Revised Common Lectionary (Complementary)
திருப்தியளிக்கும் உணவை தேவன் கொடுக்கிறார்
55 “தாகமாயுள்ள ஜனங்களே!
தண்ணீரைக் குடிக்க வாருங்கள்!
உங்களிடம் பணம் இல்லாவிட்டால் வருந்தவேண்டாம்.
வாருங்கள் உங்கள் வயிறு நிறையும்வரை குடியுங்கள், உண்ணுங்கள்!
பாலுக்கும் திராட்சைரசத்திற்கும் விலையில்லை.
2 உண்மையான உணவாக இல்லாதவற்றுக்காக ஏன் நீ உன் பணத்தை வீணடிக்கிறாய்?
உன்னை உண்மையாகவே திருப்தி செய்யாத வேலைகளை ஏன் நீ செய்கிறாய்?
என்னை மிக நெருக்கமாக கவனி! நீ மிக நல்ல உணவை உண்பாய்.
உன் ஆத்துமாவைத் திருப்திப்படுத்தும் உணவை உண்டு மகிழலாம்.
3 நான் சொல்லுகிறவற்றை நெருக்கமாகக் கவனி.
என்னைக் கவனி. அதனால் உன் ஆத்துமா வாழும்.
என்னிடம் வா. நான் என்றென்றும் தொடரும் ஒரு உடன்படிக்கையை உன்னோடு செய்வேன்.
நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையைப்போன்று அது இருக்கும்.
நான் அவனை நேசிப்பேன், என்றென்றும் அவனுக்கு வேண்டியவனாக இருப்பேன் என்று தாவீதுக்கு வாக்குறுதிச் செய்தேன்.
நீ அந்த உடன்படிக்கையை நம்பலாம்.
4 அனைத்து நாடுகளுக்கும் எனது வல்லமையின் சாட்சியாக நான் தாவீதைப் படைத்தேன்.
பல நாடுகளுக்கு அவன் ஒரு தலைவனாகவும், தளபதியாகவும் வருவான் என்று நான் வாக்களித்தேன்.”
5 உனக்குத் தெரியாத நாடுகள் பல உள்ளன.
ஆனால் அந்த நாடுகளை அழைப்பாய்.
அந்த நாடுகள் உன்னை அறியாது.
ஆனால் அவை உன்னிடம் ஓடிவரும்.
இது நடக்கும், ஏனென்றால், உனது தேவனாகிய கர்த்தர் இதை விரும்புகிறார்.
இது நடக்கும், ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன்னை மகிமைப்படுத்துகிறார்.
8 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர்.
கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர்.
9 கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர்.
தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார்.
14 கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார்.
கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார்.
15 கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன.
அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர்.
16 கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து,
ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர்.
17 கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே.
அவர் செய்பவை எல்லாம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டும்.
18 கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
19 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோர் விரும்புகின்றவற்றைச் செய்கிறார்.
கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோருக்குச் செவிகொடுக்கிறார்.
அவர்களின் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
20 கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார்.
ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
21 நான் கர்த்தரைத் துதிப்பேன்!
என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.
தேவனும் யூதமக்களும்
9 நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் உண்மையைக் கூறுகிறேன். நான் பொய் சொல்வதில்லை. என் உணர்வுகள் பரிசுத்த ஆவியானவரால் ஆளப்படுகின்றன. அந்த உணர்வுகள் நான் பொய்யானவனில்லை என்று கூறுகின்றன. 2 எனக்குப் பெருந்துக்கம் உண்டு. யூதமக்களுக்காக எப்பொழுதும் நான் மிகவும் கவலைப்படுகிறேன். 3 அவர்கள் எனது சகோதர சகோதரிகளுமாகவும், மண்ணுலகக் குடும்பமுமாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். அவர்களுக்கு உதவியாக இருக்குமானால் நான் பழிக்கப்படவும், கிறிஸ்துவிலிருந்து துண்டித்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். 4 அவர்கள் இஸ்ரவேல் மக்கள். யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். தேவனுடைய மகிமை அவர்களுக்கு உண்டு. தேவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கைகள் உண்டு. தேவன் அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தையும், வழிபாட்டு முறைகளையும் கொடுத்தார். தனது வாக்குறுதிகளை யூதர்களுக்கு தேவன் கொடுத்திருக்கிறார். 5 அவர்கள் நமது மூதாதையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள் வழியில் கிறிஸ்துவும் மண்ணுலகில் பிறந்தார். கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் மேலான தேவன். அவரை எப்பொழுதும் துதியுங்கள். ஆமென்.
5,000 பேருக்கு உணவளித்தல்
(மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-14)
13 யோவானுக்கு நேர்ந்ததைக் கேள்வியுற்ற இயேசு, ஒரு படகில் புறப்பட்டுச் சென்றார். யாருமற்ற ஒரு தனியிடத்திற்குத் தன்னந்தனியே சென்றார். இயேசு புறப்பட்டுச் சென்றதை மக்கள் கேள்விப்பட்டனர். எனவே, அவர்களும் தங்கள் நகரங்களை விட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு சென்ற இடத்திற்கு அவர்கள் தரை வழியே சென்றனர். 14 இயேசு அங்கு வந்த பொழுது, அங்கே ஏராளமான மக்களைக் கண்டார். அவர்களுக்காக வருத்தமுற்ற இயேசு, அங்கிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார்.
15 அன்று பிற்பகல், இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “மனிதர் யாரும் இங்கு வசிப்பதில்லை. மேலும் நேரமுமாகிவிட்டது. மக்களைத் திருப்பி அனுப்புங்கள். அப்பொழுதுதான் அவர்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்று உணவை வாங்க முடியும்” என்று சொன்னார்கள்.
16 இயேசு, “மக்கள் திரும்பிச் செல்லவேண்டியத் தேவையில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு அளியுங்கள்” என்று பதிலளித்தார்.
17 அதற்குச் சீஷர்கள், “ஆனால், நம்மிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தானே உள்ளன” என்று பதில் சொன்னார்கள்.
18 “அப்பத்தையும் மீனையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று இயேசு கூறினார். 19 பிறகு, அங்கிருந்த மக்களை இயேசு புல்வெளியில் அமரச் சொன்னார். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கையிலெடுத்துக் கொண்டார். இயேசு வானத்தைப் பார்த்து அந்த உணவுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களைச் சீஷர்களிடம் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள். 20 மக்கள் அனைவரும் திருப்தியாக உண்டார்கள். மக்கள் உண்டது போக எஞ்சிய உணவைப் பன்னிரெண்டு கூடைகளில் நிரப்பினார்கள். 21 அங்கு சுமார் ஐயாயிரம் ஆண்கள் உணவு உண்டனர். மேலும், பல பெண்களும் குழந்தைகளும் கூட உணவு உண்டனர்.
2008 by World Bible Translation Center