Revised Common Lectionary (Complementary)
இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல்.
31 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்.
2 தேவனே, எனக்குச் செவிகொடும்.
விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும்.
எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும்.
எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும்.
3 தேவனே, நீரே என் பாறை.
எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும்.
4 என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள்.
அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர்.
5 கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே.
என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்!
19 தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர்.
உம்மை நம்பும் ஜனங்களுக்கு எல்லோர் முன்பாகவும் நற்காரியங்களைச் செய்கிறீர்.
20 தீயோர் நல்லோரைத் தாக்க ஒருமித்துக் கூடுகிறார்கள்.
அத்தீயோர் சண்டையிட முயல்கிறார்கள்.
ஆனால் அந்நல்லோரை மறைத்து அவர்களைக் காப்பாற்றும்.
உமது அடைக்கலத்தில் வைத்து அவர்களைப் பாதுகாத்தருளும்.
21 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நகரம் பகைவர்களால் சூழப்பட்டபோது அவர் தம் உண்மையான அன்பை அதிசயமாக எனக்கு வெளிப்படுத்தினார்.
22 நான் அஞ்சினேன், “தேவன் பார்க்கமுடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்றேன்.
ஆனால் தேவனே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
உதவிக்கான என் உரத்த ஜெபங்களை நீர் கேட்டீர்.
23 தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள்.
தம்மிடம் விசுவாசமுள்ள ஜனங்களை கர்த்தர் காக்கிறார்.
ஆனால் தங்கள் வல்லமையைக் குறித்துப் பெருமை பாராட்டுவோரை கர்த்தர் தண்டிக்கிறார்.
அவர்களுக்கான தண்டனையை தேவன் அளிக்கிறார்.
24 கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே,
வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்!
இஸ்ரவேலுக்கான தண்டனை
6 கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக இஸ்ரவேலர்களை அவர்களது பல குற்றறங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கொஞ்சம் வெள்ளிக்காக அப்பாவி ஜனங்களை விற்றார்கள். அவர்கள் ஏழை ஜனங்களை பாதரட்சைளுக்காக விற்றார்கள். 7 அவர்கள் ஏழை ஜனங்களை முகம் குப்புற தரையில் தள்ளி அவர்கள் மேல் நடந்தார்கள். அவர்கள் துன்பப்படுகிற ஜனங்களின் சத்தத்தைக் கேட்பதை நிறுத்தினர். தந்தைகளும் குமாரர்களும் ஒரே பெண்ணிடம் பாலினஉறவு கொள்கிறார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான நாமத்தை பாழாக்கி விட்டார்கள். 8 அவர்கள் ஏழைகளிடமிருந்து ஆடைகளை எடுத்து அந்த ஆடைகளின் மேல் உட்கார்ந்து அவர்கள் பலிபீடங்களில் ஆராதிக்கிறார்கள். அவர்கள் ஏழை ஜனங்களுக்கு கடன் தந்து அவர்கள் ஆடைகளை அடைமானமாக எடுத்தார்கள். அவர்கள் ஜனங்கள் அபராதம் செலுத்தும்படிச் செய்தார்கள். அப்பணத்தில் மது வாங்கி அவர்கள் பொய் தெய்வத்தின் கோயிலில் குடித்து மகிழ்ந்தார்கள்.
9 “ஆனால் அவர்களுக்கு முன்பாகவே எமோரியர்களை அழித்தது நான். எமோரியர்கள் கேதுரு மரங்களைப்போன்று உயரமானவர்கள். அவர்கள் கர்வாலி மரங்களைப்போல் வைரமாயிருந்தவர்கள். ஆனால் நான் அவர்களது மேலே உள்ள பழங்களையும் கீழேயுள்ள வேர்களையும் அழித்தேன்.
10 “நானே உங்களை எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்தேன். நான் 40 வருடங்கள் உங்களை வானந்தரத்தில் வழிநடத்தினேன். நீங்கள் எமோரியரின் நாட்டை எடுத்துக்கொள்ள உதவினேன். 11 நான் உங்கள் குமாரர்களில் சிலரைத் தீர்க்கதரிசிகள் ஆக்கினேன். நான் உங்களது இளைஞர்களில் சிலரை நசரேயர்களாக ஆக்கினேன். இஸ்ரவேல் ஜனங்களே, இது உண்மை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நியாயம் தீர்ப்பதைப்பற்றி போதனை
(லூக்கா 6:37-38,41-42)
7 “மற்றவர்களை நீங்கள் நியாயம் தீர்க்காதீர்கள். அப்பொழுது தேவன் உங்களை நியாயம் தீர்க்கமாட்டார். 2 நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும்.
3 “உங்கள் கண்ணில் இருக்கும் மரத்துண்டினைக் கவனிக்காது, உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள தூசியைக் காண்கிறீர்கள். அது ஏன்? 4 ‘உன் கண்ணிலிருந்து தூசியை நான் அகற்றிவிடுகிறேன்’, என்று ஏன் உங்கள் சகோதரனிடம் சொல்கிறீர்கள்? உங்களை முதலில் கவனியுங்கள். உங்கள் கண்ணில் இன்னமும் பெரிய மரத்துண்டு உள்ளது. 5 மாயக்காரரான நீங்கள் முதலில் உங்கள் கண்ணிலிருந்து அம்மரத்துண்டை அகற்றுங்கள். பின்னரே, உங்கள் சகோதரனின் கண்ணிலிருந்து தூசியை அகற்ற முன் வாருங்கள்.
6 “புனிதமானவற்றை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள். அவை திரும்பி உங்களைத் துன்புறுத்தவே செய்யும். முத்துக்களைப் பன்றிகளின் முன் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அவைகள் முத்துக்களைக் காலால் மிதித்து சேதப்படுத்தும்.
2008 by World Bible Translation Center