Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 32

மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல்.

32 பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
    பாவங்கள் மூடப்பட்ட மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
குற்றமற்றவன் என கர்த்தர் கூறும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
    இரகசியமான பாவங்களை மறைக்க முயலாதிருக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

தேவனே, நான் மீண்டும், மீண்டும் உம்மிடம் ஜெபித்தேன்.
    ஆனால் என் இரகசியமான பாவங்களைக் குறித்து நான் பேசவில்லை.
    நான் ஜெபித்த ஒவ்வொரு முறையும் என் வலிமை குன்றிப்போயிற்று.
தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர்.
    கோடைக் காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.

என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன்.
    கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன்.
    என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.

இதற்காக, தேவனே, உம்மைப் பின்பற்றுவோர் உம்மிடம் ஜெபம் செய்யவேண்டும்.
    வெள்ளப் பெருக்கைப்போல் தொல்லைகள் வந்தாலும் உம்மைப் பின்பற்றுவோர் ஜெபிக்கவேண்டும்.
தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்.
    என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர்.
நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர்.
    எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.

கர்த்தர், “நீ வாழவேண்டிய வழியை உனக்கு போதித்து வழிநடத்துவேன்.
    உன்னைக் காத்து உனக்கு வழிகாட்டியாயிருப்பேன் என்று கூறுகிறார்.
எனவே குதிரையை அல்லது கழுதையைப் போல் மூடனாகாதே.
    அம்மிருகங்களை வழி நடத்துவோர் கடிவாளங்களையும் பயன்படுத்தாமல் அவற்றை கட்டுப்படுத்த இயலாது” என்கிறார்.

10 தீயோருக்கு வேதனைகள் பெருகும்.
    கர்த்தரை நம்புவோரை தேவனுடைய உண்மையான அன்பு சூழ்ந்துகொள்ளும்.
11 நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்.
    பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களே! களிப்படையுங்கள்.

2 சாமுவேல் 15:1-12

அப்சலோம் பல நண்பர்களை கூட்டுதல்

15 இதற்குப் பின்பு அப்சலோம் ஒரு தேரையும், குதிரைகளையும் தனக்காக பெற்றுக்கொண்டான். அவன் தேரைச் செலுத்தும்போது அவனுக்கு முன்னே ஓடுவதற்கு 50 ஆட்கள் இருந்தனர். அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வாசலருகே[a] நின்று, நியாயத்திற்காக தாவீது ராஜாவிடம் செல்லும் ஆட்களைக் கவனிப்பான். பின்பு அவர்களோடு பேசி, “எந்த நகரத்திலிருந்து வருகிறாய்?” என்பான். அம்மனிதன், “நான் இஸ்ரவேலின் இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுவான். அப்சலோம் அம்மனிதனிடம், “பாரும், நீ சொல்வது சரியே. ஆனால் தாவீது ராஜா நீ சொல்வதைக் கேட்கமாட்டார்” என்பான்.

அப்சலோம் மேலும், “யாராகிலும் என்னை இந்நாட்டின் நீதிபதியாக நியமித்தால் சிக்கலோடு வருகிற ஒவ்வொரு மனிதனுக்கும் நான் உதவக் கூடும். அவனுக்குத் தக்க தீர்ப்பு கிடைப்பதற்கு நான் உதவுவேன்” என்பான்.

எவனாகிலும் அப்சலோமிடம் வந்து அவனை வணங்கியதும் அப்சலோம் அவனை நெருங்கிய நண்பனாக எண்ணி நடத்துவான். அப்சலோம் கையை நீட்டி, அவனைத் தொட்டு, முத்தமிடுவான். தாவீது ராஜாவிடம் நீதி வேண்டி வந்த எல்லா இஸ்ரவேலருக்கும் அவ்வாறே செய்தான். அதனால் இஸ்ரவேலருடைய இருதயங்களைக் கவர்ந்துக்கொண்டான்.

தாவீதின் அரசைப் பெற அப்சலோம் திட்டம்

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு[b] அப்சலோம், ராஜா தாவீதிடம், “எப்ரோனில் கர்த்தருக்கு நான் கொடுத்த விசேஷ வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு போகிறேன். ஆராமிலுள்ள கேசூரில் வாழ்ந்து கொண்டிருக்கையில் அந்த வாக்குறுதியை நான் செய்தேன்: ‘என்னை கர்த்தர் எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுவந்தால் நான் கர்த்தருக்கு சேவைச் செய்வேன்’ என்றேன்” என்றான்.

தாவீது ராஜா, “சமாதானமாகப் போ” என்றான்.

அப்சலோம் எப்ரோனுக்குப் போனான். 10 ஆனால் அப்சலோம் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்கள் மூலமாகவும் உளவாளிகளை அனுப்பினான். இந்த உளவாளிகள் ஜனங்களிடம், “நீங்கள் எக்காளம் முழங்கியதும், ‘அப்சலோம் எப்ரோனின் ராஜா ஆனான்’ என்று கூறுங்கள்!” என்றான்.

11 அப்சலோம் தன்னோடு வர 200 பேரை அழைத்தான். அவர்கள் எருசலேமிலிருந்து அவனோடு புறப்பட்டனர். ஆனால் அப்சலோமின் திட்டத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 12 அகித்தோப்பேல் தாவீதுக்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவன். அவன் கீலோ என்னும் ஊரைச் சேர்ந்தவன். அப்சலோம் பலிகளைச் செலுத்தும் போது அகித்தோப்பேலை நகரத்திலிருந்து (கீலோவிலிருந்து) வருமாறு கூறினான். அப்சலோமின் திட்டங்கள் சரிவர நிறைவேறிக்கொண்டிருந்தன. ஜனங்களில் பலர் அவனுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.

ரோமர் 11:1-10

தன் மக்களை மறவாத தேவன்

11 “தேவன் தன் மக்களைத் தூரமாகத் தள்ளி விட்டாரா?” என்று நான் கேட்கிறேன். இல்லை. நானும் ஒரு யூதன் தான். நான் ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து வந்துள்ளேன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இஸ்ரவேல் மக்கள் பிறப்பதற்கு முன்னரே அவர்களைத் தம் மக்களாக தேவன் தேர்ந்தெடுத்து விட்டார். தேவன் அவர்களைத் தூரத் தள்ளிவிடவில்லை. எலியாவைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் உறுதியாக அறிவீர்கள். இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக எலியா தேவனிடம் வேண்டினார். “கர்த்தரே! இந்த மக்கள் உமது தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். உமது பலிபீடங்களை அழித்தனர். நான் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன். இப்பொழுது அவர்கள் என்னையும் கொன்று போட முயற்சி செய்கின்றனர்”(A) என்றார் எலியா. இதற்கு தேவன் என்ன பதில் சொன்னார் தெரியுமா? “பாகால் என்னும் தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு வணங்காத 7,000 பேரை நான் எனக்காக மீதியாய் வைத்திருக்கிறேன்”(B) என்றார்.

இப்பொழுதும் அதேபோலத்தான். தேவன் சிலரைக் கருணையால் தேர்ந்தெடுத்துள்ளார். தேவன் தன் மக்களைக் கருணையால் தேர்ந்தெடுத்துள்ளதால் அது அவர்களது செய்கைகளால் அல்ல என்றாகிறது. தேவன் மக்களை அவர் தம் செய்கைகளால் தேர்ந்தெடுத்திருந்தால் அது கருணையால் அல்ல என்றும், செயல்களினிமித்தம் காட்டப்படும் கருணை உண்மையான பரிசாகாது என்றும் தெரிகிறது.

அப்படியானால் நடந்தது இதுதான். இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கேற்ற நீதிமான்களாக முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் தோல்வியுற்றனர். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீதிமான்களாகச் செயல்புரிகிறார்கள். மற்றவர்களோ முரடர்களாகவும், தேவனுடைய வார்த்தைகளைக் கவனிக்க மறுப்பவர்களாகவும் உள்ளனர். “மக்களின் உணர்ச்சியை தேவன் மறக்கச் செய்தார்” என்றும் அதனால்,

“தேவன் அவர்களின் கண்களை மூடினார்.”(C)

“அதனால் அவர்களால் உண்மையைப் பார்க்க முடியவில்லை.
    தேவன் அவர்களின் காதுகளை மூடினார்.
அதனால் அவர்களால் உண்மையாகக் கேட்க முடியவில்லை.
    இது இன்றும் தொடர்கிறது.”(D)

என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

“அவர்களின் சொந்த விருந்துகளே அவர்கள் வலையாகவும், கண்ணியாகவும் ஆகட்டும்.
    அவர்கள் விழுந்து தண்டிக்கப்படட்டும்.
10 உண்மையைக் காண இயலாதபடி அவர்களின் கண்கள் மூடிப் போகட்டும்.
    அவர்கள் என்றென்றைக்கும் துன்பத்தில் இருக்கட்டும்” என்று தாவீது கூறியிருக்கிறார்.(E)

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center