Print Page Options
Previous Prev Day Next DayNext

Read the New Testament in 24 Weeks

A reading plan that walks through the entire New Testament in 24 weeks of daily readings.
Duration: 168 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 தீமோத்தேயு 1-2

நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற இயேசு கிறிஸ்துவும் ஆணை இட்டபடியே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாய் இருக்கிற பவுல்,

விசுவாசத்தில் உண்மையான குமாரனாக இருக்கும் தீமோத்தேயுவுக்கு எழுதுவது: நமது பிதாவாகிய தேவனாலும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும், இரக்கமும், சமாதானமும் உண்டாவதாக.

தவறான போதனைகளுக்கு எச்சரிக்கை

எபேசு நகரத்தில் நீ இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் மக்கதோனியாவுக்குப் போனபோது நீ அவ்வாறு செய்யும்படி கேட்டேன். எபேசு நகரில் சிலர் தவறானவற்றைப் போதித்து வருகிறார்கள். இது போல் செய்ய வேண்டாம் என்று ஆணையிட்டுச் சொல்லும் பொருட்டு நீ அங்கே தங்கி இரு. உண்மையற்ற கட்டுக்கதைகளைக் கேட்டு காலத்தை வீணாக்க வேண்டாம் என்றும், குடும்ப வரலாற்றுப் பட்டியல்களைக் கேட்க வேண்டாம் என்றும் கூறு. அவை வெறும் விவாதங்களை மட்டுமே உருவாக்கும். அவை தேவனுடைய பணிக்கு உதவாதவை. விசுவாசத்தின் மூலமே தேவனுடைய பணி நடைபெறும். மக்கள் அன்புகொள்ள வேண்டும் என்பதே இக்கட்டளையின் நோக்கம். இந்த அன்பைப் பெற மக்கள் தூய இதயத்தைப் பெற வேண்டும். எது சரியானது என்று எண்ணுகிறார்களோ அதைச் செய்ய வேண்டும். உண்மையான விசுவாசம் கொள்ளவேண்டும். சிலர் இக்காரியங்களைச் செய்யத் தவறினார்கள். ஆகையால் அவர்கள் அதிலிருந்து விலகி ஒன்றுக்கும் உதவாத காரியங்களைப் பற்றி இப்பொழுது பேசுகிறார்கள். அந்த மக்கள் நியாயப்பிரமாண போதகர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தாம் என்ன சொல்கிறோம் என்பது தெரியவில்லை. அதோடு தாம் உறுதியாகச் சொல்கின்றவற்றைப் பற்றியும் புரிந்துகொள்ளவில்லை.

ஒருவன் சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அச்சட்டம் நல்லதென்று அறிந்திருக்கிறோம். சட்டமானது நல்ல மனிதர்களுக்காக உருவாக்கப்படவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். சட்டத்துக்கு எதிரானவர்களுக்காகவும், பின்பற்ற மறுப்பவர்களுக்காகவும் இச்சட்டம் உருவாக்கப்பட்டது. இது தேவனுக்கு எதிரானவர்களுக்காகவும், பாவிகளுக்காகவும், பக்தியில்லாதவர்களுக்காகவும், தூய்மையற்றவர்களுக்காகவும், தம் பெற்றோரைக் கொல்கிறவர்களுக்காகவும், கொலைகாரர்களுக்காகவும் உருவாக்கப்பட்டது. 10 விபசாரம், ஓரினக்கலவி, அடிமை விற்பனை, பொய், ஏமாற்று, தேவனின் உண்மை போதனைக்கு எதிர்ப்பு போன்றவற்றைச் செய்கின்ற மக்களுக்கு உரியது. 11 சொல்லும்படி தேவன் என்னிடம் ஒப்படைத்த நற்செய்தியின் ஒரு பகுதியே என் போதனையாகும். பெருமை மிகு அந்நற்செய்தி மகிமையின் தேவனிடமிருந்து வருகிறது.

தேவனுடைய கிருபைக்காக நன்றி

12 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நான் நன்றி கூறுகிறேன், ஏனெனில் என்னை விசுவாசமுள்ளவனாகக் கண்டுணர்ந்து சேவை செய்யும் பொருட்டு அவர் எனக்கு இப்பணியைக் கொடுத்திருக்கிறார். அவர் எனக்கு பலத்தைக் கொடுத்திருக்கிறார். 13 முன்பு நான் கிறிஸ்துவுக்கு எதிராகப் பேசி துன்பப்படுத்தி, கொடுமையான காரியங்களைச் செய்தேன். ஆனால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்தார். ஏனென்றால், செய்வதை இன்னதென்று அறியாமல் நான் செய்தேன். அவரை நம்பாதபோது தான் அவற்றைச் செய்தேன். 14 ஆனால் கர்த்தராகிய அவர் தம் முழுமையான கிருபையை எனக்குத் தந்தார். அதோடு கிறிஸ்து இயேசுவில் விசுவாசமும் அன்பும் வந்தது.

15 நான் என்ன சொல்கிறேனோ, அவை உண்மையானவை. நீங்கள் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். பாவிகளை மீட்பதற்காகவே கிறிஸ்துவாகிய இயேசு இந்த உலகத்துக்கு வந்தார். அவர்களுள் நான் மிக மோசமானவன். 16 ஆனால் எனக்குக் கருணை அளிக்கப்பட்டது. அதனால் என் மூலம் இயேசு கிறிஸ்து எல்லையற்ற பொறுமை உடையவர் என்று புலப்படுத்திவிட்டார். கிறிஸ்து தனது பொறுமையை எல்லா பாவிகளிலும் மோசமான என்னிடம் காட்டினார். அவரை விசுவாசிக்கிறவர்கள் நித்திய வாழ்வைப் பெறுவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கும்படியாகக் கிறிஸ்து விரும்பினார். 17 கனமும், மகிமையும் நிரந்தரமான அரசருக்கு இருப்பதாக. அவர் அழிக்கப்படாதவர். பார்க்கப்படாதவர். அந்த ஒரே தேவனுக்கே எப்பொழுதும் கனமும், மகிமையும் உண்டாவதாக.

18 தீமோத்தேயுவே, நீ என் குமாரனைப் போன்றவன். நான் உனக்கு ஓர் ஆணையிடுகிறேன். உன்னைக் குறித்து முன்பு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின்படியே விசுவாசத்திற்காக மாபெரும் போரில் நீ ஈடுபடு. இதுவே எனது ஆணை. 19 தொடர்ந்து விசுவாசம் கொள். உனக்கு நியாயமானது என்று தெரிந்ததைச் செய். சிலர் இதனைச் செய்யவில்லை. எனவே அவர்கள் விசுவாசத்திலிருந்து விலகி விழுந்தார்கள். 20 இமனேயும், அலெக்சாண்டரும் இத்தகு இரண்டு உதாரணங்கள். தேவனுக்கு எதிராகப் பேசக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான் அவர்களை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சில விதிமுறைகள்

எல்லாருக்குமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்று முதலில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எல்லாரையும் பற்றி தேவனிடம் பேசுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைப்பற்றிக் கேளுங்கள். அவரிடம் நன்றியுணர்வுடன் இருங்கள். ராஜாக்களுக்காகவும், அதிகாரம் உள்ளவர்களுக்காகவும் நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். முழுக்க, முழுக்க சேவையும், தேவனைக் குறித்த மரியாதையும் அமைதியும் சமாதானமும் உள்ள வாழ்வை நாம் பெறும்பொருட்டு அத்தலைவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். இது நன்று. நம் மீட்பரான தேவனுக்கு இது மிகவும் விருப்பமானது.

அனைத்து மக்களும் மீட்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அனைத்து மக்களும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தேவன் ஆசைப்படுகிறார். ஒரே ஒரு தேவனே இருக்கிறார். மனிதர்கள் தேவனை அடைவதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவ்வழி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவாகிய இயேசுவின் மூலம் உருவாகிறது. அனைத்து மக்களின் பாவங்களுக்காகவும் அவர் தன்னையே தந்துவிட்டார். தேவன் எல்லாரையும் மீட்க விரும்புகிறார் என்பதற்கு இயேசுவே சாட்சி. அவர் சரியான நேரத்தில் வந்தார். அதனால்தான் நற்செய்தியைப் பரப்புவதற்காக, நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால் தான் நான் அப்போஸ்தலானாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். (நான் உண்மையைத் தான் சொல்கிறேன். பொய் சொல்லவில்லை) யூதர் அல்லாதவர்களுக்கான போதகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அவர்கள் விசுவாசம் கொள்ளவும், உண்மையை அறிந்துகொள்ளவும் போதிக்கிறேன்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் விசேஷ விதிமுறைகள்

ஆண்கள் எல்லா இடத்திலும் பிரார்த்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கைகளை உயர்த்தி ஜெபம் செய்யும் இவர்கள் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். இவர்கள் கோபமும், தர்க்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆடைகளை அணியவேண்டுமென்று விரும்புகிறேன். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் ஆடைகள் இருக்கவேண்டும். எளிமையாகவும், சரியான சிந்தனை உடையவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் நவநாகரீகமான தலையலங்காரமும், பொன், முத்து நகையலங்காரங்களும், விலையுயர்ந்த ஆடை அலங்காரங்களும் இல்லாமல் இருப்பார்களாக. 10 ஆனால், அவர்கள் அழகானவர்களாகத் தோன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும். தேவனை வழிபடுகிற பெண்கள் அவ்விதத்திலேயே தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.

11 பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு கற்றுக்கொள்ள வேண்டும். 12 ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும். 13 ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள். 14 அதோடு, சாத்தானின் தந்திரத்துக்குள் ஆதாம் அகப்படவில்லை. பெண் தான் முதலில் தந்திரத்துக்குள் சிக்கி பாவியானாள். 15 தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center