Old/New Testament
உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களுக்கான விதிகள்
15 பிறகு கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் பார்த்து, 2 “நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: ஒருவனுக்கு உடற்கழிவுகள் ஏற்பட்டால் அதனாலும் தீட்டு உண்டாகும். 3 இக்கழிவுகள் அவன் உடம்பிலிருந்து சரளமாக வெளியேறுகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை.
4 “உடற்கழிவு ஏற்பட்டவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும். அவன் எதன் மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும். 5 அவனது படுக்கையைத் தொடுகிறவன் தனது ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். 6 உடற்கழிவு ஏற்பட்டவன் உட்காருகிற இடத்தில் உட்காருகிறவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை இவனும் தீட்டு உள்ளவனாக இருப்பான். 7 உடற்கழிவு ஏற்படுகிறவனைத் தொடுபவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை இவனுக்கும் தீட்டு இருக்கும். 8 உடற்கழிவு உள்ளவனின் எச்சில் மேலேபட்டாலும் ஒருவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்கவேண்டும். மாலைவரை அவனுக்குத் தீட்டு இருக்கும். 9 இத்தகையவன் ஏறுகிற எந்த சேணமும் தீட்டாகும். 10 இத்தகையவனுக்குக் கீழ் இருக்கிற எந்தப் பொருளையும் தொடுகிறவன் மாலைவரை தீட்டாயிருப்பான். அப்பொருளை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டு உள்ளவனாக இருப்பான். 11 சிற்சில இடங்களில் உடற்கழிவு உள்ளவன் தண்ணீரில் தன் கைகளைக் கழுவாமலே அடுத்தவனைத் தொட்டுவிட்டால், தொடப்பட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து குளிக்க வேண்டும். மாலைவரை அவன் தீட்டாக இருப்பான்.
12 “உடற்கழிவு ஏற்பட்டவன் ஏதேனும் மண் பாண்டத்தைத் தொட்டால் அம்மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும். மரத்தாலான பாத்திரத்தை அவன் தொடநேர்ந்தால், அதைத் தண்ணீரால் கழுவ வேண்டும்.
13 “உடற்கழிவு உள்ளவன் அது நீங்கி சுத்தமானதும் அதற்குச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்காக ஏழு நாட்கள் காத்திருந்து, தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அப்போதுதான் அவன் சுத்தமாவான். 14 எட்டாவது நாள் அவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவற்றை கர்த்தருக்கு முன் கொண்டுவந்து ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 15 அவற்றுள் ஒன்று பாவப்பரிகார பலியாகவும் இன்னொன்று தகன பலியாகவும் ஆசாரியன் கர்த்தருக்கு செலுத்துவான். இம்முறையில் ஆசாரியன் கர்த்தருக்கு முன் அவனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.
ஆண்களுக்கான விதிகள்
16 “ஒருவனுக்கு விந்து வெளிப்பட்டால், அவன் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 17 தோல் ஆடையிலும், துணியிலும் விந்துபட்டிருந்தால் அவற்றை தண்ணீரால் கழுவவேண்டும். அது மாலைவரை தீட்டுள்ளதாக இருக்கும். 18 விந்து கழிந்தவனோடு ஒரு பெண் படுத்திருந்தால் இருவரும் தண்ணீரில் குளிக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.
பெண்களுக்கான விதிமுறைகள்
19 “இரத்தப் போக்குடைய மாதவிலக்கான பெண், ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவளாக இருப்பாள். அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 20 அவள் மாத விலக்காக இருக்கும்போது எதன் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதன் மீது உட்காருகிறாளோ அவை தீட்டாகும். 21 அவளது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். மாலைவரை அவனும் தீட்டுள்ளவனாக இருப்பான். 22 அவள் அமர்ந்த இருக்கையைத் தொட்டவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 23 அவள் படுக்கையையோ இருக்கையையோ தொட்டவன் மாலைவரை தீட்டு உடையவனாக இருப்பான்.
24 “அவளோடு ஒருவன் படுத்துக்கொண்டால் அவள் தீட்டு அவன்மேல் படும். அதனால் அவன் ஏழு நாள் தீட்டாய் இருப்பான். அவன் படுக்கிற படுக்கையும் தீட்டாகும்.
25 “ஒருத்திக்கு மாதவிலக்கு அல்லாத நாட்களிலும் அவளிடம் இரத்தம் கசிந்தால் அப்போதும் அவள் விலக்கானவள் போலவே கருதப்பட வேண்டும். 26 அந்த நாட்களிலும் அவள் படுக்கும் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும். 27 இத்தகையவற்றைத் தொடுகிற எவனும் தன் ஆடைகளைத் துவைத்து தண்ணீரில் குளிக்க வேண்டும். அவனும் மாலை வரை தீட்டாய் இருப்பான். 28 அவளது தீட்டு நின்றதும் ஏழு நாட்கள் அவள் காத்திருக்க வேண்டும். அதன் பிறகே அவள் சுத்தமாகிறாள். 29 எட்டாவது நாளில் அவள் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து அவற்றை ஆசாரிப்புக் கூடாரத்திற்குள் ஆசாரியனிடம் கொடுக்க வேண்டும். 30 ஆசாரியன் அவற்றில் ஒன்றைப் பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். கர்த்தருடைய சந்நிதியில் அவளை இவ்வாறு ஆசாரியன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
31 “இஸ்ரவேல் ஜனங்கள் தீட்டு இல்லாதவர்களாக இருக்க எச்சரிக்கை செய்யுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் எனது ஆராதனை கூடாரத்தைத் தீட்டுள்ளதாக்குவதுடன், அவர்கள் அழிந்தும் போவார்கள்” என்று கூறினார்.
32 இவையே, உடற்கழிவு உள்ளவர்களுக்கான விதிகள். விந்து கழிவினால் தீட்டான ஆண்களுக்கும், 33 மாதவிலக்கால் தீட்டான பெண்களுக்கும், தீட்டானவளோடு படுத்துக்கொண்டவனுக்குமுரிய விதிகள் இவைகளேயாகும்.
பாவப்பரிகார நாள்
16 ஆரோனின் இரண்டு மகன்களும் கர்த்தரின் சந்நிதியில் அங்கீகரிக்கப்படாத முறையில் தூபம் காட்டியபோது மரணமடைந்தனர். அதற்குப் பின்பு கர்த்தர் மோசேயிடம், 2 “உன் சகோதரன் ஆரோனிடம் பின்வருவதைக் கூறு: கூடாரத்தின் திரைக்குப் பின்னால் அவன் விரும்புகிற போதெல்லாம் மகாபரிசுத்த இடத்திற்கு போகவேண்டாம். திரைக்குப் பின்னால் அந்த அறையில் பரிசுத்தப் பெட்டி உள்ளது. அதன்மேல் கிருபாசன மூடி உள்ளது. நான் அதற்கு மேல் மேகத்தில் காட்சி தருவேன். ஆரோன் அங்கே சென்றால் மரித்து போகலாம்!
3 “ஆரோன் பாவப்பரிகார நாள் அன்று மிகவும் பரிசுத்தமான அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன் ஒரு காளையைப் பாவப் பரிகார பலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவை தகன பலியாகவும் செலுத்திவிட வேண்டும். 4 ஆரோன் தண்ணீரில் தன் உடல் முழுவதையும் கழுவ வேண்டும். பின் அவன் வேறு ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். ஆரோன் பரிசுத்த சணல் நூல் சட்டையை அணிந்து இடுப்பில் சணல் நூல் சல்லடத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும். சணல் நூல் தலைப் பாகையையும், சணல் நூலால் ஆன இடைக் கச்சையையும் அணிந்துகொள்ள வேண்டும். இவை பரிசுத்தமான ஆடைகள்.
5 “ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பாவப்பரிகார பலிக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் தகன பலிக்காக ஒரு ஆட்டுக் காடாவையும் வாங்கிக்கொள்ள வேண்டும். 6 பிறகு ஆரோன் காளையைப் பாவப்பரிகார பலியாக செலுத்த வேண்டும். இந்தப் பாவப்பரிகார பலி அவனுக்குரியது. இதனை ஆரோன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் சுத்திகரிப்பு செய்வதற்காக இவ்வாறு செய்ய வேண்டும்.
7 “பிறகு ஆரோன் இரு வெள்ளாட்டுக் கடாக்களையும் கர்த்தருக்கு முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குக் கொண்டு வரவேண்டும். 8 பின் கடாக்களுக்காகச் சீட்டுப்போட வேண்டும். ஒரு சீட்டு கர்த்தருக்குரியது. இன்னொரு சீட்டு போக் காட்டுக்கு உரியது.
9 “பிறகு ஆரோன் கர்த்தருக்குரிய சீட்டுள்ள கடாவை கர்த்தருடைய சந்நிதியில் பாவப் பரிகார பலியாக வழங்க வேண்டும். 10 ஆனால் போக்காடாகச் சீட்டுள்ள கடாவையும் கர்த்தருக்கு முன் கொண்டு வர வேண்டும். பின் அந்தக் கடாவை உயிரோடு வனத்துக்குத் துரத்திவிட வேண்டும். இது ஜனங்களைச் சுத்திகரிப்புச் செய்யும்.
11 “பிறகு ஆரோன் காளையைத் தனக்குரிய பாவப்பரிகார பலியாகச் செலுத்தி, தன்னையும் தனது குடும்பத்தாரையும் பரிசுத்தப்படுத்த வேண்டும். அவனே தனக்கான பாவப்பரிகார பலியாக அக்காளையைக் கொல்ல வேண்டும். 12 பிறகு கர்த்தரின் சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின் மேலுள்ள நெருப்புத் தணலினால் தூபகலசத்தை நிரப்ப வேண்டும். பொடியாக்கப்பட்ட நறுமணப் பொருட்களை தன் கைப்பிடி நிறைய எடுத்து திரைக்கு உட்புறமாகக் கொண்டு வர வேண்டும். 13 அவன் கர்த்தரின் சந்நிதியில் நறுமணப் பொருட்களைப் போட வேண்டும். அப்புகையானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்தை மூடும் அளவிற்கு போட வேண்டும். இவ்வாறு செய்தால் ஆரோன் மரிக்கமாட்டான். 14 ஆரோன் கொல்லப்பட்ட காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதனை விரலால் தொட்டுக் கீழ்ப்புறமாக நின்று கிருபாசனத்தின்மேல் தெளிக்க வேண்டும். இவ்வாறு ஏழுமுறை அவன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும்.
15 “பிறகு ஆரோன் ஜனங்களின் பாவப் பரிகார பலிக்கான வெள்ளாட்டைக் கொன்று, அதன் இரத்தத்தைத் திரைக்குப் பின்னால் உள்ள அறைக்குக் கொண்டு வர வேண்டும். காளையின் இரத்தத்தைச் செய்தது போன்றே இதனையும் செய்ய வேண்டும். அவன் அந்த இரத்தத்தைக் கிருபாசனத்தின் மேலும் அதற்கு முன்பும் தெளிக்க வேண்டும். 16 இவ்வாறு ஆரோன் மிகவும் பரிசுத்தமான இடத்தைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருடைய தீட்டிற்காகவும், பாவங்களுக்காகவும் ஆரோன் இதனையெல்லாம் செய்ய வேண்டும். ஆரோன் இதனை ஆசரிப்பு கூடாரத்திற்குள்ளே செய்ய வேண்டும்.
17 “அவர்களுடைய தீட்டுகளின் மத்தியிலிருக்கிற மிகப் பரிசுத்தமான இடத்தில் இச்சடங்குகளையெல்லாம் ஆரோன் செய்யும்போது எவரும் ஆசரிப்புக் கூடாரத்தில் நுழையக் கூடாது. ஆரோன் வெளியே வந்த பிறகுதான் எவரும் நுழைய வேண்டும். இவ்வாறு ஆரோன் தன்னையும், தன் குடும்பத்தாரையும், இஸ்ரேவேல் ஜனங்களையும் சுத்தம் செய்கிறான். 18 பிறகு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின் அருகில் வரவேண்டும். அதற்குப் பிராயச்சித்தம் செய்ய, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் கொம்புகளில் தடவ வேண்டும். 19 தன் விரலினால் அந்த இரத்தத்தைத் தொட்டு ஏழுமுறை அதன்மேல் தெளிக்க வேண்டும். அதனை இஸ்ரவேல் ஜனங்களின் தீட்டுகள் நீங்கும்படி சுத்திகரித்து பரிசுத்தப்படுத்த வேண்டும்.
20 “ஆரோன் மிகப் பரிசுத்தமான இடத்தையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் பரிசுத்தப்படுத்துவான். பிறகு ஆரோன் உயிருள்ள வெள்ளாட்டை கர்த்தருக்கு முன் கொண்டு வந்து 21 தனது இரு கைகளையும் அதன் தலைமீது வைப்பான். பிறகு இஸ்ரவேல் ஜனங்களுடைய பாவங்களையும் குற்றங்களையும் அறிக்கையிட்டு அந்த வெள்ளாட்டின் தலையிலே சுமத்துவான். பின் அதனை அதற்கு நியமிக்கப்பட்ட ஆள் மூலம் வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவான். 22 அந்தக் கடாவானது வனாந்திரத்திற்கு அனைவரது பாவங்களையும் எடுத்து சென்றுவிடுகிறது. அதனைக் காட்டிலே விட்டுவிட்டு அந்த ஆள் வந்துவிடுவான்.
23 “பிறகு ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் நுழைவான். பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போது அவன் அணிந்திருக்கும் மெல்லிய பஞ்சாடைகளை நீக்கி அவைகளை அங்கேயே வைத்துவிட வேண்டும். 24 ஒரு பரிசுத்தமான இடத்தில் தனது உடல் முழுவதையும் தண்ணீரால் கழுவி, பிறகு வேறு சிறப்பு ஆடைகளை அணிந்துக்கொள்ள வேண்டும். அதன்பின் வெளியே வந்து தனது மற்றும் ஜனங்களின் தகன பலிகளைச் செலுத்தி தன்னையும் ஜனங்களையும் பரிசுத்தமாக்க வேண்டும். 25 பின் பாவப் பரிகார பலியின் கொழுப்பை பலிபீடத்தின் மேல் எரிப்பான்.
26 “போக்காடாகிய கடாவைக் கொண்டு போய் வனாந்திரத்திலே விட்டவன் ஆடைகளைத் துவைத்துக் குளித்துவிட்டு முகாமுக்குள் வரவேண்டும்.
27 “பாவப்பரிகார பலிக்குரிய காளையையும் வெள்ளாட்டையும் முகாமிற்கு வெளியே கொண்டு செல்லவேண்டும். (அவற்றின் இரத்தத்தை மட்டும் பரிசுத்த இடத்திற்குள் கொண்டுப் போய் அதனைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.) தோல்கள், உடல்கள், கழிவுகள் அனைத்தையும் ஆசாரியன் நெருப்பிலே போட்டு எரிக்கவேண்டும். 28 எரித்தவன் ஆடையைத் துவைத்து தண்ணீரில் உடல் முழுவதையும் கழுவிய பின்னரே கூடாரத்திற்குள் நுழைய வேண்டும்.
29 “இந்தச் சட்டங்கள் என்றென்றும் தொடர்ந்து இருக்கும். ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் எவ்வுணவையும் நீங்கள் உண்ணவோ, ஒரு வேலையும் செய்யவோ கூடாது. உங்கள் தேசத்தில் வசிக்கும் உள்நாட்டுக்காரர்களும், வெளிநாட்டுக்காரர்களும் கூட எவ்வேலையும் செய்யக்கூடாது. 30 ஏனென்றால் ஆசாரியர்கள் அந்நாளில் வந்து உங்களைச் சுத்திகரிப்பு செய்து உங்கள் பாவங்களைப் போக்குவார்கள். பிறகு நீங்கள் கர்த்தருக்கு முன் தீட்டு இல்லாமல் இருப்பீர்கள். 31 இந்நாள் சிறப்பான ஓய்வு நாளாகும். அன்று உணவு எதையும் உட்கொள்ளாமல் உங்கள் மனதில் தாழ்மையுடன் இருக்க வேண்டும். இந்த விதிமுறை என்றென்றும் இருக்கும்.
32 “தேவனுடைய அபிஷேகம் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசாரியனே பாவப்பரிகாரம் செய்யத் தகுந்தவன். தனது தந்தைக்குப் பிறகு தலைமை ஆசாரியனாகப் பணி செய்யும் உரிமையைப் பெற்றவன் இவன். ஆசாரியன் பரிசுத்தமான சணல் நூல் ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். 33 மிகப் பரிசுத்தமான இடத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அவன் மற்ற ஆசாரியர்களையும், இஸ்ரவேல் ஜனங்களையும் சுத்தப்படுத்துவான். 34 இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களின் காரணமாக அவர்களை வருடம் ஒருமுறை பரிசுத்தம் செய்யும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்” என்றார்.
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள்.
பிலாத்துவின் முன் இயேசு(A)
27 தலைமை ஆசாரியரும் மூத்த யூதத் தலைவர்களும் மறுநாள் அதிகாலையில் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்தார்கள். 2 அவர்கள் இயேசுவைச் சங்கிலியில் பிணைத்து, ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் பிலாத்துவிடம் இயேசுவை ஒப்படைத்தார்கள்.
யூதாஸின் தற்கொலை(B)
3 இயேசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டபோது தன் செயலுக்காக மிகவும் வருந்தினான். ஆகவே தனக்குக் கிடைத்த முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமை ஆசாரியர்களிடமும் மூத்தத் தலைவர்களிடமும் எடுத்துச் சென்றான். 4 யூதாஸ்,, “நான் பாவம் செய்து விட்டேன். குற்றமற்றவரான இயேசுவை உங்களிடம் கொலை செய்யக் கொடுத்துவிட்டேன்” என்றான்.
அதற்கு யூதத் தலைவர்கள்,, “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள்.
5 ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக்கொண்டான்.
6 வெள்ளி நாணயங்களைப் பொறுக்கி எடுத்த தலைமை ஆசாரியர்கள்,, “இப்பணத்தைத் தேவாலயக் கருவூலத்தில் வைத்திருக்க நம் சட்டம் அனுமதிக்காது. ஏனென்றால், இப்பணம் ஒருவனது மரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது” என்று சொல்லி, 7 அப்பணத்தைக் கொண்டு குயவனின் வயல் என்றழைக்கப்பட்ட நிலத்தை அவர்கள் வாங்கத் தீர்மானித்தார்கள். அந்த நிலம் எருசலேமைக் காண வரும் பயணிகள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. 8 எனவே தான் அந்த நிலம் இன்னமும், “இரத்த நிலம்” என அழைக்கப்படுகிறது. 9 தீர்க்கதரிசி எரேமியா சொன்னபடி இது நடந்தது.
, “அவர்கள் முப்பது வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். அதுவே இஸ்ரவேலர்கள் அவருக்கு (இயேசுவுக்கு) நிர்ணயித்த விலை. 10 கர்த்தர் எனக்கு ஆணையிட்டது போல, அந்த முப்பது வெள்ளி நாணயங்களை குயவனின் வயலை வாங்கப் பயன்படுத்தினார்கள்.” [a]
பிலாத்துவின் விசாரணை(C)
11 இயேசு ஆளுநரான பிலாத்துவின் முன்னால் நின்றார். பிலாத்து இயேசுவிடம் பல கேள்விகள் கேட்டான்., “யூதர்களின் இராஜன் நீர்தானா?” என்று கேட்டான்.
அதற்கு இயேசு,, “ஆம், நானே தான்” என்றார்.
12 தலைமை ஆசாரியர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவைக் குற்றம் சுமத்தியபொழுது, அவர் எதுவும் கூறவில்லை.
13 ஆகவே பிலாத்து இயேசுவிடம்,, “இவர்கள் உன்மீது சுமத்திய இத்தனை குற்றச் சாட்டுகளையும் கேட்டாயல்லவா? நீ ஏன் பதில் சொல்லக் கூடாது?” என்றான்.
14 ஆனால், இயேசு பிலாத்துவிற்கு பதில் ஏதும் கூறவில்லை. அதைக்கண்டு பிலாத்து மிகவும் வியப்படைந்தான்.
இயேசுவை விடுவிக்கப் பிலாத்துவின் முயற்சி(D)
15 ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையின் போது சிறையிலிருந்து ஒருவரை ஆளுநர் விடுவிப்பது வழக்கம். மக்கள் விரும்பும் ஒருவரை விடுவிப்பது வழக்கம். 16 அப்பொழுது துன்மார்க்கனான ஒருவன் சிறையிலிருந்தான். அவன் பெயர் பரபாஸ்.
17 பிலாத்துவின் வீட்டிற்கு முன் மக்கள் கூடினார்கள். பிலாத்து மக்களைப் பார்த்து,, “உங்களுக்காக ஒருவனை விடுதலை செய்கிறேன். நீங்கள் யாரை விடுவிக்க விரும்புகிறீர்கள். பரபாஸையா அல்லது கிறிஸ்து எனப்படும் இயேசுவையா?” என்றான். 18 பொறாமை கொண்டே மக்கள் தன்னிடம் இயேசுவை ஒப்படைத்துள்ளார்கள் என்பதை பிலாத்து அறிந்தான்.
19 நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்து பிலாத்து இவற்றைக் கூறினான். அப்பொழுது அவனது மனைவி ஒரு செய்தி அனுப்பினாள். அதில்,, “இயேசுவை எதுவும் செய்யாதீர்கள். அவர் குற்றமற்றவர். இன்று நான் அவரைப்பற்றி ஒரு கனவு கண்டேன். அது என்னை மிகவும் கலங்க வைத்தது” என்றிருந்தது.
20 ஆனால், தலைமை ஆசாரியர்களும் மூத்த யூதத் தலைவர்களும் பரபாஸை விடுதலை செய்யவும் இயேசுவைக் கொல்ல வேண்டுமெனவும் கோரிக்கை வைக்க மக்களைத் தூண்டினார்கள்.
21 பிலாத்து,, “என்னிடம் பரபாசும், இயேசுவும் உள்ளார்கள். யாரை விடுவிக்க நீங்கள் விரும்பு கிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு மக்கள், “பரபாஸ்” என்று சொன்னார்கள்.
22 ,“அப்படியானால் கிறிஸ்து எனப்படும் இயேசுவை என்ன செய்வது?” என்று பிலாத்து கேட்டான்.
, “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று மக்கள் சொன்னார்கள்.
23 ,“அவரை ஏன் கொல்ல விரும்புகிறீர்கள்? அவர் என்ன தவறு செய்தார்?” என்று பிலாத்து மக்களைக் கேட்டான்.
ஆனால் மக்கள் அனைவரும், “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமாய் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
24 மக்களை மாற்றத் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதைப் பிலாத்து கண்டான். மேலும் மக்கள் பொறுமையிழப்பதையும் பிலாத்து கவனித்தான். ஆகவே தண்ணீரை எடுத்து மக்கள் எல்லோரும் காணுமாறு தன் கைகளைக் கழுவினான். பின்பு,, “இவரது மரணத்திற்கு நான் பொறுப்பல்ல. நீங்களே அதைச் செய்கிறீர்கள்” என்று பிலாத்து கூறினான்.
25 ,“அவரது மரணத்திற்கு நாங்களே பொறுப்பு. அவரது மரணத்திற்கான தண்டனையை எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்குமாக நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று மக்கள் அனைவரும் கூறினார்கள்.
26 பின் பிலாத்து பரபாஸை விடுதலை செய்தான். இயேசுவைச் சாட்டையால் அடிக்குமாறு பிலாத்து சில வீரர்களிடம் கூறினான். பிறகு சிலுவையில் அறைந்து கொல்வதற்கு வீரர்களிடம் இயேசுவை ஒப்படைத்தான்.
2008 by World Bible Translation Center