Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 84

கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.

84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
    ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
என் ராஜாவே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
    உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
    அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
    ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
    தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
    இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
    ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.

சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
    யாக்கோபின் தேவனே, எனக்குச் செவிகொடும்.

தேவனே, எங்கள் பாதுகாவலரைப் (கேடகத்தைப்) பாதுகாத்துக்கொள்ளும்.
    நீர் தேர்ந்தெடுத்த ராஜா மீது இரக்கமாயிரும்.

10 வேறிடங்களில் செலவிடும் ஆயிரம் நாட்களைக் காட்டிலும் உமது ஆலயத்தில் இருக்கும் ஒரே நாள் நல்லது.
    எனது தேவனுடைய வீட்டின் வாசலில் நிற்பதோ தீயவனின் வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் நல்லது.
11 கர்த்தர் நமது கேடகமும் மகிமை வாய்ந்த அரசருமானவர்.[a]
    தயவினாலும் மகிமையாலும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
அவரைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு
    தேவன் எல்லா நல்ல பொருள்களையும் தருகிறார்.
12 சர்வ வல்லமையுள்ள தேவனே,
    உம்மை நம்புகிற ஜனங்கள் உண்மையாகவே சந்தோஷமானவர்கள்.

எஸ்றா 6:1-16

தரியுவின் கட்டளை

எனவே, தனக்கு முன் அரசாண்ட ராஜாக்களின் ஆவணங்களைத் தேடும்படி ராஜா தரியு கட்டளையிட்டான். பணம் சேமித்து வைக்கபட்டிருந்த இடத்திலேயே அதிகாரப்பூர்வமான பத்திரங்களும் இருந்தன. ஒரு சுருள் அக்மேதா நகர் கோட்டையில் அகப்பட்டது. இது மேதிய மாகாணத்தில் உள்ளது. சுருளில் எழுதப்பட்டிருந்த செய்தி இதுதான்:

அரசாங்கப் பூர்வமான குறிப்பு: கோரேசின் முதலாம் ஆட்சி ஆண்டில், அவன் எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்திற்கு ஓர் கட்டளைக் கொடுத்தான். அந்த கட்டளை சொல்வது:

தேவனுடைய ஆலயம் மீண்டும் கட்டப்படட்டும். இது பலி கொடுப்பதற்குரிய இடமாக இருக்கும். இதற்குரிய அஸ்திபாரம் கட்டப்படட்டும். இந்த ஆலயம் 60 முழ உயரமும், 60 முழ அகலமுமாய் இருக்கட்டும். அதைச் சற்றி மூன்று வரிசை பெரிய கற்களும், ஒரு வரிசைப் பெரிய மரப்பலகைகளும் இருக்கட்டும். ராஜாவின் கருவூலத்திலிருந்து ஆலயம் கட்டப் பணம் கொடுக்கப்படும். தேவனுடைய ஆலயத்தில் உள்ள பொன்னும் வெள்ளியும் மீண்டும் அங்கேயே வைக்கப்பட வேண்டும். நேபுகாத்நேச்சார் அவற்றை எருசலேமில் உள்ள ஆலயத்தில் இருந்து எடுத்து பாபிலோனுக்குக் கொண்டு போனான். அவை தேவனுடைய ஆலயத்தில் திரும்ப வைக்கப்பட வேண்டும்.

இப்போது, தரியுவாகிய நான், ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநரான தத்னாயும், சேத்தார் பொஸ்னாயுமாகிய நீங்களும், அப்பகுதியில் வசிக்கும் எல்லா அதிகாரிகளும் எருசலேமிற்கு வெளியே தங்கி இருங்கள் என்று கட்டளை கொடுக்கிறேன். வேலை செய்பவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். தேவனுடைய ஆலய வேலையைத் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். யூத ஆளுநர்களும், யூதத் தலைவர்களும் ஆலயத்தை மீண்டும் கட்டட்டும். அவ்வாலயம் முன்பு இருந்த அதே இடத்திலேயே அவர்கள் கட்டட்டும்.

இப்போது இந்த கட்டளையை இடுகிறேன். யூதத் தலைவர்கள் ஆலயத்தைக் கட்ட நீங்கள் கீழ்க்கண்டச் செயல்களைச் செய்ய வேண்டும்: ஆலயம் கட்டுவதற்கான முழு பணத்தையும் நீங்கள் ராஜாவின் கருவூலத்தில் இருந்து தர வேண்டும். இப்பணம் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உள்ள ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும். இதனை விரைவாகச் செய்யுங்கள். அதனால் வேலை தடைப்படாமல் இருக்கும். அந்த ஜனங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுங்கள். அவர்களுக்கு இளங்காளைகள், ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் ஆகியவை பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடத் தேவைப்படுமானால் அவற்றைக் கொடுங்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் கோதுமை, திராட்சைரசம், உப்பு, ஒலிவ எண்ணெய் போன்றனவற்றைக் கேட்டால் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொடுக்கவும். 10 இவற்றை நீங்கள் யூத ஆசாரியர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்கு பலிகளைக் கொடுத்து அவரை மகிழ்ச்சியடையச் செய்வார்கள். இவற்றைக் கொடுத்தால் ஆசாரியர்கள் எனக்கும் என் குமாரர்களுக்கும் ஜெபம் செய்வார்கள்.

11 அதோடு, இந்தக் கட்டளையையும் தருகிறேன்: யாராவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவனது வீட்டிலிருந்து ஒரு மரச்சட்டம் பிடுங்கப்படும். பின்பு அம்மரச் சட்டம் அவனுடைய உடலில் சொருகப்படும். அவனது வீடும் மண் மேடாகும்வரை அழிக்கப்படும்.

12 தேவன் தமது நாமத்தை எருசலேமில் வைத்திருக்கிறார். இந்தக் கட்டளையை மாற்ற முயல்கிற எந்த ராஜாக்களையும் அல்லது எந்த ஜனங்களையும் தேவன் தோற்கடிப்பார் என்று நம்புகிறேன். யாராவது இந்த ஆலயத்தை எருசலேமில் அழிக்க முயன்றால் தேவன் அந்த நபரை அழித்துவிடுவார் என்று நம்புகிறேன்.

தரியுவாகிய நான், இந்தக் கட்டளையைத் தருகிறேன். இந்தக் கட்டளை முழுமையாகவும், விரைவாகவும் செய்யப்பட வேண்டும்!

ஆலயப் பணி முடிவும் பிரதிஷ்டையும்

13 எனவே, ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநராக இருக்கும் தத்னாய் என்பவரும், சேத்தார்பொஸ்னாயும் அவர்களைச் சார்ந்த மற்ற ஜனங்களும், ராஜா தரியுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் அந்த கட்டளையை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்தினார்கள். 14 எனவே யூத மூப்பர்கள் கட்டிட வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் ஊக்கப்படுத்தியதால் அவர்கள் வெற்றியுடன் ஆலயத்தைக் கட்டி முடித்தனர். இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவே இது கட்டப்பட்டது. கோரேசு, தரியு மற்றும் பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா ஆகியோர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் இவ்வேலை முடிந்தது. 15 ஆலயமானது தரியு அரசாளும் ஆறாம் ஆண்டு ஆதார் மாதம் மூன்றாம் தேதியில் கட்டி முடிக்கப்பட்டது.

16 அப்போது இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்தவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

மாற்கு 11:15-19

தேவாலயத்தில் இயேசு

(மத்தேயு 21:12-17; லூக்கா 19:45-48; யோவான் 2:13-22)

15 அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார். 16 ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார். 17 பிறகு இயேசு மக்களுக்குப் போதனை செய்ய ஆரம்பித்தார். “‘எனது வீடு எல்லா மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என அழைக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.(A) ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் ‘திருடர்கள் ஒளியும் இடமாக’ மாற்றுகிறீர்கள்”(B) என்றார்.

18 தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினர். மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து அவர்கள் அச்சப்பட்டனர். 19 அன்று இரவு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்நகரத்தை விட்டு வெளியேறினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center