Add parallel Print Page Options

இயேசுவின் பிரார்த்தனை

(மாற்கு 14:32-42; லூக்கா 22:39-46)

36 பின்பு இயேசு தம் சீஷர்களுடன் கெத்செமனே என்ற இடத்திற்குச் சென்றார். அவர் தம் சீஷர்களிடம், “நான் அங்கே சென்று பிரார்த்தனை செய்யும்வரைக்கும் இங்கேயே அமர்ந்திருங்கள்” என்றார். 37 பேதுருவையும், செபதேயுவின் இரு குமாரர்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார். 38 இயேசு பேதுருவிடமும், செபதேயுவின் இரு குமாரர்களிடமும், “என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்துள்ளது. என் இதயம் துக்கத்தினால் உடைந்துள்ளது. என்னுடன் இங்கேயே விழித்திருந்து காத்திருங்கள்” என்றார்.

39 பின் இயேசு அவர்களை விட்டு சிறிது தூரம் சென்றார். பின்பு இயேசு நிலத்தில் முகம்படிய விழுந்து பிரார்த்தித்தார், “என் பிதாவே, முடியுமானால் இந்த வேதனைகள் எனக்கு ஏற்படாமல் செய்யும். ஆனால், உமக்கு விருப்பமானதையே செய்யும். நான் விரும்புவதையல்ல” என்றார். 40 பிறகு தம் சீஷர்களிடம் இயேசு திரும்பி வந்தார். தம் சீஷர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்ட இயேசு, பேதுருவிடம் கூறினார், “ஒருமணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா? 41 சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் ஆவி சரியானதைச் செய்ய விரும்புகிறது. ஆனால் உங்கள் சரீரமோ பலவீனமாக உள்ளது” என்றார்.

42 இயேசு இரண்டாவது முறையாக சென்று பிரார்த்தனை செய்தார், “என் பிதாவே, வேதனை மிகுந்த இக்காரியங்கள் எனக்கு ஏற்படாதிருக்குமாறு செய்ய முடியாதெனில், நீர் விரும்பியபடியே நடக்க நான் வேண்டுகிறேன்” என்றார்.

43 பின்பு இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்றார். மீண்டும் அவர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்டார். அவர்களது கண்கள் மிகவும் களைப்புடன் காணப்பட்டன. 44 ஆகவே மீண்டும் ஒருமுறை இயேசு அவர்களை விட்டுச் சென்று பிரார்த்தனை செய்தார். மூன்றாவது முறையும் அதையேக் கூறினார்.

45 பின் இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்று அவர்களிடம், “இன்னுமா நீங்கள் தூங்கிக் கொண்டும் இளைப்பாறிக் கொண்டுமிருக்கிறீர்கள்? மனித குமாரனைப் பாவிகளிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 46 எழுந்திருங்கள்! நாம் போக வேண்டும். இதோ வந்துவிட்டான் என்னை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப் போகிறவன்” என்றார்.

Read full chapter