Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 12-13

தாவீதிடம் நாத்தான் பேசுகிறான்

12 கர்த்தர் நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதிடம் சென்றான். நாத்தான், “ஒரு நகரத்தில் இரண்டு பேர் இருந்தார்கள். ஒருவன் செல்வந்தன், மற்றவன் ஏழை. செல்வந்தனிடம் ஏராளமான ஆடுகளும் கால்நடைகளும் இருந்தன. ஆனால், ஏழையிடம் அவன் வாங்கிய ஒரு (பெண்) ஆட்டுக்குட்டி மாத்திரம் இருந்தது. அது அந்த ஏழையோடும் அவனது பிள்ளைகளோடும் வளர்ந்து, உணவை உண்டது, ஏழையின் கோப்பையில் அது குடித்தது. ஏழையின் மார்பில் அது தூங்கிற்று. அந்த ஏழைக்கு அது ஒரு மகளைப் போல இருந்தது.

“அந்த வழியாய் வந்த ஒரு பயணி செல்வந்தனைச் சந்திப்பதற்காக இறங்கினான். செல்வந்தன் அவனுக்கு ஒரு விருந்து தர ஏற்பாடு செய்தான். அதற்கென்று அச்செல்வந்தன் தனது ஆடுமாடுகளில் எதையும் தொடாமல் ஏழையின் ஒரே ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதைக் கொன்று விருந்தாளிக்கு உணவாகச் சமைத்தான்” என்றான்.

தாவீது அச்செல்வந்தன் மீது கோபங்கொண்டான். அவன் நாத்தானை நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது நிச்சயமானால், அம்மனிதன் மரிக்க வேண்டும் என்பதும் நிச்சயம்! அவன் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு பணம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவன் இக்கொடிய தீமையைச் செய்தான். ஏனெனில் அவனிடம் இரக்க குணம் எள்ளளவும் இருக்கவில்லை” என்றான்.

நாத்தான் தாவீதிடம் அவன் பாவத்தை கூறுதல்

அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, “நீயே அந்த செல்வந்தன்! இதுவே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது: ‘நான் உன்னை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்தேன். நான் உன்னை சவுலிடமிருந்து மீட்டேன். நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு அரசனாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். ஏன் நீ கர்த்தருடைய கட்டளையை அசட்டை செய்தாய்? அவர் தவறெனக் கூறிய காரியத்தை நீ ஏன் செய்தாய்? உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். நீ, அம்மோனியரின் வாளால் ஏத்தியனாகிய உரியாவைக் கொன்றாய். இந்த விதமாக ஏத்தியானாகிய உரியாவை ஒரு வாளால் கொன்றாய். 10 எனவே வாள் உன் குடும்பத்தை விட்டு அகலாது. நீ ஏத்தியானாகிய உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டாய். இப்படி செய்ததினால் நீ என்னைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டினாய்’.

11 “கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்! 12 நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக [a] பகிரங்கமாக நான் இக்காரியத்தைச் செய்வேன்’ என்றார்” என்றான்.

13 அப்போது தாவீது நாத்தனை நோக்கி, “நான் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தேன்” என்றான்.

நாத்தான் தாவீதை நோக்கி, “கர்த்தர் இந்த பாவத்தை மன்னிப்பார். நீ மரிக்கமாட்டாய். 14 ஆனால் நீ செய்த இந்த பாவத்தின் மூலம் கர்த்தருடைய எதிரிகளும் அவரை வெறுத்தொதுக்க நீ வழிவகுத்துவிட்டாய்! ஆதலால் உனக்குப் பிறக்கும் மகன் மரிப்பான்” என்றான்.

தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த மகனின் மரணம்

15 பின்பு நாத்தான் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் பிறந்த ஆண் குழந்தையை கர்த்தர் பெரும் நோய்க்குள்ளாக்கினார். 16 தாவீது தேவனிடம் குழந்தையின் பொருட்டு வேண்டினான். தாவீது உண்ணவோ, குடிக்கவோ மறுத்தான். வீட்டிற்குள் சென்று அங்கேயே இருந்தான். இரவு முழுவதும் தரையில் கிடந்தான்.

17 தாவீதின் குடும்பத்திலுள்ள மூப்பர்கள் வந்து தரையிலிருந்து அவனை எழுப்ப முயன்றனர். ஆனால் தாவீதோ எழுந்திருக்க மறுத்தான். அந்த மூப்பர்களுடன் அமர்ந்து உண்ண மறுத்தான். 18 ஏழாவது நாள், குழந்தை மரித்தது. தாவீதின் பணியாட்கள் குழந்தை மரித்த செய்தியை தாவீதிடம் சொல்லப் பயந்தனர். அவர்கள், “குழந்தை உயிரோடிருந்தபோது தாவீதோடு பேச முற்பட்டோம். ஆனால் அவர் நாங்கள் சொன்னதைக் கேட்க மறுத்தார். இப்போது குழந்தை மரித்ததென்று தாவீதிடம் சொன்னால், அவர் தனக்குத்தானே தீங்கு ஏதேனும் செய்துக்கொள்ளலாம்” என்றனர்.

19 ஆனால் தாவீது, அவனது பணியாட்கள் மெதுவான குரலில் பேசிக்கொள்வதைப் பார்த்தான். குழந்தை மரித்துப்போனதைப் புரிந்துக்கொண்டான். எனவே தாவீது பணியாட்களை நோக்கி, “குழந்தை மரித்துவிட்டதா?” என்று கேட்டான். பணியாட்கள், “ஆம், அவன் மரித்துப்போனான்” என்றனர்.

20 அப்போது தாவீது தரையிலிருந்து எழுந்து குளித்தான். பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டான். பின்னர் அவன் கர்த்தருடைய வீட்டிற்குள் தொழுதுகொள்ளச் சென்றான். அதன் பின் தன் வீட்டிற்குப் போய் உண்பதற்கு ஏதாவது வேண்டுமெனக் கேட்டான். அவனது வேலைக்காரர்கள் கொடுத்த உணவை உண்டான்.

21 தாவீதின் வேலையாட்கள் அவனிடம், “நீர் ஏன் இப்படிச் செய்கிறீர்? குழந்தை உயிருடன் இருந்தபோது உண்ண மறுத்து அழுதீர்? ஆனால் அது மரித்த பின்பு, எழுந்து புசித்தீரே?” என்று கேட்டனர்.

22 தாவீது, “குழந்தை உயிரோடிருந்தபோது, நான் உணவுண்ண மறுத்து அழுதேன். ஏனெனில், ‘யாருக்குத் தெரியும்? கர்த்தர் எனக்காக இரக்கங்கொண்டு குழந்தையின் உயிரை அனுமதிக்கக்கூடும்’ என நான் எண்ணினேன். 23 இப்போது குழந்தை மரித்துப்போனது, நான் உண்ண மறுத்து பயன் என்ன? அதனால் குழந்தையை உயிருடன் கொண்டுவர முடியுமா? முடியாது! ஒரு நாள் நானும் அவனிடம் செல்வேன், ஆனால் அவனோ என்னிடம் வரமுடியாது” என்றான்.

சாலொமோன் பிறப்பு

24 பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் கூறினான். அவன் அவளோடு பாலின உறவுக்கொண்டான். பத்சேபாள் மீண்டும் கருவுற்றாள். அவளுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறந்தது. தாவீது அவனுக்கு சாலொமோன் என்று பெயரிட்டான். கர்த்தர் சாலொமோனை நேசித்தார். 25 கர்த்தர், தீர்க்கதரிசியாகிய நாத்தான் மூலமாக சொல்லியனுப்பி சாலொமோனுக்கு யெதிதியா என்று பெயரிட்டார். நாத்தான் கர்த்தருக்காக இதைச் செய்தான்.

தாவீது ரப்பாவைக் கைப்பற்றுகிறான்

26 ரப்பா அம்மோனியாவின் தலைநகரமாயிருந்தது. அம்மோனியரின் ரப்பாவுக்கு எதிராக யோவாப் போரிட்டான். அவன் அந்நகரைக் கைப்பற்றினான். 27 யோவாப் தாவீதிடம் தூதுவர்களை அனுப்பி, “நான் ரப்பாவுக்கு எதிராகப் போர் செய்தேன். நீர்நிலைகளின் நகரத்தை நான் கைப்பற்றினேன். 28 இப்போது பிறரையும் அழைத்து வந்து இந்நகரைத் (ரப்பாவை) தாக்குங்கள். நான் கைப்பற்றும் முன்பு இந்நகரைக் கைப்பற்றுங்கள். நான் இந்நகரைக் கைப்பற்றினால் அது என் பெயரால் அழைக்கப்படும்” என்று கூறினான்.

29 பின்பு தாவீது எல்லோரையும் அழைத்துக்கொண்டு ரப்பாவுக்குப் போனான். அவன் ரப்பாவுக்கு எதிராகப் போர்செய்து அந்நகரைக் கைப்பற்றினான். 30 அந்த அரசனின் தலையிலிருந்த கிரீடத்தை [b] தாவீது அகற்றினான். அக்கிரீடம் பொன்னாலானது. 75 பவுண்டு எடையுள்ளது. அக்கிரீடத்தில் விலையுயர்ந்த கற்கள் இருந்தன. அக்கீரிடத்தை தாவீதுக்கு சூட்டினார்கள். அந்நகரிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை தாவீது எடுத்துச் சென்றான்.

31 ரப்பாவின் ஜனங்களை தாவீதின் நகருக்கு வெளியே அழைத்துவந்தான். இரம்பம், கடப்பாரை, இரும்புக்கோடரி ஆகியவற்றைப் பயன்படுத்தும் வேலையை அவர்கள் செய்யும்படி தாவீது கூறினான். செங்கற்களால் கட்டிடம் கட்டும் வேலையைச் செய்யும்படியாகவும் தாவீது அவர்களை வற்புறுத்தினான். அம்மோனியரின் நகரங்கள் அனைத்திலும் தாவீது இதனையே செய்தான். பின்பு தாவீதும் அவனது படையினரும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர்.

அம்னோனும் தாமாரும்

13 தாவீதுக்கு அப்சலோம் என்னும் பெயருள்ள மகன் இருந்தான். அப்சலோமின் சகோதரியின் பெயர் தாமார் ஆகும். தாமார் மிகுந்த அழகுடையவள். தாவீதின் மற்றொரு மகனாகிய அம்னோன் தாமாரை விரும்பினான். தாமார் ஒரு கன்னிகை. அவளுக்கு எந்தத் தீமையையும் விளைவிக்க அம்னோன் நினைக்கவில்லை. எனினும் அவன் அவளை அதிகமாக நேசித்தான். நோயுறுமளவிற்கு அம்னோன் அவள் நினைவானான்.

சிமியாவின் மகனாகிய யோனதாப் அம்னோனின் நெருங்கிய நண்பன். (சிமியா தாவீதின் சகோதரன்) யோனதாப் மிகவும் புத்திசாலி. யோனதாப் அம்னோனை நோக்கி, “நாளுக்கு நாள் நீ மெலிந்துக்கொண்டே வருகிறாய். நீ அரசனின் மகன்! உனக்கு உண்பதற்கு ஏராளமான பொருட்கள் இருந்தும், நீ ஏன் எடை குறைந்து காணப்படுகிறாய்? சொல்!” என்றான்.

அம்னோன் யோனதாபை நோக்கி, “நான் தாமாரை மிகவும் விரும்புகிறேன். அவள் எனது ஒன்று-விட்ட-சகோதரன் அப்சலோமின் சகோதரி” என்றான்.

யோனதாப் அம்னோனை நோக்கி, “படுக்கைக்குப் போ. நோயுற்றவன் போல் நடி. உன் தந்தை உன்னைக் காணவருவார். அவரிடம், ‘எனது சகோதரியாகிய தாமார் வந்து எனக்கு உணவு தரட்டும். அவள் என் முன்னே உணவு சமைக்கட்டும். அப்போது அதை நான் பார்த்து அவள் கையால் புசிப்பேன்’ என்று சொல்” என்றான்.

அவ்வாறே அம்னோன் படுக்கையில் படுத்து நோயுற்றவன்போல் நடித்தான். தாவீது அரசன் அம்னோனைப் பார்க்க வந்தான். அம்னோன் தாவீது அரசனிடம், “தயவு செய்து எனது சகோதரி தாமாரை உள்ளே வரச்செல்லுங்கள். அவள் என் முன்னே எனக்காக இரண்டு அப்பங்கள் சுட்டுதரட்டும். அப்போது அவள் கையால் ஊட்ட அவற்றை புசிப்பேன்” என்றான்.

தாவீது தாமாரின் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். செய்தி சொல்ல வந்த ஆட்கள் தாமாரிடம், “உனது சகோதரன் அம்னோன் வீட்டிற்குச் சென்று அவனுக்காக கொஞ்சம் உணவைத் தயாரித்துக் கொடு” என்றார்கள்.

தாமார் அம்னோனுக்காக உணவு தயாரித்தல்

எனவே தாமார் தன் சகோதரனாகிய அம்னோனின் வீட்டிற்குச் சென்றாள். அம்னோன் படுக்கையில் இருந்தான். தாமார் மாவை எடுத்து தன் கைகளால் பிசைந்து, அப்பங்களைச் சுட்டாள். அம்னோன் எதிரிலேயே இதனைச் செய்தாள். சமையல் பாத்திரத்திலிருந்து அவற்றை எடுத்து, அம்னோன் உண்பதற்காகப் பரிமாறினாள். ஆனால் அம்னோன் சாப்பிட மறுத்தான். அம்னோன் தன் வேலையாட்களை நோக்கி, “இங்கிருந்து போங்கள், என்னைத் தனிமையில் இருக்கவிடுங்கள்!” என்றான். எனவே எல்லா வேலையாட்களும் அறையை விட்டு வெளியே சென்றனர்.

அம்னோன் தாமாரைக் கற்பழித்தல்

10 அப்போது அம்னோன் தாமாரிடம், “உணவைப் படுக்கையறைக்குள் கொண்டு வந்து உனது கைகளால் எனக்கு உணவூட்டு” என்றான்.

எனவே தாமார் தான் தயாரித்த அப்பங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரனின் படுக்கையறைக்குள் சென்றாள். 11 அவள் அம்னோனுக்கு அவ்வுணவைக் கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ அவளை கையைப் பிடித்திழுத்து அவளிடம், “சகோதரியே, நீ என்னோடு சேர்ந்து படுத்துக்கொள்” என்றான்.

12 தாமார் அம்னோனிடம், “சகோதரனே, வேண்டாம்! அவ்வாறு செய்ய என்னை வற்புறுத்தாதே! அவமானமான இக்காரியத்தைச் செய்யாதே! இஸ்ரவேலில் இந்த கொடிய காரியம் நடக்கக்கூடாது! 13 நான் எனக்கு நேரும் அவமானத்திலிருந்து ஒருபோதும் மீளமுடியாது. நீ ஒரு பயங்கர குற்றவாளி என்று ஜனங்கள் கவனிப்பார்கள். தயவுசெய்து, அரசனோடு பேசு. என்னை நீ மணம் செய்துக்கொள்ள அவர் அனுமதியளிப்பார்” என்றாள்.

14 ஆனால் அம்னோன், தாமார் சொன்னதைக் கேட்க மறுத்தான். அவன் தாமாரைக் காட்டிலும் பலசாலி. அம்னோன் தாமாரை பாலின உறவுகொள்ளும்படி கட்டாயப்படுத்தி அவளை பலவந்தமாய் கற்பழித்தான். 15 பின்பு அம்னோன் தாமாரை வெறுக்க ஆரம்பித்தான். அவளை முன்பு விரும்பினதற்கு அதிகமாக அவளை வெறுக்க ஆரம்பித்தான். அம்னோன் தாமாரை நோக்கி, “எழுந்து இங்கிருந்து போ!” என்றான்.

16 தாமார் அம்னோனிடம், “இப்படி என்னை அனுப்பிவிடாதே. முன்பு நிகழ்ந்ததைக் காட்டிலும் அது தீமையானதாக இருக்கும்” என்றாள்.

ஆனால் அம்னோன், தாமார் சொல்வதைக் கேட்க மறுத்தான். 17 அம்னோன் தன் வேலையாளை அழைத்து, “இப்பெண்ணை இந்த அறைக்கு வெளியே கொண்டு செல்லுங்கள். பின்பு அவளுக்குப் பிறகு கதவை தாழ்ப்பாளிடுங்கள்” என்றான்.

18 அவ்வாறே அம்னோனின் வேலைக்காரன் தாமாரை அறைக்கு வெளியே நடத்தி, கதவைத் தாழிட்டான்.

தாமார் பலநிறங்களுள்ள ஒரு நீண்ட அங்கி அணிந்திருந்தாள். அரசனின் கன்னிப் பெண்கள் (மகள்கள்) இத்தகைய நீண்ட பலவர்ண அங்கி அணிவது வழக்கமாக இருந்தது. 19 தாமார் பலவர்ண அங்கியைக் கிழித்துக்கொண்டு, தலையின் மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டாள். பின் அவள் தனது கையைத் தலையில் வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

20 அப்போது தாமாரின் சகோதரன் அப்சலோம் அவளை நோக்கி, “நீ உனது சகோதரன் அம்னோனிடம் சென்றாயா? அவன் உன்னைத் துன்புறுத்தினானா? அமைதியாக இரு, அம்னோன் உனது சகோதரன். நாங்கள் இது குறித்து கவனித்துக்கொள்வோம். அதிகமாக உன் மனதை வருத்தாதே” என்றான். தாமார் எதுவும் சொல்லவில்லை. அவள் அமைதியாக அப்சலோமின் வீட்டில் தங்கும்படி சென்றாள்.

21 தாவீது அரசன் இச்செய்தியைக் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபப்பட்டான். 22 அப்சலோம் அம்னோனை வெறுத்தான். அப்சலோம் அம்னோனிடம் நல்லதோ கெட்டதோ ஒரு வார்த்தையும் பேசவில்லை, தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்ததால், அப்சலோம் அம்னோனை வெறுத்தான்.

அப்சலோம் பழிவாங்குதல்

23 இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அப்சலோமின் ஆடுகளிலிருந்து உரோமத்தைக் கத்தரிக்க பாகால்சோரிலிருந்து சிலரை வரவழைத்தான். அதைப் பார்ப்பதற்கென்று அரசனின் எல்லாப் பிள்ளைகளையும் அப்சலோம் அழைத்தான். 24 அப்சலோம் அரசனிடம் போய், “எனது ஆடுகளின் மயிரைக் கத்தரிக்க சிலர் வந்துள்ளனர். உங்கள் வேலையாட்களோடும் வந்து அதைப் பாருங்கள்” என்றான்.

25 தாவீது அரசன் அப்சலோமிடம், “இல்லை மகனே, நாங்கள் எல்லோரும் வரமாட்டோம். உனக்கு அதிகம் தொல்லையாக இருக்கும்” என்றான்.

தாவீதை வரும்படி அப்சலோம் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். ஆனால் தாவீது வரவில்லை, ஆனாலும் தன் ஆசிகளை அவனுக்கு வழங்கினான்.

26 அப்சலோம், “நீங்கள் வர விரும்பாவிட்டால் எனது சகோதரன் அம்னோனை என்னோடு அனுப்புங்கள்” என்றான்.

தாவீது அரசன் அப்சலோமிடம், “அவன் ஏன் உன்னோடு வரவேண்டும்?” என்று கேட்டான்.

27 அப்சலோம் தாவீதை கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தான். எனவே இறுதியாக, அம்னோனும், அரசனின் மற்ற மகன்களும் அப்சலோமோடு சென்றனர்.

அம்னோன் கொலைச் செய்யப்படுகிறான்

28 பின்பு, அப்சலோம் தன் வேலையாட்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான். “அம்னோனை கவனித்துக்கொண்டிருங்கள். அவன் குடிக்க ஆரம்பித்து திராட்சைரசப் போதையில் ஆழ்ந்திருக்கும்போது, நான் உங்களுக்குக் கட்டளையிடுவேன். நீங்கள் அம்னோனைத் தாக்கி அவனைக் கொல்லுங்கள். தண்டனை நேரும் என்று அஞ்சாதீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எனது கட்டளைக்குப் பணிகிறீர்கள். இப்போது, துணிவும் வீரமும் உடையவர்களாய் இருங்கள்” என்றான்.

29 ஆகையால் அப்சலோமின் இளம் வீரர்கள் அவன் கூறியபடியே செய்தார்கள். அவர்கள் அம்னோனைக் கொன்றார்கள். ஆனால் தாவீதின் பிற மகன்கள் தப்பிப் பிழைத்தார்கள். ஒவ்வொரு மகனும் தன் கோவேறு கழுதையின் மேலேறித் தப்பிச் சென்றான்.

தாவீதுக்கு அம்னோனின் மரணச் செய்தி

30 அரசனின் மகன்கள் தங்கள் நகரத்தை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தனர். ஆனால் நிகழ்ந்தவற்றைப் பற்றிய செய்தியை தாவீது அரசன் முந்திக் கேள்விப்பட்டான். ஆனால் அவனறிந்தச் செய்தி, “அரசனின் எல்லா மகன்களையும் அப்சலோம் கொன்றுவிட்டான். ஒருவன் கூட உயிரோடு விடப்படவில்லை” என்பதாகும்.

31 தாவீது அரசன் தனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டு தரையில் கிடந்தான். அவனருகே நின்றுக்கொண்டிருந்த அதிகாரிகளும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டனர்.

32 ஆனால் தாவீதின் சகோதரனும், சிமியாவின் மகனுமாகிய யோனதாப், “அரசனின் எல்லா மகன்களும் கொல்லப்பட்டார்கள் என்று நினைக்கவேண்டாம்! அம்னோன் மட்டுமே மரித்தான். அப்சலோமின் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்ததிலிருந்து அப்சலோம் இதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். 33 எனது ஆண்டவனாகிய அரசரே, உங்கள் எல்லா மகன்களும் மரித்துவிட்டனர் என்று நினைக்கவேண்டாம். அம்னோன் மட்டுமே மரித்தான்” என்றான்.

34 அப்சலோம் ஓடிப்போய்விட்டான். நகரகோட்டைச் சுவரின் மீது ஒரு காவலாள் நின்றுக்கொண்டிருந்தான். மலை மேட்டிலிருந்து பலர் வந்துக்கொண்டிருப்பதை அவன் கவனித்தான். 35 எனவே யோனதாப் தாவீது அரசனை நோக்கி, “பாருங்கள், நான் சொன்னது சரியே! அரசனின் மகன்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான்.

36 யோனதாப் அவ்வாறு கூறி முடித்ததும், அரசனின் மகன்கள் வந்து சேந்தனர். அவர்கள் சத்தமாக அழுதுக்கொண்டிருந்தனர். தாவீதும் அவனது அதிகாரிகளும் அழ ஆரம்பித்தனர். அவர்கள் மிகவும் புலம்பி அழுதனர். 37 தாவீது தனது மகனுக்காக (அம்னோனுக்காக) தினசரி அழுதான்.

அப்சலோம் கேசூருக்குத் தப்பிச் செல்லுதல்

அப்சலோம் அம்மியூதின் மகனாகிய தல்மாய் என்னும் கேசூரின் அரசனிடம் ஓடிப் போனான். 38 அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போன பிறகு, அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான். 39 தாவீது அரசன் அம்னோனின் மரணத்திற்குப் பின், ஆறுதல் பெற்றான். ஆனால் அப்சலோமின் பிரிவு அவனை மிகவும் வாட்டியது.

லூக்கா 16

உண்மையான செல்வம்

16 இயேசு அவரது சீஷரை நோக்கி, “ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். வியாபாரத்தைக் கவனிக்கும்பொருட்டு அவனிடம் ஓர் அதிகாரி இருந்தான். அந்த அதிகாரி ஏமாற்றுவதாக அச்செல்வந்தனுக்குப் புகார்கள் வந்தன. எனவே அந்த அதிகாரியை அழைத்து அவனை நோக்கி, ‘உன்னைக் குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக இருக்க முடியாது’ என்றான்.

“பின்னர் அந்த அதிகாரி தனக்குள்ளேயே, ‘நான் என்ன செய்வேன். என் எஜமானர் என்னை வேலையில் இருந்து அகற்றிவிட்டார். குழிகளைத் தோண்டுமளவு வலிமை என்னிடம் இல்லை. பிச்சை எடுக்க வெட்கப்படுகிறேன். நான் என்ன செய்யவேண்டுமென எனக்குத் தெரியும். நான் வேலையை இழக்கும்போது பிற மக்கள் தம் வீட்டுக்குள் என்னை வரவேற்கும்படியான ஒரு செயலை நான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தான்.

“எனவே, அந்த அதிகாரி எஜமானனுக்குக் கடன் தர வேண்டியவர்களை அழைத்தான். முதலாமவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ கொடுக்கவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரி அவனிடம், ‘இதோ உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து ஐம்பது குடம் என்று எழுது’ என்றான்.

“பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி அவனிடம், ‘இதோ உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எண்பது மரக்கால் என்று எழுது’ என்றான்.

“பின்னர் எஜமானன் நம்பிக்கைக்குத் தகுதியற்ற அந்த அதிகாரியை அவன் திறமையாகச் செய்ததாகப் பாராட்டினான். ஆம், உலகத்திற்குரிய மனிதர் தங்கள் காலத்து மக்களோடு வியாபாரத்தில், ஆவிக்குரிய மனிதர்களைக் காட்டிலும் திறமையானவர்களாகக் காணப்படுகிறார்கள்.

“நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனிடம் நட்பைக் காப்பாற்றும்பொருட்டு இந்த உலகத்தில் உனக்குரிய பொருட்களை எல்லாம் பயன்படுத்து. அந்தப் பொருட்கள் எல்லாம் அழிந்த பின்னர் என்றும் நிலைத்திருக்கிற வீட்டில் நீ வரவேற்கப்படுவாய். 10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். 11 உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள். 12 யாராவது ஒருவருக்குரிய பொருட்களில் உங்களை நம்பமுடியாவிட்டால் உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது.

13 “ஒரே நேரத்தில் இரு எஜமானர்களுக்குப் பணிபுரிய எந்த வேலைக்காரனாலும் முடியாது. அந்த வேலைக்காரன் ஒரு எஜமானனை வெறுத்து, மற்ற எஜமானனை நேசிப்பான். அல்லது அவன் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரியவனாக நடந்துகொண்டு மற்றவனிடம் வேறு முறையில் நடந்து கொள்வான். தேவனுக்கும், பணத்துக்கும் ஒருங்கே சேவை செய்ய உங்களால் இயலாது” என்றார்.

தேவ வாக்கியங்கள் மாறாதவை(A)

14 பரிசேயர்கள் இச்செய்திகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பணத்தை நேசித்ததால் இயேசுவை விமர்சித்தார்கள். 15 இயேசு பரிசேயர்களை நோக்கி, “மக்களின் முன்பாக நீங்கள் நல்லவர்களாக நடந்துகொள்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே என்ன இருக்கிறதென தேவன் அறிவார். மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்கள் தேவனின் வெறுப்புக்கு உரியவை ஆகின்றன.

16 “மோசேயின் சட்டத்திற்கிணங்கவும், தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களுக்கேற்பவும் மக்கள் வாழ்வதை தேவன் விரும்பினார். ஆனால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகன் காலம் தொடங்கி, தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சொல்லப்பட்டு வருகிறது. தேவனுடைய இராஜ்யத்தில் செல்வதற்குப் பலர் மிகவும் முயன்று வருகிறார்கள். 17 வேதவாக்கியங்களில் காணப்படுகிற ஒரு எழுத்தின் ஒரு சிறிய பகுதியைக் கூட மாற்ற முடியாது. அதைக் காட்டிலும் வானமும் பூமியும் அழிந்துபோவதே எளிதாக இருக்கும்.”

விவாகரத்தும் மறுமணமும்

18 “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்து, இன்னொரு பெண்ணை மணந்துகொண்டால் அவன் விபசாரம் என்னும் பாவத்தைச் செய்தவன் ஆவான். விவாகரத்துக்கு உட்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொள்பவனும் தீய விபசாரம் என்னும் குற்றத்திற்கு உட்பட்டவன் ஆவான்” என்றார்.

செல்வந்தனும் லாசருவும்

19 “விலையுயர்ந்த ஆடைகளை எப்போதும் அணிந்துகொண்டிருந்த ஒரு செல்வந்தன் இருந்தான். ஒவ்வொரு நாளும் விருந்துண்டு களிக்கும் அளவுக்கு மிகுந்த செல்வந்தனாக இருந்தான். 20 லாசரு என்று அழைக்கப்பட்ட மிகவும் ஏழையான மனிதனும் இருந்தான். லாசருவின் சரீரம் முழுவதும் புண்ணாக இருந்தது. செல்வந்தனின் வீட்டு வாசலருகே லாசரு அடிக்கடி படுத்துக்கிடப்பான். 21 செல்வந்தனின் மேசையில் மீதியாக விடப்பட்ட உணவுத் துணுக்குகளை உண்பதற்கு அவன் விரும்பினான். நாய்கள் வந்து அவனது புண்களை நக்கின.

22 “பின்னர் லாசரு இறந்தான். தேவதூதர்கள் லாசருவை எடுத்துச்சென்று ஆபிரகாமின் மடியில் வைத்தனர். செல்வந்தனும் இறந்து அடக்கம் செய்யப்பட்டான். 23 அவன் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டு மிகுந்த வேதனையை அனுபவித்தான். தொலைவிலேயே ஆபிரகாம் தன் மடியில் லாசருவை ஏந்திக்கொண்டிருப்பதைச் செல்வந்தன் பார்த்தான். 24 அவன், ‘தந்தை ஆபிரகாமே! என்னிடம் இரக்கம் காட்டுங்கள். அவனது விரலைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிர்விக்குமாறு லாசருவை என்னிடம் அனுப்புங்கள். இந்த நெருப்பில் நான் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சத்தமிட்டுக் கூறினான்.

25 “ஆனால் ஆபிரகாம், ‘எனது மகனே! நீ உலகில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்துகொள். வாழ்வின் நல்ல பொருட்கள் அனைத்தும் உனக்கிருந்தன. லாசருவிற்கு எல்லாத் தீமைகளும் நேர்ந்தன. இப்போது அவனுக்கு இங்கு ஆறுதல் கிடைக்கிறது. நீயோ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய். 26 மேலும் உனக்கும், எங்களுக்கும் மத்தியில் ஒரு பெரிய பிளவு உள்ளது. உனக்கு உதவுவதற்காக யாரும் இங்கிருந்து அங்கு கடந்து வரமுடியாது’ என்றான்.

27 “செல்வந்தன், ‘அப்படியானால் தயவுசெய்து பூமியில் இருக்கும் என் தந்தையின் வீட்டுக்கு லாசருவை அனுப்புங்கள். 28 எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். கொடுமை மிகுந்த இந்த இடத்துக்கு அவர்கள் வராதபடிக்கு லாசரு எனது சகோதரர்களை எச்சரிக்கட்டும்’ என்றான்.

29 “ஆனால் ஆபிரகாம், ‘அவர்கள் படிப்பதற்கு மோசேயின் சட்டங்களும் தீர்க்கதரிசிகளின் நூல்களும் உள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளட்டும்’ என்றான்.

30 “ஆனால் செல்வந்தன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே! இறந்தோரிலிருந்து ஒருவன் சென்று கூறினால், அவர்கள் நம்பிக்கை கொண்டு தம் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்வார்கள்’ என்றான்.

31 “ஆனால் ஆபிரகாம் அவனை நோக்கி, ‘இல்லை! உனது சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி சாய்க்கவில்லை என்றால், இறந்தோரில் இருந்து வருகின்ற ஒருவன் கூறுவதையும் கேட்கமாட்டார்கள்’ என்றான்” என இயேசு கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center