Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 30

தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல்.

30 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
    எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
    எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
    நீர் என்னைக் குணமாக்கினீர்.
கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
    என்னை வாழவிட்டீர்.
    குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.

தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்!
    அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!
தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே.”
    ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார்.
இரவில் அழுதபடி படுத்திருந்தேன்.
    மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!

இப்போது இவ்வாறு நான் கூறமுடியும்.
    அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன்.
    “நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர்.
    எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன்.
சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர்,
    நான் மிகவும் பயந்தேன்.

தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன்.
    எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.
நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்?
    மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள்.
அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை!
    என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.
10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும்.
    என்னிடம் தயவாயிரும்!
    கர்த்தாவே, எனக்கு உதவும்.

11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்!
    என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர்.
அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர்.
    மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.
12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன்.
    ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன்.
    எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

2 சாமுவேல் 14:12-24

12 அப்பெண், “எனது ராஜாவாகிய ஆண்டவனே, தயவுசெய்து நான் வேறு சிலவற்றை உம்மிடம் பேச அனுமதியும்” என்றாள்.

ராஜா, “சொல்” என்றான்.

13 அப்போது அப்பெண், “தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக ஏன் இவ்வாறு திட்டமிடுகிறீர்? இவ்வாறு சொல்லும்போது நீரே குற்றவாளியென்பதைக் காட்டிவிடுகிறீர். ஏனெனில் உமது வீட்டிலிருந்து போகும்படி செய்த உமது குமாரனை வீட்டிற்குத் திரும்ப அழைத்துவரவில்லை. 14 நாம் எல்லோரும் ஒரு நாள் மரிப்போம். நாம் நிலத்தில் சிந்திய தண்ணீரைப் போன்றவர்கள். யாரும் அத்தண்ணீரை நிலத்திலிருந்து மீண்டும் சேகரிக்க முடியாது. தேவன் மக்களை மன்னிப்பாரென்று உமக்குத் தெரியும். பாதுகாப்பான இடத்திற்கு விரட்டப்பட்ட ஜனங்களுக்காக தேவன் திட்டம் வகுத்திருக்கிறார். தேவன் தம்மிடமிருந்து ஓடிப் போகும்படி அவர்களை வற்புறுத்தமாட்டார். 15 எனது ஆண்டவராகிய ராஜாவே, நான் இவ்வார்த்தைகளை உம்மிடம் கூற வந்தேன். ஏனெனில் ஜனங்கள் என்னைப் பயமுறுத்தினர். நான் எனக்குள் சொல்லியதாவது, ‘நான் ராஜாவிடம் பேசுவேன். ராஜா ஒருவேளை எனக்கு உதவலாம். 16 ராஜா நான் சொல்வதைக் கேட்டு, என்னையும் எனது குமாரனையும் கொல்ல விரும்பும் மனிதனிடமிருந்து காப்பாற்றுவார். அம்மனிதன் தேவன் எங்களுக்குக் கொடுத்த பொருட்களைப் பெறாதபடி செய்கிறான்.’ 17 எனது ராஜாவாகிய ஆண்டவனின் வார்த்தைகள் எனக்கு ஆறுதலளிக்கும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நீங்கள் தேவனிடமிருந்து வந்த தூதனைப் போன்றவர். நல்லது எது, கெட்டது எது என்பது உமக்குத் தெரியும். தேவனாகிய கர்த்தர் உம்மோடு இருக்கிறார்” என்றாள்.

18 தாவீது ராஜா அந்த பெண்ணிற்கு உத்தரவாக, “நான் கேட்கவிருக்கும் கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டும்” என்றான். அப்பெண், “எனது ராஜாவாகிய ஆண்டவனே, தயவுசெய்து உங்கள் வினாவை சொல்லுங்கள்” என்றாள்.

19 ராஜா, “இவற்றையெல்லாம் சொல்வதற்கு யோவாப் உனக்குச் சொல்லவில்லையா?” என்று கேட்டான்.

அப்பெண் பதிலாக, “எனது ராஜாவாகிய ஆண்டவனே, நீங்கள் உயிரோடிருக்குமளவிற்கு நீங்கள் சரியானவர்! உங்கள் அதிகாரியாகிய யோவாப் என்னிடம் இவற்றையெல்லாம் கூறும்படிச் சொன்னார். 20 நடந்த காரியங்களை நீர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்காக யோவாப் இவற்றைச் செய்தார். என் ஆண்டவனே, நீர் தேவதூதனைப் போன்ற ஞானம் உள்ளவர்! உமக்கு இப்பூமியில் நடப்பவையெல்லாம் தெரியும்” என்றாள்.

அப்சலோம் எருசலேம் திரும்புதல்

21 ராஜா யோவாபை நோக்கி, “இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்” என்றான்.

22 யோவாப் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அவன் தாவீது ராஜாவை வாழ்த்தியபடியே, “நீங்கள் என்னிடம் கருணைக் காட்டுகிறீர்கள் என்பதை இன்று அறிகிறேன். நான் கேட்டதை நீர் நிறைவேற்றுகிறபடியால் அதை நான் அறிகிறேன்” என்றான்.

23 பின்பு யோவாப் எழுந்து கேசூருக்குப் போய் அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வந்தான். 24 ஆனால் தாவீது ராஜா, “அப்சலோம் தனது வீட்டிற்குப் போகலாம். ஆனால் அவன் என்னைப் பார்க்க வரமுடியாது” என்றான். எனவே அப்சலோம் தனது வீட்டிற்குப் போனான். அப்சலோம் ராஜாவைப் பார்க்கபோக முடியவில்லை.

அப்போஸ்தலர் 26:1-11

அகிரிப்பா மன்னன் முன் பவுல்

26 அகிரிப்பா பவுலை நோக்கி, “இப்போது உன்னைப்பற்றி நீயே பேசலாம்” என்றான். பின் பவுல் தனது கையை உயர்த்தித் தனக்கு சார்பாகப் பேசத் துவங்கினான். அவன், “அகிரிப்பா மன்னரே, யூதர்கள் எனக்கு எதிராகச் சொன்ன எல்லா வழக்குகளுக்கும் நான் பதில் கூறுவேன். நான் இன்று உங்கள் முன்பாக நின்று இதைச் செய்வதை ஓர் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். நீங்கள் எல்லா யூத வழக்கங்களையும் யூதர்கள் வாதிடுகிற காரியங்களையும் மிகுதியாக அறிந்திருப்பதால் நான் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். தயவு செய்து நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.

“எனது முழு வாழ்க்கையைக் குறித்து எல்லா யூதர்களும் அறிந்திருக்கிறார்கள். முதலில் எனது சொந்த நாட்டில் நான் வாழ்ந்த வகையையும், பின்னர் எருசலேமில் வாழ்ந்த வகையையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த யூதர்களுக்கு என்னைப் பல காலமாகத் தெரியும். அவர்கள் விரும்பினால் நான் ஒரு நல்ல பரிசேயன் என்று உங்களுக்குக் கூற முடியும். யூத மக்களில் பிற எல்லா பிரிவினரைக் காட்டிலும் பரிசேயர்கள் யூத மதவிதிகளைக் கவனமாகப் பின்பற்றுகிறார்கள். தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் நம்புவதால் இப்போது நான் விசாரணையிலிருக்கிறேன். நமது மக்களில் பன்னிரண்டு குலத்தினரும் பெறவேண்டுமென நம்பும் வாக்குறுதி இதுவே. இந்நம்பிக்கைக்காக யூதர்கள் தேவனுக்கு இரவும் பகலும் சேவை புரிகின்றனர். எனது மன்னரே, நான் இந்த வாக்குறுதியிலே நம்பிக்கை வைத்திருப்பதால் யூதர்கள் என் மீது பழி சுமத்துகின்றனர்! தேவன் மரணத்தினின்று மக்களை எழுப்ப முடியுமென்பது நம்ப இயலாதது என ஏன் மக்கள் எண்ணுகின்றனர்?

“நான் பரிசேயனாக இருந்தபோது, நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்ய எண்ணினேன். 10 எருசலேமில் விசுவாசிகளுக்கு[a] எதிராகப் பல காரியங்களைச் செய்தேன். விசுவாசிகளில் பலரைச் சிறையிலிடும் அதிகாரத்தைத் தலைமை ஆசாரியர் எனக்குக் கொடுத்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் கொல்லப்பட்டபோது, அது ஒரு நல்ல செய்கை என்று நான் ஒப்புக்கொண்டேன். 11 ஒவ்வொரு யூத ஜெப ஆலயத்திலும் நான் அவர்களைத் தண்டித்தேன். இயேசுவுக்கு எதிராக அவர்கள் தகாதவற்றைப் பேசச் செய்வதற்கு முயற்சித்தேன். அம்மக்களிடம் நான் கொண்ட அதிக சினத்தால் அவர்களைக் கண்டு பிடித்துத் துன்புறுத்துவதற்காக வேறு நகரங்களுக்கு சென்றேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center