Revised Common Lectionary (Complementary)
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது.
57 தேவனே, என்னிடம் இரக்கமாயிரும்.
என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும்.
துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில்,
பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.
2 மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன்.
தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார்.
3 பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார்.
எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார்.
தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.
4 என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது.
என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள்.
அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும்,
அம்புகளைப் போலவும் கூர்மையானவை.
அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை.
5 தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர்.
உமது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
6 அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர்.
நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள்.
ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள்.
7 ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார்.
அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார்.
நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.
8 என் ஆத்துமாவே, எழுந்திரு.
வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக!
9 என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன்.
ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.
10 உமது உண்மையான அன்பு
வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
11 தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார்.
அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.
நாபாலின் மரணம்
36 அபிகாயில் நாபாலிடம் திரும்பிப் போனாள். அவன் தன் வீட்டில் ஒரு ராஜாவைப் போன்று உணவு உண்டு கொண்டிருந்தான். நன்றாக குடித்து போதையில் சுகபோகமாக இருந்தான். எனவே அபிகாயில் விடியும்வரை அவனிடம் எதுவும் சொல்லவில்லை. 37 மறுநாள் காலையில் நாபால் போதை தெளிந்தபோது, அவனது மனைவி அவனிடம் நடந்ததைக் கூறினாள். அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவனது உடல் பாறையாக இறுகியது! 38 பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்.
39 நாபால் மரித்துப்போனதை தாவீது கேள்விப்பட்டு, “கர்த்தரைப் போற்றுங்கள்! நாபால் என்னைப் பற்றி அவதூறு சொன்னான். கர்த்தர் எனக்கு உதவினார். நான் தீமை செய்யாதபடி கர்த்தர் என்னை விலக்கினார். நாபால் கேடு செய்ததால் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்” என்றான்.
பிறகு தாவீது அபிகாயிலிடம் தனது மனைவியாகுமாறு செய்தி அனுப்பினான். 40 தாவீதின் ஆட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், “உங்களை அழைத்துவர தாவீது எங்களை அனுப்பினார். நீங்கள் அவரது மனைவியாக வேண்டுமென்று விரும்புகிறார்” என்றார்கள்.
41 அபிகாயில் தன் முகம் தரையில் படும்படி வணங்கி, “நான் உங்கள் வேலைக்காரி. உங்களுக்கு சேவைசெய்ய தயார். எனது எஜமானனாகிய தாவீதின் வேலைக்காரரின் பாதங்களையும் கழுவ ஆயத்தமாக இருக்கிறேன்” என்றாள்.
42 அவள் உடனே ஒரு கழுதையின் மீது ஏறித் தாவீதின் ஆட்களுடன் புறப்பட்டாள். அவள் தன்னோடு 5 பணிப்பெண்களையும் அழைத்து வந்து, தாவீதின் மனைவி ஆனாள்.
இயேசுவின் பிரார்த்தனை
(மத்தேயு 26:36-46; மாற்கு 14:32-42)
39-40 இயேசு பட்டணத்தை (எருசலேம்) விட்டு ஒலிவமலைக்குச் சென்றார். அவரது சீஷர்கள் அவரோடு சென்றார்கள். அங்கே சென்றபிறகு சீஷர்களிடம் இயேசு, “நீங்கள் சோதனைக்கு ஆளாகாதவண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
41 பின்பு இயேசு ஐம்பது அடி தூரம் அளவு அவர்களைவிட்டுச் சென்றார். அவர் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார்: 42 “பிதாவே, நீங்கள் விரும்பினால் நான் துன்பத்தின் கோப்பையைக் குடிக்காமல் இருக்கும்படிச் செய்யுங்கள். ஆனால், நான் விரும்பும் வழியில் அல்லாமல் நீங்கள் விரும்பும் வழியிலேயே அது நடக்கட்டும்” என்றார். 43 அப்போது பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதன் அவருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டான். 44 வேதனையால் இயேசு வருந்தினார். எனவே மிகவும் வேதனையோடு ஊக்கமாகப் பிரார்த்தனை செய்தார். குருதி கொட்டுவதுபோல அவரது முகத்தில் இருந்து வியர்வை வடிந்தது. 45 இயேசு பிரார்த்தனை செய்து முடிந்த பின்னர், அவரது சீஷர்களிடம் சென்றார். அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். (அவர்கள் துயரம் அவர்களைச் சோர்வுறச் செய்தது.) 46 இயேசு அவர்களை நோக்கி, “ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எழுந்து சோதனைக்கு எதிரான வலிமைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center