Revised Common Lectionary (Complementary)
தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம்.
142 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன்.
நான் கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்.
2 நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன்.
நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.
3 என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்.
நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராயிருக்கிறேன்.
ஆனால் கர்த்தர் எனக்கு நடக்கின்றவற்றை அறிந்திருக்கிறார்.
4 நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை.
எனக்கு ஓடிச் செல்ல இடமில்லை. என்னைக் காப்பாற்ற முயல்பவர் எவருமில்லை.
5 எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன்.
கர்த்தாவே, நீரே என் பாதுகாப்பிடம்.
கர்த்தாவே, என்னைத் தொடர்ந்து வாழவிட உம்மால் ஆகும்.
6 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர்.
என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.
7 இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும்.
அப்போது நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
நீர் என்னைக் கவனித்து வந்ததால் நல்லோர் என்னோடு சேர்ந்து கொண்டாடுவார்கள்.
இராஜ்யத்தை மீண்டும் நிறுவுவதாக தேவன் வாக்குறுதியளிக்கிறார்
11 “தாவீதின் கூடாரம் விழுந்திருக்கிறது.
ஆனால் அந்நேரத்தில், நான் மீண்டும் அவன் கூடாரத்தை அமைப்பேன்.
நான் சுவர்களில் உள்ள துவாரங்களைச் சரிசெய்வேன்.
நான் அழிந்துபோன கட்டிடங்களை மீண்டும் கட்டுவேன். நான் அவற்றை முன்பு இருந்தது போன்று கட்டுவேன்.
12 பிறகு ஏதோமில் உயிருடன் விடப்பட்டவர்களும்,
என் நாமத்தால் அழைக்கப்பட்ட எல்லோரும் கர்த்தரிடம் உதவிக்காக வருவார்கள்.”
கர்த்தர் அவற்றைச் சொன்னார்,
அவர் அவை நடக்கும்படிச் செய்வார்.
13 கர்த்தர் கூறுகிறார்: “நிலத்தை உழுகிறவன்,
அறுவடை செய்பவனை முந்திச் செல்லும் காலம் வரும்.
திராட்சை ஆலையை வைத்திருப்பவன் திராட்சை பயிரிட்டு பழங்களைப் பறிப்பவனைத் தேடிவரும் காலம் வரும்.
இனிய மதுவானது குன்றுகளிலும்
மலைகளிலும் கொட்டும்.
14 இஸ்ரவேலே நான் என் ஜனங்களை
அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வருவேன்.
அவர்கள் அழிந்த நகரங்களை மீண்டும் கட்டுவார்கள்.
அவர்கள் அந்நகரங்களில் வாழ்வார்கள்.
அவர்கள் திராட்சைகளைப் பயிரிடுவார்கள்.
அவர்கள் அவற்றிலிருந்து வரும் மதுவை குடிப்பார்கள்.
அவர்கள் தோட்டங்களைப் பயிரிடுவார்கள்.
அவர்கள் அவற்றிலுள்ள அறுவடையை உண்பார்கள்.
15 நான் என் ஜனங்களை அவர்கள் நிலத்தில் நாட்டுவேன்.
அவர்கள் மீண்டும் பிடுங்கப்படமாட்டார்கள்.
அவர்கள் நான் கொடுத்த நாட்டிலேயே இருப்பார்கள்”
என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்.
31 “இக்காலத்து மக்களைப்பற்றி நான் என்ன கூறட்டும்? அவர்களை எதனோடு ஒப்பிடட்டும்? அவர்கள் எதைப் போன்றவர்கள்? 32 இக்காலத்து மக்கள் சந்தையில் அமர்ந்திருக்கும் சிறுவர்களைப் போன்றவர்கள். ஒரு கூட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் பிற சிறுவர்களை அழைத்து,
“‘நாங்கள் உங்களுக்காக இசை இசைத்தும்
நீங்கள் ஆடவில்லை.
நாங்கள் சோகப்பாடல் பாடியும்
நீங்கள் துக்கம் அடையவில்லை’
என்று கூறுவதுபோல் உள்ளனர்.
33 யோவான் ஸ்நானகன் பிறரைப் போன்று உண்ணவோ, திராட்சை இரசம் பருகவோ செய்யவில்லை. நீங்கள், ‘அவனுக்குள்ளே பிசாசின் அசுத்த ஆவி இருக்கிறது’ என்கிறீர்கள். 34 மனித குமாரன் பிறரைப் போன்று உண்பவராகவும், திராட்சை இரசம் பருகுபவராகவும் வந்தார். நீங்கள், ‘அவரைப் பாருங்கள். அவர் தேவைக்கும் மிகுதியாக உண்டு, மிகுதியாக திராட்சை இரசம் பருகுகிறார். அவர் வரிவசூலிப்பவர்களுக்கும் தீயோருக்கும் நண்பராக இருக்கிறார்’ என்கிறீர்கள். 35 ஆனால் ஞானமானது அதன் செய்கைகளால் சரியானதென விளங்கும்” என்றார்.
2008 by World Bible Translation Center