Revised Common Lectionary (Complementary)
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
21 கர்த்தாவே, உமது பெலன் ராஜாவை மகிழ்விக்கிறது.
நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.
2 நீர் ராஜாவுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர்.
ராஜா சிலவற்றைக் கேட்டான்.
கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, நீர் உண்மையாகவே ராஜாவை ஆசீர்வதித்தீர்.
அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர்.
4 தேவனே ராஜா உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர்.
நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர்.
5 வெற்றிக்கு நேராக நீர் ராஜாவை வழிநடத்தினீர்.
அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர்.
அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர்.
6 தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த ராஜாவை ஆசீர்வதித்தீர்.
உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து ராஜாவைப் பாதுகாத்தீர்.
ராஜா உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும்.
7 ராஜா கர்த்தரை நம்புகிறான்.
உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.
8 தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர்.
உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.
9 கர்த்தாவே, நீர் ராஜாவோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார்.
அவர் தன் பகைவர்களை அழிப்பார்.
10 அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும்.
அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.
11 ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள்.
அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.
12 கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர்.
நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர்.
அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர்.
அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.
13 கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும்.
கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!
14 விலையேறப்பெற்ற யூதாவே, பயப்படாதே.
எனது அருமை இஸ்ரவேல் ஜனங்களே! கலங்க வேண்டாம்!
நான் உங்களுக்கு உண்மையாகவே உதவுவேன்.”
கர்த்தர் தாமாகவே இவற்றைக் கூறினார்.
“நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் (தேவன்)
உன்னைக் காப்பாற்றுகிறவரும் இதனைக் கூறுகிறார்.
15 பார்! நான் உன்னை போரடிப்பதற்கான புதிய கருவியாக்குவேன்.
அது கூர்மையான பற்களை உடையது.
விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி போரடிப்பார்கள்.
அவர்கள் தானியத்தை அதிலிருந்து பிரிப்பார்கள்.
நீ மலைகளின் மேல் நடந்து அவற்றை நசுக்குவாய்.
நீ குன்றுகளைப் பதர்களைப்போன்று ஆக்கிவிடுவாய்.
16 நீ அவற்றைக் காற்றில் தூற்றிவிடுவாய்.
அவற்றைக் காற்று அடித்துச்சென்று, சிதறடித்துவிடும்.
பிறகு, நீ கர்த்தருக்குள் மகிழ்ச்சியுடன் இருப்பாய்.
இஸ்ரவேலின் பரிசுத்தமானவரைப்பற்றி (தேவன்) நீ மிகவும் பெருமை அடைவாய்.”
17 “ஏழ்மையும் தேவையும் கொண்ட ஜனங்கள் தண்ணீருக்காக அலைவார்கள்.
ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
அவர்கள் தாகமாக இருக்கிறார்கள்.
அவர்களின் நாக்கு உலர்ந்துபோயிற்று.
அவர்களின் ஜெபத்திற்கு இஸ்ரவேலின் தேவனும் கர்த்தருமாகிய நான் பதில் சொல்வேன்.
நான் அவர்களை விடமாட்டேன்.
அவர்கள் மரிக்கவும் விடமாட்டேன்.
18 வறண்ட மலைகளில் நதிகளை நான் பாயச் செய்வேன்.
பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை நான் எழச்செய்வேன்.
வனாந்திரங்களை தண்ணீர் நிறைந்த ஏரியாக நான் மாற்றுவேன்.
வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் இருக்கும்.
19 வனாந்திரங்களில் மரங்கள் வளரும்.
அங்கு கேதுரு மரங்களும், சித்தீம் மரங்களும், ஒலிவ மரங்களும், சைப்பிரஸ் மரங்களும், ஊசி இலை மரங்களும், பைன் மரங்களும் இருக்கச் செய்வேன்.
20 ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள்.
கர்த்தருடைய வல்லமை இவற்றைச் செய்தது என்று அவர்கள் அறிவார்கள்.
ஜனங்கள் இவற்றைப் பார்ப்பார்கள்.
அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள், இஸ்ரவேலின் பரிசுத்தமானவர் (தேவன்) இவற்றைச் செய்தார்.”
தன் பணியைப் பற்றிப் பவுல்
14 எனது சகோதர சகோதரிகளே! நீங்கள் நன்மையால் நிறைந்திருப்பதாக நம்புகிறேன். உங்களுக்குத் தேவையான அறிவு உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். நீங்கள் ஒருவருக்கொருவர் கற்பிக்கும் தகுதி பெற்றவர்கள். 15 நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ளத்தக்க சிலவற்றைப் பற்றி நான் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறேன். தேவன் எனக்குச் சிறப்பான வரத்தைக் கொடுத்திருப்பதால் நான் இதனைச் செய்தேன். 16 என்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக தேவன் ஆக்கினார். நான் யூதரல்லாதவர்களுக்கு உதவும்பொருட்டு என்னை தேவன் ஊழியனாக்கினார். நற்செய்தியைக் கற்றுக்கொடுப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்கிறேன். யூதரல்லாதவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கை ஆகும்பொருட்டு நான் இதனைச் செய்கிறேன். அவர்கள் தேவனுக்காகப் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டனர்.
17 நான் தேவனுக்காகக் கிறிஸ்துவுக்குள் செய்த பணிகளுக்காகப் பெருமை கொள்கிறேன். 18 நான் செய்து முடித்த செயல்களைப் பற்றி நானே பேசுவதில்லை. யூதரல்லாதவர்கள் தேவனுக்கு அடிபணிய, என் மூலம் கிறிஸ்து செய்த செயல்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். நான் செய்ததும், சொன்னதுமான காரியங்கள் மூலமே அவர்கள் தேவனுக்குப் பணிந்தனர். 19 அற்புதங்களையும், வல்லமைகளையும். பெருங்காரியங்களையும் பார்த்தும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உணர்ந்தும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தனர். நான் எருசலேமிலிருந்து கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்க தொடங்கி, இல்லிரிக்கம் நகர்வரை என் பணியை முடித்திருக்கிறேன். 20 கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாத மக்கள் இருக்கும் இடங்களில் நற்செய்தியைப் போதிக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். மற்றவர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட பணிகளை நான் போய்த் தொட விரும்பாததால் நான் இவ்வாறு செய்கிறேன். ஆனால்,
21 “அவரைப் பற்றி கேட்டிராத மக்கள் அவரைப் பார்ப்பார்கள்.
அவரைப் பற்றி அறியாத மக்கள் அவரைப் புரிந்துகொள்வார்கள்.”(A)
என்று ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.
2008 by World Bible Translation Center