Print Page Options
Previous Prev Day Next DayNext

Read the New Testament in 24 Weeks

A reading plan that walks through the entire New Testament in 24 weeks of daily readings.
Duration: 168 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோவான் 16-17

16 “நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதற்காக இவைகளை நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். மக்கள் தங்கள் ஆலயங்களில் இருந்து உங்களை வெளியேற்றுவர். மேலும் உங்களைக் கொல்பவன் தேவனுக்கு சேவை செய்கிறவன் என்று மக்கள் எண்ணும்படியான காலம் வரும். அவர்கள் பிதாவைப்பற்றியும் என்னைப்பற்றியும் அறிந்துகொள்ளாததால் இப்படிச் செய்வார்கள். நான் இப்பொழுது இவற்றைப்பற்றியெல்லாம் சொல்லிவிட்டேன். எனவே இவை நிகழும் காலம் வரும்போது, நான் ஏற்கெனவே உங்களுக்கு எச்சரித்திருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொள்வீர்கள்.

பரிசுத்த ஆவியானவரின் பணிகள்

“நான் உங்களோடு இருந்தேன். எனவே தொடக்கத்தில் இவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை. எனினும் நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிரம்பிவிட்டது. ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்.

“அவர் வரும்போது இவற்றைப்பற்றிய உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம்பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவுபற்றியும், நியாயத்தீர்ப்புபற்றியும் விளக்குவார். அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார். 10 அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். 11 நியாயத்தீர்ப்புபற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார். ஏனென்றால் இந்த உலகை ஆளுகிற சாத்தான் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்.

12 “உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 14 நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.”

துயரம் மகிழ்ச்சியாக மாறும்

16 பின்னும் இயேசு “இன்னும் கொஞ்ச காலத்திற்குப்பின் என்னை நீங்கள் பார்க்க முடியாது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்” என்றார்.

17 இயேசுவின் சீஷர்களில் சிலர் ஒருவருக்கொருவர், “‘கொஞ்ச காலத்திற்குப்பின் பார்க்கமுடியாது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்’ என்றாரே, இயேசு எதைக் கருதி இவ்வாறு கூறுகிறார். ‘நான் பிதாவிடம் போகிறேன்’ என்று ஏன் கூறுகிறார். 18 ‘கொஞ்ச காலம்’ என்று கூறினாரே அதன் பொருள் என்ன? அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று பேசிக்கொண்டனர்.

19 சீஷர்கள் தன்னிடம் அதைப்பற்றிக் கேட்க விரும்புவதை இயேசு கவனித்தார். ஆகையால் இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறீர்கள்? நான், ‘இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு என்னைப் பார்க்க முடியாது. அப்புறம் கொஞ்ச காலத்திற்குப் பின்பு மீண்டும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று சொன்னேனே, அதைப் பற்றியா? 20 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அழுது துக்கப்படுவீர்கள். ஆனால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் துக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.

21 “ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவளுக்கு வலி ஏற்படும். ஏனென்றால் அவளுக்குக் குறிப்பிட்டவேளை நெருங்கி இருக்கும். ஆனால் குழந்தை பிறந்ததும் அவள் தன் வலியை மறந்துவிடுவாள். குழந்தை இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். 22 உங்களுக்கும் இதைப்போலத்தான். இப்பொழுது நீங்கள் துயரமாக இருக்கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் உங்களைப் பார்ப்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எவராலும் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது. 23 அந்த நாளில் நீங்கள் என்னிடம் எதைப்பற்றியும் கேட்கமாட்டீர்கள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். என் பேரில் நீங்கள் எதைக் கேட்டாலும் என் பிதா உங்களுக்குத் தருவார். 24 இதுவரை நீங்கள் என்பேரால் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மகிழ்ச்சி முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும்.

உலகத்தின் மீது வெற்றி

25 “நான் இவற்றையெல்லாம் உங்களுக்கு மறை பொருளில் கூறியிருக்கிறேன். ஆனால் காலம் வரும். அப்போது நான் இவ்வாறு மறைபொருளில் பேசாமல் வெளிப்படையாகச் செய்திகளை அந்தப் பிதாவைப்பற்றிக் கூறுவேன். 26 அந்த நாளில் நீங்கள் பிதாவிடம் என்பேரில் உங்களுக்கானதைக் கேட்பீர்கள். நான் உங்களுக்காக என் பிதாவிடம் கேட்டுக்கொள்ளும் தேவை இருக்காது என்று சொல்கிறேன். 27 என் பிதா அவராகவே உங்களை நேசிக்கிறார். ஏனென்றால் நீங்கள் என்னிடம் அன்பாக இருந்தீர்கள். நான் தேவனிடம் இருந்து வந்ததாக நீங்கள் நம்பியிருந்தீர்கள். 28 நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்றார்.

29 பிறகு இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “நீர் இப்பொழுது எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறீர். புரிந்து கொள்வதற்குக் கடினமான வார்த்தைகளை நீர் பயன்படுத்தவில்லை. 30 உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்.

31 இயேசு அவர்களிடம், “எனவே நீங்கள் இப்போது நம்புகிறீர்கள். 32 என்னைக் கவனியுங்கள். நீங்கள் சிதறிப்போகிற வேளை இதோ நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிற்குப் போய் என்னை விட்டு விலகிப் போவீர்கள். அந்த நேரம் இதோ வந்துவிட்டது. நீங்கள் என்னை விட்டுப் போவீர்கள். நான் தனியே இருப்பேன். எனினும் நான் உண்மையில் தனித்திருக்கமாட்டேன். ஏனென்றால் என்னோடு என் பிதா இருக்கிறார்.

33 “என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.

சீஷர்களுக்காகப் பிரார்த்தனை

17 இவற்றையெல்லாம் இயேசு சொன்ன பிறகு, அவர் தனது கண்களால் வானத்தை (பரலோகத்தை) அண்ணாந்து பார்த்தார். “பிதாவே, நேரம் வந்துவிட்டது. உமது குமாரனுக்கு மகிமையைத் தாரும். அதனால் உமது குமாரனும் உமக்கு மகிமையைத் தருவார். உமது குமாரன் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிரந்தர வாழ்வைக் கொடுக்கும்படியாக அனைத்து மக்கள் மீதும் அவருக்கு அதிகாரம் கொடுத்தீர். அந்த மனிதர்கள், நீர்தான் உண்மையான தேவன் என்பதையும் உம்மால் அனுப்பப்பட்டவர் இயேசு கிறிஸ்து என்பதையும் தெரிந்துகொள்வார்கள். இவ்வாறு தெரிந்துகொள்வதுதான் நிரந்தரமான வாழ்க்கை. நான் செய்யுமாறு நீர் கொடுத்த வேலைகளை நான் முடித்துவிட்டேன். நான் பூமியில் உம்மை மகிமைப்படுத்தினேன். இப்பொழுது, உம்மோடு இருக்கும் மகிமையைத் தாரும். உலகம் உண்டாவதற்கு முன்பிருந்தே உம்மோடு நான் கொண்டிருந்த மகிமையைத் தாரும்.

“உலகத்திலிருந்து சில ஆட்களை நீர் எனக்குக் கொடுத்தீர். நான் அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள். அவர்களை எனக்குத் தந்தீர். அவர்கள் உமது போதனைக்குக் கீழ்ப்படிந்தார்கள். நீர் எனக்குத் தந்தவையெல்லாம் உம்மிடமிருந்து வந்தவை என்று அவர்கள் இப்போது தெரிந்துகொண்டனர். நீர் எனக்குக் கொடுத்த போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். அவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். உண்மையாகவே நான் உம்மிடமிருந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். நீர் என்னை அனுப்பிவைத்ததையும் அவர்கள் நம்புகிறார்கள். நான் அவர்களுக்காக இப்பொழுது வேண்டுகிறேன். நான் உலகில் உள்ள மக்களுக்காக வேண்டிக்கொள்ளவில்லை. ஆனால் நீர் எனக்குக் கொடுத்த மக்களுக்காக வேண்டுதல் செய்கிறேன். ஏனென்றால் அவர்கள் உம்முடையவர்கள். 10 என்னுடையவை எல்லாம் உம்முடையவை. உம்முடையவை எல்லாம் என்னுடையவை. அவர்களில் நான் மகிமை அடைந்திருக்கிறேன்.

11 “இப்பொழுது நான் உம்மிடத்தில் வந்துகொண்டிருக்கிறேன். நான் இனிமேல் உலகத்தில் இருக்கமாட்டேன். ஆனால் இவர்கள் இப்பொழுதும் உலகத்தில் தான் இருக்கிறார்கள். பரிசுத்த பிதாவே, உமது பெயரின் வல்லமையினால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கச் செய்யும். இதன் மூலம் நீரும் நானும் ஒன்றாக இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாயிருப்பார்கள். 12 நான் அவர்களோடு இருந்தபோது அவர்களைப் பாதுகாத்து வந்தேன். நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன். அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான். (யூதாஸ்) அவன் இழக்கப்படுவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஏற்கெனவே வேதவாக்கியங்களில் எழுதப்பட்டவை நிறைவேறும்படியே அவன் இழக்கப்பட்டான்.

13 “நான் இப்பொழுது உம்மிடம் வருகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் நான் உலகில் இருக்கும்போதே வேண்டிக்கொள்கிறேன். நான் இவற்றையெல்லாம் கூறுகிறேன். ஆதலால் அவர்கள் எனது மகிழ்ச்சியைப் பெறமுடியும். அவர்கள் எனது முழுமையான மகிழ்ச்சியையும் பெறவேண்டும் என நான் விரும்புகிறேன். 14 உமது போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உலகம் அவர்களை வெறுக்கிறது. ஏனென்றால் அவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். நானும் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்.

15 “அவர்களை உலகத்திலிருந்து வெளியே எடுக்கும்படி நான் உம்மை வேண்டிக்கொள்ளவில்லை. அவர்களை நீர் தீமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன். 16 நான் இந்த உலகத்தை சாராதது போலவே அவர்களும் இந்த உலகத்தைச் சாராதவர்களாக இருக்கிறார்கள். 17 உம்முடைய உண்மையின் மூலம் உமது சேவைக்கு அவர்களைத் தயார்படுத்தும். உமது போதனையே உண்மை. 18 நீர் என்னை உலகத்துக்கு அனுப்பிவைத்தீர். அது போலவே நானும் அவர்களை உலகத்துக்குள் அனுப்புகிறேன். 19 நான் சேவைக்காக என்னைத் தயார் செய்து கொண்டேன். நான் இதனை அவர்களுக்காகவே செய்கிறேன். எனவே, அவர்களும் உமது சேவைக்காக உண்மையில் தம்மைத் தயார் செய்துகொள்வார்கள்.

20 “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். இவர்களுக்காக மட்டுமல்ல இவர்களுடைய உபதேசங்களால் என்மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். 21 பிதாவே, என்னில் நம்பிக்கை வைக்கிற அனைவரும் ஒன்றாயிருப்பதற்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். நீர் என்னில் இருக்கிறீர். நான் உம்மில் இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கும்படிக்கும் நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். ஆகையால் இவ்வுலகம் நீர் என்னை அனுப்பினதில் நம்பிக்கைகொள்ளும். 22 நீர் எனக்குத் தந்த மகிமையை நான் தருவதால் அவர்கள் ஒன்றாக இருப்பார்கள். நானும் நீரும் ஒன்றாக இருப்பது போல, 23 நான் அவர்களில் இருப்பேன்; நீர் என்னில் இருப்பீர். ஆக அனைவரும் ஒன்றாக இருப்பார்கள். பிறகு இந்த உலகம் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொள்ளும். நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோலவே நீர் அவர்களிடமும் அன்பாக இருக்கிறீர் என்பதையும் உலகம் தெரிந்து கொள்ளும்.

24 “பிதாவே! நீர் எனக்குத் தந்த இவர்கள், நான் எங்கே இருந்தாலும் என்னுடனே இருக்குமாறு விரும்புகிறேன். அவர்கள் என் மகிமையைக் காண வேண்டும் எனவும் விரும்புகிறேன். உலகம் உண்டாவதற்கு முன்னரே நீர் என்னுடன் அன்பாக இருந்தீர். இதனால் எனக்கு நீர் மகிமை தந்தீர். 25 பிதாவே! நீர் நல்லவராக இருக்கிறீர். இந்த உலகம் உம்மை அறிந்துகொள்ளவில்லை. ஆனால் உம்மை நான் அறிந்துகொண்டுள்ளேன். இந்த மக்கள் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொண்டுள்ளனர். 26 உம்மை நான் அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். இன்னும் வெளிப்படுத்துவேன். பிறகு நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோன்று அவர்களும் அன்பாக இருப்பார்கள். நானும் அவர்களுக்குள் வாழ்வேன்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center