Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஓசியா 9-11

நாடு கடத்தலின் துக்கம்

இஸ்ரவேலே, பிற நாடுகள் செய்வது போன்று விழா கொண்டாடாதே. மகிழ்ச்சியாய் இராதே. நீ ஒரு வேசியைப்போன்று நடந்து உனது தேவனை விட்டு விலகினாய், தானியம் அடிக்கிற எல்லாக் களங்களிலும் நீ பாலின உறவு பாவத்தைச் செய்தாய். ஆனால் தானியம் அடிக்கிற களத்தில் உள்ள தானியம் இஸ்ரவேலுக்குப் போதுமான உணவாக இருக்காது. இஸ்ரவேலுக்குப் போதுமான திராட்சைரசமும் இருக்காது.

இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய நாட்டில் தங்கமாட்டார்கள். எப்ராயீம் எகிப்திற்குத் திரும்புவான். அசீரியாவில் அவர்கள் உண்ணக்கூடாத உணவை உண்பார்கள். இஸ்ரவேலர்கள் கர்த்தருக்குத் திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாக அளிப்பதில்லை. அவருக்கு அவர்கள் பலிகள் கொடுப்பதுமில்லை. அவர்கள் கொடுக்கிற பலிகள் மரித்தவர் வீட்டில் கொடுக்கிற உணவைப்போலிருக்கும். அதைச் சாப்பிடுகிறவர்கள் அசுத்தமடைவார்கள். அவர்கள் அப்பம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் போகாது. அவர்களே அதை உண்ண வேண்டியதிருக்கும். அவர்கள் (இஸ்ரவேலர்கள்) கர்த்தருடைய ஓய்வு நாட்கள் அல்லது பண்டிகைகளைக் கொண்டாட முடியாதவர்களாக இருப்பார்கள்.

இஸ்ரவேலர்கள் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய விரோதி அவர்களுக்குண்டான எல்லாவற்றையும் தானாகவே எடுத்துச் சென்றுவிட்டான். ஆனால் எகிப்து அவர்களுடைய ஜனங்களை எடுத்துக்கொள்ளும். மெம்பிஸில் அவர்களைப் புதைப்பார்கள். அவர்களின் வெள்ளிப் பொக்கிஷங்கள் மேல் களைகள் வளரும். அவர்கள் வாழ்ந்த இடங்களில் முட்செடிகள் முளைக்கும்.

இஸ்ரவேல் உண்மையான தீர்க்கதரிசிகளை ஏற்க மறுத்தது

தீர்க்கதரிசி, “இஸ்ரவேலே, இவற்றைக் கற்றுக்கொள். தண்டனைக் காலம் வந்துவிட்டது. நீ செய்த பாவங்களுக்கு விலை செலுத்தவேண்டிய காலம் வந்திருக்கிறது” என்கிறார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, “தீர்க்கதரிசி ஒரு முட்டாள். தேவனுடைய ஆவியோடு இருக்கிற இம்மனிதன் பைத்தியக்காரன்” என்று கூறுகிறார்கள். தீர்க்கதரிசி, “நீ உனது கொடிய பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவாய். நீ உனது வெறுப்பிற்காகத் தண்டிக்கப்படுவாய்” என்று சொல்கிறார். தேவனும் தீர்க்கதரிசியும் எப்பிராயீமை காவல் காக்கிற காவலர்களைப் போன்றவர்கள். ஆனால் வழியெங்கும் பல கண்ணிகள் உள்ளன. ஜனங்கள் தீர்க்கதரிசியை தேவனுடைய வீட்டில் கூட வெறுக்கின்றனர்.

இஸ்ரவேலர்கள் கிபியாவின் நாட்களைப் போன்று அழிவின் ஆழத்திற்குச் சென்றுவிட்டார்கள். கர்த்தர் இஸ்ரவேலர்களின் பாவங்களை நினைவுகொள்வார். அவர் அவர்களது பாவங்களைத் தண்டிப்பார்.

இஸ்ரவேல் அதன் விக்கிரக ஆராதனையால் சேதமடைந்திருக்கிறது

10 நான் இஸ்ரவேலரைக் கண்டுக்கொண்டபோது, அவர்கள் வனாந்திரத்தில் இருக்கும் புதிய திராட்சைப்பழத்தைப்போன்று இருந்தார்கள். அத்திமரத்தில் பருவகாலத்தில் முதல் முதலாகப் பழுத்தப் பழங்களைப் போன்று இருந்தார்கள். ஆனால் அவர்கள் அதன்பிறகு பாகால்பேயேருக்கு வந்தார்கள். அவர்கள் மாறினார்கள். நான் அவர்களை அழுகிப்போன பழங்களை வெட்டுவதைப் போன்று, (அழிப்பதுபோன்று) வெட்ட வேண்டியதாயிருந்தது. அவர்கள் அவர்களால் நேசிக்கப்படுகிற பயங்கரமான பொருட்களை (அந்நிய தெய்வங்கள்) போன்று ஆனார்கள்.

இஸ்ரவேலர்களுக்குக் குழந்தைகள் இருக்காது

11 ஒரு பறவையைப் போன்று, எப்பிராயீமின் மகிமை பறந்துபோகும். இனிமேல் கர்ப்பமுறுதல் இல்லாமல் போகும். பிறப்புகளும் பிள்ளைகளும் இல்லாமல் போகும். 12 ஆனால் இஸ்ரவேலர்கள் தம் பிள்ளைகளை வளர்த்தாலும் அது அவர்களுக்கு உதவாது. நான் அவர்களிடமிருந்து அவர்களது பிள்ளைகளை எடுத்துக்கொள்வேன். நான் அவர்களை விட்டுவிடுவேன். அவர்களுக்குத் தொல்லைகளைத் தவிர வேறு எதுவும் இருக்காது.

13 எப்பிராயீம் தன் குழந்தைகைளைக் கண்ணிகளுக்கு வழிநடத்திச் செல்வதை நான் பார்க்க முடிகிறது. எப்பிராயீம் தன் பிள்ளைகளை கொலைக்காரர்களிடம் அழைத்து வருகிறான். 14 கர்த்தாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும். நீர் அவர்களுக்குக் குழந்தைகளை இழக்கிற கர்ப்பத்தையும் பால்கொடுக்க முடியாத முலைகளையும் கொடும்.

15 அவர்கள் பொல்லாப்பு கில்காலில் இருக்கிறது.
    நான் அங்கே அவர்களை வெறுக்கத் தொடங்கினேன்.
நான் அவர்களை என் வீட்டை விட்டுப் போகும்படி வற்புறுத்துவேன்.
    ஏனென்றால் அவர்கள் பொல்லாப்புகளைச் செய்துள்ளார்கள்.
நான் இனிமேல் அவர்களை நேசிக்கமாட்டேன்.
    அவர்கள் தலைவர்கள் கலகக்காரர்கள்.
    அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றார்கள்.
16 எப்பிராயீம் தண்டிக்கப்படுவான்.
    அவர்கள் வேர் செத்துக்கொண்டிருக்கிறது.
    அவர்களுக்கு இனிமேல் குழந்தைகள் இருக்காது.
அவர்கள் குழந்தைகள் பெறலாம்.
    ஆனால் நான் அவர்களது உடலிலிருந்து வருகிற குழந்தைகளைக் கொல்வேன்.
17 அந்த ஜனங்கள் என்னுடைய தேவன் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்.
    எனவே அவர் அவர்கள் சொல்வதைக் கேட்க மறுப்பார்.
அவர்கள் வீடு இல்லாமல் தேசங்கள் முழுவதும் அலைந்து திரிவார்கள்.

இஸ்ரவேலின் செல்வமே, விக்கிரகத் தொழுகைக்கு வழி நடத்தியது

10 இஸ்ரவேல் ஏராளமாகக் கனிகளைக் கொடுக்கிற திராட்சைக்கொடியைப் போன்றவன்.
    ஆனால் இஸ்ரவேல் மேலும் மேலும் மிகுதியாகப் பொருட்களைப் பெற்றதும் அந்நிய தெய்வங்களைக் கௌரவிக்க மென்மேலும் பலிபீடங்களைக் கட்டினான்.
அவனுடைய நாடு மேலும் மேலும் வளம் பெற்றது.
    ஆகவே அவன் மேலும் மேலும் அந்நிய தெய்வத்தை கௌரவிக்கக் கற்களை அமைத்தான்.
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஏமாற்ற முயன்றார்கள்.
    ஆனால் இப்போது அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.
கர்த்தர் அவர்கள் பலிபீடங்களை உடைப்பார்.
    அவர் அவர்கள் நினைவு கற்களை அழிப்பார்.

இஸ்ரவேலர்களின் பொல்லாத முடிவுகள்

இப்போது இஸ்ரவேலர்கள் கூறுகிறார்கள்: “நமக்கு அரசன் இல்லை நாம் கர்த்தரை கௌரவிப்பதில்லை. அவருடைய அரசன் நம்மை ஒன்றும் செய்யமுடியாது!”

அவர்கள் வாக்குறுதிகளைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் பொய்களை மட்டுமே சொல்கின்றனர். அவர்கள் தமது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. அவர்கள் மற்ற நாடுகளோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார்கள். தேவன் அந்த உடன்படிக்கையை விரும்பவில்லை. நீதிபதிகள் உழுத வயல்களில் முளைத்திருக்கும் விஷத் தன்மையுள்ள களைகள் போன்று உள்ளார்கள்.

சமாரிய ஜனங்கள் பெத்தாவேனிலுள்ள கன்றுக் குட்டியை ஆராதிக்கிறார்கள். அந்த ஜனங்கள் உண்மையில் அழுவார்கள். அந்த ஆசாரியர்கள் உண்மையில் அழுவார்கள். ஏனென்றால் அவர்களது அழகான விக்கிரகம் போய்விட்டது. அது தூக்கிச் செல்லப்பட்டது. அசீரியாவின் பேரரசனுக்கு அன்பளிப்பாக அவ்விக்கிரகம் கொண்டுப்போகப்பட்டது. அவன் எப்பிராயீமின் அவமானகரமான விக்கிரகத்தை வைத்துக்கொள்வான். இஸ்ரவேல் அதன் விக்கிரகத்தினிமித்தம் அவமானம் அடையும். சமாரியாவின் அந்நிய தெய்வம் அழிக்கப்படும். இது நீர்ப்பரப்பின் மேலே மிதக்கும் மரத்துண்டைப் போன்று இருக்கும்.

இஸ்ரவேல் பாவம் செய்தது. பல உயர் மேடைகளைக் கட்டியது. ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும். அவர்கள் பலிபீடங்களில் முட்செடிகளும், களைகளும் வளரும். பிறகு அவர்கள் மலைகளிடம், “எங்களை மூடுங்கள்!” என்றும் குன்றுகளிடம் “எங்கள் மேல் விழுங்கள்” என்றும் கூறுவார்கள்.

இஸ்ரவேல் பாவத்துக்கு விலை கொடுக்கும்

இஸ்ரவேலே நீ கிபியாவின் காலத்திலிருந்து பாவம் செய்தாய். (அந்த ஜனங்கள் அங்கே தொடந்து பாவம் செய்துக்கெண்டிருக்கிறார்கள்.) கிபியாவில் அப்பொல்லாத ஜனங்களை யுத்தம் உண்மையாகவே கைப்பற்றும். 10 நான் அவர்களைத் தண்டிக்க வருவேன். படைகள் அவர்களுக்கு எதிராகச் சேர்ந்துவரும். அவர்கள் இஸ்ரவேலர்களை அவர்களது இரண்டு பாவங்களுக்காகத் தண்டிப்பார்கள்.

11 எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்ட போரடிக்கும் களத்திலுள்ள தானியங்களின் மேல் நடக்க விரும்பும், இளம் காளையைப் போன்றவன். அவன் கழுத்தில் நான் ஒரு நல்ல நுகத்தடியை மாட்டுவேன். நான் எப்பிராயீமை கயிற்றால் கட்டுவேன். பிறகு யூதா உழவுசெய்யத் தொடங்குவான். யாக்கோபு தானாகவே பரம்படிப்பான்.

12 நீ நன்மையை நட்டால் உண்மையான அன்பை அறுவடை செய்வாய். உன் நிலத்தை உழு. கர்த்தரோடு நீ அறுவடை செய்வாய். அவர் வருவார். அவர் உன் மீது நன்மையை மழைப்போன்று பொழியச் செய்வார்.

13 ஆனால் நீ தீமையை நட்டாய். நீ துன்பத்தை அறுவடை செய்தாய். நீ உன் பொய்களின் கனியை உண்டாய். ஏனென்றால் நீ உன் அதிகாரத்தையும் உன் வீரர்களையும் நம்பியிருந்தாய். 14 எனவே உனது படைகள் யுத்தத்தின் பேரொலியைக் கேட்கும். உனது எல்லா அரண்களும் அழிக்கப்படும். இது பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல் இருக்கும். அப்போர்க்காலத்தில் தாய்மார்கள் தம் குழந்தைகளோடு கொல்லப்பட்டார்கள். 15 உனக்கு அது பெத்தேலில் ஏற்படும். ஏனென்றால் நீ ஏராளமான பாவங்களைச் செய்தாய். அந்த நாள் தொடங்கும்போது இஸ்ரவேலின் அரசன் முழுமையாக அழிக்கப்படுவான்.

இஸ்ரவேல் கர்த்தரை மறந்துவிட்டது

11 கர்த்தர், “இஸ்ரவேல் குழந்தையாக இருக்கும்போது நான் (கர்த்தர்) அவனை நேசித்தேன்.
    நான் என் மகனை எகிப்தை விட்டு வெளியே அழைத்தேன்.
ஆனால் நான் இஸ்ரவேலர்களை மிகுதியாக அழைக்க
    அவர்களும் என்னை விட்டு மிகுதியாக விலகினார்கள்.
இஸ்ரவேலர்கள் பாகாலுக்குப் பலிகளைக் கொடுத்தார்கள்.
    அவர்கள் விக்கிரகங்களுக்கு நறுமணப் பொருட்களை எரித்தார்கள்.

“ஆனால் எப்பிராயீமை கைப்பிடித்து நடக்கப் பழக்கியது நான்.
    நான் இஸ்ரவேலர்களை என் கைகளில் எடுத்தேன்.
அவர்களைக் குணப்படுத்தினேன்.
    ஆனால் அவர்கள் அதனை அறியாமலிருக்கிறார்கள்.
நான் அவர்களைக் கயிறுகளால் வழி நடத்தினேன்.
    ஆனால் அவை அன்பு என்னும் கயிறுகள்.
நான் விடுதலை அளிக்கும் மனிதனைப் போன்றவன்.
    நான் கீழே குனிந்து அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தேன்.

“இஸ்ரவேலர்கள் தேவனிடம் திரும்ப மறுக்கிறார்கள். எனவே அவர்கள் எகிப்துக்குச் செல்வார்கள். அசீரியாவின் அரசன் அவர்கள் அரசனாவான். அவர்களது நகரங்களின் மேல் வாளானது தொங்கிக்கொண்டிருக்கும். அது அவர்களது பலமுள்ள மனிதர்களைக் கொல்லும். அது அவர்களது தலைவர்களை அழிக்கும்.

“எனது ஜனங்கள் நான் திரும்பி வருவதை எதிர்ப்பார்க்கின்றார்கள். அவர்கள் மேல் நோக்கி தேவனை அழைப்பார்கள். ஆனால் தேவன் அவர்களுக்கு உதவமாட்டார்.”

கர்த்தர் இஸ்ரவேலை அழிக்க விரும்பவில்லை

“எப்பிராயீமே, நான் உன்னைக் கைவிட விரும்பவில்லை.
    இஸ்ரவேலே நான் உன்னைப் பாதுகாக்க விரும்புகிறேன்.
நான் உன்னை அத்மாவைப் போலாக்க விரும்பவில்லை.
    நான் உன்னை செபோயீமைப் போலாக்க விரும்பவில்லை.
நான் என் மனதை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
    உனக்கான எனது அன்பு பலமானது.
நான் எனது பயங்கரமான கோபம் வெல்லுமாறு விடமாட்டேன்.
    நான் மீண்டும் எப்பிராயீமை அழிக்கமாட்டேன். நான் தேவன். மனிதனல்ல. நானே பரிசுத்தமானவர்.
நான் உன்னோடு இருக்கிறேன்.
    நான் எனது கோபத்தைக் காட்டமாட்டேன்.
10 நான் சிங்கத்தைப் போன்று கெர்ச்சிப்பேன்.
    நான் கெர்ச்சிப்பேன்.
அப்போது எனது பிள்ளைகள் என்னைப் பின்தொடர்ந்து வருவார்கள்.
    எனது பிள்ளைகள் மேற்கிலிருந்து பயத்தால் நடுங்கிக்கொண்டே வருவார்கள்.
11 அவர்கள் எகிப்திலிருந்து பறவைகளைப் போன்று நடுங்கிக்கொண்டே வருவார்கள்.
    அவர்கள் அசீரியாவிலிருந்து புறாக்களைப்போன்று நடுங்கிக்கொண்டே வருவார்கள்.
அவர்களை அவர்களுடைய தாய் நாட்டிற்கு எடுத்துச் செல்வேன்.”
    கர்த்தர் அதனைச் சொன்னார்.
12 “எப்பிராயீம் அந்நிய தெய்வங்களால் என்னைச் சூழ்ந்தான்.
    இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
ஆனால் யூதா இன்னும் தேவனோடு நடந்துக்கொண்டிருக்கிறான்.
    யூதா பரிசுத்தமானவர்களோடு உண்மையாய் இருக்கிறான்.”

வெளி 3

சர்தை சபைக்கு இயேசுவின் நிருபம்

“சர்தை சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:

“ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் கொண்டிருக்கிறவர் இவைகளை உனக்கு கூறுகிறார்.

“நீங்கள் செய்பவற்றை நான் அறிவேன். நீங்கள் உயிர் வாழ்வதாக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் செத்துப் போனவர்களே. எழும்புங்கள். செத்துப்போகிற நிலையில் உள்ளவற்றை வலிமையுள்ளதாய் ஆக்குங்கள். முழுமையாய் சாகும் முன் பலப்படுத்திக்கொள்ளுங்கள். தேவனுக்கு நீ செய்ததெல்லாம் போதுமானதாக இல்லை என நான் காண்கின்றேன். எனவே நீங்கள் பெற்றவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் மறவாதீர்கள். அவற்றுக்கு அடிபணியுங்கள். உங்கள் மனதையும், வாழ்வையும் மாற்றுங்கள். நீங்கள் விழித்தெழுங்கள். அல்லது நான் திருடனைப்போல வந்து உங்களை ஆச்சரியப்படுத்துவேன். எப்பொழுது நான் வருவேன் என உங்களுக்குத் தெரியாது.

“ஆனால் உங்கள் குழுவில் சிலர் பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னோடு நடப்பார்கள். அவர்கள் வெள்ளை ஆடைகளை அணிவார்கள். ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள். வெற்றிபெறுகிற ஒவ்வொருவரும் இவர்களைப்போல் வெண்ணிற ஆடைகளை அணிந்துகொள்வார்கள். நான் அவர்களது பெயர்களை ஜீவப் புத்தகத்திலிருந்து எடுத்துப்போட மாட்டேன். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். இதனை நான் என் பிதாவின் முன்பும், தூதர்களுக்கு முன்பும் சொல்வேன்.” சபைகளுக்கு ஆவியானவர் சொல்வதை கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும்.

பிலதெல்பியா சபைக்கு இயேசுவின் நிருபம்

“பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது:

“உண்மையுள்ளவரும் பரிசுத்தமுள்ளவரும் இவைகளை உனக்குக் கூறுகிறார். அவர் தாவீதின் திறவுகோலை உடையவராக இருக்கின்றார். அவர் ஒரு கதவைத் திறந்தால், அதை யாராலும் மூட முடியாது. மேலும் அவர் கதவை மூடினால் யாராலும் அதைத் திறக்க முடியாது.

“நீ செய்பவற்றை நான் அறிவேன். நான் உங்களுக்கு முன்னால் திறந்த வாசலை வைக்கிறேன். அதனை எவராலும் அடைக்க முடியாது. நீங்கள் பலவீனமானவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் உபதேசத்தை நீங்கள் பின்பற்றினீர்கள். என் பெயரைச் சொல்ல நீங்கள் பயப்படவில்லை. கவனியுங்கள். சாத்தானைச் சேர்ந்த கூட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் தம்மை யூதர்கள் எனக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் பொய்யர்களே! அவர்கள் உண்மையான யூதர்கள் அல்லர். அவர்களை உங்கள் முன் அடிபணிந்து வணங்கச்செய்வேன். என்னால் நேசிக்கப்படுகிற மக்கள் நீங்கள் என்பதை அவர்கள் அறிவர். 10 எனது கட்டளைகளை நீங்கள் பின்பற்றிப் பொறுமையாக இருந்தீர்கள். அதனால் துன்ப காலத்தில் உங்களைப் பாதுகாப்பேன். முழு உலகமும் துன்பப்படும்போது நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள். அத்துன்பம் உலகில் வாழும் மக்களைச் சோதிக்கும்.

11 “நான் விரைவில் வருகிறேன். இப்பொழுது உள்ள வழியில் தொடர்ந்து செல்லுங்கள். அப்பொழுது எவராலும் உங்கள் கிரீடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. 12 இதில் வெற்றி பெறுகிறவன் என் தேவனின் ஆலயத்தில், சிறந்த தூணாக விளங்குவான். இதில் வெற்றி பெறுகிறவனுக்காக நான் இதனைச் செய்வேன். அவன் எப்போதும் தேவனின் ஆலயத்தை விட்டு விலகமாட்டான். அவன் மேல் எனது தேவனின் பெயரை எழுதுவேன். அவன் மேல் எனது தேவனுடயை நகரத்தின் பெயரையும் எழுதுவேன். அந்த நகரத்தின் பெயர் புதிய எருசலேம். பரலோகத்திலிருக்கின்ற என் தேவனிடமிருந்து இந்நகரம் இறங்கி வந்துகொண்டிருக்கின்றது. நான் எனது புதிய பெயரையும் அவன் மீது எழுதுவேன்.” 13 சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.

லவோதிக்கேயா சபைக்கு இயேசுவின் நிருபம்

14 “லவோதிக்கேயா சபைக்கு எழுத வேண்டியது:

“ஆமென் [a] என்பவர் உங்களுக்கு இவற்றைக் கூறுகிறார். அவரே உண்மையும் சத்தியமும் உள்ள சாட்சி. தேவனால் படைக்கப்பட்டவற்றையெல்லாம் ஆள்பவர் அவர்.

15 “அவர் கூறுவது: நீ செய்பவற்றை நான் அறிவேன். நீ அனலானவனும் அல்ல, குளிர்ந்தவனும் அல்ல. ஆனால் நீ குளிராகவோ அனலாகவோ இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். 16 நீ வெப்பமாக மட்டுமே உள்ளாய். நீ அனலாகவோ குளிராகவோ இல்லை. எனவே உன்னைத் துப்பி விடத் தயாராக உள்ளேன். 17 உன்னைச் செல்வன் என்று நீ சொல்லிக்கொள்கிறாய். உன்னிடம் எல்லாம் உள்ளது. உனக்கு எதுவும் தேவை இல்லை என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் நீ பரிதாபத்திற்குரியவன், ஏழை, குருடன், நிர்வாணி. 18 நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட தங்கத்தை என்னிடமிருந்து வாங்குமாறு உனக்கு நான் அறிவுறுத்துகிறேன். பின்னரே நீ உண்மையான செல்வந்தன் ஆவாய். வெண்ணிற ஆடையை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நிர்வாணத்தை மூடிக்கொள்ளலாம். உங்கள் கண்களுக்கான மருந்தை வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு உங்களால் உண்மையாகப் பார்க்க முடியும்.

19 “நான் நேசிக்கிற மக்களைத் திருத்துவேன், தண்டிப்பேன். எனவே கடினமாய் முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளுங்கள். 20 இதோ நான் கதவருகில் நின்று தட்டுகிறேன். எனது குரலைக் கேட்டு ஒருவன் கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து அவனோடு உணவு உண்பேன். அவனும் என்னோடு உணவு உண்பான்.

21 “வெற்றி பெறுகிற ஒவ்வொருவனையும் என் சிம்மாசனத்தில் என்னோடு அமரச் செய்வேன். அதுபோலவே நான் வெற்றிகொண்டு என் பிதாவோடு சிம்மாசனத்தில் உட்கார்ந்தேன். 22 கேட்கிற சக்திகொண்ட ஒவ்வொருவனும் ஆவியானவர் சபைகளுக்குக் கூறுவதைக் கேட்பானாக.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center