Add parallel Print Page Options

யூதத் தலைவர்களின் முன் இயேசு

(மத்தேயு 26:57-68; லூக்கா 22:54-55,63-71; யோவான் 18:13-14,19-24)

53 இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைப் பிராதன ஆசாரியனின் வீட்டுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே அனைத்து தலைமை ஆசாரியர்களும் முதிய யூதத்தலைவர்களும் வேதபாரகர்களும் கூடினர். 54 பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றான். ஆனால் இயேசுவை நெருங்கவில்லை. தலைமை ஆசாரியனின் அரண்மனைக்குள் நுழைந்தான். அப்போது சில காவலர்கள் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். பேதுருவும் நெருப்பருகில் சென்றான்.

55 தலைமை ஆசாரியரும், மற்றவர்களும் இயேசுவைக் கொல்லக் குற்றங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். யூத ஆலோசனைச் சங்கத்தினரால் இயேசுவைக் கொல்வதற்குரிய எவ்விதக் குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. 56 பலர் வந்து அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அவை ஒன்றுக்கொன்று ஒத்துப் போகவில்லை.

57 பின்பு சில மக்கள் எழுந்து அவர்மேல் தவறாகக் குற்றம் சாட்டினர். 58 “‘நான் இந்த ஆலயத்தை இடித்துப் போடுவேன். இது மனிதர்களால் கட்டப்பட்டது. நான் வேறு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன். அது மனிதர்களால் கட்டப்படாதது’ என்று இவன் கூற நாங்கள் கேட்டோம்” என்றார்கள். 59 ஆனால் அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஏற்றுக்கொள்ளப்படாமல் போயிற்று.

60 தலைமை ஆசாரியன் அவர்களுக்குமுன் எழுந்து நின்றான். அவன் இயேசுவிடம், “இந்த மக்கள் உமக்கு எதிராகக் கூறுகின்றனர். இவற்றுக்கு உம் பதில் என்ன? இவர்கள் சொல்வது உண்மையா?” என்று கேட்டான். 61 ஆனால் இயேசு எதுவும் கூறவில்லை.

தலைமை ஆசாரியன் இயேசுவிடம், “நீர் கிறிஸ்துவா? ஆசீர்வதிக்கப்பட்ட தேவனின் குமாரனா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டான்.

62 இயேசுவோ, “ஆம். நான் தேவ குமாரன்தான். எதிர்காலத்தில் மனித குமாரன் சர்வ வல்லவரின் வலது பக்கத்தில் இருப்பதைக் காண்பீர்கள். பரலோக இராஜ்யத்தில் மேகங்களின் நடுவே மனித குமாரன் வருவதைப் பார்ப்பீர்கள்” என்றார்.

63 இதைக் கேட்டதும் தலைமை ஆசாரியனுக்குக் கோபம் வந்தது. அவன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, “நமக்கு மேலும் சாட்சிகள் தேவையில்லை. 64 தேவனுக்கு எதிராக இவன் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள். என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அனைத்து மக்களும் இயேசுவைக் குற்றவாளி என்றனர். அவரைக் கொல்லப்பட வேண்டிய குற்றவாளி என்றனர். 65 சிலர் இயேசுவின் மீது காறித்துப்பினார்கள். அவரது கண்களை மூடினர், அவரைக் குட்டினர். “நீ தீர்க்கதரிசி என்பதை எங்களுக்கு நிரூபித்துக் காட்டு” என்று சொன்னார்கள். பிறகு காவற்காரர்கள் இயேசுவை வெளியே கொண்டுபோய் அடித்தனர்.

Read full chapter