Old/New Testament
தொழுநோயாளியைச் சுத்தப்படுத்துவதற்கான விதிகள்
14 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இவை தொழுநோயாளிகள் குணமாவதற்கும், அவர்களைச் சுத்தப்படுத்துவதற்குமுரிய விதி முறைகளாகும்.
“தொழுநோயுள்ள ஒருவனை ஆசாரியன் சோதித்துப் பார்க்க வேண்டும். 3 ஆசாரியன் கூடாரத்திற்கு வெளியே போய் அவன் நோய் குணமாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். 4 அவனது நோய் குணமாகியிருந்தால் அவனிடம் கீழ்க்கண்டவற்றை செய்யும்படி கூறவேண்டும். முதலில் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டைகளையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வரவேண்டும். 5 பின்னர், ஆசாரியன் அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். 6 அடுத்து ஆசாரியன், உயிருள்ள குருவியையும் அதோடு கேதுரு கட்டையையும் சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து அதில் கொல்லப்பட்டக் குருவியின் இரத்தத்தைத் தோய்க்க வேண்டும். 7 பின் ஆசாரியன் நோய் நீங்கப்பட்டவனின் மேல் ஏழுதரம் தெளித்து அவனைச் சுத்தப்படுத்த வேண்டும். பிறகு ஆசாரியன் அவனைத் தீட்டில்லாதவன் என அறிவிக்க வேண்டும். பின் ஆசாரியன் திறந்த நிலப்பரப்பிற்கு சென்று உயிருள்ள குருவியை விட்டுவிட வேண்டும்.
8 “பிறகு அவன் தன் ஆடைகளை துவைத்து, தன் முடியை மழித்துக்கொண்டு, தண்ணீரில் குளிக்க வேண்டும். பின்னரே அவன் சுத்தமாவான். அதன் பின் அவன் கூடாரத்திற்குள் செல்லலாம். ஆனால் அவன் ஏழு நாட்கள் கூடாரத்திற்கு வெளியிலேயே தங்கவேண்டும். 9 ஏழாவது நாள் அவன் தன் தலை முடி, தாடி, புருவம் என அனைத்து முடியையும் மழித்துவிட வேண்டும். பின் தன் ஆடைகளைத் துவைத்துக் குளிக்க வேண்டும். இதன்பின் அவன் சுத்தமாவான்.
10 “எட்டாவது நாள், எவ்விதமான குறையுமற்ற இரண்டு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு வயதான எக்குறையுமில்லாத பெண் ஆட்டுக்குட்டியையும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவன் தானியக் காணிக்கைக்காக கொண்டு வரவேண்டும். இருபத்து நான்கு கிண்ணங்கள் எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவையும், ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டு வரவேண்டும். 11 அவனை தீட்டில்லாதவன் என்று அறிவித்த அதே ஆசாரியன் நோயுற்றவனையும் அவனது பலிப் பொருட்களையும் கர்த்தருக்கு முன்னால் ஆசரிப்புக் கூடாரத்திற்கு கொண்டு வர வேண்டும். 12 ஆசாரியன் ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை குற்ற பரிகார பலியாக செலுத்த வேண்டும். அவன் அதனையும் சிறிது எண்ணெயையும் அசைவாட்டும் பலியாகப் பயன்படுத்த வேண்டும். 13 பிறகு ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை பாவப் பரிகார பலியையும் தகனபலியையும் கொல்லுகிற பரிசுத்த இடத்தில் கொல்ல வேண்டும். குற்ற நிவாரண பலியானது பாவப்பரிகார பலி போன்றதாகும். அது ஆசாரியனுக்குரியது. அது மிகவும் பரிசுத்தமானது.
14 “ஆசாரியன் குற்ற பரிகார பலியின் இரத்தத்தில் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைச் சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காது நுனியில் தடவ வேண்டும். அது அவனைச் சுத்தமாக்கும். பிறகு கொஞ்சம் இரத்தத்தை அவனது வலது கையின் பெருவிரலிலும், வலதுகால் பெரு விரலிலும் தடவ வேண்டும். 15 மேலும் ஆசாரியன் எண்ணெயை எடுத்து தனது இடது உள்ளங்கையில் ஊற்றி 16 வலது கை விரலில் தொட்டு ஏழுமுறை கர்த்தரின் சந்நிதியில் தெளிக்க வேண்டும். 17 பிறகு ஆசாரியன் தன் உள்ளங்கையில் உள்ள மீதி எண்ணெயை எடுத்து சுத்திகரிக்கப்படவேண்டியவனின் வலது காது நுனியிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவ வேண்டும். 18 மேலும் மீதியுள்ள எண்ணெயை அவனது தலையிலே தடவ வேண்டும். இவ்வாறு, ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அவனைச் சுத்தப்படுத்தி விடுகிறான்.
19 “பின் ஆசாரியன் பாவப்பரிகார பலியைச் செலுத்தி சுத்திகரிக்கப்படவேண்டியவனின் தீட்டு நீங்க அவனுக்குப் பாவப்பரிகாரம் செய்துவிட வேண்டும். 20 பின்பு தகன பலிக்குரிய மிருகத்தைக் கொன்று அதனோடு தானியக் காணிக்கையையும் பலிபீடத்தின்மேல் வைத்து அவனுக்காகப் பாவப்பரிகாரம் செய்ய வேண்டும். அப்போது அவன் சுத்தமாவான்.
21 “ஆனால் ஒரு ஏழையால் இத்தகைய பலியைக் கொடுக்க இயலாது. அப்போது அவன் ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை மட்டும் கொண்டு வந்தால் போதும். அது அசைவாட்டும் பலியாகும். ஆசாரியன் இதன் மூலம் அவனைச் சுத்தப்படுத்தலாம். இதற்கு ஆசாரியன் எண்ணெயுடன் கலந்த மிருதுவான மாவிலே 8 கிண்ணம் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இது தானியக் காணிக்கைக்காக உபயோகப்படுத்தப்படும். 22 இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரு புறாக் குஞ்சுகளையாவது கொடுக்க வேண்டும். இவற்றில் ஒன்று பாவப்பரிகார பலிக்கும் இன்னொன்று தகன பலிக்கும் உரியது.
23 “எட்டாவது நாளில் மேற்கண்ட எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு அவன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் வர வேண்டும். அவை கர்த்தருக்கு முன்பு அளிக்கப்பட வேண்டும். அதனால் அவன் சுத்தமாவான். 24 ஆசாரியன் ஆண் ஆட்டுக்குட்டியைக் குற்றப்பரிகார பலிக்காக எடுத்துக்கொள்வான். இதையும் ஆழாக்கு எண்ணெயையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக செலுத்துவான். 25 பிறகு அந்த ஆண் ஆட்டுக்குட்டியை குற்றப்பரிகார பலிக்காகக் கொல்லுவான். அதன் இரத்தத்தைக் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்பட வேண்டியவனின் வலது காதின் நுனியிலும், வலதுகை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவுவான். 26 ஆசாரியன் தனது இடது உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றிக்கொண்டு 27 பின் வலது கை விரலால் தொட்டு கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிப்பான். 28 மிச்சமிருக்கிற எண்ணெயைத் தொட்டு இரத்தத்தை தடவிய இடங்களில் எல்லாம் தடவுவான். அதனை அவனின் வலது காதின் நுனியிலும், வலது கை பெருவிரலிலும், வலது கால் பெருவிரலிலும் தடவுவான். 29 உள்ளங்கையில் மேலும் மிச்சமிருக்கிற எண்ணெயை அவனது தலையில் தடவுவான். இவ்வாறு ஆசாரியன் அவனை கர்த்தருக்கு முன்பு சுத்தப்படுத்த வேண்டும்.
30 “பிறகு ஆசாரியன் ஒரு காட்டுப் புறாவையாவது, புறாக்குஞ்சையாவது பலியிட வேண்டும். (ஒருவன் எவற்றைக் கொடுக்க முடியுமோ அவற்றையே காணிக்கையாக அளிக்க வேண்டும்.) 31 இவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். தானியக் காணிக்கையோடு இதனைச் சேர்த்துச் செலுத்த வேண்டும். இவ்வாறு ஆசாரியன் அவனை கர்த்தருக்கு முன்பு சுத்திகரிப்பு செய்யவேண்டும். அவனும் சுத்திகரிக்கப்படுவான்” என்றார்.
32 தொழுநோயுற்றவன் குணம் அடைந்தபின் சுத்திகரிப்புச் செய்யவேண்டிய விதிகள் இவையாகும். முறையான பலிகளைத் தரமுடியாதவர்கள் இவ்வாறு சில விதிகளைக் கடைப்பிடிக்கலாம் என்று கூறினார்.
வீட்டில் உள்ள நோய்க்கான விதிகள்
33 மேலும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் பார்த்து, 34 “நான் உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் அங்கு போய்ச் சேர்ந்த பின்பு உங்களில் சிலரது வீட்டிலே தொழுநோய் ஏற்படும்படி செய்தால் 35 அப்போது அந்த வீட்டிற்கு உரியவன் ஆசாரியனிடம் வந்து, ‘என் வீட்டில் தொழுநோய் போன்று ஒன்று இருப்பதைப் பார்த்தேன்’ என்று சொல்ல வேண்டும்.
36 “பிறகு அந்த ஆசாரியன், வீட்டில் உள்ள யாவற்றையும் வெளியே எடுத்துச் செல்ல ஜனங்களிடம் கூறவேண்டும். ஆசாரியன் அந்த வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தீட்டுக்குரியவை என்று சொல்லத் தேவை இருக்காது. வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே வைத்த பிறகுதான் ஆசாரியன் வீட்டிற்குள் நுழைய வேண்டும். 37 ஆசாரியன் அந்த வீட்டிற்குள் நுழைந்து தொழுநோயுள்ள இடங்களைக் கவனித்து பார்க்க வேண்டும். அப்போது சுவரில் கொஞ்சம் பச்சையும், சிவப்புமான குழிகள் சுவற்றின் மற்ற பகுதிகளைவிடப் பள்ளமாக இருப்பதைக் கண்டால், 38 ஆசாரியன் வெளியே வந்து அவ்வீட்டை ஏழு நாட்கள் பூட்டிவைக்க வேண்டும்.
39 “ஏழாம் நாள் ஆசாரியன் திரும்பப் போய், சோதித்துப் பார்க்க வேண்டும். தோஷம் வீட்டுச் சுவர்களில் பரவியிருந்தால் 40 ஆசாரியன் தோஷம் படிந்த கற்களைச் சுவற்றிலிருந்து பெயர்த்தெடுத்துப் பட்டணத்துக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட அசுத்தமான இடத்திலே கொண்டு போய் போடச் சொல்ல வேண்டும். 41 வீட்டினுள்ளே தரையைப் பெயர்த்து, அதையும் வெளியே அசுத்தமான இடத்தில் போட்டுவிட வேண்டும். 42 பிறகு சுவரில் புதிய கற்களை வைத்துப் பூசவேண்டும்.
43 “கற்களைப் பெயர்த்து வீட்டைச் செதுக்கி புதிதாய்ப் பூசின பிறகும் நோய் திரும்பவும் வந்தால், 44 ஆசாரியன் போய் அந்த வீட்டைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த நோய் மேலும் சுவரில் பரவி இருந்தால் அதனை வீட்டை அரிக்கிற தொழுநோயாகக் கருதவேண்டும். அது தீட்டுள்ளதாக இருக்கும். 45 எனவே வீடு முழுவதையும் இடித்து அதன் கற்களையும் மரங்களையும் காரையையும் ஊருக்கு வெளியே அசுத்தமான தனி இடத்தில் கொட்டிவிட வேண்டும். 46 அந்த வீட்டிற்குள் நுழைகிற எவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். 47 அந்த வீட்டில் எவனாவது உண்டாலோ, உறங்கினாலோ, அவனும் தனது ஆடையைத் துவைக்க வேண்டும்.
48 “புதிய கற்களும் பூச்சும் முடிந்தபிறகு அவ்வீட்டை ஆசாரியன் சோதிக்கும்போது நோய் பரவியதற்கான அறிகுறி எதுவும் இல்லாவிட்டால் அவ்வீடு தீட்டு இல்லாததாய் ஆயிற்று என்று அறிவிக்க வேண்டும்.
49 “பிறகு அந்த வீட்டை சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். அதற்கு ஆசாரியன் இரண்டு குருவிகளையும், கேதுரு கட்டையையும், ஒரு துண்டு சிவப்புத் துணியையும், ஈசோப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 50 அதில் ஒரு குருவியை மண்பாண்டத்தில் உள்ள ஊற்று தண்ணீரில் கொல்ல வேண்டும். 51 பிறகு கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பின் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்தில் இவற்றை மூழ்க வைக்க வேண்டும். பிறகு அந்த இரத்தத்தை ஆசாரியன் வீட்டின்மேல் ஏழுதரம் தெளிக்கவேண்டும். 52 குருவியின் இரத்தம், ஊற்று தண்ணீர், உயிருள்ள குருவி, ஈசோப்பு, கேதுருக் கட்டை, சிவப்பு நூல் போன்றவற்றால் வீட்டின் தீட்டினைக் கழிக்க வேண்டும். 53 பின் உயிருள்ள குருவியை நகருக்கு வெளியே விட்டுவிட வேண்டும். இம்முறையில் ஆசாரியன் வீட்டைச் சுத்தம் செய்வான். பிறகு வீடு சுத்தமாகும்” என்று கூறினார்.
54-55 துணிகளிலோ அல்லது வீட்டிலோ தோஷம் பிடித்தல், தொழுநோய், ஆகியன உண்டாகும்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே. 56 வீக்கம், அசறு, தோலில் வெள்ளைப் புள்ளிகள் உண்டாகுதல் ஆகியவற்றின்போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே. 57 பொருட்கள் எப்பொழுது சுத்தமாயுள்ளன, எப்பொழுது சுத்தமற்றவையாக உள்ளன எனக் கற்பிப்பதற்குரிய விதிகள் இவைகளே.
51 இது நடந்தபொழுது, இயேசுவுடன் இருந்த சீஷர்களில் ஒருவன் தன் அரிவாளை எடுத்தான். அச்சீஷன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரனை அரிவாளால் தாக்கி அவனது காதை வெட்டினான்.
52 இயேசு அச்சீஷனைப் பார்த்து,, “அரிவாளை அதன் உறையில் போடு. அரிவாளை எடுப்பவன் அரிவாளாலே சாவான். 53 நான் என் பிதாவைக் கேட்டால் அவர் எனக்கு பன்னிரண்டு தேவ தூதர் படைகளும் அதற்கு அதிகமாகவும் அனுப்புவார் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். 54 ஆனால் இது இப்படியே வேதவாக்கியங்கள் கூறுகிறபடியே நடக்க வேண்டும்” என்றார்.
55 பின்னர் இயேசு தம்மைப் பிடிக்க வந்தவர்கள் அனைவரையும் நோக்கி,, “ஒரு குற்றவாளியைப் போல என்னைப் பிடிக்க அரிவாள் தடிகளுடன் வந்திருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதனை செய்தேன். ஆனால், என்னை அங்கே கைது செய்யவில்லை. 56 தீர்க்கதரிசிகள் எழுதி வைத்துள்ளபடியே இவை அனைத்தும் நடந்துள்ளன” என்று கூறினார். பின்பு இயேசுவின் எல்லா சீஷர்களும் அவரைத் தனியே விட்டு ஓடிப்போனார்கள்.
யூதத் தலைவர்கள் முன் இயேசு(A)
57 இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரை தலைமை ஆசாரியனான காய்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு வேதபாரகர்களும் மற்ற யூதத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். 58 இயேசுவைத் தொடர்ந்து வந்த பேதுரு அவர் அருகில் செல்லவில்லை. பேதுரு இயேசுவைத் தொடர்ந்து தலைமை ஆசாரியனின் வீட்டு முற்றத்தை அடைந்தான். இயேசுவுக்கு என்ன நடக்கும் என்பதைக் காண பேதுரு உள்ளே நுழைந்து காவல்காரர்களுடன் அமர்ந்தான்.
59 தலைமை ஆசாரியனும் யூத ஆலோசனைச் சங்கமும் இயேசுவைக் கொல்ல அவரிடம் ஏதேனும் குற்றம் காண முயற்சித்தார்கள். இயேசு தவறு செய்தார் என சொல்லக்கூடிய மக்களைத் தேட முயற்சித்தார்கள். 60 பலரும் வந்து இயேசுவைப் பற்றிப் பொய்யான செய்திகளைக் கூறினர். ஆனாலும் இயேசுவைக் கொல்லத்தக்க காரணம் எதையும் யூத ஆலோசனைச் சங்கம் காணவில்லை. பிறகு இருவர் வந்து, 61 ,“நான் தேவனின் ஆலயத்தை இடித்து விட்டு மூன்றே நாட்களில் மீண்டும் அதைக் கட்டுவேன் என்று இவன் (இயேசு) கூறினான்” என்றார்கள்.
62 பின் தலைமை ஆசாரியன் எழுந்திருந்து இயேசுவைப் பார்த்து,, “இவர்கள் உமக்கு எதிராக ஆதாரங்களைக் கொடுக்கிறார்கள், இவர்கள், உம்மேல் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உம்மிடம் ஏதும் பதில் உள்ளதா? இவர்கள் கூறுவது உண்மையா?” என்று கேட்டார். 63 ஆனால், இயேசு ஏதும் பதில் கூறவில்லை.
மீண்டும் தலைமை ஆசாரியன் இயேசுவிடம்,, “நான் உன்னை உறுதி மொழிக்கு உட்படுத்துகிறேன். ஜீவனுள்ள தேவனின் வல்லமையின் பெயரால் ஆணையிடுகிறேன். உண்மையைச் சொல் நீயா தேவகுமாரனாகிய கிறிஸ்து?” என்று கேட்டான்.
64 அதற்கு இயேசு,, “ஆம் நான் தான், ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எதிர்காலத்தில் தேவனுடைய வலது பக்கத்தில் மனிதகுமாரன் அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். மேலும் வானத்து மேகங்களின் மீது மனித குமாரன் வருவதைக் காண்பீர்கள்” என்று விடையளித்தார்.
65 இதைக்கேட்ட தலைமை ஆசாரியன் மிகக் கோபமடைந்தான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு,, “இவன் தேவனுக்கு எதிரானவைகளைப் பேசுகிறான். வேறு சாட்சியம் எதுவும் தேவையில்லை. தேவனுக்கு எதிராக இவன் கூறியவற்றை நீங்கள் எல்லோரும் கேட்டீர்கள். 66 நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று சொன்னான்.
யூதர்கள் அனைவரும்,, “இவன் குற்றவாளி. இவன் (இறக்க) மரிக்க வேண்டும்” என்றார்கள்.
67 பின் அங்கிருந்தவர்கள் இயேசுவின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். அவரைத் தங்கள் கையால் அடித்தார்கள். மற்றவர்கள் அவரது கன்னத்தில் அறைந்தார்கள். 68 அவர்கள் இயேசுவைப் பார்த்து,, “நீ தீர்க்கதரிசி என்பதைக் காட்டு. கிறிஸ்துவே, உன்னை அடித்தது யார் என்பதைக் கூறு” என்று கேட்டார்கள்.
பேதுருவின் மறுதலிப்பு(B)
69 அப்பொழுது, முற்றத்தில் அமர்ந்திருந்த பேதுருவிடம் ஒரு வேலைக்காரப்பெண் வந்து,, “கலிலேயாக்காரனான அம்மனிதன் இயேசுவுடன் நீயும் இருந்தாயல்லவா?” எனக் கேட்டாள்.
70 ஆனால் பேதுரு, தான் ஒருபோதும் இயேசுவுடன் இருந்ததில்லை என அங்கிருந்தவர்களிடம் கூறினான். பேதுரு, “நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினான்.
71 பின்பு, முற்றத்தை விட்டுச்சென்ற பேதுருவை, வாயிற்கதவருகில் வேறொரு பெண் பார்த்தாள். அங்கிருந்தவர்களிடம் அப்பெண்,, “நசரேயனாகிய இயேசுவுடன் இருந்தது இவன்தான்” என்று சொன்னாள்.
72 மீண்டும் பேதுரு தான் ஒருபோதும் இயேசுவுடன் இருந்ததில்லை எனக் கூறினான்., “தேவனின் மீது ஆணையாக இம்மனிதன் இயேசுவை எனக்குத் தெரியாது” என பேதுரு கூறினான்.
73 சிறிது நேரம் கழித்து அங்கு நின்றிருந்த சிலர் பேதுருவிடம் சென்று,, “இயேசுவின் சீஷர்களில் நீயும் ஒருவன் என்பது எங்களுக்குத் தெரியும். நீ பேசுவதிலிருந்து எங்களுக்கு அது தெரிகிறது” என்று கூறினார்கள்.
74 பின் சாபமிடத் துவங்கிய பேதுரு,, “தேவன் மேல் ஆணையாக எனக்கு இயேசுவைத் தெரியாது” என்றான். பேதுரு இதைக் கூறிய பின் சேவல் கூவியது. 75 அப்போது, “சேவல் கூவுவதற்குமுன் என்னை உனக்குத் தெரியாது என நீ மூன்று முறை கூறுவாய்” என இயேசு கூறியதைப் பேதுரு ஞாபகப்படுத்திக் கொண்டான். பின்பு வெளியில் சென்ற பேதுரு மிகுந்த மனக் கசப்புடன் அழுதான்.
2008 by World Bible Translation Center