Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
Error: Book name not found: Sir for the version: Tamil Bible: Easy-to-Read Version
எரேமியா 14:7-10

“அவற்றுக்கு எங்கள் குற்றங்களே காரணம் என்பது எங்களுக்குத் தெரியும்;
    நமது பாவங்களால் நாம் இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
    கர்த்தாவே, உமது நாமத்தின் நன்மைக்காக எங்களுக்கு உதவ ஏதாவதுச் செய்யும்.
நாங்கள் உம்மை விட்டுப் பலமுறை போனோம்.
    நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
தேவனே, நீரே இஸ்ரவேலின் நம்பிக்கை ஆவீர்!
    துன்பக் காலங்களில் இஸ்ரவேலர்களை நீர் காப்பாற்றுகிறீர்.
ஆனால், இப்போது நீர் இந்த நாட்டில் அந்நியனைப் போன்று இருக்கிறீர்.
    ஒருநாள் இரவு மட்டும் தங்குகிற பயணியைப்போன்று நீர் இருக்கிறீர்.
ஆச்சரியத்தால் தாக்கப்பட்ட ஒரு மனிதனைப் போன்று நீர் தோன்றுகிறீர்.
    எவரொருவரையும் காப்பாற்ற முடியாத, ஒரு போர் வீரனைப் போன்று நீர் காட்சி தருகிறீர். கர்த்தாவே!
நீர் எங்களோடு இருக்கிறீர்.
    நாங்கள் உமது நாமத்தால் அழைக்கப்படுகிறோம்.
    எனவே உதவி இல்லாமல் எங்களை விட்டுவிடாதிரும்!”

10 யூதாவின் ஜனங்களைப்பற்றி கர்த்தர் சொன்னது இதுதான்: “யூதாவின் ஜனங்கள் உண்மையில் என்னை விட்டுவிலக விரும்பினார்கள். அந்த ஜனங்கள் என்னை விட்டு விலகுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. எனவே, இப்பொழுது, கர்த்தர் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார். இப்போது அவர்கள் செய்த தீயச் செயல்களை கர்த்தர் நினைப்பார். அவர்களது பாவங்களுக்காக கர்த்தர் அவர்களைத் தண்டிப்பார்.”

எரேமியா 14:19-22

19 கர்த்தாவே, யூதா நாட்டை நீர் முழுமையாக ஒதுக்கிவிட்டீரா?
    கர்த்தரே நீர் சீயோனை வெறுக்கிறீரா?
நாங்கள் மீண்டும் குணம் அடையமுடியாதபடி நீர் எங்களை பலமாகத் தாக்கியுள்ளீர்.
    ஏன் அதனைச் செய்தீர்?
நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
    ஆனால் நன்மை எதுவும் வரவில்லை.
குணமாவதற்குரிய காலத்தை நாங்கள் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
    ஆனால் பயங்கரமே வருகிறது.
20 கர்த்தாவே! நாங்கள் தீயவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்,
    எங்கள் முற்பிதாக்களும் தீமையைச் செய்தார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
    ஆம், உமக்கு எதிராக நாங்கள் பாவம் செய்தோம்.
21 கர்த்தாவே உமது நாமத்திற்கு நன்மைக்காக, எங்களை வெளியே தள்ளாதிரும்.
    உமது மகிமையின் சிங்காசனத்திலிருந்து மேன்மையை விலக்காதிரும்.
எங்களோடு உள்ள உடன்படிக்கையை நினையும்.
    அந்த உடன்படிக்கையை உடைக்க வேண்டாம்.
22 அயல்நாட்டு விக்கிரகங்களுக்கு மழையை கொண்டுவரும் வல்லமை கிடையாது.
    வானத்திற்கு மழையைப் பொழியச் செய்யும் அதிகாரம் இல்லை.
நீரே எங்களது ஒரே நம்பிக்கை,
    நீர் ஒருவரே இவை அனைத்தையும் செய்தவர்.

சங்கீதம் 84:1-7

கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.

84 சர்வ வல்லமையுள்ள தேவனே, உமது ஆலயம் உண்மையிலேயே இனிமையானது.
கர்த்தாவே, உமது ஆலயத்திற்குள் நுழைவதற்கு என்னால் காத்திருக்க முடியாது.
    ஏனெனில் நான் மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.
என் அவயவங்கள் ஒவ்வொன்றும் ஜீவனுள்ள தேவனோடு இருப்பதையே விரும்புகிறது.
என் ராஜாவே, என் தேவனே, சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, குருவிகளுக்கும், அடைக்கலான் குருவிகளுக்கும் உம்முடைய ஆலயத்தில் வீடுகள் உண்டு.
    உமது பலிபீடத்தருகே அப்பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கும், அங்கு அவற்றின் குஞ்சுகளைப் பெறும்.
உமது ஆலயத்தில் வாழும் ஜனங்கள் மிகுந்த பாக்கியமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
    அவர்கள் எப்போதும் உம்மைத் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் இருதயத்தில் கீதங்களைப் பாடிக் கொண்டு
    ஆலயத்திற்கு வருகிற ஜனங்கள் மிகுந்த சந்தோஷமாயிருக்கிறார்கள்.
அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கின் வழியாகப் பயணம் செய்கிறார்கள்.
    தேவன் அதை ஒரு நீரூற்றாகச் செய்கிறார்.
    இலையுதிர்கால மழையின் தண்ணீரால் குளங்கள் தோன்றும்.
தேவனைச் சந்திப்பதற்காக சீயோனுக்குச் செல்லும் வழியில்
    ஜனங்கள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணமாகிறார்கள்.

2 தீமோத்தேயு 4:6-8

என் வாழ்க்கையை தேவனுக்கே காணிக்கையாகத் தந்துவிட்டேன். இங்கே என் வாழ்வு முடியும் காலம் நெருங்கி விட்டது. நான் போரிலே நன்றாகப் போராடியிருக்கிறேன். நான் பந்தயத்தை முடித்துவிட்டேன். நான் விசுவாசத்தைப் பாதுகாத்திருக்கிறேன். இப்பொழுது எனக்காக ஒரு கிரீடம் காத்திருக்கிறது. அந்த நாளில் தேவன் என்னிடம் இதைக் கொடுப்பார். கர்த்தரே நியாயம் தீர்க்கிறவர். அவர் சரியாகச் செய்வார். அந்த நாளில் அவர் எனக்குக் கிரீடத்தைத் தருவார். அவரது வருகையை விரும்பி, அவருக்காகவே காத்திருக்கிற அனைவருக்கும் அவர் கிரீடத்தைத் தருவார்.

2 தீமோத்தேயு 4:16-18

16 முதல் முறையாக நானே என்னைத் தற்காத்துக்கொண்டேன். எவரும் எனக்கு உதவவில்லை. எல்லோரும் விலகிவிட்டனர். அவர்களை மன்னிக்குமாறு தேவனிடம் வேண்டுகிறேன். 17 ஆனால் கர்த்தர் என்னோடு இருந்தார். அவர் எனக்கு பலம் தந்தார். இவ்வகையில் நற்செய்தியைப் போதிக்கும் என் வேலை முழுமையாக நடைபெறும். யூதர் அல்லாதவர்கள் அனைவரும் நற்செய்தியைக் கேட்கவேண்டும் என்று கர்த்தரும் விரும்பினார். நான் சிங்கத்தின் வாயில் விழாமல் காப்பாற்றப்பட்டேன். 18 எவராவது என்னை அழிக்க முயன்றால் கர்த்தர் என்னைக் காப்பாற்றுவார். அவர் பரலோகஇராஜ்யத்திற்கு பாதுகாப்பாகக் கொண்டுபோய் சேர்ப்பார். கர்த்தருக்கு எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக.

லூக்கா 18:9-14

தேவனுக்கு ஏற்றவன் யார்?

தங்களை மிக நல்லவர்களாக எண்ணிக்கொண்ட சில மனிதர்கள் இருந்தார்கள். பிறரைக் காட்டிலும் அவர்கள் மிக நல்லவர்கள் என்பதைப்போன்று அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் போதிப்பதற்கு இயேசு இந்த உவமையைப் பயன்படுத்தினார். 10 “ஒரு பரிசேயனும் வரி வசூலிப்பவனும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இருவரும் தேவாலயத்திற்குப் பிரார்த்தனை செய்யச் சென்றார்கள். 11 வரி வசூலிப்பவனுக்குச் சற்று தொலைவில் பரிசேயன் தனிமையாக நின்று கொண்டான். அவன், ‘தேவனே, நான் மற்ற மக்களைப் போன்று தீயவனாக இல்லாதிருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். திருடுகிற, ஏமாற்றுகிற, தீய ஒழுக்கத்தில் ஈடுபடுகிற மக்களைப் போன்றவன் அல்லன் நான். இந்த வரி வசூலிப்பவனைக் காட்டிலும் நான் நல்லவனாக இருப்பதால் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 12 நான் நல்லவன். வாரத்தில் இரண்டு நாள் உபவாசம் இருக்கிறேன். நான் சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கு தேவாலயத்திற்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்றான்.

13 “வரி வசூலிப்பவனும் தனிமையாகப் போய் நின்றான். அவன் பிரார்த்திக்கும்போது வானத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவன், ‘தேவனே, என்மேல் இரக்கமாக இருங்கள். நான் ஒரு பாவி’ என்று மார்பில் அடித்துக் கொண்டு கதறினான். 14 நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனிதன் பிரார்த்தனை முடிந்து வீட்டுக்குச் செல்கையில், தேவனுக்கு உகந்தவனாகச் சென்றான். ஆனால் பிறரைக் காட்டிலும் நல்லவனாக நினைத்துக்கொண்ட பரிசேயனோ தேவனுக்கு உகந்தவனாக இருக்கவில்லை. தன்னை உயர்ந்தவனாகக் கருதிக்கொள்கிற எவனும் தாழ்த்தப்படுவான். ஆனால் தன்னைத் தாழ்த்திக்கொள்கிற எவனும் உயர்த்தப்படுவான்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center