Revised Common Lectionary (Complementary)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
131 கர்த்தாவே, நான் பெருமையுடையவன் அல்ல.
நான் முக்கியமானவனாக நடிக்க முயலவில்லை.
நான் பெரியக் காரியங்களைச் செய்ய முயலவில்லை.
எனக்கு மிகவும் கடினமான காரியங்களைக் குறித்து நான் கவலைப்படமாட்டேன்.
2 நான் அமைதியாக இருக்கிறேன்.
என் ஆத்துமா அமைதியாக இருக்கிறது.
தாயின் கரங்களில் இருக்கும் திருப்தியான குழந்தையைப்போன்று
என் ஆத்துமா சமாதானமாகவும் அமைதியாகவும் இருக்கிறது.
3 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு.
அவரை இப்போது நம்பு, அவரை என்றென்றைக்கும் நம்பு.
தேவனுடைய வல்லமையைச் சார்ந்தே இஸ்ரவேல் இருக்க வேண்டும்
31 எகிப்துக்கு ஜனங்கள் உதவி கேட்டுப்போவதைப் பார். ஜனங்கள் குதிரைகளைக் கேட்கிறார்கள். குதிரைகள் தங்களைக் காக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எகிப்திலிருந்து வரும் பல இரதங்களும், குதிரை வீரர்களும் அவர்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள். படை மிகப் பெரிதாய் இருப்பதால் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக ஜனங்கள் நினைக்கின்றனர். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரை (தேவனை) ஜனங்கள் நம்பவில்லை. ஜனங்கள் கர்த்தரிடம் உதவி கேட்பதில்லை.
2 ஆனால், கர்த்தர் ஞானமுள்ளவராய் இருக்கிறார். அவர்களுக்கு எதிராக கர்த்தர் தீங்குவரப் பண்ணுகிறார். கர்த்தருடைய கட்டளையை ஜனங்களால் மாற்ற முடியாது. கர்த்தர் எழும்பி, தீய ஜனங்களுக்கு (யூதா) எதிராகப்போரிடுவார். அவர்களுக்கு உதவ முயல்கிற ஜனங்களுக்கு (எகிப்து) எதிராகவும் கர்த்தர் போரிடுவார்.
3 எகிப்து ஜனங்கள் தேவன் அல்ல மனிதர்கள் மட்டுமே. எகிப்திலுள்ள குதிரைகள் ஆவி அல்ல, மிருகங்கள் மட்டுமே. கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார். உதவுபவர்கள் (எகிப்து) தோற்கடிக்கப்படுவார்கள். உதவியை விரும்புகிற ஜனங்களும் (யூதா) விழுவார்கள். எல்லா ஜனங்களும் சேர்ந்து அழிவார்கள்.
4 கர்த்தர் என்னிடம், “ஒரு சிங்கமோ சிங்கக்குட்டியோ உண்பதற்காக ஒரு மிருகத்தைப் பிடிக்கும்போது, அது மரித்த மிருகத்தின் அருகில் நின்று கெர்ச்சிக்கும். அப்போது அந்தச் சிறந்த சிங்கத்தை எதுவும் பயமுறுத்தாது. மனிதர்கள் வந்து சிங்கத்தின் அருகில் சத்தமிட்டால், அது அஞ்சாது. மனிதர்கள் அதிகமாக ஓசை எழுப்பலாம். ஆனால் சிங்கம் வெளியே ஓடாது” என்று கூறினார்.
அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் சீயோன் மலைக்கு வருவார். அம்மலையில் அவர் போரிடுவார். 5 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எருசலேமை பறவைகள் கூட்டுக்குமேல் பறப்பதைப்போன்று காப்பாற்றுவார். அவளை கர்த்தர் காப்பாற்றுவார். கர்த்தர் “கடந்து வந்து” எருசலேமைக் காப்பாற்றுவார்.
6 இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய நீங்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் தேவனிடம் திரும்பிவர வேண்டும். 7 பிறகு, நீங்கள் செய்த பொன்னாலும், வெள்ளியாலுமான விக்கிரகங்களைத் தொழுதுகொள்வதை ஜனங்கள் நிறுத்துவார்கள். நீங்கள் அந்த விக்கிரகங்களைச் செய்யும்போது, உண்மையில் பாவம் செய்தீர்கள்.
8 அசீரியா வாளால் தோற்கடிக்கப்படும். ஆனால், அந்த வாள் ஒரு மனிதனின் வாளல்ல. அசீரியா அழிக்கப்படும். ஆனால், அந்த அழிவானது மனிதனின் வாளிலிருந்து வராது. அசீரியா தேவனுடைய வாளிலிருந்து தப்பி ஓடுவான். ஆனால், இளைஞர்கள் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக்கப்படுவார்கள். 9 அவர்களது பாதுகாப்புக்குரிய இடம் அழிக்கப்படும். அவர்களின் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களின் கொடியை விடுவார்கள்.
கர்த்தர் இவற்றை கூறினார். கர்த்தருடைய பலிபீடம் சீயோனில் இருக்கிறது. கர்த்தருடைய அடுப்பு (பலிபீடம்) எருசலேமில் இருக்கிறது.
இயேசுவின் வல்லமை
(மத்தேயு 12:22-30; மாற்கு 3:20-27)
14 ஊமையான ஒரு மனிதனிடமிருந்து ஒரு பிசாசை ஒருமுறை இயேசு துரத்திக்கொண்டிருந்தார். பிசாசு வெளிவந்தபோது, அந்த மனிதனால் பேசமுடிந்தது. மக்கள் வியப்படைந்தனர். 15 ஆனால் சிலர் “பெயல்செபூலின் (பிசாசின்) ஆற்றலை இயேசு பயன்படுத்தி, பிசாசுகளைத் துரத்திவிடுகிறார். அசுத்த ஆவிகளுக்குத் தலைவன் பெயல்செபூல்” என்றனர்.
16 பிறரும் இயேசுவைச் சோதிக்க விரும்பினர். வானத்திருலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டும்படியாக இயேசுவைக் கேட்டனர். 17 அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த நினைவுகளை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு மக்களை நோக்கி, “தனக்குள் ஒன்றுக்கொன்று எதிர்த்துக்கொண்டிருக்கிற எந்த இராஜ்யமும் உடைந்து சிதறும். தனக்குள் சண்டை இடுகிற எந்தக் குடும்பமும் பிரிந்து போகும். 18 எனவே சாத்தான் தனக்குள் சண்டையிட்டால், அவனது இராஜ்யம் எப்படி நிலைபெறும்? இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்கு நான் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். 19 நான் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்குப் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்தினால், உங்களைச் சார்ந்தவர்கள் அசுத்த ஆவிகளை வெளியேற்ற எந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்களைச் சார்ந்தவர்களே நீங்கள் கூறுவது தவறு என்பதை நிரூபிக்கிறார்கள். 20 அசுத்த ஆவிகளைத் துரத்த நான் தேவனுடைய வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
21 “பல ஆயுதங்கள் ஏந்திய ஒரு வலிய மனிதன் தன் சொந்த வீட்டைக் காவல் காக்கும்போது அவன் வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும். 22 அவனைக் காட்டிலும் வலிய மனிதன் ஒருவன் வந்து அவனைத் தோற்கடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். தனது வீட்டைக் காக்கும் பொருட்டு முதல் மனிதன் வைத்திருந்த ஆயுதங்களை வலிய மனிதன் எடுத்துக்கொள்வான். முதல் மனிதனின் பொருட்களைக்கொண்டே வலிய மனிதன் தான் செய்ய நினைப்பதைச் செய்வான்.
23 “ஒருவன் என்னோடு இருக்கவில்லை என்றால், அவன் எனக்கு எதிரானவன். என்னோடு வேலை செய்யாதவன் எனக்கு எதிராகச் செயல் புரிகின்றான்.
2008 by World Bible Translation Center