Add parallel Print Page Options

இயேசுவின் பிரார்த்தனை

(மத்தேயு 26:36-46; லூக்கா 22:39-46)

32 இயேசுவும், அவரது சீஷர்களும் கெத்செமனே என்று அழைக்கப்படும் இடத்துக்குச் சென்றனர். இயேசு “நான் பிரார்த்தனை செய்யும்போது எல்லாரும் இங்கே இருங்கள்” என்றார். 33 இயேசு தன்னோடு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துச் சென்றார். அவர் மிகவும் வேதனைப்பட்டு, துன்பப்பட்டார். 34 “என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. என் இதயம் துயரத்தால் உடைந்து போயிருக்கிறது. இங்கேயே காத்திருங்கள், விழித்திருங்கள்” என்றார்.

35 இயேசு அவர்களிடமிருந்து விலகிச் சிறிது தூரம் சென்றார். அவர் அங்கு தரையில் விழுந்து அந்த வேளை தம்மை விட்டு நீங்கிப் போகக்கூடுமானால் நீங்கட்டும் என பிரார்த்தனை செய்தார். 36 பிதாவே! உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். துயரத்தின் பாத்திரத்தில் நான் அருந்தாதபடி செய்யுங்கள். ஆனாலும் நான் விரும்புகிறபடி இல்லாமல் உங்கள் விருப்பம் போல் எல்லாம் நடக்கட்டும்” என்றார்.

37 பிறகு இயேசு சீஷர்களிடம் வந்து, அவர்கள் தூங்குவதைக் கண்டார். அவர் பேதுருவிடம், “சீமோனே, ஏன் தூங்குகிறாய். எனக்காக ஒரு மணி நேரம் உன்னால் விழித்திருக்க முடியாதா? 38 நீ சோதனைக்கு இடம் தாராதபடி விழித்திருந்து பிரார்த்தனை செய். உனது ஆத்துமா நல்லவற்றையே செய்ய விரும்புகிறது. ஆனால் உனது சரீரம் பலவீனமாக உள்ளது” என்றார்.

39 மீண்டும் இயேசு தனியே சென்று அதே வார்த்தைகளைச் சொல்லிப் பிரார்த்தனை செய்தார். 40 பிறகு சீஷர்களிடம் திரும்பி வந்தார். மீண்டும் அவர்கள் தூங்குவதைப் பார்த்தார். அவர்களது கண்கள் மிகவும் சோர்ந்திருந்தன. இயேசுவிடம் என்ன சொல்லவேண்டும் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர்.

41 மூன்றாவது முறையாக இயேசு தனிப் பிரார்த்தனை செய்தபின் சீஷர்களிடம் திரும்பி வந்தார். அவர்களிடம், “நீங்கள் இன்னும் தூங்கிக்கொண்டும் இளைப்பாறிக்கொண்டுமிருக்கிறீர்கள், இதுபோதும். மனித குமாரன் பாவிகளின் கைகளில் ஒப்படைக்கப்படும் காலம் வந்துவிட்டது. 42 எழும்புங்கள், நாம் போகவேண்டும். இதோ அவர்களிடம் என்னைக் காட்டிக்கொடுக்கிற மனிதன் வந்துவிட்டான்” என்றார்.

Read full chapter