில் இருக்கவிடுங்கள்!” என்றான். எனவே எல்லா வேலையாட்களும் அறையை விட்டு வெளியே சென்றனர்.
அம்னோன் தாமாரைக் கற்பழித்தல்
10 அப்போது அம்னோன் தாமாரிடம், “உணவைப் படுக்கையறைக்குள் கொண்டு வந்து உனது கைகளால் எனக்கு உணவூட்டு” என்றான்.
எனவே தாமார் தான் தயாரித்த அப்பங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரனின் படுக்கையறைக்குள் சென்றாள். 11 அவள் அம்னோனுக்கு அவ்வுணவைக் கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ அவளை கையைப் பிடித்திழுத்து அவளிடம், “சகோதரியே, நீ என்னோடு சேர்ந்து படுத்துக்கொள்” என்றான்.
12 தாமார் அம்னோனிடம், “சகோதரனே, வேண்டாம்! அவ்வாறு செய்ய என்னை வற்புறுத்தாதே! அவமானமான இக்காரியத்தைச் செய்யாதே! இஸ்ரவேலில் இந்த கொடிய காரியம் நடக்கக்கூடாது! 13 நான் எனக்கு நேரும் அவமானத்திலிருந்து ஒருபோதும் மீளமுடியாது. நீ ஒரு பயங்கர குற்றவாளி என்று ஜனங்கள் கவனிப்பார்கள். தயவுசெய்து, ராஜாவோடு பேசு. என்னை நீ மணம் செய்துக்கொள்ள அவர் அனுமதியளிப்பார்” என்றாள்.
14 ஆனால் அம்னோன், தாமார் சொன்னதைக் கேட்க மறுத்தான். அவன் தாமாரைக் காட்டிலும் பலசாலி. அம்னோன் தாமாரை பாலின உறவுகொள்ளும்படி கட்டாயப்படுத்தி அவளை பலவந்தமாய் கற்பழித்தான். 15 பின்பு அம்னோன் தாமாரை வெறுக்க ஆரம்பித்தான். அவளை முன்பு விரும்பினதற்கு அதிகமாக அவளை வெறுக்க ஆரம்பித்தான். அம்னோன் தாமாரை நோக்கி, “எழுந்து இங்கிருந்து போ!” என்றான்.
16 தாமார் அம்னோனிடம், “இப்படி என்னை அனுப்பிவிடாதே. முன்பு நிகழ்ந்ததைக் காட்டிலும் அது தீமையானதாக இருக்கும்” என்றாள்.
ஆனால் அம்னோன், தாமார் சொல்வதைக் கேட்க மறுத்தான். 17 அம்னோன் தன் வேலையாளை அழைத்து, “இப்பெண்ணை இந்த அறைக்கு வெளியே கொண்டு செல்லுங்கள். பின்பு அவளுக்குப் பிறகு கதவை தாழ்ப்பாளிடுங்கள்” என்றான்.
18 அவ்வாறே அம்னோனின் வேலைக்காரன் தாமாரை அறைக்கு வெளியே நடத்தி, கதவைத் தாழிட்டான்.
தாமார் பலநிறங்களுள்ள ஒரு நீண்ட அங்கி அணிந்திருந்தாள். ராஜாவின் கன்னிப் பெண்கள் (குமாரத்திகள்) இத்தகைய நீண்ட பலவர்ண அங்கி அணிவது வழக்கமாக இருந்தது. 19 தாமார் பலவர்ண அங்கியைக் கிழித்துக்கொண்டு, தலையின் மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டாள். பின் அவள் தனது கையைத் தலையில் வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
27 நீங்கள் எல்லாரும் இணைந்து கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சரீரத்தின் உறுப்பாக அமைகிறீர்கள். 28 முதலில் அப்போஸ்தலராகச் சிலரையும், இரண்டாவதாகத் தீர்க்கதரிசிகளாகவும், மூன்றாவதாகப் போதகர்களாகவும், பிறகு அதிசயங்களைச் செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுகிறவர்களாகவும், வழி நடத்த வல்லவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேச வல்லவர்களாகவும் சபையில் நியமிக்கிறார். 29 எல்லா மனிதர்களும் அப்போஸ்தலர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் தீர்க்கதரிசிகளல்ல. எல்லா மனிதர்களும் போதகர்களுமல்ல. எல்லாரும் அதிசயங்களைச் செய்ய முடியாது. 30 குணப்படுத்தும் ஆற்றலும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எல்லாருக்கும் வெவ்வேறு வகையான மொழிகளைப் பேசமுடியாது. எல்லாரும் அவற்றை விளக்கவும் முடியாது. 31 ஆவியானவரின் சிறந்த வரங்களைப் பெற நீங்கள் உண்மையாகவே விரும்ப வேண்டும்.
2008 by World Bible Translation Center