Old/New Testament
மிருகங்களைக் கொல்வது மற்றும் உண்பது பற்றிய விதிகள்
17 கர்த்தர் மோசேயிடம் 2 “நீ ஆரோனுடனும், அவனது மகன்களோடும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசி, கர்த்தர் என்ன கட்டளையிட்டுள்ளார் என்பதைக் கூறு: 3 ஒரு இஸ்ரவேலன் ஒரு காளையையோ, அல்லது ஒரு செம்மறியாட்டையோ அல்லது வெள்ளாட்டையோ முகாமுக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கொல்லலாம். 4 அவன் அந்த மிருகத்தை ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவன் அந்த மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக அளிக்க வேண்டும். கொல்லப்பட்ட மிருகத்தின் இரத்தத்தை அவன் சிந்தியவனாகிறான். எனவே, தனது அன்பளிப்பை கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அவன் அம்மிருகத்தின் ஒரு பகுதியை கர்த்தருக்கு அன்பளிப்பாக எடுத்துச் செல்லவில்லையெனில் அவன் தனது ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும். 5 விதிகள் இவ்வாறு இருப்பதால் ஜனங்கள் தங்கள் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் வயல்களில் கொல்கிற மிருகங்களை ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். 6 பிறகு ஆசாரியன் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் உள்ள பலிபீடத்தின்மேல் கர்த்தருக்கு முன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும். கொழுப்பை நறுமணமிக்க வாசனையாக எரிக்க வேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். 7 தாங்கள் தவறாகப் பின்பற்றிய பொய்த் தேவர்களுக்கு இனிமேல் அவர்கள் எவ்வித பலிகளும் இடாமல் இருக்க வேண்டும். அவர்கள் இத்தகைய பொய்த் தேவர்களைப் பின்பற்றினால் ஒரு வேசியைப் போன்று இருப்பார்கள். இவ்விதிகள் நிரந்தரமானவை.
8 “ஜனங்களிடம் சொல்லுங்கள், இஸ்ரவேல் குடிமக்களோ அல்லது உங்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களோ தகன பலியையோ அல்லது வேறு பலிகளையோ 9 ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்கு கர்த்தருக்கு அளிக்க வரவேண்டும். இவ்வாறு அவர்கள் செய்யாவிட்டால் மற்ற ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட்டுப் போவார்கள்.
10 “இரத்தத்தைச் சாப்பிடுகிற எவருக்கும் தேவனாகிய நான் எதிராக இருக்கிறேன். அவன் இஸ்ரவேல் குடிமகனாகவோ, அல்லது உங்களோடு குடியிருக்கும் அயல் நாட்டுக்காரனாகவோ இருக்கலாம். நான் அவர்களை மற்ற ஜனங்களிடம் இருந்து ஒதுக்கிவிடுவேன். 11 ஏனென்றால் சரீரத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது. இரத்தத்தைப் பலிபீடத்தில் ஊற்றும்படி நான் விதிகளைக் கொடுத்திருக்கிறேன். உங்களைச் சுத்திகரித்துக்கொள்ள நீங்கள் இதனைச் செய்ய வேண்டும். இரத்தமே ஆத்துமாவை பாவ நிவிர்த்தி செய்கிறது. 12 உங்களில் எவரும், உங்களோடு வாழும் அயல் நாட்டுக்காரர்களும் இரத்தம் உண்ணக் கூடாது.
13 “எவராவது உண்ணத்தக்க பறவையையோ, மிருகத்தையோ பிடித்துக்கொன்றால் அதன் இரத்தத்தைத் தரையிலே ஊற்றி மண்ணால் மூட வேண்டும். 14 இறைச்சியில் இரத்தம் இருந்தால் இறைச்சியில் மிருகத்தின் உயிர் இருப்பதாகப் பொருள். இறைச்சியில் இரத்தம் இருந்தால் அதை உண்ணாதீர்கள். இரத்தத்தோடு உண்ணுகிற எவனும் தன் ஜனங்களிடம் இருந்து ஒதுக்கப்படுவான்.
15 “இஸ்ரவேலராகிய நீங்களும், உங்களோடு வசிக்கும் அயலார் எவரும் தானாக மரித்துப்போன மிருகத்தையோ, வேறு மிருகத்தாலே கொல்லப்பட்ட மிருகத்தையோ உண்ணக் கூடாது, அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும். அப்படி உண்பவன் மாலைவரை தீட்டாயிருப்பான். மாலையில் அவன் தன் உடையைத் துவைத்து தண்ணீரால் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். 16 அவன் தனது ஆடையைத் துவைக்காவிட்டாலோ, தண்ணீரால் உடலைக் கழுவாவிட்டாலோ அவன் குற்றமுள்ளவனாயிருப்பான்” என்று கூறினார்.
பாலியல் உறவுகள் தொடர்பான விதிகள்
18 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: நானே தேவனாகிய கர்த்தர் 3 எகிப்திலிருந்த உங்களை நான் கானானுக்கு வழி நடத்தினேன். அங்கு செய்துவந்த செயல்களை எல்லாம் இங்கு செய்யக் கூடாது. நான் உங்களை கானான் தேசத்திற்கு நடத்திச் செல்கிறேன். அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றாதீர்கள். 4 நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து எனது விதிகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருங்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். 5 எனவே நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து எனது விதிகளைப் பின்பற்ற வேண்டும். எனது சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கீழ்ப்படிகிறவனே உண்மையில் நீடித்து வாழ்வான். நானே கர்த்தர்.
6 “நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுடன் பாலின உறவு கொள்ளக் கூடாது. நானே கர்த்தர்!
7 “நீங்கள் உங்கள் தந்தையோடும் தாயோடும் பாலின உறவு தொடர்புகொள்ளக் கூடாது. அந்தப் பெண் உனது தாய். எனவே நீ அவளோடு பாலின உறவு கொள்ளக் கூடாது. 8 அவள் உனது தாயாக இல்லாவிட்டாலும் உனது தந்தையின் மனைவியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அது உனது தந்தையை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.
9 “நீங்கள் உங்கள் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தைக்கோ, தாய்க்கோ பிறந்தவளாக இல்லாமல் இருக்கலாம். அவள் உனது வீட்டிலே பிறந்தவளாகவோ வேறு இடத்தில் பிறந்தவளாகவோ இருக்கலாம்.
10 “நீ உன் பேத்தியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்கள் உங்களில் ஒரு பகுதியானவர்கள்.
11 “உனது தந்தைக்கும் அவரது மனைவிக்கும் பிறந்தவளாக இருந்தாலும் அவள் உனது சகோதரிதான். நீ அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
12 “உன் தந்தையின் சகோதரியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தையோடு நெருங்கிய உறவு உடையவள். 13 நீ உனது தாயின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் உனது தாயின் நெருங்கிய உறவினள். 14 நீ உனது தந்தையின் சகோதரனோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. நீ அவரது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவள் உனது அத்தை அல்லது சித்தி அல்லது பெரியம்மாள்.
15 “நீ உனது மருமகளோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அவள் உனது மகனின் மனைவி. அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
16 “நீ உனது சகோதரனது மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அது உனது சகோதரனை நிர்வாணமாக்குவது போன்றதாகும்.
17 “நீ தாய்-மகள் இருவரோடும் பாலின உறவு கொள்ளக்கூடாது. அதோடு அவளது பேத்தியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் பேத்தி அவளது மகளின் மகளாகவும் மகனின் மகளாகவும் இருக்கலாம். அவளது பேத்தி என்றால் அவளுக்கு நெருக்கமான உறவினள். அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது முறை கெட்ட செயல்.
18 “உனது மனைவி உயிரோடு இருக்கும்போது அவளது தங்கையை அடுத்த மனைவியாக வைத்துக்கொள்ளக் கூடாது. இது அந்தச் சகோதரிகளை விரோதிகளாக மாற்றிவிடும். உனது மனைவியின் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது.
19 “ஒரு பெண் மாதவிலக்கான காலத்தில் இருக்கும்போது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் அப்போது தீட்டுள்ளவளாக இருக்கிறாள்.
20 “பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை தீட்டுள்ளவனாக்கிவிடும்.
21 “நீ உனது குழந்தைகளை மோளேகு என்ற பொய்த் தெய்வத்திற்கு முன்பு நெருப்பில் நடக்கும்படி அனுமதியாதே. நீ இதனைச் செய்தால் உனது தேவனை மதிக்கவில்லை என்று பொருள். நானே கர்த்தர்.
22 “நீ பெண்ணோடு பாலின உறவு வைத்துக்கொள்வதைப் போல ஆணோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது பயங்கரமான பாவமாகும்.
23 “நீ எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது உன்னை அருவருப்பு உள்ளவனாக்கும். இதுபோல் ஒரு பெண்ணும் எந்த மிருகத்தோடும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. இது இயற்கைக்கு மாறானது.
24 “இது போன்ற தவறான செயல்களைச் செய்து உங்களைத் தீட்டுள்ளவர்களாக்கிக்கொள்ளாதீர்கள். இத்தேசத்தில் உள்ளவர்களை வெளியே துரத்திக்கொண்டிருக்கிறேன். அவர்களின் நிலத்தை உங்களுக்குத் தந்தேன், ஏனென்றால் அவர்கள் இத்தகைய பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள். 25 அவர்கள் இந்த நாட்டையும் அருவருப்பாக்கிவிட்டார்கள். எனவே நான் இதன் பாவத்துக்காக இதனைத் தண்டிப்பேன். அந்நாடு அங்கு வாழ்பவர்களைக் கக்கிப்போடும்.
26 “நீங்கள் என்னுடைய சட்டங்களுக்கும் விதிகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். நீங்கள் இது போன்ற பயங்கரமான பாவங்களைச் செய்யக் கூடாது. இந்த விதிகள் இஸ்ரவேல் குடிமக்களுக்கும் அவர்களிடையே வாழும் அயலாருக்கும் உரியது. 27 உங்களுக்கு முன்னால் இந்த நாட்டில் வாழ்ந்தவர்கள் எல்லாம் அத்தகைய பாவங்களைச் செய்தார்கள். அதனால் நாடே அருவருப்பாயிற்று. 28 நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்களும் இந்த நாட்டை அருவருப்பாக்குவீர்கள். அவர்களை இந்நாடு கக்கிப்போட்டது போன்று உங்களைக் கக்கிப்போடும். 29 எவராவது இதுபோன்ற மோசமான பாவங்களைச் செய்தால் பிறகு அவர்கள் தங்கள் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள். 30 மற்ற ஜனங்கள் இத்தகைய மோசமான பாவங்களைச் செய்தார்கள், ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இது போன்ற மோசமான பாவங்களைச் செய்து உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாதீர்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.
இயேசுவைக் கேலி செய்தல்(A)
27 பின்னர் பிலாத்துவின் வீரர்கள் இயேசுவை பிலாத்துவின் அரண்மனைக்குள் கொண்டு வந்தார்கள். 28 எல்லா வீரர்களும் இயேசுவைச் சுற்றிக்கொண்டு அவரது ஆடைகளைக் கழற்றி ஒரு சிவப்பு மேலங்கியை அணிவித்தார்கள். 29 வீரர்கள் முட்களால் ஒரு கிரீடம் செய்து அதை இயேசுவின் தலையில் சூட்டினார்கள். அவரது வலது கையில் ஒரு தடியைக் கொடுத்தார்கள். பின்னர் அவ்வீரர்கள் இயேசுவின் முன்னால் குனிந்து கேலி செய்தார்கள்., “வணக்கம் யூதர்களின் அரசரே” என்றார்கள். 30 அவர் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். பின்னர் அவரது கையிலிருந்த தடியை வாங்கி அவரது தலையில் பல முறை அடித்தார்கள். 31 இயேசுவை அவர்கள் கேலி செய்து முடித்ததும், சிவப்பு மேலங்கியை நீக்கியபின் அவரது ஆடைகளை அணிவித்தார்கள். பின்னர் சிலுவையில் அறைந்து கொல்வதற்காக இயேசுவை வீரர்கள் அழைத்துச் சென்றார்கள்.
இயேசு சிலுவையில் கொல்லப்படுதல்(B)
32 போர்வீரர்கள் இயேசுவுடன் நகரை விட்டு வெளியில் சென்று கொண்டிருந்தார்கள். சிரேனே என்னுமிடத்திலிருந்து வந்த சீமோன் என்பவனை இயேசுவுக்காக சிலுவையைச் சுமந்துவர போர்வீரர்கள் கட்டாயப்படுத்தினார்கள். 33 மண்டை ஓட்டின் இடம் என்னும் பொருள்படும் கொல்கொதா என்று அழைக்கப்படுமிடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். 34 அங்கு வலியை மறக்கச்செய்யும் மருந்து கலந்த பானத்தை இயேசுவுக்குக் கொடுத்தார்கள். அதைச் சுவைத்த இயேசு அதைக் குடிக்க மறுத்தார்.
35 போர் வீரர்கள் இயேசுவை சிலுவையில் ஆணிகளை வைத்து அறைந்தார்கள். யார் இயேசுவின் ஆடைகளைப் பெறுவது என்பதை சீட்டுப் போட்டு முடிவு செய்தார்கள். 36 போர்வீரர்கள் அங்கு உட்கார்ந்து இயேசுவை கவனித்துக்கொண்டிருந்தார்கள். 37 இயேசுவின் தலைக்கு மேல் ஒரு அறிவிப்பு பலகையை அவர்கள் அறைந்தார்கள். அதில் , “இவர் இயேசு, யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது.
38 இயேசுவின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு கொள்ளைக்காரர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள். 39 மக்கள் இயேசுவின் அருகில் நடந்துச்சென்று அவரைத் திட்டினார்கள். தலையைக் குலுக்கியபடி மக்கள் கூறினார்கள், 40 ,“தேவாலயத்தை இடித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்ட முடியும் எனக் கூறினாயே! உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! நீ தேவனின் குமாரன் என்பது உண்மையானால், சிலுவையிலிருந்து இறங்கி வா!” என்றனர்.
41 தலைமை ஆசாரியர், வேதபாரகர் மற்றும் மூத்த யூதத்தலைவர்கள் ஆகிய அனைவரும் அங்கிருந்தனர். மக்கள் செய்தது போலவே அவர்களும் இயேசுவைக் கேலி செய்தார்கள். 42 அவர்கள்,, “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான்! ஆனால் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவனை (இஸ்ரவேலின்) யூதர்களின் அரசன் என்று மக்கள் கூறுகிறார்கள். இவன் அரசனானால் இப்பொழுது சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். 43 இவன் தேவனை நம்பினான். எனவே தேவன் விரும்பினால் இவனைக் காப்பாற்றட்டும் ‘நான் தேவ குமாரன்’ என இவன் கூறினான்” என்றார்கள். 44 அவ்வாறாகவே, இயேசுவின் இருபக்கமும் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரை நிந்தனை செய்தனர்.
இயேசுவின் மரணம்(C)
45 நடுப்பகலில் நாடு முழுவதும் இருண்டது. இருள் மூன்று மணி நேரம் தொடர்ந்தது. 46 சுமார் மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் , “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினார். இதன் பொருள்,, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” [a] என்பதாகும்.
47 அங்கு நின்றிருந்த சிலர் இதைக் கேட்டார்கள். அவர்கள்,, “அவன் எலியாவை அழைக்கிறான்” என்றார்கள்.
48 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடல் பஞ்சைக் கொண்டுவந்தான். அதைப் புளிப்பான பானத்தில் தோய்த்து குச்சியில் கட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். 49 ஆனால் மற்றவர்கள்,, “அவனைத் தொந்தரவு செய்யாதே. எலியா அவனைக் காப்பாற்ற வருவானா என்பதைக் காணவேண்டும்” என்றார்கள்.
50 மீண்டும் இயேசு ஒரு முறை சத்தமிட்டுக் கதறினார். பின்னர், இயேசுவின் ஆவி பிரிந்தது.
2008 by World Bible Translation Center