Revised Common Lectionary (Complementary)
23-24 ஆனால் தேவன் மேலேயுள்ள மேகங்களைத் திறந்தார்.
உணவுக்கான மன்னா அவர்கள் மீது பொழிந்தது.
வானில் கதவுகள் திறக்கப்பட்டு வானிலுள்ள கிடங்கிலிருந்து
தானியங்கள் கீழே கொட்டினாற்போல காட்சி தந்தது.
25 தேவதூதர்களின் உணவை ஜனங்கள் உண்டார்கள்.
அவர்கள் திருப்தியடையும்வரை தேவன் மிகுதியான உணவை அனுப்பினார்.
26-27 தேவன் கிழக்கிலிருந்து ஒரு பெருங்காற்று வீசுமாறு செய்தார்.
காடைகள் மழையைப்போன்று அவர்கள் மீது வீழ்ந்தன.
தேமானிலிருந்து தேவன் காற்றை வீசச்செய்தார்.
பறவைகள் மிகுதியாக இருந்தமையால் நீல வானம் இருண்டது.
28 பாளையத்தின் நடுவே
கூடாரங்களைச் சுற்றிலும் அப்பறவைகள் வீழ்ந்தன.
29 அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது.
ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள்.
3 அப்போது மோசே ஜனங்களிடம், “இந்த நாளை நினைவுகூருங்கள். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். ஆனால் இந்த நாளில் கர்த்தர் அவரது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி உங்களை விடுதலை செய்தார். நீங்கள் புளிப்புள்ள ரொட்டியை உண்ணக்கூடாது. 4 ஆபீப் மாதத்தின் இந்த நாளில் நீங்கள் எகிப்தை விட்டுச் செல்கிறீர்கள். 5 கர்த்தர் உங்கள் முற்பிதாக்களுக்கு ஒரு விசேஷமான வாக்குறுதியை அளித்தார். கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் ஜனங்களின் நாட்டை உங்களுக்குக் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்தார். நல்ல பொருட்களால் நிரப்பப்பட்ட நாட்டிற்கு கர்த்தர் உங்களை வழிநடத்திய பிறகும் நீங்கள் இந்த நாளை நினைவுகூர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதல் மாதத்தின் இந்த நாளை வழிபாட்டிற்குரிய விசேஷ தினமாகக் கொள்ளவேண்டும்.
6 “புளிப்பு இல்லாத ரொட்டியையே ஏழு நாட்களுக்கு நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் ஒரு பெரிய விருந்து கர்த்தரை மகிமைப்படுத்துவதற்காக நடைபெறும். 7 எனவே ஏழு நாட்கள் புளிப்புள்ள ரொட்டியை நீங்கள் உண்ணவே கூடாது. உங்கள் தேசத்தில் எப்பக்கத்திலும் புளிப்புள்ள ரொட்டி இருக்கவே கூடாது. 8 இந்த நாளில் உங்கள் பிள்ளைகளுக்கு, ‘கர்த்தர் நம்மை எகிப்திலிருந்து வழிநடத்தியதால் இந்த விருந்து நடைப்பெறுகிறது’ என்று சொல்ல வேண்டும்.
9 “உங்கள் கண்களின் முன்னால் இது அடையாளமாக இருக்கும். இந்த பண்டிகை நாள் கர்த்தரின் போதனைகளை நினைவுபடுத்தவும், உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர கர்த்தர் தமது பெரும் வல்லமையைப் பயன்படுத்தினார் என்பதை நினைவுபடுத்தவும் இது உதவும். 10 எனவே ஒவ்வொரு ஆண்டும் அதன் காலத்தில் இந்த விடுமுறை நாளை நினைவு கூருங்கள்.
யூதத்தலைவர்களைக் குறித்து எச்சரிக்கை
(மாற்கு 8:14-21)
5 இயேசுவும் அவரது சீஷர்களும் கலிலேயா ஏரியைக் கடந்து சென்றார்கள். ஆனால், சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்தனர். 6 இயேசு தம் சீஷர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! பரிசேயர் சதுசேயரின் புளித்தமாவைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்,” என்று கூறினார்.
7 அவரது சீஷர்கள் அதன் பொருளைக் குறித்து விவாதித்தனர், “நாம் அப்பங்களைக் கொண்டு வர மறந்ததினாலா இயேசு இவ்வாறு கூறினார்?” என்று அவர்கள் விவாதித்தனர்.
8 தமது சீஷர்கள் இதைக் குறித்து விவாதித்ததை இயேசு அறிந்தார். எனவே, இயேசு அவர்களிடம், “அப்பங்கள் இல்லாததைக் குறித்து ஏன் பேசுகிறீர்கள்? உங்கள் விசுவாசம் குறைவுள்ளது. 9 இன்னமும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? ஐந்து அப்பங்களால் ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? மக்கள் உண்டதில் மீதியைப் பல கூடைகளில் இட்டு நிரப்பியதும் ஞாபகமில்லையா? 10 ஏழு அப்பங்களைக் கொண்டு நான்காயிரம் பேருக்கு உணவளித்தது ஞாபகமில்லையா? பின் மக்கள் உண்டு மீந்ததைப் பல கூடைகளில் நிரப்பியதும் ஞாபகமில்லையா? 11 எனவே, நான் அப்பத்தை குறித்து உங்களுடன் பேசவில்லை. அது ஏன் உங்களுக்குப் புரியவில்லை? பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான தீய போதனைகளை விட்டு விலகிப் பாதுகாப்பாயிருக்க நான் உங்களுக்குக் கூறுகிறேன்,” என்றார்.
12 பின்னரே, இயேசு கூறியதன் பொருளைச் சீஷர்கள் புரிந்துகொண்டார்கள். அப்பம் செய்யப் பயன்படுத்தப்படும் புளித்த மாவைக் குறித்து இயேசு பேசவில்லை. மாறாக, இயேசு அவர்களைப் பரிசேயர்களுடையதும் சதுசேயர்களுடையதுமான போதனைகளைக் குறித்தே எச்சரித்தார்.
2008 by World Bible Translation Center