Print Page Options
Previous Prev Day Next DayNext

New Testament in a Year

Read the New Testament from start to finish, from Matthew to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
மத்தேயு 21:23-46

இயேசுவின் அதிகாரத்தை யூதத்தலைவர்கள் சந்தேகித்தல்

(மாற்கு 11:27-33; லூக்கா 20:1-8)

23 இயேசு தேவாலயத்திற்குச் சென்றார். அவர் அங்கே போதனை செய்துகொண்டிருந்தபொழுது, தலைமை ஆசாரியர்களும், மூத்த தலைவர்களும் அவரிடம் வந்தனர். அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குச் சொல், இவைகளைச் செய்ய உனக்கு என்ன அதிகாரம் உள்ளது? உனக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று வினவினார்கள்.

24 இயேசு அவர்களுக்கு, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் எனக்குப் பதில் சொன்னால், நானும் இவைகளைச் செய்ய என்ன அதிகாரம் பெற்றிருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன். 25 யோவான் மக்களுக்கு கொடுத்த ஞானஸ்நானம் தேவனால் வந்ததா, அல்லது மனிதரால் வந்ததா? சொல்லுங்கள்” என்று மறு மொழி உரைத்தார்.

தலைமை ஆசாரியர்களும் தலைவர்களும் இயேசுவின் கேள்வியைக் குறித்து விவாதித்தனர். அவர்கள் தங்களுக்குள், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனால் ஆனது’ என்று நாம் கூறுவோமானால், இயேசு நம்மைப் பார்த்து, ‘பின் ஏன் நீங்கள் யோவானை நம்பவில்லை?’ என்று கேட்பார். 26 மாறாக ‘அது மனிதனால் ஆனது’ என்றால் மக்கள் நம்மீது கோபம் கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் அனைவரும் யோவானை ஒரு தீர்க்கதரிசி என்று நம்புகிறார்கள்” என்று கூறிக் கொண்டார்கள்.

27 எனவே அவர்கள் இயேசுவிடம், “யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

பின்பு இயேசு, “அப்படியெனில் இவைகளைச் செய்வதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதையும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்று கூறினார்.

இரண்டு குமாரர்கள் பற்றிய உவமை

28 “ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவன் தனது முதல் மகனிடம் சென்று, ‘மகனே இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான்.

29 “அதற்கு அவன், ‘போக முடியாது’ என்று பதிலளித்தான். ஆனால் பின்னர், அவனே தான் போய் வேலை செய்ய வேண்டும் என நினைத்தான். அவ்வாறே செய்தான்.

30 “பின்னர், அத்தந்தை தனது மற்றொரு மகனிடம் சென்றான். அவனிடம், ‘மகனே, இன்றைக்கு எனது திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றான். அதற்கு அவனது குமாரன், ‘சரி தந்தையே, நான் போய் வேலை செய்கிறேன்’ என்றான். ஆனால், அவன் வேலைக்குச் செல்லவில்லை.

31 “இரண்டு குமாரர்களில் யார் தனது தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தான்?” என்று இயேசு கேட்டார். யூதத் தலைவர்கள், “மூத்த குமாரன்” என்று பதில் சொன்னார்கள்.

அப்போது இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், வரி வசூலிப்பவர்களும், வேசிகளும், தீயவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு முன்னரே பரலோக இராஜ்யத்திற்குள் நுழைவார்கள். 32 வாழ்க்கையின் சரியான பாதையை உங்களுக்குக் காட்டுவதற்காக யோவான் வந்தான். ஆனால், நீங்கள் யோவானை நம்பவில்லை. வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் யோவானை நம்பினார்கள். அவர்கள் யோவான் மீது நம்பிக்கை வைத்ததை நீங்கள் கண்டீர்கள். ஆனாலும் நீங்கள் மனந்திருந்தி யோவானை நம்பவில்லை” என்றார்.

திராட்சைத் தோட்ட உவமை

(மாற்கு 12:1-12; லூக்கா 20:9-19)

33 “இந்த உவமையைக் கேளுங்கள். ஒரு மனிதனுக்கு ஒரு தோட்டமிருந்தது. அவன் அதில் திராட்சை பயிரிட்டான். தன் தோட்டத்தைச் சுற்றிலும் மதில் சுவரெழுப்பி திராட்சை இரசம் சேகரிக்கும் குழியையும் வெட்டினான். பின் ஒரு கோபுரத்தையும் கட்டினான். பிறகு தோட்டத்தை சில விவசாயிகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு ஒரு பயணம் மேற்கொண்டான். 34 பின்னர், திராட்சைப் பழங்களைப் பறிக்கவேண்டிய காலம் வந்தபொழுது, தனது வேலைக்காரர்களை குத்தகைக்காரர்களிடம் விளைச்சலில் தனது பங்கை வாங்கி வர அனுப்பினான்.

35 “ஆனால் அவ்விவசாயிகளோ வேலைக்காரர்களைப் பிடித்து அவர்களில் ஒருவனை அடித்துவிட்டார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கொன்றார்கள். மற்றொரு வேலைக்காரனைக் கல்லால் அடித்துக் கொன்றார்கள். 36 எனவே தோட்டத்துச் சொந்தக்காரன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். முதலில் அனுப்பிய ஆட்களைவிட அதிக எண்ணிக்கையில் இப்பொழுது ஆட்களை அனுப்பினான். ஆனால் குத்தகை எடுத்த விவசாயிகள் முதலில் செய்தது போலவே இம்முறையும் செய்தார்கள். 37 ஆகவே, தோட்டக்காரன் தன் குமாரனை அனுப்ப முடிவு செய்தான்! ‘விவசாயிகள் என் குமாரனுக்கு மதிப்பு கொடுப்பார்கள்’ என்று அவன் நினைத்தான்.

38 “ஆனால் குமாரனைக் கண்ட விவசாயிகள் தங்களுக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் குமாரன். நிலம் இவனுக்கே சொந்தமாகும். நாம் இவனைக் கொன்றால் நிலம் நமக்குச் சொந்தமாகிவிடும்’ என்று பேசிக்கொண்டனர். 39 எனவே, அந்த விவசாயிகள் திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனின் குமாரனைத் தோட்டத்திற்கு வெளியில் எறிந்து கொன்றார்கள்.

40 “திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனே வரும்பொழுது அவன் அந்த விவசாயிகளை என்ன செய்வான்?” என்று இயேசு கேட்டார்.

41 அதற்கு யூத ஆசாரியர்களும் தலைவர்களும், “அவன் நிச்சயம் அந்தத் தீயவர்களைக் கொல்வான். பின் தனது நிலத்தை மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடுவான். அதாவது அறுவடை காலத்தில் தனக்கு சேரவேண்டிய பங்கைச் தனக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு குத்தகைக்கு விடுவான்” என்றனர்.

42 இயேசு அவர்களுக்குக் கூறினார், “நீங்கள் வேதவாக்கியங்களில் கட்டாயம் படித்திருப்பீர்கள்:

“‘கட்டிடம் கட்டியவர்கள் விரும்பாத கல்லே மூலைக் கல்லாயிற்று.
    இது கர்த்தரின் செயல், நமக்கு வியப்பானது.’(A)

43 “எனவே தேவனுடைய இராஜ்யம் உங்களிடமிருந்து பறிக்கப்படும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். தம் இராஜ்யத்தில் தேவன் விரும்பும் செயல்களைச் செய்பவர்களுக்கே தேவனுடைய இராஜ்யம் கிட்டும். 44 இக்கல்லின் மீது விழுகிறவன் துண்டுகளாக நொறுங்கிவிடுவான். மேலும் இக்கல் ஒருவன் மீது வீழ்ந்தால் அவன் நசுங்கிப் போவான்” என்று கூறினார்.

45 இயேசு கூறிய இந்த உவமைகளைத் தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் கேட்டனர். தம்மைப்பற்றியே இயேசு பேசினார் என்பதை அவர்கள் அறிந்தார்கள். 46 எனவே இயேசுவைக் கைது செய்ய ஒரு வழி தேடினார்கள். ஆனால், அவர்கள் மக்களைக் குறித்து பயந்தார்கள். ஏனெனில் மக்கள் இயேசுவைத் தீர்க்கதரிசி என நம்பினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center