Print Page Options
Previous Prev Day Next DayNext

Old/New Testament

Each day includes a passage from both the Old Testament and New Testament.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ரூத் 1-4

யூதாவில் பஞ்சம்

நியாயதிபதிகளின் ஆட்சிக்காலத்தில், உண்ணக்கூட போதுமான உணவில்லாத மோசமான ஒரு பஞ்சம் யூதா நாட்டில் ஏற்பட்டது. அப்போது யூதாவிலுள்ள பெத்லெகேமை விட்டு, எலிமெலேக்கு என்பவன் தனது மனைவியுடனும், இரண்டு மகன்களுடனும் மலைநாடான மோவாபுக்குச் சென்றான். அவனது மனைவியின் பெயர் நகோமி. அவனது இரண்டு மகன்களின் பெயர்களும் மக்லோன், கிலியோன் என்பவை ஆகும். இவர்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமில் எப்பிராத்தியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இக்குடும்பமானது மலை நாடான மோவாபுக்கு சென்று அங்கேயே தங்கியது.

பின்னர், நகோமியின் கணவனான எலிமெலேக்கு மரித்துப் போனான். எனவே நகோமியும் அவளது இரண்டு மகன்களும் மட்டுமே மீந்திருந்தார்கள். அவளது மகன்கள் மோவாப் நாட்டிலுள்ள பெண்களை மணந்துகொண்டனர். ஒருவனின் மனைவி பெயர் ஓர்பாள், இன்னொருவனின் மனைவி பெயர் ரூத். அவர்கள் அங்கே 10 ஆண்டுகள் வாழ்ந்தனர். பின், மக்லோனும் கிலியோனும் கூட மரித்துவிட்டனர். அதன்பின் கணவனும், மகன்களும் இல்லாமல் நகோமி தனித்தவளானாள்.

நகோமி வீட்டிற்குத் திரும்பிப் போகுதல்

மலைநாடான மோவாப்பில் நகோமி வாழ்ந்துகொண்டிருக்கும்போது, கர்த்தர் யூதாவில் தன் ஜனங்களுக்கு உணவு கொடுத்தார் என்று அறிந்தாள். எனவே நகோமியும் மலைநாடான மோவாபை விட்டுத் தன் சொந்த நாட்டிற்குப் போக முடிவு செய்தாள். அவளது மருமகள்களும் அவளோடு புறப்பட்டனர். அவர்கள் தாம் வாழ்ந்த இடத்தை விட்டுவிட்டு யூதா நாட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

அப்போது நகோமி தன் மருமகள்களிடம், “நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டுக்கேத் திரும்பிச் செல்லவேண்டும். நீங்கள் என்னோடும், மரித்துப்போன எனது மகன்களோடும் மிக அன்பாக இருந்தீர்கள். எனவே கர்த்தரும் உங்களிடம் கருணை காட்டுமாறு வேண்டிக்கொள்வேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல கணவனும், வீடும் கிடைக்கவேண்டுமென்று நான் வேண்டுவேன்” என்றாள். நகோமி அவர்களை முத்தமிட்டபோது, அவர்கள் அழ ஆரம்பித்தனர்.

10 பிறகு அவர்கள், “நாங்கள் உம்மோடு வர விரும்புகிறோம். உம்முடைய குடும்பத்தில் சேரவே விரும்புகிறோம்” என்றனர்.

11 ஆனால் நகோமி, “வேண்டாம் மகள்களே, உங்கள் தாய் வீட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்னோடு ஏன் வரவேண்டும்? என்னால் உங்களுக்கு உதவமுடியாது. உங்களோடு கணவனாக வாழவேறு மகன்களும் என்னிடம் இல்லை. 12 உங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்! ஒரு புதிய கணவனைப் பெறமுடியாத அளவிற்கு நானும் முதியவளாகிவிட்டேன். நான் மீண்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாலும், உங்களுக்கு உதவமுடியாது. இன்று இரவே நான் கர்ப்பமாகி இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றாலும் அது உங்களுக்கு உதவாது. 13 ஏனென்றால் அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை நீங்கள் காத்திருக்கவேண்டும். நான் அவ்வளவு காலம் உங்களைக் காக்கவைக்கக் கூடாது. அது எனக்கு மிகவும் துக்கத்தைத் தரும்! எனக்காக கர்த்தர் செய்த பல காரியத்துக்காக நான் ஏற்கெனவே துக்கமாக இருக்கிறேன்!” என்றாள்.

14 எனவே, அந்தப் பெண்கள் மேலும் அழுதனர். பிறகு ஓர்பாள் நகோமிக்கு முத்தமிட்டு விட்டு விலகிப் போனாள். ஆனால் ரூத் அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு அவளோடு தங்கிவிட்டாள்.

15 நகோமியோ அவளிடம், “பார், உனது சகோதரி தனது சொந்த ஜனங்களிடமும் தெய்வங்களிடமும் சென்றாள். எனவே, நீயும் அவளைப் போன்றே நடந்துகொள்ள வேண்டும்” என்றாள்.

16 ஆனால் ரூத், “உம்மைவிட்டு விலகும்படி என்னை வற்புறுத்த வேண்டாம்! என் சொந்தக்காரர்களிடம் திரும்பிப் போகுமாறு என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். என்னை உம்மோடு வரவிடும். நீர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நானும் உம்மோடு வருவேன். நீர் உறங்கும் இடத்திலேயே நானும் உம்மோடு உறங்குவேன். உம் ஜனங்களே என் ஜனங்கள். உம்முடைய தேவனே என் தேவன். 17 நீர் மரிக்கும் இடத்திலேயே நானும் மரிப்பேன். அதே இடத்தில்தான் நான் அடக்கம் பண்ணப்பட வேண்டும். நான் இந்த வாக்குறுதியைக் காப்பாற்றாவிட்டால் என்னைத் தண்டிக்கும்படி கர்த்தரிடம் கேட்டுக்கொள்வேன்: மரணம் ஒன்றுதான் நம்மைப் பிரிக்கும்” என்றாள்.

வீட்டிற்குத் திரும்புதல்

18 ரூத் தன்னோடு வர மிகவும் விரும்புவதை நகோமி அறிந்துக்கொண்டாள். எனவே நகோமி அவளோடு விவாதம் செய்வதை நிறுத்திவிட்டாள். 19 நகோமியும், ரூத்தும் பெத்லெகேம்வரை பயணம் செய்தனர். அவர்கள் பெத்லெகேமிற்குள் நுழைந்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள், “இது நகோமியா?” என்று கேட்டார்கள்.

20 ஆனால் நகோமியோ ஜனங்களிடம், “என்னை நகோமி என்று அழைக்காதீர்கள், மாராள் என்று அழையுங்கள். ஏனென்றால் எனது வாழ்க்கையை சர்வ வல்லமையுள்ள தேவன் துக்கம் நிறைந்ததாக்கிவிட்டார். 21 நான் இங்கிருந்து போகும்போது எனக்கு விருப்பமான அனைத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் இப்போது நான் வெறுமையானவளாகும்படி கர்த்தர் செய்துவிட்டார். என்னைத் துக்கமுள்ளவளாகும்படி கர்த்தர் செய்தபிறகு, ஏன் என்னை நகோமி (மகிழ்ச்சி) என்று அழைக்கிறீர்கள்? சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்துவிட்டார்” என்றாள்.

22 இவ்வாறு நகோமியும் அவளது மருமகளான ரூத்தும் மலைநாடான மோவாபிலிருந்து திரும்பி வந்தனர். இரண்டு பெண்களும் பெத்லெகேம் வந்தபோது, யூதாவில் வாற்கோதுமை அறுவடை தொடங்கியது.

ரூத் போவாஸை சந்தித்தல்

பெத்லெகேமில் ஒரு பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவனது பெயர் போவாஸ். அவன் நகோமியின் நெருங்கிய உறவினன். அவன் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சார்ந்தவன்.

ஒருநாள் ரூத் (மோவாபிலிருந்து வந்த பெண்) நகோமியிடம், “நான் வயலுக்குப் போகலாம் என்றும், என்மீது இரக்கம் காட்டக்கூடிய ஒருவரைக் காண முடியும் என்றும், வயலில் சிதறிக் கிடக்கும் தானியங்களைச் சேகரித்துக்கொள்ள அவர் அனுமதிக்கக் கூடும் என்றும் எண்ணுகின்றேன்” என்றாள்.

நகோமி, “நல்லது மகளே, போய் வா” என்றாள். எனவே ரூத் வயலுக்குப் போய், தானியங்களை அறுவடை செய்யும் வேலைக்காரர்களுக்குப் பின்னால் போனாள். சிதறிக்கிடக்கும் தானியங்களைச் சேகரித்தாள். அந்த வயலின் ஒரு பகுதி போவாஸுக்கு உரியது. அவன் எலிமெலேக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

பிறகு போவாஸ் பெத்லெகேமிலிருந்து வயலுக்கு வந்தான். அவன் வேலைக்காரர்களை வாழ்த்தி, “கர்த்தர் உங்களோடு இருக்கட்டும்” என்று கூறினான்.

அதற்கு வேலைக்காரர்களும், “கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என்றனர்.

பிறகு, போவாஸ் தனது வேலைக்காரர்களிடம், “அந்தப் பெண் யார்?” என்று கேட்டான்.

வேலைக்காரன் அதற்கு, “அவள் மோவாபிய பெண். அவள் மலைநாடான மோவாபிலிருந்து நகோமியோடு வந்திருக்கிறாள். அவள் அதிகாலையில் என்னிடம் வந்து, வேலைக்காரர்களின் பின்னால் போய், சிதறும் தானியங்களை எடுத்துக்கொள்ளட்டுமா? என்று கேட்டாள். இதுவரை இங்கேயே இருக்கிறாள். அவளது குடிசையும் இங்கேதான் இருக்கிறது” என்றான்.

பிறகு போவாஸ் ரூத்திடம், “பெண்ணே கவனி, நீ என் வயலிலேயே தங்கியிருந்து சிதறும் தானியங்களை எல்லாம் சேகரித்து உனக்காக எடுத்துக்கொள்ளலாம். மற்றவர்களின் வயலுக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து பெண் வேலைக்காரர்களின் பின்னால் போ. அவர்கள் எந்த வயலுக்குப் போகிறார்கள் என்பதைப் பார்த்திருந்து, அவர்களைப் பின்தொடர்ந்து செல். உனக்குத் தொந்தரவு செய்யாதபடி இங்குள்ள இளைஞர்களை எச்சரித்திருக்கிறேன். உனக்குத் தாகமாக இருக்கும்போது, எனது ஆட்கள் குடிக்கும் ஜாடியில் இருந்தே நீயும் தண்ணீரை எடுத்துக் குடிக்கலாம்” என்றான்.

10 ரூத் தரையில் பணிந்து வணங்கினாள். அவள் போவாஸிடம், “என்னைப் பொருட்படுத்தி கவனித்ததுபற்றி ஆச்சரியப்படுகிறேன். நான் அந்நிய தேசத்தாளாயிருந்தும் என் மீது கருணை காட்டுகிறீர்” என்றாள்.

11 போவாஸ் அவளுக்குப் பதிலாக, “நீ உன் மாமியாரான நகோமிக்குச் செய்துவரும் உதவியைப் பற்றி, நானும் அறிந்துள்ளேன். உன் கணவன் மரித்தப் பிறகும் நீ அவளுக்கு உதவி வருகிறாய். நீ உனது தந்தை, தாய், உறவினர், நாடு அனைத்தையும் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறாய். இங்குள்ள எவரையும் உனக்குத் தெரியாது. எனினும் நீ நகோமியோடு இங்கே வந்துவிட்டாய். நீ செய்த நல்ல செயல்களுக்கெல்லாம் கர்த்தர் உனக்கு நன்மைச் செய்வார். 12 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் உனக்கு முழுமையான பலனைத் தருவார். அவரிடம் பாதுகாப்புக்காக வந்திருக்கிறாய். அவர் உன்னைப் பாதுகாப்பார்” என்றான்.

13 பிறகு ரூத், “நீங்கள் என்னிடம் மிகுந்த கருணையோடு இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண வேலைக்காரி. நான் உங்கள் வேலைக்காரிகளுள் ஒருத்திக்குக்கூட சமமானவள் அல்ல. ஆனால் நீங்கள் என்னிடம் கருணையான வார்த்தைகளைக் கூறி ஆறுதலடையச் செய்துள்ளீர்கள்” என்றாள்.

14 மதிய உணவு நேரத்தில், போவாஸ், “இங்கே வா! எங்களிடம் இருக்கும் அப்பத்தில், நீயும் கொஞ்சம் சாப்பிடு. உன் அப்பத்தை இந்த காடியிலே தோய்த்துக் கொள்” என்று ரூத்திடம் சொன்னான்.

எனவே ரூத் வேலைக்காரர்களோடு உட்கார்ந்தாள். போவாஸ் அவளுக்குக் கொஞ்சம் வறுத்த கோதுமையைக் கொடுத்தான். அவள் வயிறு நிறைய சாப்பிட்டாள். எனினும் உணவு மிஞ்சியது. 15 பிறகு அவள் எழுந்து தன் வேலைக்குத் திரும்பிப் போனாள்.

பின்னர் போவாஸ் தன் வேலைக்காரர்களிடம், “அவள் அறுத்த கட்டுகளின் நடுவே இருக்கும் தானியங்களையுங்கூடச் சேகரித்துக்கொள்ளட்டும். அவளைத் தடுக்க வேண்டாம். 16 அவளுக்கு எளிதாக இருக்கும்படி, அறுக்கும்போதே சில தானியக் கதிர்களை விட்டுச் செல்லுங்கள். அவள் அவற்றை சேகரித்துக்கொள்ளட்டும். சேகரிக்கும் வேலையை நிறுத்தும்படி சொல்ல வேண்டாம்” என்றான்.

நகோமி போவாஸைப்பற்றிக் கேள்விப்படுதல்

17 ரூத் மாலைவரை வயல்களில் வேலை செய்தாள். பிறகு அவள் தான் பொறுக்கியதை தட்டி அடித்துப் புடைத்தாள். அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை இருந்தது. 18 ரூத் அதனை எடுத்துக்கொண்டு நகரத்துக்குள் போய் தன் மாமியாரிடம் அவற்றைக் காட்டினாள். அத்துடன் தன்னிடம் மீதியிருந்த மதிய உணவையும் அவளுக்குக் கொடுத்தாள்.

19 அவளது மாமியாரோ அவளிடம், “நீ இந்த தானியத்தை எங்கே சேகரித்தாய்? எங்கே வேலை செய்தாய்? உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றாள்.

ரூத் அவளிடம் தான் யாரோடு வேலை செய்தாள் என்பதைக் கூறினாள். அவள், “இன்றைக்கு நான் வேலைசெய்த வயல்காரனின் பெயர் போவாஸ்” என்றாள்.

20 நகோமி தன் மருமகளிடம், “கர்த்தர் அவனை ஆசீர்வதிக்கட்டும்! உயிருடன் இருப்பவர்களுக்கும், மரித்துப்போனவர்களுக்கும் தொடர்ந்து தன் கருணையை அவரே காட்டி வருகிறார்” என்றாள். அத்துடன் “போவாஸ் நமது உறவினர்களில் ஒருவன், போவாஸ் நமது பாதுகாவலர்களிலும் [a] ஒருவன்” என்றாள்.

21 பிறகு ரூத், “மீண்டும் வரும்படியும், வயலில் தொடர்ந்து வேலை செய்யும்படியும் போவாஸ் என்னிடம் சொன்னார். அறுவடைக்காலம் முடியும்வரை அவரது வேலைக்காரர்களுடனேயே நானும் வேலை செய்யலாம் என்றார்” என்று சொன்னாள்.

22 பிறகு நகோமி தன் மருமகளிடம், “அவனது பெண் வேலைக்காரிகளோடு சேர்ந்து வேலை செய்வது உனக்கும் நல்லது. நீ வேறு ஏதாவது வயலில் வேலை செய்தால், யாராவது உனக்குத் தொல்லை கொடுக்கக் கூடும்” என்றாள். 23 எனவே ரூத், போவாஸின் வேலைக்காரிகளோடு சேர்ந்து தொடர்ந்து வேலை செய்துவந்தாள். வாற் கோதுமையின் அறுவடை முடியும் வரை அவள் தானியத்தைச் சேகரித்து வந்தாள். கோதுமை அறுவடைக் காலம் முடியும்வரையும் அங்கு வேலைசெய்தாள். ரூத் தனது மாமியாரான நகோமியோடு தொடர்ந்து வாழ்ந்து வந்தாள்.

தானியத்தைப் போரடிக்கும் இடம்

பிறகு நகோமி ரூத்திடம், “என் மகளே, உனக்காக நான் ஒரு நல்ல கணவனையும், சிறந்த வீட்டையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுதான் உனக்கும் நல்லது. அதற்கு போவாஸ் சரியான மனிதனாக இருக்கலாம். போவாஸ் நமது நெருக்கமான உறவினன். நீ அவனது வேலைக்காரிகளோடு வேலை செய்திருக்கிறாய். இன்று இரவு களத்தில் தானியத்தைப் போரடிக்கும் இடத்தில் அவன் வேலை செய்வான். நீ குளித்து நன்றாக ஆடை அணிந்துகொள். தானியத்தை போரடிக்கும் களத்திற்குப் போ. அவன் இரவு உண்டு முடிக்கும்வரை போவாஸின் கண்ணில் படாமல் இரு. அவன் உண்டு முடித்ததும், ஓய்வுக்காகப் படுப்பான். அவனையே கவனித்துக்கொண்டிருந்தால் அவன் படுக்கும் இடத்தை நீ அறிந்து கொள்ள முடியும். அங்கேபோய் அவனது காலை மூடியிருக்கும் போர்வையை ஒதுக்கிவிட்டு அவனோடு படுத்துக்கொள். நீ திருமணத்துக்காகச் செய்ய வேண்டியதைப்பற்றி அவன் உனக்குக் கூறுவான்” என்றாள்.

பிறகு ரூத், “நீங்கள் சொன்னபடியே நான் செய்வேன்” என்று பதில் சொன்னாள்.

எனவே ரூத் தானியத்தைப் போரடிக்கும் களத்திற்குச் சென்றாள். ரூத் தனது மாமியார் சொன்னபடியே எல்லாவற்றையும் செய்து முடித்தாள். உணவை உண்டு, குடித்தபின் போவாஸ் மிகவும் மனநிறைவோடு இருந்தான். அவன் ஒரு தானிய அம்பாரத்துக்கு அடியிலே படுத்துக்கொண்டான். பிறகு ரூத் அமைதியாக அவன் அருகிலே சென்று காலருகே போர்வையை விலக்கிவிட்டு படுத்துக்கொண்டாள்.

நடு இரவில் போவாஸ் தூக்கத்தில் புரண்டு படுத்தான். அப்போது விழிப்பு வந்தது. தன் காலடியில் ஒரு பெண் படுத்திருப்பதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. போவாஸ் அவளிடம், “யார் நீ?” என்று கேட்டான்.

அவளோ, “நான் உங்கள் வேலைக்காரியான ரூத். உங்கள் போர்வையை என்மேல் மூடுங்கள். நீங்களே எனது பாதுகாவலர்” என்றாள்.

10 பிறகு போவாஸ், “இளம்பெண்ணே! கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும். நீ என்னிடம் கருணை உடையவளாய் இருக்கிறாய். நீ உன் மாமியாரின் பேரில் வைத்திருக்கும் கருணையைவிட என்மீது வைத்திருக்கும் கருணை மிகவும் உயர்ந்தது. ஏழையோ பணக்காரனோ, உன்னால் ஒரு இளைஞனை மணந்திருக்க முடியும். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. 11 இளம் பெண்ணே, இனிமேல் நீ பயப்பட வேண்டாம். நீ கேட்கும் உதவியை உனக்குச் செய்வேன். நீ மிகவும் சிறந்த பெண் என்பதை நகரத்தில் உள்ள அனைவரும் அறிவார்கள். 12 நான் உனது நெருங்கிய உறவினன் என்பதும் உண்மைதான். ஆனால் என்னைவிட நெருக்கமான உறவினன் ஒருவன் உனக்கு இருக்கிறான். 13 இன்று இரவு இங்கேயே தங்கியிரு. காலையில் அவன் உனக்கு உதவுவானா என்று பார்க்கலாம். அவன் உனக்கு உதவுவதாகத் தீர்மானித்துவிட்டால் அது மிகவும் நல்லதாக இருக்கும். ஒருவேளை அவன் மறுத்துவிட்டால், பிறகு கர்த்தருடைய பேரால் ஆணையிட்டுக் கூறுகிறேன், நானே உன்னை மணந்துகொள்வேன். உனக்காக எலிமெலேக்கின் நிலத்தையும் வாங்கித் தருவேன். எனவே காலைவரை இங்கேயே படுத்திரு” என்றான்.

14 எனவே ரூத், போவாஸின் காலருகே காலைவரை படுத்திருந்தாள். விடியும் முன், இருள் இருக்கும்போதே ரூத் எழுந்தாள்.

போவாஸ் அவளிடம், “நேற்று இரவு நீ இங்கே வந்தது நமக்குள் இரகசியமாக இருக்கட்டும்” என்று கூறினான். 15 மேலும் அவன், “உனது போர் வையைக் கொண்டு வா. அதனை விரித்துப்பிடி” என்று கூறினான்.

எனவே ரூத் போர்வையை விரித்துப் பிடித்தாள், போவாஸ் அதில் ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டான். அதை நகோமிக்குத் தனது அன்பளிப்பாகக் கொடுக்கச் சொன்னான். பிறகு அதை அவளது முதுகில் ஏற்றிவிட்டு, நகரத்தை நோக்கி போவாஸ் போனான்.

16 ரூத் தனது மாமியாரான நகோமி இருந்த வீட்டிற்குப் போனாள். நகோமி கதவருகே வந்து, “யாரங்கே?” என்று கேட்டாள்.

ரூத் வீட்டிற்குள்ளே போய் போவாஸ் அவளுக்காகச் செய்ததை எல்லாம் எடுத்துச் சொன்னாள். 17 அவள், “போவாஸ் உங்களுக்கு அன்பளிப்பாக இதை என்னிடம் கொடுத்தார். உங்களுக்கு அன்பளிப்பாக எதையும் எடுத்துச் செல்லாமல் நான் வீட்டுக்குப் போகக் கூடாது என்று சொன்னார்” என்றாள்.

18 அதற்கு நகோமி, “மகளே, என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும்வரை பொறுமையாக இருப்போம். தான் செய்ய வேண்டியவற்றை போவாஸ் செய்து முடிக்கும்வரை ஓய்வெடுக்கமாட்டான். என்ன நடக்கப் போகிறது என்பதை இன்று இரவுக்குள் நாமறிவோம்” என்றாள்.

போவாஸும் மற்ற உறவினனும்

நகரவாசலில் ஜனங்கள் கூடும் இடத்திற்கு போவாஸ் சென்றான். தான் சொன்ன உறவினன் வரும்வரை அங்கேயே அவன் காத்திருந்தான். அவன் வந்ததும், “நண்பனே! வா, இங்கே உட்காரு!” என்றான்.

பிறகு போவாஸ் சில சாட்சிகளையும் அருகில் அழைத்தான். நகரத்திலுள்ள 10 மூப்பர்களையும் அழைத்து, “இங்கு உட்காருங்கள்!” என்றான். அவர்களும் உட்கார்ந்தனர்.

பிறகு போவாஸ் நெருங்கிய உறவினனிடம், “மோவாபின் மலை நகரத்திலிருந்து நகோமி வந்திருக்கிறாள். எலிமெலேக்கின் நிலத்தை அவள் விற்கப்போகிறாள். நான் இங்கே வாழும் ஜனங்களின் முன்னிலையிலும் நமது மூப்பர்களின் முன்னிலையிலும் இதைக்கூற முடிவு செய்தேன். நீ அதனைத் திரும்ப மீட்க வேண்டுமென விரும்பினால் வாங்கிக்கொள்! நீ அந்த நிலத்தை மீட்டுக்கொள்ள விரும்பாவிட்டால் என்னிடம் கூறு. நானே அதை மீட்டுக்கொள்ளும் இரண்டாவது உரிமையாளன். நீ அதனைத் திரும்ப மீட்டுக் கொள்ளாவிட்டால் நான் வாங்கிக் கொள்வேன்” என்றான்.

பிறகு போவாஸ், “நீ நகோமியிடமிருந்து நிலத்தை வாங்கும்போதே நீ மரித்துப் போனவனின் மனைவியையும் பெறுவாய், அவள் மோவாபிய பெண்ணான ரூத். அவளுக்குக் குழந்தை பிறந்தால், இந்த நிலமும் அதற்கு உரியதாகும். இதன் மூலம், அந்த நிலம் மரித்துப்போனவனின் குடும்பத்திற்குரியதாகவே விளங்கும்” என்றான்.

அந்த நெருங்கிய உறவினனோ, “என்னால் அந்த நிலத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது. அது எனக்கே உரியதாகவேண்டும். ஆனால் என்னால் விலைகொடுத்து வாங்கமுடியாது. நான் அவ்வாறு செய்தால் என் நிலத்தை இழந்துபோனவன் ஆகிறேன். நீங்களே அந்நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான். (இஸ்ரவேலில் முற்காலத்தில், ஒருவன் ஒரு சொத்தை வாங்கினாலோ மீட்டுக் கொண்டாலோ, ஒருவன் தனது பாதரட்சையை எடுத்து மற்றவனிடம் கொடுக்கவேண்டும். இது வாங்கியதற்கான ஒரு சான்றாக விளங்கும்.) எனவே நெருக்கமான உறவினன், “நிலத்தை வாங்கிக்கொள்” என்று கூறி, தனது பாதரட்சையை எடுத்து போவாஸிடம் கொடுத்தான்.

பிறகு போவாஸ் மூப்பர்களிடமும், மற்ற ஜனங்களிடமும், “இன்று நான் நகோமியிடமிருந்து எலிமெலேக்குக்கும், கிலியோனுக்கும், மக்லோனுக்கும் சொந்தமாக இருந்த எல்லாவற்றையும் வாங்கிக்கொள்கிறேன். 10 நான் ரூத்தையும் என் மனைவியாகப் பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு நான் செய்வதால், மரித்துப்போனவனின் சொத்தானது அவனது குடும்பத்துக்கு உரியதாகவே விளங்கும். இதன் மூலம் அவனது பெயரானது அவனது குடும்பத்தையும் சொத்துக்களையும் விட்டு பிரிக்கப்படாமல் இருக்கும். இன்று இதற்கு நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்” என்றான்.

11 நகரவாசலில் உள்ள ஜனங்களும் மூப்பர்களும், சாட்சிகளாக இருந்தவர்களும், “உனது வீட்டிற்கு வருகிற இந்தப் பெண்ணை இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த ராகேலைப் போலவும், லேயாளைப் போலவும் கர்த்தர் ஆக்குவாராக. நீ எப்பிராத்தாவிலே அதிகாரத்தைப் பெறுவாயாக! பெத்லெகேமில் புகழ் பெறுவாயாக! 12 தாமார் யூதாவுக்குப் பேரேசை மகனாகப் பெற்றாள். அதனால் அந்தக் குடும்பம் உயர்வு பெற்றது. அதைப்போலவே, ரூத் மூலமாக கர்த்தர் உனக்கு நிறைய பிள்ளைகளைத் தரட்டும். உனது குடும்பமும் அதைப்போலவே, உயர்வைப் பெறட்டும்” என்றனர்.

13 எனவே போவாஸ் ரூத்தை மணந்துகொண்டான். அவள் கர்ப்பவதியாக கர்த்தர் கருணை செய்தார். அவள் ஒரு மகனைப் பெற்றாள். 14 நகரத்தில் உள்ள பெண்கள் நகோமியிடம், “உனக்குப் பிள்ளையைக் கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவன் இஸ்ரவேலில் மிகுந்த புகழைப் பெறுவான். 15 அவன் மீண்டும் உன்னை வாழவைப்பான், உனது முதியவயதில் அவன் உன்னைக் கவனித்துக்கொள்வான். இவ்வாறு நடக்குமாறு உனது மருமகள் செய்தாள். அவள் உனக்காகவே இந்தக் குழந்தையைப் பெற்றாள். அவள் உன்மீது அன்புடையவள். அவள் 7 ஆண் மகன்களையும்விட உனக்கு மேலானவள்” என்றனர்.

16 நகோமி பிள்ளையை எடுத்துத் தனது கைகளில் ஏந்தி அவனைக் கவனித்துக் கொண்டாள். 17 அயல் வீட்டுப் பெண்கள், “இந்த பையன் நகோமிக்காக பிறந்தவன்” என்றனர். அவர்கள் அவனுக்கு ஓபேத் என்று பேரிட்டனர். அவன் ஈசாயின் தந்தையானான். ஈசாய் அரசனான தாவீதின் தந்தையானான்.

ரூத் மற்றும் போவாஸின் குடும்பம்

18 இது பேரேசுடைய குடும்பத்தின் வரலாறு:

பேரேஸ் எஸ்ரோனின் தந்தையானான்.

19 எஸ்ரோன் ராமின் தந்தையானான்.

ராம் அம்மினதாபின் தந்தையானான்.

20 அம்மினதாப் நகசோனின் தந்தையானான்.

நகசோன் சல்மோனின் தந்தையானான்.

21 சல்மோன் போவாஸின் தந்தையானான்.

போவாஸ் ஓபேதின் தந்தையானான்.

22 ஓபேத் ஈசாயின் தந்தையானான்.

ஈசாய் தாவீதின் தந்தையானான்.

லூக்கா 8:1-25

இயேசுவின் குழுவினர்

மறுநாள் இயேசு சில பெரிய பட்டணங்களுக்கும், சில சிறு நகரங்களுக்கும் பிரயாணம் செய்தார். தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு கூறி மக்களுக்குப் போதித்தார். பன்னிரண்டு சீஷர்களும் அவரோடு கூட இருந்தனர். சில பெண்களும் அவரோடு கூட இருந்தனர். இயேசு இந்தப் பெண்களை நோய்களில் இருந்தும் பிசாசின் அசுத்த ஆவிகளில் இருந்தும் குணமாக்கி இருந்தார். இப்பெண்களுள் ஒருத்தி மரியாள். அவள் மக்தலா என்னும் நகரத்திலிருந்து வந்திருந்தாள். ஏழு அசுத்த ஆவிகள் அவளிடமிருந்து விரட்டப்பட்டிருந்தன. இப்பெண்களோடுகூட கூசாவின் (ஏரோதுவின் பொருளாளர்களுள் ஒருவனாக இருந்தவன்) மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும் வேறுபல பெண்களும் இருந்தனர். இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இவர்கள் தங்கள் பணத்தின் மூலம் சேவை செய்தனர்.

விதைத்தலின் உவமை(A)

கூட்டமாகப் பலர் சேர்ந்து வந்தனர். ஒவ்வொரு நகரத்திலிருந்தும் மக்கள் இயேசுவிடம் வந்தனர். இயேசு பின்வரும் உவமையை மக்களுக்குக் கூறினார்.

“ஓர் உழவன் விதை விதைப்பதற்குச் சென்றான். உழவன் விதைத்துக்கொண்டிருந்தபோது, பாதையின் ஓரமாகச் சில விதைகள் விழுந்தன. மக்கள் அவற்றின்மீது நடந்து சென்றனர். பறவைகள் அவற்றைத் தின்றன. சில விதைகள் பாறையின்மீது விழுந்தன. அவை முளைக்க ஆரம்பித்தன. நீர் இல்லாததால் மடிந்தன. முட்புதர்கள் நடுவே சில விதைகள் விழுந்தன. அவை முளைத்தன. ஆனால் பின்னர், அவை முளைக்காதபடி புதர்கள் தடுத்தன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து நூறு மடங்கு தானியத்தைத் தந்தன.”

இயேசு இந்த உவமையைக் கூறி முடித்தார். பின்பு இயேசு, “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற மக்களே, கவனியுங்கள்” என்றார்.

இயேசுவின் சீஷர்கள் அவரை நோக்கி, “இந்த உவமையின் பொருள் என்ன?” என்று கேட்டனர்.

10 இயேசு, “தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால், நான் பிற மக்களோடு பேசுவதற்கு உவமைகளைப் பயன்படுத்துகிறேன். நான் இவ்வாறு செய்வது ஏனென்றால்:

“‘அவர்கள் பார்ப்பார்கள்,
    ஆனால் எதையும் காணமாட்டார்கள்.
அவர்கள் கவனிப்பார்கள்:
    ஆனால் எதையும் புரிந்துகொள்ளமாட்டார்கள்’”(B)

என்றார்.

உவமையின் விளக்கம்(C)

11 “இந்த உவமை இவ்வாறு பொருள்படுகிறது: விதை தேவனுடைய வசனமாகும். 12 பாதையோரத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக் கேட்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால் பிசாசு வந்து அவர்கள் இதயத்தில் இருந்து அந்த போதனையை எடுத்துப் போகிறான். எனவே அந்த மனிதர்கள் போதனையை நம்பி, இரட்சிப்படைய முடியாது. 13 பாறையில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? தேவனுடைய போதனையைக் கேட்டு, மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால், இந்த மனிதர்கள் ஆழமாக வேர் விடுவதில்லை. கொஞ்ச நேரம் நம்பிக்கை வைப்பர். ஆனால் பின்பு தொல்லைகள் வரும். நம்புவதை விடுத்து, தேவனை விட்டு விலகிச் செல்வர்.

14 “முட்புதர்களின் நடுவில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக்கேட்டும், கவலை, செல்வம், இவ்வாழ்வின் களிப்பு ஆகியவற்றால் அப்போதனைகளை வளரவிடாது தடுக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. எனவே, அவர்கள் ஒருபோதும் நல்ல பலன் கொடுப்பதில்லை. 15 நல்ல நிலத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனின் போதனைகளை உண்மையான நல்ல இதயத்தோடு கேட்கின்ற மக்களைப் போன்றது. அவர்கள் தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து பொறுமையாக நற்பலனைக் கொடுப்பவர்களாவார்கள்.

கவனிக்கும் முறை(D)

16 “எந்த மனிதனும் விளக்கைக் கொளுத்தி, ஒரு பாத்திரத்தினால் மூடி, படுக்கையின் கீழே மறைத்து வைப்பது இல்லை. ஆனால் அம்மனிதன் விளக்கை அதற்குரிய விளக்குத் தண்டின்மேல் உள்ளே நுழையும் மக்கள் அனைவருக்கும் ஒளி தரும்படியாக ஏற்றி வைப்பான். 17 மறைக்கப்பட்டவை அனைத்தும் வெளிப்படும். ஒவ்வொரு இரகசியமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். 18 எவ்வாறு கவனிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். புரியும் திறன் பெற்ற மனிதன் மிகுதியாக அறிந்துகொள்வான். புரியும் திறனற்ற மனிதனோ தனக்கு இருப்பதாக அவன் நினைக்கும், புரியும் திறனையும் இழந்துவிடுவான்” என்றார்.

இயேசுவின் குடும்பத்தினர்(E)

19 இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைக் காண வந்தனர். இயேசுவின் தாயும் சகோதரரும் இயேசுவை நெருங்க முடியாதபடி பல மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். 20 ஒருவன் இயேசுவிடம், “உங்கள் தாயும், சகோதரர்களும் வெளியே நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் உங்களைக் காண விரும்புகின்றனர்” என்றான்.

21 இயேசு அவர்களுக்கு, “தேவனுடைய போதனையைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிந்து நடக்கிற மக்களே என் தாயும், சகோதரர்களும் ஆவார்கள்” என்று பதிலளித்தார்.

இயேசுவைப் பின்பற்றினோர் அவரது ஆற்றலைக் காணுதல்(F)

22 ஒரு நாள் இயேசுவும், அவரது சீஷர்களும் ஒரு படகில் அமர்ந்தனர். இயேசு அவர்களிடம், “ஏரியைக் கடந்து அக்கரை செல்ல என்னோடு வாருங்கள்” என்றார். அவர்கள் அவ்வாறே செல்ல ஆரம்பித்தனர். 23 படகு செல்கையில் இயேசு தூக்கத்தில் ஆழ்ந்தார். ஏரியின் மீது ஒரு பெரிய புயல் வீசிற்று. படகுக்குள் நீர் நிரம்ப ஆரம்பித்தது. அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டனர். 24 இயேசுவின் சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினர். அவர்கள், “ஐயா, ஐயா, நாம் மூழ்கிவிடப் போகிறோம்” என்றனர்.

இயேசு எழுந்தார். அவர் காற்றுக்கும், அலைகளுக்கும் கட்டளையிட்டார். உடனே காற்று ஓய்ந்தது. ஏரி அமைதியுற்றது. 25 இயேசு தன்னோடு இருந்தவர்களை நோக்கி, “உங்கள் விசுவாசம் எங்கே?” என்றார்.

இயேசுவைப் பின்பற்றி வந்தவர்களோ அச்சமும் ஆச்சரியமும் கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் “இம்மனிதர் எப்படிப்பட்டவர்? காற்றுக்கும், நீருக்கும் கட்டளையிட அவை அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறிக் கொண்டனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center