Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.
68 தேவனே, எழுந்து உமது பகைவர்களைச் சிதறடிக்கச் செய்யும்.
அவனது பகைவர்கள் எல்லோரும் அவனை விட்டு ஓடிப் போகட்டும்.
2 காற்றால் சிதறடிக்கப்படும் புகையைப் போன்று உமது பகைவர்கள் சிதறுண்டு போகட்டும்.
நெருப்பில் உருகும் மெழுகைப்போன்று உமது பகைவர்கள் அழிந்துபோகட்டும்.
3 ஆனால் நல்லோர் மகிழ்ச்சியாயிருப்பார்கள்.
நல்லோர் தேவனோடுகூட மகிழ்ச்சியாய் காலம் கழிப்பார்கள்.
நல்லோர் களிப்படைந்து மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.
4 தேவனை நோக்கிப் பாடுங்கள்.
அவர் நாமத்தை துதித்துப் பாடுங்கள்.
தேவனுக்கு வழியை உண்டுபண்ணுங்கள்.
அவர் பாலைவனத்தில் அவரது இரதத்தைச் செலுத்துகிறார்.
அவர் நாமம் யேகோவா,
அவரது நாமத்தைத் துதியுங்கள்.
5 அவரது பரிசுத்த ஆலயத்தில், தேவன் அநாதைகளுக்குத் தந்தையைப் போன்றவர்.
தேவன் விதவைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
6 தேவன் தனிமையில் வாழும் ஜனங்களுக்கு வீட்டைக் கொடுக்கிறார்.
தேவன் அவரது ஜனங்களைச் சிறையிலிருந்து தப்புவிக்கிறார்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
ஆனால் தேவனுக்கு எதிராகத் திரும்பும் ஜனங்களோ கொடிய சிறையிலே உழல்வார்கள்.
7 தேவனே, உமது ஜனங்களை எகிப்திலிருந்து வழிநடத்தினீர்.
நீர் பாலைவனத்தின் குறுக்காகக் கடந்து சென்றீர்.
8 பூமி அதிர்ந்தது,
இஸ்ரவேலின் தேவன் சீனாய் மலைக்கு வந்தார், வானம் உருகிற்று.
9 தேவனே, பயனற்ற பாழ்நிலத்தை மீண்டும் பலன்பெறும்படி செய்வதற்காக
மழையைப் பெய்யப்பண்ணினீர்.
10 உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின.
தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர்.
19 கர்த்தரைத் துதியுங்கள்!
ஒவ்வொரு நாளும் நாம் சுமக்கவேண்டிய பாரங்களைச் சுமப்பதற்கு அவர் உதவுகிறார்.
தேவன் நம்மை மீட்கிறார்.
20 அவரே நமது தேவன் அவரே நம்மை மீட்கும் தேவன்.
நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறார்.
ஆபிரகாம், தேவனால் சோதிக்கப்படுதல்
22 இதற்குப் பிறகு, தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினார். எனவே தேவன் “ஆபிரகாமே” என்று அழைத்தார்.
ஆபிரகாமும், “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.
2 தேவன் அவனிடம், “உன்னுடைய அன்பிற்குரிய, ஒரே குமாரனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குச் செல். அங்கு உன் குமாரனை எனக்கு தகன பலியாகக் கொடு. எந்த இடத்தில் அதைச் செய்ய வேண்டுமென்று நான் உனக்குச் சொல்வேன்” என்றார்.
3 காலையில் ஆபிரகாம் எழுந்து தனது கழுதையைத் தயார் செய்தான். ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் அழைத்துக்கொண்டான். பலிக்கு விறகுகளையும் எடுத்துக்கொண்டான். தேவன் போகச் சொன்ன இடத்திற்கு அவர்கள் போனார்கள். 4 அவர்கள் மூன்று நாட்கள் பயணம் செய்தபின் தொலைவில் தேவன் குறிப்பிட்ட இடம் தெரிந்தது. 5 ஆபிரகாம் தனது வேலைக்காரர்களிடம், “கழுதையோடு நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள், நானும் என் குமாரனும் அவ்விடத்திற்கு தொழுதுகொள்ளப் போகிறோம். பிறகு உங்களிடம் திரும்பி வருவோம்” என்றான்.
6 பலிக்கான விறகுகளை எடுத்து குமாரனின் தோள் மீது வைத்தான். ஆபிரகாம் கத்தியையும், நெருப்பையும் எடுத்துக்கொண்டு, அவனும் அவனது குமாரனும் சேர்ந்து போனார்கள்.
7 ஈசாக்கு தன் தந்தையைப் பார்த்து, “அப்பா” என்று அழைத்தான்.
ஆபிரகாமும், “என்ன மகனே” எனக் கேட்டான்.
ஈசாக்கு அவனிடம், “விறகும், நெருப்பும் நம்மிடம் உள்ளது. பலியிடுவதற்கான ஆட்டுக்குட்டி எங்கே?” என்று கேட்டான்.
8 அதற்கு ஆபிரகாம், “தேவனே தனக்கான பலிக்குரிய ஆட்டுக்குட்டியைக் கொடுப்பார் மகனே” என்று பதில் சொன்னான்.
ஆபிரகாமும் அவனது குமாரனும் 9 தேவன் போகச் சொன்ன இடத்திற்கு போய்ச் சேர்ந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டி அதின்மேல் விறகுகளை அடுக்கினான். பின் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் கிடத்தினான். 10 பிறகு ஆபிரகாம் கத்தியை எடுத்து குமாரனை வெட்டுவதற்குத் தயாரானான்.
11 அப்போது கர்த்தருடைய தூதன் ஆபிரகாமைத் தடுத்து நிறுத்தி, “ஆபிரகாமே, ஆபிரகாமே” என்று அழைத்தார்.
ஆபிரகாம், “நான் இங்கே இருக்கிறேன்” என்று பதிலளித்தான்.
12 தேவதூதன்: “உனது குமாரனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ தேவனை மதிப்பவன் என்றும், கீழ்ப்படிபவன் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு குமாரனையும் கொல்லத் தயாராக உள்ளாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்றார்.
13 ஆபிரகாம் தொலைவில் தன் கண் முன் ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டான். அதன் கொம்புகள் புதரில் சிக்கிக்கொண்டிருந்தன. ஆபிரகாம் அதனை விடுவித்து தேவனுக்குப் பலியிட்டான். ஆபிரகாமின் குமாரன் காப்பாற்றப்பட்டான். 14 அதனால் ஆபிரகாம் அந்த இடத்திற்கு, “யேகோவா யீரே”[a] என்று பெயரிட்டான். “கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்” என்று இன்றைக்கும் கூட ஜனங்கள் கூறுகின்றனர்.
பிற அப்போஸ்தலர்களும் பவுலை ஏற்றுக்கொண்டனர்
2 பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்பு எருசலேமுக்கு நான் மீண்டும் சென்றேன். பர்னபாவோடு நான் சென்றேன். கூடவே தீத்துவையும் அழைத்துச் சென்றேன். 2 தேவன் எனக்குக் கட்டளை இட்டபடியும் வழி காட்டியபடியும் நான் விசுவாசிகளின் தலைவர்களைக் காணப் போனேன். நாங்கள் தனிமையில் இருக்கும்போது யூதர் அல்லாதவர்களிடம் நான் போதிக்கும் நற்செய்தியை அவர்களிடம் சொன்னேன். எனது பணியை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இதனால் நான் ஏற்கெனவே செய்தவையும் இப்பொழுது செய்துகொண்டிருப்பதுவும் வீணாகாமல் இருக்கும்.
3-4 என்னுடன் தீத்து இருந்தான். அவன் ஒரு கிரேக்கன். ஆயினும் அந்தத் தலைவர்கள், தீத்துவை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தவில்லை. இது போன்ற சிக்கல்களைப் பற்றிப் பேசவேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டது. ஏனென்றால் சில போலிச் சகோதரர்கள் இரகசியமாய் எங்கள் குழுவில் சேர்ந்திருந்தனர். அவர்கள் ஒற்றர்களைப்போல இருந்தனர். இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்கு உண்டான சுதந்தரத்தை அவர்கள் அறிய விரும்பினர். 5 ஆனால் அந்த போலிச் சகோதரர்கள் விருப்பப்படி நாங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து நற்செய்தியின் முழு உண்மை உங்களோடு இருப்பதையே நாங்கள் விரும்பினோம்.
6 மிக முக்கியமாய்க் கருதப்பட்ட அந்த மனிதர்கள் நான் பிரசங்கம் செய்த நற்செய்தியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அவர்கள் “முக்கியமானவர்களா” இல்லையா என்பது பற்றி நான் கவலைப் படவில்லை. தேவனுக்கு முன்னால் அனைவரும் சமம்தானே. 7 அதற்கு மாறாக அத்தலைவர்கள் பேதுருவைப் போன்றே எனக்கும் தேவன் சிறப்புப் பணிகளைக் கொடுத்திருப்பதாக உணர்ந்தனர். தேவன் பேதுருவிடம், யூதர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் எனக்கோ, யூதர் அல்லாதவர்களுக்குப் போதிக்கும்படி தேவன் ஆணையிட்டிருந்தார். 8 ஒரு அப்போஸ்தலனைப்போலப் பணியாற்றும்படி பேதுருவுக்கு தேவன் அதிகாரத்தைத் தந்தார். யூதர்களுக்குப் பேதுருவும் ஒரு அப்போஸ்தலனாகவே இருந்தான். நானும் ஒரு அப்போஸ்தலனைப்போல பணியாற்ற தேவன் எனக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். ஆனால் நானோ யூதர் அல்லாதவர்களுக்காக அப்போஸ்தலனாக இருக்கிறேன். 9 யாக்கோபு, பேதுரு, யோவான் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். தேவன் எனக்குச் சிறப்பு வரத்தைக் கொடுத்திருப்பதாக அவர்கள் எண்ணினர். அதனால் அவர்கள் என்னையும், பர்னபாவையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் எங்களிடம், “நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் யூதர்களுக்குப் போதனை செய்கிறோம். யூதர் அல்லாதவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்” என்றார்கள். 10 ஏழை மக்களை நினைத்துக்கொள்ளும்படி மட்டும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள். இதுதான் நான் சிறப்பாக என்னை அர்ப்பணித்த ஒன்றாக இருந்தது.
2008 by World Bible Translation Center