Add parallel Print Page Options

பேதுருவின் மறுதலிப்பு

(மத்தேயு 26:69-75; லூக்கா 22:56-62; யோவான் 18:15-18,25-27)

66 அப்போது பேதுரு வீட்டின் முற்றத்தில் இருந்தான். அம்மாளிகையில் உள்ள வேலைக்காரப் பெண் பேதுருவிடம் வந்தாள். 67 பேதுரு நெருப்பு காய்ந்துகொண்டிருந்தான். அவள் பேதுருவை மிகவும் நெருக்கத்தில் பார்த்தாள்.

“நாசரேத் ஊரானாகிய இயேசுவோடு நீயும் இருந்தாய் அல்லவா?” என்று கேட்டாள் அவள்.

68 ஆனால் பேதுருவோ “நான் இயேசுவோடு இருந்ததே இல்லை” என்று மறுத்தான். மேலும், “நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குத் தெரியவுமில்லை, புரியவுமில்லை” என்று கூறினான். பிறகு பேதுரு விலகி வெளியே வாசல் மண்டபத்துக்குச் சென்றான்.

69 மீண்டும் அந்த வேலைக்காரப் பெண் பேதுருவைக் கவனித்தாள். அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் அவள், “இயேசுவின் சீஷர்களுள் இவனும் ஒருவன்” என்றாள். 70 பேதுரு, மீண்டும் அவள் சொல்வது உண்மையில்லை என்று கூறினான்.

கொஞ்ச நேரம் சென்றதும், பேதுரு அருகில் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பேதுருவிடம், “இயேசுவின் சீஷர்களுள் நீயும் ஒருவன். நீயும் கூட கலிலேயாவில் இருந்து வருகிறவன்” என்றனர்.

71 பேதுரு சபிக்கவும், சத்தியம் பண்ணவும் தொடங்கி, “நான் தேவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீங்கள் பேசுகிற அந்த மனிதனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.

72 பேதுரு இவ்வாறு சொன்னதும் சேவலானது இரண்டாம் முறையாகக் கூவியது. இயேசு சொல்லி இருந்ததைப் பேதுரு நினைத்துப் பார்த்தான். “இன்று இரவு சேவல் இரண்டு முறை கூவுவதற்கு முன்னால் நீ மூன்று முறை என்னை மறுதலிப்பாய்” என்று சொல்லி இருந்தார். இதனால் துயருற்று பேதுரு கதறியழுதான்.

Read full chapter