Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
தானியேல் 5-7

சுவரின் மேல் எழுதிய கை

அரசனான பெல்ஷாத்சார் தனது அதிகாரிகளில் 1,000 பேருக்கு விருந்து கொடுத்தான். அரசன் அவர்களோடு திராட்சைரசம் குடித்துக் கொண்டிருந்தான். பெல்ஷாத்சார் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போதே அவன் தனது வேலைக்காரர்களுக்குத் தங்கத்தாலும் வெள்ளியாலுமான கிண்ணங்களைக் கொண்டுவரக் கட்டளையிட்டான். இந்தக் கிண்ணங்கள் அவனது தந்தையான நேபுகாத்நேச்சாரால் எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்டவை. அரசனான பெல்ஷாத்சார், தனது பிரபுக்களும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடிக்க வேண்டும் என்று விரும்பினான். எனவே அவர்கள் எருசலேமின் தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டக் கிண்ணங்களைக் கொண்டு வந்தனர். அரசனும், அவனது அதிகாரிகளும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அவற்றில் குடித்தனர். அவர்கள் குடித்துக்கொண்டே தங்கள் விக்கிரக தெய்வங்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மண் போன்றவற்றால் செய்யப்பட்ட வெறும் சிலைகளைப் போற்றினார்கள்.

பிறகு திடீரென்று ஒரு மனிதக் கை தோன்றி சுவரில் எழுதத் தொடங்கியது. விரல்கள் சுவரிலுள்ள சாந்துபூச்சின் மீது எழுதிற்று. அந்தக் கை அரசனது அரண்மனையில் விளக்குக்கு எதிராயிருந்த சுவரில் எழுதியது. அரசன் அந்தக் கை எழுதும்போது கவனித்துக்கொண்டிருந்தான்.

அரசனான பெல்ஷாத்சார் மிகவும் பயந்தான். அவனது முகம் பயத்தால் வெளிறிற்று. அவனது முழங்கால்கள் நடுங்கி இடித்துக்கொண்டன. அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. ஏனென்றால் அவனது கால்கள் அவ்வளவு பலவீனமாக இருந்தன. அரசன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் தன்னிடம் வருமாறு அழைத்தான். அவன் அந்த ஞானிகளிடம், “இந்த எழுத்தை வாசித்து இதன் பொருளை எனக்கு விளக்கும் எவருக்கும் நான் பரிசளிப்பேன். அவனுக்கு இரத்தாம்பர ஆடை அணிவித்து, அவன் கழுத்தில் பொன்மாலை அணிவிப்பேன். நான் அவனை எனது இராஜ்யத்தில் மூன்றாவது நிலையில் உள்ள ஆளுநராக ஆக்குவேன்” என்றான்.

எனவே, அரசனின் எல்லா ஞானிகளும் உள்ளே வந்தனர். அவர்களால் அந்த எழுத்துக்களை வாசிக்கமுடியவில்லை. பெல்ஷாத்சாரின் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். அதோடு அரசன் மேலும் பயந்து கவலைப்பட்டான். அவனது முகம் அச்சத்தால் வெளிறியது.

10 பிறகு அரசனின் தாய் விருந்து நடைபெற்ற அந்த இடத்திற்கு வந்தாள். அவள் அரசன் மற்றும் அவனது அதிகாரிகளின் குரல்களைக் கேட்டபின்: “ஓ அரசரே நீர் என்றென்றும் வாழ்க. நீர் பயப்பட வேண்டாம். உனது முகம் பயத்தால் வெளிறவேண்டாம். 11 உனது இராஜ்யத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் பரிசுத்தமான தேவர்களின் ஆவி உள்ளது. உன் தந்தையின் நாட்களில் அவனால் பல இரகசியங்களைச் சொல்லமுடிந்தது. அவன் தன்னைச் சுறுசுறுப்பும் ஞானமும் உள்ளவனாகக் காட்டினான். அவன் இவ்விஷயங்களில் தேவர்களைப் போன்றிருந்தான். உன் தந்தையான நேபுகாத்நேச்சார் அந்த மனிதனை ஞானிகளுக்கெல்லாம் பொறுப்பதிகாரியாக வைத்திருந்தார். அவன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் ஆண்டான். 12 நான் சொல்லிக்கொண்டிருக்கிற அவனுடைய பெயர் தானியேல். அரசர் அவனுக்கு பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டார். பெல்தெஷாத்சார் மிக சுறுசுறுப்புடையவன். அவனுக்குப் பல செய்திகள் தெரியும். அவனால் கனவின் பலன்களும், இரகசியங்களின் விளக்கமும், கடினமான விஷயங்களுக்குத் தீர்வுகளும் தெரியும். தானியேலைக் கூப்பிடு, அவனால் சுவர் மேல் எழுதியுள்ளவற்றுக்கு விளக்கம் சொல்லமுடியும்” என்றாள்.

13 எனவே அவர்கள் தானியேலை அரசனிடம் அழைத்துவந்தனர். அரசன் தானியேலிடம் உனது பெயர் தானியேல்தானா? யூதாவிலிருந்து என் தந்தையால் சிறை பிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டவர்களில் நீ ஒருவனா? 14 தேவர்களின் ஆவி உன்னிடம் இருப்பதாக நான் அறிந்தேன். அதோடு நீ இரகசியங்களைப் புரிந்துகொள்ளக் கூடியவன், வெளிச்சமும், புத்தியும், ஞானமும் கொண்டவன் என்றும் உன்னைப்பற்றி நான் கேள்விப்பட்டேன். 15 ஞானிகளும், சோதிடர்களும் என்னிடம் அழைத்துவரப்பட்டு சுவரில் எழுதப்பட்டவற்றை வாசிக்கச் சொன்னேன். இந்த எழுத்துக்களின் பொருள் என்னவென்று அம்மனிதர்கள் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்களால் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றுக்கான விளக்கத்தை எனக்குச் சொல்ல முடியவில்லை. 16 ஒவ்வொரு பொருளின் அர்த்தத்தையும் உன்னால் விளக்க முடியும் என்றும் மிகச் கடினமான பிரச்சனைகளுக்கும் உன்னால் பதில் சொல்ல முடியும் என்றும் நான் உன்னைப்பற்றிக் கேள்விப்பட்டேன். உன்னால் இச்சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசித்து அதன் பொருளை எனக்கு விளக்க முடியுமானால் நான் உனக்கு இரத்தாம்பர ஆடையைக் கொடுப்பேன். நான் உனது கழுத்தில் பொன் மாலையை அணிவிப்பேன். பிறகு நீ இந்த இராஜ்யத்தின் மூன்றாவது உயர் ஆளுநராக ஆகலாம் என்றான்.

17 தானியேல் அரசனிடம், “பெல்ஷாத்சார் அரசரே, உமது அன்பளிப்புகளை நீர் உம்மிடமே வைத்துக்கொள்ளும். அல்லது நீர் உமது பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆனால் நான் உமக்காகச் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசிப்பேன். நான் அதன் பொருள் என்னவென்றும் உமக்கு விளக்குவேன்.

18 “அரசே, உன்னதமான தேவன், உமது தந்தையான நேபுகாத்நேச்சாரை சிறப்பும், வல்லமையும் கொண்ட அரசராக ஆக்கினார். தேவன் அவரை மிக முக்கியமானவராக ஆக்கினார். 19 பல நாடுகளில் உள்ள ஜனங்களும், பலமொழி பேசும் ஜனங்களும் நேபுகாத்நேச்சாருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் உன்னதமான தேவன் அவரை மிக முக்கியமான அரசராக்கினார். நேபுகாத்நேச்சார் ஒருவன் மரிக்கவேண்டும் என்று விரும்பினால் உடனே அவனைக் கொன்றுவிடுவார். அவர் ஒருவன் வாழவேண்டும் என்று விரும்பினால், அவனை வாழவிடுவார். அவர் ஜனங்களை முக்கியப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியப்படுத்துவார். அவர் ஜனங்களை முக்கியமற்றவர்களாக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியமற்றவர்களாக்குவார்.

20 “ஆனால் நேபுகாத்நேச்சார் அகந்தையும் கடின மனமும் கொண்டவரானர். எனவே, அவரது வல்லமை அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அவரது இராஜ சிங்காசனம் பறிக்கப்பட்டது. அவருடைய மகிமை அகற்றப்பட்டது. 21 பிறகு நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டார். அவருடைய மனது மிருகத்தின் மனது போலாயிற்று. அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்து பசுவைப்போன்று புல்லைத் தின்றார். அவர் பனியில் நனைந்தார். அவர் தனது பாடத்தைக் கற்றுக்கொள்ளும்வரை இவை நிகழ்ந்தன. பின்னர் அவர் உன்னதமான தேவன் மனிதர்களின் இராஜ்யங்களை ஆளுகிறார். அதோடு உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவரையும் இராஜ்யத்தை ஆளவைப்பார் என்பதைக் கற்றுக்கொண்டார்.

22 “ஆனால் பெல்ஷாத்சாரே, உமக்கு ஏற்கெனவே இவை தெரியும். நீர் நேபுகாத்நேச்சாரின் மகன். ஆனாலும் நீர் உம்மை இன்னும் பணிவுள்ளவராக்கிக்கொள்ளவில்லை. 23 இல்லை, நீர் பணிவுள்ளவராகவில்லை. அதற்குப் பதிலாக பரலோகத்தின் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினீர். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள கிண்ணங்களைக் குடிப்பதற்குக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டீர். நீரும், உமது அரசு அதிகாரிகளும், உமது மனைவியரும், அடிமைப்பெண்களும், அக்கிண்ணங்களில் திராட்சைரசத்தைக் குடித்தீர்கள். நீர் பொன்னாலும், வெள்ளியாலும், வெண்கலத்தாலும், இரும்பாலும், மரத்தாலும், கல்லாலும் ஆன தெய்வங்களைப் போற்றினீர். அவை உண்மையில் தெய்வங்கள் அல்ல. அவற்றால் பார்க்கவோ, கேட்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால் உமது வாழ்க்கை மீதும், உமது செயல்கள் மீதும் அதிகாரம் படைத்த தேவனை நீர் மகிமைப்படுத்தவில்லை. 24 அதனால், தேவன் சுவர்மேல் எழுதுகிற கையை அனுப்பினார். 25 சுவரில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் இவைதான்:

மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்.

26 “இதுதான் அவ்வார்த்தைகளின் பொருள்:

“மெனே:
    உன் ஆளுகை முடியும் நாட்களைத் தேவன் எண்ணி வைத்திருக்கிறார்.
27 தெக்கேல்:
    நீ தராசிலே நிறுக்கப்பட்டுக் குறைவாய் காணப்பட்டாய்.
28 உப்பார்சின்:
    உன் ஆளுகை உன்னிடமிருந்து எடுக்கப்பட்டு,
    அது மேதியருக்கும் பெர்சியருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படும்” என்றான்.

29 பின்னர் பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தை அணிவித்து, அவனது கழுத்தில் பொன் மாலையைப் போட்டான். அவன் இராஜ்யத்தின் மூன்றாம் ஆளுநராக உயர்த்தப்பட்டான். 30 அதே இரவில் பாபிலோனின் அரசனான பெல்ஷாத்சார் கொல்லப்பட்டான். 31 தரியு என்னும் மேதியன் புதிய அரசனானான். தரியு 62 வயதுடையவனாக இருந்தான்.

தானியேலும் சிங்கங்களும்

தரியு தனது இராஜ்யம் முழுவதையும் ஆளுவதற்கு 120 தேசாதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல திட்டமென்று எண்ணினான். அவன் அந்த 120 தேசாதிபதிகளையும் கட்டுப்படுத்த மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தான். இந்த மூன்று மேற்பார்வையாளர்களில் தானியேலும் ஒருவன். அரசன் இவ்வாறு ஓர் ஏற்பாடு செய்துவிட்டதால் எவரும் அவனை ஏமாற்ற முடியாது. அதோடு அவன் தனது இராஜ்யத்தில் எதையும் இழக்கமாட்டான். தானியேல் தன்னை மற்ற மேற்பார்வையாளர்களைவிடச் சிறந்தவனாகக் காட்டினான். தானியேல் இதனைத் தனது நற்குணங்கள் மூலமும், நல்ல திறமைகள் மூலமும் செய்தான். அரசன் தானியேலின்மேல் மிகவும் வியப்படைந்தான். அவன் தானியேலை இராஜ்யம் முழுவதற்கும் ஆளுநாரக்கிவிடலாம் என்று திட்டமிட்டான். ஆனால் மற்ற மேற்பார்வையளர்களும், மற்ற தேசாதிபதிகளும் இதனை அறிந்ததும் மிகவும் பொறாமைகொண்டனர். அவர்கள் தானியேலை குற்றஞ்சாட்ட காரணங்களைத் தேடினர். எனவே அவர்கள் தானியேல் அரசு பணிகளைச் செய்யும்போது மிகக் கவனமாகக் கவனித்தனர். ஆனால் அவர்களால் தானியேலிடம் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தானியேல் நேர்மையாளனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தான். அவன் அரசனை ஏமாற்றாமல் மிகக் கடுமையாக வேலை செய்து வந்தான்.

இறுதியாக அந்த ஆட்கள், “நாம் தானியேலை குற்றம் கண்டுபிடிக்கும்படி தவறான எதையும் அவன் செய்யமாட்டான். எனவே நாம் அவனது தேவனுடைய சட்ட விஷயத்தில் குற்றம் காண வேண்டும்” என்று பேசிக்கொண்டனர்.

எனவே, அந்த மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும் ஒரு குழுவாக அரசனிடம் சென்றனர். அவர்கள் அரசரை நோக்கி, “தரியு அரசரே, என்றென்றும் வாழ்வீராக. மேற்பார்வையாளர்களும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டார்கள். அதாவது நாங்கள் அரசர் ஒரு சட்டத்தைச் இயற்றவேண்டும் என்று எண்ணுகிறோம். எல்லோரும் அதற்கு அடி பணியவேண்டும். இதுதான் அந்தச் சட்டம், எவராவது இன்னும் 30 நாட்களுக்கு அரசராகிய உம்மைத் தவிர வேறெந்த தேவனையோ, மனிதரையோ நோக்கி எந்த ஒரு காரியத்திற்கும் ஜெபம் செய்தால் அவன் சிங்கக்கூண்டிலே போடப்படுவான். இப்பொழுது இதனைச் சட்டமாக்கி இந்தத் தாளிலே கையெழுத்துப் போடும். இவ்வாறு இந்தச் சட்டம் மாற்ற முடியாதபடி இருக்கும். ஏனென்றால் மேதியர்கள் மற்றும் பெர்சியர்களின் சட்டங்கள் விலக்கவோ மாற்றவோ முடியாதவை” என்றனர். அவர்கள் சொன்னபடி அரசரான தரியு இச்சட்டத்தை இயற்றி கையெழுத்துப் போட்டான்.

10 தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வான். தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்றுமுறை முழங்காலில் நின்று தேவனிடம் ஜெபித்து அவரைப் போற்றுவான். தானியேல் இப்புதிய சட்டத்தைக் கேள்விப்பட்டதும் தனது வீட்டிற்குப் போய் தனது அறையில் உள்ள மாடியின்மீது ஏறினான். தானியேல் எருசலேமை நோக்கியிருக்கிற ஜன்னல் அருகில் போய் முழங்காலிட்டு எப்பொழுதும் செய்வதுபோன்று ஜெபித்தான்.

11 அந்த ஆட்கள் குழுவாகச் சென்று தானியேலைக் கண்டுபிடித்தனர். அவர்கள் தானியேல் தேவனிடம் உதவிகேட்டு ஜெபிப்பதைக் கண்டனர். 12 எனவே அந்த ஆட்கள் அரசனிடம் சென்றனர். அவர்கள் அவனிடம் அவன் இயற்றிய சட்டத்தைப்பற்றி பேசினர். அவர்கள், “தரியு அரசே, எந்த மனிதனும் 30 நாள்வரையிலும் அரசராகிய உம்மைத் தவிர வேறு எந்தத் தேவனையும், ஆளையும் நோக்கி யாதொரு காரியத்தைக் குறித்தும் ஜெபம் செய்தால் அவனைச் சிங்கக்கூண்டிலே போடவேண்டும் என்று நீர் கட்டளைப் பத்திரத்திலே கையெழுத்திட்டீர் அல்லவா?” என்றனர்.

அதற்கு அரசன், “ஆமாம். நான் அந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டேன். அதோடு மேதியர்கள் மற்றும் பெர்சியர்களுக்கு இருக்கும் மாறாத சட்டத்தின்படி அது ரத்து செய்யப்படவோ அல்லது மாற்றப்படவோ கூடாது” என்றான்.

13 அந்த ஆட்கள் அரசனிடம், “தானியேல் என்ற பெயருடைய அந்த மனிதன் உமக்கு மரியாதை செலுத்துவதில்லை. தானியேல் யூதாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கைதிகளில் ஒருவன். தானியேல் நீர் கையெழுத்திட்ட சட்டத்தைப்பற்றி கவலைப்படவில்லை. தானியேல் ஒவ்வொரு நாளும் மூன்று முறை தன் தேவனிடத்தில் ஜெபம் பண்ணி உதவிக்காக மன்றாடுகிறான்” என்றனர்.

14 அரசன் இதனைக் கேள்விப்பட்டதும் மிக வருத்தப்பட்டு கலக்கமடைந்தான். அரசன் தானியேலைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தான். அவன் மாலைவரை இதற்கான ஒரு திட்டத்தைப்பற்றியே எண்ணினான். 15 பிறகு அந்த ஆட்கள் ஒரு குழுவாக அரசனிடம் சென்றனர். அவர்கள் அவனிடம், “அரசே, நினைத்துப்பாரும். மேதியர் மற்றும் பெர்சியரின் சட்டமானது, அரசனால் கையெழுத்திடப்பட்ட கட்டளையோ அல்லது சட்டமோ விலக்கப்படவோ மாற்றப்படவோ முடியாது என்று கூறுகிறது” என்றார்கள்.

16 எனவே, தரியு அரசன் கட்டளையிட்டான். அவர்கள் தானியேலை அழைத்து வந்து சிங்கங்களின் கூண்டில் போட்டனர். அரசன் தானியேலிடம், “நீ தொழுதுகொள்ளும் தேவன் உன்னைக் காப்பாற்றுவார் என்று நான் நம்புகிறேன்” என்று சொன்னான். 17 ஒரு பெரிய பாறங்கல்லைக் கொண்டு வந்து சிங்கக்குகையின் வாசலை மூடினார்கள். பிறகு அரசன் தனது மோதிரத்தைப் பயன்படுத்தி பாறையின்மேல் முத்திரையிட்டான். பிறகு அவன் தன் அதிகாரிகளின் மோதிரங்களாலும் பாறையின்மேல் முத்திரையிட்டான். இது, எவராலும் பாறாங்கல்லைத் திறந்து தானியேலை கூண்டிலிருந்து வெளியே கொண்டுவர முடியாது என்று காட்டியது. 18 பிறகு அரசனான தரியு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான். அரசன் அன்றிரவு உணவு உண்ணவில்லை, அவன் யாரும் வந்து வேடிக்கை செய்து மகிழ்வூட்டுவதை விரும்பவில்லை. அரசனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.

19 மறுநாள் காலையில் கிழக்கு வெளுக்கும்போது அரசனான தரியு எழுந்து சிங்கங்களின் குகைக்கு ஓடினான். 20 அரசன் மிகத்துயரமாக இருந்தான். அவன் சிங்கங்களின் குகைக்கருகில் போய், தானியேலைக் கூப்பிட்டான். அரசன், “தானியேலே ஜீவனுள்ள தேவனுடைய ஊழியனே, நீ எப்பொழுதும் உன் தேவனுக்குச் சேவைசெய்கிறாயே, உனது தேவனால் உன்னைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்ற முடிந்ததா?” என்றான்.

21 தானியேல் அதற்குப் பதிலாக, “அரசே, நீர் என்றென்றும் வாழ்க. 22 தேவன் என்னைக் காக்கத் தூதனை அனுப்பினார். தூதன் சிங்கங்களின் வாயை அடைத்தான். சிங்கங்கள் என்னைக் காயப்படுத்தவில்லை. ஏனென்றால், நான் குற்றமறியாதவன் என்று தேவன் அறிவார். அரசே நான் உமக்கு எதிராக எந்தக் கேடும் செய்யவில்லை” என்றான்.

23 அரசனான தரியு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவன் தனது வேலைக்காரர்களிடம் சிங்ககுகையிலிருந்து தானியேலை வெளியேற்றும்படிச் சொன்னான். தானியேலைச் சிங்கக்குகையிலிருந்து வெளியே அழைத்தபோது அவர்கள் அவன் உடலில் எவ்வித காயத்தையும் காணவில்லை. தானியேல் சிங்கங்களால் காயப்படுத்தப்படவில்லை, ஏனென்றால் அவன் தேவனிடம் விசுவாசம் வைத்தான்.

24 பிறகு அரசன், தானியேல்மீது குற்றம் சாட்டி அவனைச் சிங்கக்குகைக்குள் அனுப்பியவர்களைக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டான். அம்மனிதர்களும் அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் சிங்கக்குகைக்குள் தள்ளப்பட்டனர். அவர்கள் குகையின் தரைக்குள் விழுவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள் மேல் பாய்ந்து, அவர்களது உடல்களைக் கிழித்து எலும்புகளை மென்று உண்டன.

25 பிறகு அரசனான தரியு பின்வரும் கடிதத்தை உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மொழி பேசுகிற அனைத்து ஜனங்களுக்கும் எழுதினான்:

26 வாழ்த்துக்கள்:

நான் ஒரு புதிய சட்டத்தை இயற்றியிருக்கிறேன். இச்சட்டம் என் இராஜ்யத்தில் உள்ள எல்லாப் பகுதி ஜனங்களுக்கும் உரியது. நீங்கள் எல்லோரும் தானியேலின் தேவனுக்கு அஞ்சி மரியாதை செய்ய வேண்டும்.

தானியேலின் தேவன் ஜீவனுள்ள தேவன்,
    தேவன் என்றென்றும் இருக்கிறார்.
அவரது இராஜ்யம் என்றென்றும் அழியாதது.
    அவரது ஆட்சி முடிவில்லாதது.
27 தேவன் ஜனங்களுக்கு உதவிசெய்து காப்பாற்றுகிறார்.
    தேவன் பரலோகத்திலும் பூமியிலும் அற்புதங்களைச் செய்கிறார்.
ஆண்டவர் தானியேலைச் சிங்கங்களிடமிருந்து காப்பாற்றினார்.

28 எனவே தானியேல், தரியு அரசனாக இருந்த காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ஆட்சியிலும் வெற்றிகரமாக வாழ்ந்தான்.

நான்கு மிருங்களைப் பற்றிய தானியேலின் கனவு

பாபிலோனின் அரசனாகிய பெல்ஷாத்சாரின் ஆட்சியின் முதல் ஆண்டில் தானியேல் ஒரு கனவு கண்டான். தானியேல் தனது படுக்கையில் படுத்திருந்தபோது இந்தச் தரிசனங்களைக் கண்டான். தானியேல் தான் கண்ட கனவைப்பற்றி எழுதினான். தானியேல் சொன்னான், “நான் தரிசனத்தை இரவில் கண்டேன். அந்தத் தரிசனத்தில் நான்கு திசைகளிலிருந்தும் காற்றடித்துக் கொண்டிருந்தது. அக்காற்றுகள் கடலைக் கொந்தளிக்கச் செய்தது. நான் நான்கு பெரிய மிருகங்களைப் பார்த்தேன். அவை ஒவ்வொன்றும் இன்னொன்றிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. அந்த நான்கு மிருகங்களும் கடலிலிருந்து வெளியே வந்தன.

“முதல் மிருகம் ஒரு சிங்கத்தைப் போன்றிருந்தது. அதற்குக் கழுகைப்போன்று சிறகுகளும் இருந்தன. நான் இந்த மிருகத்தை கவனித்தேன். பிறகு அதன் சிறகுகள் பிடுங்கப்பட்டன. அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு மனிதனைப்போன்று இரண்டு காலில் நின்றது. மனித இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.

“பிறகு நான் எனக்கு முன்னால் இரண்டவாது மிருகத்தைப் பார்த்தேன். இந்த மிருகம் கரடியைப் போன்றிருந்தது. அது ஒரு பக்கமாக சாய்ந்து நின்றது. அது தனது வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலா எலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது. ‘எழுந்திரு, நீ விரும்புகிற எல்லா இறைச்சியையும் சாப்பிடு’ என்று அதற்குச் சொல்லப்பட்டது.

“அதன் பிறகு நான் இன்னொரு மிருகத்தைக் கண்டேன். இந்த மிருகம் ஒரு சிவிங்கியைப் போன்றிருந்தது. அதன் முதுகின்மேல் நான்கு சிறகுகள் இருந்தன. அச்சிறகுகள் பறவைகளின் சிறகுகளைப் போன்றிருந்தன. இந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன. இதற்கு ஆட்சி செய்யும் உரிமை கொடுக்கப்பட்டது.

“அதன் பிறகு இரவில் தரிசனத்தில் என் முன்பு நான்காவது மிருகத்தைக் கண்டேன். இந்த மிருகம் மிக பயங்கரமும், பலமும் உடையதாக இருந்தது. இது மிகப் பலமுடையதாகத் தோன்றியது. இதற்கு பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. இந்த மிருகம் தன் இரையைப் பிடித்து நொறுக்கி தின்றது. இந்த மிருகம் மிச்சமுள்ளவற்றைக் காலால் மிதித்து துவைத்தது. இந்த நாலாவது மிருகம் நான் பார்த்த மற்ற மிருகங்களைவிட வேறுபட்டதாக இருந்தது. இந்த மிருகத்திற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.

“நான் அந்தக் கொம்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அக்கொம்புகளுக்கிடையில் இன்னொரு கொம்பு முளைத்தது. இது சிறிய கொம்பாக இருந்தது. இச்சிறிய கொம்பில் மனித கண்களைப்போன்று கண்கள் இருந்தன. இச்சிறிய கொம்பில் வாயும் இருந்தது. அந்த வாய் பேசியது. சிறு கொம்பானது மற்ற கொம்புகளில் மூன்றைப் பிடுங்கியது.

நான்காவது விலங்கின் தீர்ப்பு

“நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, சிங்காசனங்கள் அவற்றின் இடத்தில் வைக்கப்பட்டன.
    நீண்ட ஆயுசுள்ள அரசர் ஒருவர் அவரது சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார்.
அவரது ஆடைகள் மிகவும் வெண்மையாக இருந்தன.
    அவை பனியைப் போன்று வெண்மையாக இருந்தன.
அவரது தலை முடியும் வெண்மையாக இருந்தது.
    அது கம்பளியைப் போன்று வெண்மையாக இருந்தது.
அவரது சிங்காசனம் நெருப்பினால் செய்யப்பட்டிருந்தது.
    அச்சிங்காசனத்தின் சக்கரங்கள் ஜுவாலைகளால் செய்யப்பட்டிருந்தன.
10 நீண்ட ஆயுசுள்ள அரசருக்கு முன்னால்
    ஒரு நெருப்பு ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
பல லட்சம் பேர் அரசருக்குப் பணிவிடைச் செய்தனர்.
    அவருக்கு முன்னால் கோடா கோடிபேர் நின்றார்கள்.
இது செயல்படத் துவங்கும் நீதிமன்றம்போல்,
    புத்தகங்களெல்லாம் திறந்துவைக்கப்பட்டிருந்தன.

11 “நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏனென்றால் சிறிய கொம்பு வீண்பெருமை பேசிக்கொண்டிருந்தது. நான்காவது மிருகம் கொல்லப்படும்வரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் உடல் அழிக்கப்பட்டு, அது எரிகின்ற நெருப்பில் வீசி எறியப்பட்டது. 12 மற்ற மிருகங்களின் அதிகாரமும் ஆட்சியும் அவற்றிடமிருந்து பிடுங்கப்பட்டன. ஆனால் அவை குறிப்பிட்ட காலம்வரை வாழ அனுமதிக்கப்பட்டன.

13 “இரவில் என் தரிசனத்தில் நான் பார்த்தபோது எனக்கு முன்னால் மனிதனைப்போல் காணப்பட்ட ஒருவரைப் பார்த்தேன். அவர் வானத்து மேகங்களின்மேல் வந்துகொண்டிருந்தார். அவர் நித்திய ஆயுசுள்ள அரசரிடம் வந்தார். அவர்கள் அவரை அரசருக்கருகில் கொண்டு வந்தனர்.

14 “மனிதனைப்போன்று தோற்றமளித்த அவரிடம் அதிகாரம், மகிமை, ஆட்சி உரிமை கொடுக்கப்பட்டன. எல்லா ஜனங்களும் எல்லா மொழிக்காரர்களும் அவரைத் தொழவேண்டும். அவரது ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது இராஜ்யம் என்றென்றும் தொடரும். இது என்றைக்கும் அழிக்கப்படாமல் இருக்கும்.

நான்காவது மிருகத்தைப் பற்றிய கனவின் விளக்கம்

15 “தானியேலாகிய நான் குழம்பி கவலைப்பட்டேன். அத்தரிசனங்கள் என் மனதிற்குள் போய் என்னைத் துன்புறுத்தியது. 16 நான் அங்கே நின்றுகொண்டிருந்த ஒருவன் அருகில் சென்றேன். இதன்பொருள் என்னவென்று நான் அவனிடம் கேட்டேன். அவன் இதன் பொருள் என்னவென்று எனக்கு விளக்கினான். 17 அவன் சொன்னான், ‘நான்கு மிருகங்களும் நான்கு இராஜ்யங்களாகும். இந்த நான்கு இராஜ்யங்களும் பூமியிலிருந்து வந்திருக்கின்றன. 18 ஆனால் தேவனுடைய விசேஷ ஜனங்கள் இராஜ்யத்தைப் பெறுவார்கள். அவர்கள் இந்த இராஜ்யத்தை என்றென்றும் வைத்திருப்பார்கள்’ என்றான்.

19 “பிறகு, நான் நான்காவது மிருகம் எதைக் குறிக்கும்? அதன் பொருள் என்ன? என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். அந்த நான்காவது மிருகமானது மற்ற மிருகங்களிடமிருந்து வித்தியாசமானது. இது மிகப் பயங்கரமானது. இதற்கு இரும்புப் பல்லும் வெண்கல நகங்களும் இருந்தன. அது தன் இரையைப் பிடித்து நொறுக்கி முழுமையாகத் தின்றது. மற்றவர்களை அது காலால் மிதித்துத் துவைத்தது. 20 நான், நான்காவது மிருகத்தின் தலைமீது முளைத்த பத்துக் கொம்புகளைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன். அதில் முளைத்த சிறிய கொம்பைப்பற்றியும் அறிந்துகொள்ள விரும்பினேன். அச்சிறிய கொம்பு மற்ற பத்துக் கொம்புகளில் மூன்றைப் பிடுங்கியது. அச்சிறு கொம்பிற்கு மனிதக் கண்கள் இருந்தன. அது தொடர்ந்து இறுமாப்பாய்ப் பேசியது. மற்றக் கொம்புகளை விடவும் இது குரூரமானதாகக் காணப்பட்டது. 21 நான் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, இச்சிறு கொம்பு தேவனுடைய சிறப்பான ஜனங்களுக்கு எதிராகச் சண்டையிடத் துவங்கியது. அக்கொம்பு அவர்களைக் கொன்றது. 22 சிறு கொம்பானது, தேவனுடைய விசேஷமான ஜனங்களை நித்திய ஆயுசுள்ள அரசர் வந்து நியாயம்தீர்க்கும்வரை கொலைசெய்துகொண்டிருந்தது. நித்திய ஆயுசுள்ள அரசர் சிறிய கொம்பினை நியாயந்தீர்த்தார். இத்தீர்ப்பு தேவனுடைய விசேஷ ஜனங்களுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் இராஜ்யத்தைப் பெற்றனர்.

23 “அவன் இதனை என்னிடம் விளக்கினான்: ‘நான்காவது மிருகம் என்பது பூமியில் வரவிருக்கும் நான்காவது இராஜ்யம். இது மற்ற இராஜ்யங்களைவிட வேறுபட்டது. நான்காவது இராஜ்யமானது உலகில் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள் அனைவரையும் அழிக்கும். அது நடந்து உலகில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை மிதித்து நசுக்கும். 24 இதில் பத்துக் கொம்புகள் என்பது இந்த நான்காவது இராஜ்யத்தில் வரப்போகும் பத்து அரசர்களைக் குறிக்கும். இந்தப் பத்து அரசர்களும் போனபின்பு அடுத்த அரசன் வருவான். அவன் அவனுக்கு முன்பு ஆண்ட அரசர்களைவிட வேறுபட்டவனாக இருப்பான். அவன் மற்ற அரசர்களில் மூன்று பேரைத் தோற்கடிப்பான். 25 இந்த விசேஷ அரசன் மிக உன்னதமான தேவனுக்கு எதிராகப் பேசுவான். அந்த அரசன் தேவனுடைய விசேஷ ஜனங்களைக் காயப்படுத்தவும் கொல்லவும் செய்வான். அந்த அரசன் ஏற்கெனவே அமைக்கப்பட்ட காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற முயல்வான். தேவனுடைய விசேஷ ஜனங்கள் மூன்றரை வருடங்களுக்கு அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

26 “‘ஆனாலும் என்ன நிகழும் என்பதை நியாய சபை முடிவுசெய்யும். அந்த அரசனின் வல்லமை எடுத்துக்கொள்ளப்படும். அவனது இராஜ்யம் முழுமையாக முடிவடையும். 27 பிறகு தேவனுடைய விசேஷ ஜனங்கள் இராஜ்யத்தை ஆளுவார்கள். அவர்கள் பூமியிலுள்ள அனைத்து இராஜ்யங்களையும் ஆள்வார்கள். இந்த இராஜ்யம் என்றென்றும் இருக்கும். அவர்களுக்கு எல்லா இராஜ்யங்களில் உள்ள ஜனங்களும் மதிப்பளித்து, சேவை செய்வார்கள்.’

28 “அதுதான் கனவின் முடிவாகும், தானியேலாகிய நான் மிகவும் பயந்தேன். எனது முகம் பயத்தால் வெளுத்துப்போனது. நான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் பற்றி மற்ற ஜனங்களிடம் சொல்லவில்லை” என்றான்.

2 யோவான்

மூப்பனாகிய நான், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணிற்கும் [a] அவளது குழந்தைகளுக்கும் எழுதுவது. நான் உங்கள் அனைவரையும் உண்மையான நற்செய்தியின்படி நேசிக்கிறேன். உண்மையை அறிந்த அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள். நம் அனைவருக்குள்ளும் இருக்கிற உண்மையால் நாங்கள் உங்களை நேசிக்கிறோம். என்றென்றைக்கும் இந்த உண்மை நம்மோடு கூட இருக்கும்.

பிதாவாகிய தேவனிடமிருந்தும், அவரது மகனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், இரக்கமும், சமாதானமும், அமைதியும் நம்மோடு இருப்பதாக. உண்மை, அன்பு, ஆகியவற்றின் மூலமாக நாம் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.

உங்கள் குழந்தைகளில் சிலரைக் குறித்து அறிவதில் நான் சந்தோஷமடைகிறேன். பிதா நமக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் உண்மையின் வழியைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்து நான் சந்தோஷப்படுகிறேன். இப்போதும், அன்பான பெண்மணியே, நான் உனக்குக் கூறுகிறேன், நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். இது புதுக் கட்டளையல்ல, தொடக்கத்திலிருந்தே, நாம் பெற்ற அதே கட்டளையாகும். நாம் வாழும்படியாக அவர் கட்டளையிட்ட வழியில் வாழ்வதே அன்புகாட்டுவதாகும். தேவனின் கட்டளையும் இதுவே. நீங்கள் அன்பின் வாழ்க்கையை வாழுங்கள். தொடக்கத்தில் இருந்தே நீங்கள் கேள்விப்பட்ட கட்டளையும் இது தான்.

இப்போது உலகில் அநேக தவறான போதகர்கள் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து ஒரு மனிதனானார் என்பதை இந்தத் தவறான போதகர்கள் சொல்ல மறுக்கிறார்கள். இந்த உண்மையை சொல்ல மறுக்கிற மனிதன் தவறான போதகனும் போலிக் கிறிஸ்துவுமாயிருக்கிறான். எச்சரிக்கையாயிருங்கள்! உங்கள் செயல்களுக்குரிய நற்பலனை இழந்துவிடாதிருங்கள். உங்களுக்குரிய எல்லாப் பலன்களையும் பெறுவதில் எச்சரிக்கையாக இருங்கள்.

கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமே பின்பற்றுவதை ஒருவன் தொடரவேண்டும். கிறிஸ்துவின் போதனைகளை ஒருவன் மாற்றினால், அம்மனிதனிடம் தேவன் இல்லை. ஆனால் தேவனின் போதனைகளைத் தொடர்ந்து ஒரு மனிதன் பின்பற்றினால், அம்மனிதன் பிதா, குமாரன் ஆகிய இருவரையும் ஏற்றுக்கொள்கிறான். 10 ஒருவன் இப்போதனையைக் கொண்டுவராமல் உங்களிடம் வந்தால் அவனை உங்கள் வீட்டில் ஏற்காதீர்கள். அவனை வரவேற்காதீர்கள். 11 நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டால் அவனது தீயசெயல்களுக்கும் நீங்களும் உதவியவராவீர்கள்.

12 நான் உங்களிடம் கூற வேண்டியது மிகுதி. ஆனால் தாளையும், மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. பதிலாக, உங்களிடம் வர எண்ணுகிறேன். அப்போது நாம் ஒருமித்துப் பேச இயலும். அது நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். 13 தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் சகோதரியின் குழந்தைகள் தங்கள் அன்பை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center