Revised Common Lectionary (Complementary)
மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்.
32 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2 குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
3 தேவனே, நான் மீண்டும், மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன்.
ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை.
நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.
4 தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர்.
கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.
5 என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.
6 இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
7 தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.
8 கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன்.
உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார்.
9 எனவே குதிரையை அல்லது கழுதையைப் போல் மூடனாகாதே.
அம்மிருகங்களை வழி நடத்துவோர் கடிவாளங்களையும் பயன்படுத்தாமல் அவற்றை கட்டுப்படுத்த இயலாது” என்கிறார்.
10 தீயோருக்கு வேதனைகள் பெருகும்.
கர்த்தரை நம்புவோரை தேவனுடைய உண்மையான அன்பு சூழ்ந்துகொள்ளும்.
11 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்.
பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களே! களிப்படையுங்கள்.
28 அகிமாஸ் ராஜாவிடம், “எல்லாம் நல்லபடி நடந்தது!” என்றான். அகிமாஸ் ராஜாவை வணங்கினான். அவனது முகம் நிலத்திற்கு அருகில் வந்தது. அகிமாஸ், “உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்! எனது ராஜாவாகிய ஆண்டவனே, உங்களுக்கு எதிரான ஆட்களை கர்த்தர் தோற்கடித்தார்” என்றான்.
29 ராஜா, “இளம் அப்சலோம் நலமா?” என்று கேட்டான்.
அகிமாஸ் பதிலாக, “யோவாப் என்னை அனுப்பியபோது பெரிய சந்தடியிருந்தது. அது என்னதென்று எனக்குத் தெரியாது” என்றான்.
30 அப்போது ராஜா, “இங்கே வந்து நின்று காத்திரு” என்றான். அகிமாசும் தள்ளிப்போய் நின்றான்.
31 கூஷியன் வந்தான். அவன், “எனது ஆண்டவனாகிய ராஜாவுக்குச் செய்தி இது. உங்களுக்கு எதிரான ஜனங்களை கர்த்தர் இன்று தண்டித்தார்!” என்றான்.
32 ராஜா கூஷியனை நோக்கி, “இளம் அப்சலோம் நலமா?” என்றான்.
கூஷியன் பதிலாக, “உங்களுக்கு எதிராக வரும் பகைவர்களும் ஜனங்களும் இந்த இளம் மனிதனைப் (அப்சலோமைப்) போல தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்” என்றான்.
33 அப்போது அப்சலோம் மரித்துவிட்டான் என்பதை ராஜா அறிந்தான். ராஜா நிலை குலைந்தான். நகரவாயிலின் மேலிருந்த அறைக்கு அவன் சென்றான். அங்கே அவன் அழுதான். போகும்போது, “எனது குமாரன் அப்சலோமே, என் குமாரன் அப்சலோமே! நான் உனக்காக மரித்திருக்கலாம் என விரும்புகிறேன். என் மகனே, என் மகனே!” என்றான்.
யோவாப் தாவீதைக் கடிந்துக் கொள்கின்றான்
19 ஜனங்கள் யோவாபுக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் யோவாபை நோக்கி, “பாருங்கள் ராஜா அப்சலோமுக்காக மிகவும் அழுது துக்கமாய் இருக்கிறார்” என்றார்கள். 2 அன்றைய போரில் தாவீதின் படை வெற்றி பெற்றது, ஆனால் அந்த நாள் எல்லோருக்கும் துக்க நாளாக அமைந்தது. “ராஜா தனது மகனுக்காக அதிக துக்கமடைந்துள்ளான்” என்பதை ஜனங்கள் கேள்விப்பட்டதால் அது மிகுந்த துக்க நாள் ஆயிற்று.
3 ஜனங்கள் அமைதியாக நகரத்திற்குள் வந்தனர். போரில் தோற்கடிக்கப்பட்டு, ஓடிப்போன ஜனங்களைப்போல் அவர்கள் இருந்தார்கள். 4 ராஜா முகத்தை மூடிக் கொண்டிருந்தான். “எனது குமாரன் அப்சலோமே, ஓ அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று அவன் சத்தமிட்டு அழுதுக் கொண்டிருந்தான்.
5 ராஜாவின் அரண்மனைக்குள் யோவாப் வந்தான். யோவாப் ராஜாவைப் பார்த்து, “உங்கள் ஒவ்வொரு அதிகாரிகளையும் நீங்கள் புண்படுத்துகிறீர்கள். பாருங்கள் அந்த அதிகாரிகள் இன்று உங்கள் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர்கள் உங்கள் குமாரர்கள், குமாரத்திகள், மனைவிகள், வேலைக்காரிகள் ஆகியோரின் உயிர்களையும் காப்பாற்றினார்கள். 6 உங்களைப் பகைக்கிறவர்களை நீர் நேசிக்கிறீர். உங்களை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். உங்கள் அதிகாரிகளும் உங்கள் வீரர்களும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று வெளிப்படுத்திவிட்டீர்கள். அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தால் நீர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பீர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது! 7 இப்போது எழுந்து போய் உங்கள் அதிகாரிகளிடம் பேசுங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள்! இப்போதே எழுந்து நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், இன்றிரவு உம்மோடு ஒருவன்கூட இருக்கமாட்டான் என்று கர்த்தர் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். நீங்கள் குழந்தையாயிருந்ததிலிருந்து அனுபவித்த எல்லா துன்பங்களையும்விட அது தீமையானதாக இருக்கும்” என்றான்.
8 அப்போது ராஜா நகரவாயிலுக்குச் சென்றான். ராஜா வாயிலருகே வந்துள்ளான் என்ற செய்தி பரவியது. எனவே எல்லோரும் ராஜாவைக் காண வந்தனர். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் வீடுகளுக்கு ஓடிப்போய் விட்டனர்.
பக்கவாதக்காரன் குணமடைதல்
(மத்தேயு 9:1-8; மாற்கு 2:1-12)
17 ஒருநாள் இயேசு மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். பரிசேயர்களும் வேதபாரகரும் கூட அங்கே உட்கார்ந்துகொண்டிருந்தனர். கலிலேயா, யூதேயா, எருசலேம் ஆகிய நகரங்களில் இருந்து அவர்கள் வந்திருந்தனர். தேவன் குணமாக்கும் வல்லமையை இயேசுவுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். 18 பக்கவாதக்காரன் ஒருவன் அங்கிருந்தான். சில மனிதர்கள் அவனை ஒரு சிறுபடுக்கையில் சுமந்து வந்தனர். அவர்கள் அவனைக் கொண்டுவந்து இயேசுவின் முன் வைக்க முயன்றனர். 19 ஆனால் மக்கள் திராளாகக் கூடியிருந்ததால் அவர்களால் இயேசுவினருகே வர வழி கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே அந்த மனிதர்கள் கூரையின் மேலேறி, கூரையில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாகப் படுக்கையோடு பக்கவாதக்காரனைக் கீழே இறக்கினர். அவர்கள் இயேசுவின் முன்னே பக்கவாதக்காரன் படுத்திருக்கும்படியாக அந்த அறைக்குள்ளேயே அவனை இறக்கினர். 20 அவர்கள் விசுவாசமுள்ளவர்கள் என்பதை இயேசு கண்டார். நோயாளியிடம் இயேசு, “நண்பனே, உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
21 வேதபாரகரும், பரிசேயரும் தமக்குள்ளேயே, “இந்த மனிதன் யார்? தேவனுக்கு எதிரான காரியங்களை இவன் பேசுகிறான். தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும்” என்று எண்ணிக் கொண்டனர்.
22 அவர்களின் எண்ணத்தை இயேசு அறிந்திருந்தார். அவர், “நீங்கள் மனதில் இவ்வாறு எண்ணுவது ஏன்? 23 பக்கவாதக்காரனிடம், ‘உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதோ, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதோ, எது எளிது? 24 ஆனால் பூமியில் பாவங்களை மன்னிக்க தேவனுடைய குமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நான் நிரூபிப்பேன்” என்றார். ஆகவே இயேசு பக்கவாதக்காரனை நோக்கி, “எழுந்து நில், உனது படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார்.
25 அப்போது அம்மனிதன் அங்கு கூடியிருந்த மக்களுக்கு முன்பாக எழுந்திருந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு தேவனை வாழ்த்திக்கொண்டே வீட்டிற்கு நடந்து போனான். 26 எல்லா மக்களும் மிகுந்த ஆச்சரியமுற்றனர். அவர்கள் தேவனை வாழ்த்த ஆரம்பித்தனர். தேவனுடைய வல்லமையைக் குறித்து மிகுந்த பயபக்தியுள்ளவர்களாகி, “இன்று ஆச்சரியமான காரியங்களைக் கண்டோம்” என்றார்கள்.
2008 by World Bible Translation Center