Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 19

ராஜாவாகிய எசேக்கியா தீர்க்கதரிசியான ஏசாயாவோடு பேசியது

19 ராஜாவாகிய எசேக்கியா அவற்றைக் கேள்விப்பட்டான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு முரட்டு துணியை அணிந்தான். தனது துக்கத்தையும் பாதிப்பையும் வெளிப்படுத்தினான். பிறகு அவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான்.

அவன் ஆமோத்சின் குமாரனான தீர்க்கதரிசி ஏசாயாவிடம் அரண்மனை விசாரிப்புக்காரனான எலியாக்கீம் என்பவனையும், செயலாளனான செப்னா என்பவனையும், மூத்த ஆசாரியர்களையும் அனுப்பி வைத்தான். அவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தும் முறையில் முரட்டு ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் ஏசாயாவிடம், “‘இன்று பிரச்சனைக்குரிய நாள். நாம் தவறாக உள்ளோம் என்பதைக் காட்டும் நாள். இது குழந்தைகளின் பிரசவ காலம் போல உள்ளது. ஆனால் குழந்தையைப் பெறுவதற்கோ பலமில்லை. அசீரிய ராஜாவின் தளபதியால், ஜீவனுள்ள தேவனைப்பற்றிய கெட்டசெய்திகள் சொல்லி அனுப்பப்பட்டன. உங்கள் தேவனாகிய கர்த்தர் இவை எல்லாவற்றையும் கேட்கலாம். ஒருவேளை கர்த்தர் பகைவனைத் தண்டிக்கலாம். இப்போதும் உயிரோடுள்ளவர்களுக்காக வேண்டுதல் செய்க’ என்று எசேக்கியா கூறினார்” என்றான்.

எசேக்கியா ராஜாவின் அதிகாரிகள் ஏசாயாவிடம் சென்றனர். ஏசாயா அவர்களிடம், “எசேக்கியா என்னும் உங்கள் ராஜாவிடம் இதைக் கூறுங்கள்: ‘என்னைப்பற்றி அசீரியாவின் அதிகாரிகள் வேடிக்கையாகச் சொன்னதைப்பற்றி பயப்படவேண்டாம். நான் அவனில் ஒரு ஆவியை வைப்பேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்பான். பிறகு அவன் தன் சொந்த நாட்டில் வாளால் கொல்லப்படும்படி செய்வேன்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்று சொன்னான்.

எசேக்கியாவை அசீரிய ராஜா மீண்டும் எச்சரிக்கிறான்

அசீரிய ராஜா லாகீசை விட்டுப் புறப்பட்டுவிட்டதை அசீரிய தளபதி கேள்விப்பட்டான். அவன் திரும்பி வந்து தனது ராஜா லிப்னாவில் சண்டையிடுவதாக அறிந்தான். அசீரிய ராஜா எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்காப்பற்றி ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டான். அது, “உனக்கு எதிராக சண்டையிட தீராக்கா வந்துள்ளான்!” என்று சொன்னது.

எனவே அசீரிய ராஜா மீண்டும் ஒரு தூதுவனை எசேக்கியாவிடம் அனுப்பினான். அவன் அவர்களிடம் செய்தியைச் சொன்னான். அவன் சொன்னது: 10 யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் கூறுங்கள்:

“‘நீ நம்புகின்ற தேவன் உன்னை முட்டாளாக்குவதற்கு விடாதே. அவனோ, “அசீரிய ராஜா எருசலேம் நகரை வெல்லமாட்டான்!” என்று சொல்கிறான். 11 அசீரிய ராஜா மற்ற நாடுகளில் செய்துள்ளவற்றைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாங்கள் அவற்றை முழுமையாக அழித்துவிட்டோம்! நீ காப்பாற்றப்படுவாயா? இல்லை! 12 அந்நாட்டின் தெய்வங்கள் அந்நாட்டு ஜனங்களைக் காப்பற்றவில்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். கோசான், ஆரான், ரேத்சேப், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்கள் ஆகியோரையும் அழித்தனர்! 13 ஆமாத்சின் ராஜா எங்கே? அர்பாத்தின் ராஜா எங்கே? செப்பர் வாயிம் நகர ராஜா எங்கே? ஏனா ஈவா நகரங்களின் ராஜாக்களும் எங்கே? அவர்கள் அழிக்கப்பட்டார்கள்’” என்றான்.

எசேக்கியா கர்த்தரிடம் ஜெபிக்கிறான்

14 தூதுவர்களிடமிருந்து கடிதங்களை வாங்கி எசேக்கியா வாசித்துப் பார்த்தான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். அக்கடிதத்தைக் கர்த்தருக்கு முன்பாக வைத்தான். 15 கர்த்தருக்கு முன்னால் ஜெபம் செய்து, “கர்த்தாவே! இஸ்ரவேலரின் தேவனே! கேருபீன்களின் மத்தியில் (அரசரைப்போன்று) வீற்றிருக்கிறவரே! நீர் ஒருவரே தேவன். பூமியின் அரசுகளுக்கெல்லாம் ராஜா. நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர். 16 கர்த்தாவே, நான் சொல்வதைக் கேளும். கர்த்தாவே, உமது கண்களை திறந்து இக்கடிதத்தைப் பாரும். சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்தித்து சொன்ன வார்த்தைகளைக் கேளும்! 17 கர்த்தாவே இது உண்மை. அசீரிய ராஜா இந்த ஜனங்களையும் இந்த நாடுகளையும் அழித்துவிட்டான்! 18 அவர்கள் அந்த ஜனங்களின் தெய்வங்களை நெருப்பிலே தூக்கியெறிந்தார்கள். ஆனால் அவை உண்மையில் தெய்வங்கள் அல்ல. அவை மனிதர்களால் செய்யப்பட்ட மரத்தாலும் கல்லாலும் ஆன சிலைகள். அதனால் தான் அசீரிய ராஜாக்கள் அவற்றை அழிக்க முடிந்தது. 19 எனவே இப்போது தேவனாகிய கர்த்தாவே அசீரிய ராஜாவிடமிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு பூமியிலுள்ள அனைத்து அரசுகளும் நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்ளும்” என்றான்.

தேவன் எசேக்கியாவிற்கு பதில் தருகிறார்.

20 அப்போது அமோத்சின் குமாரனான ஏசாயா எசேக்கியாவிற்கு ஒரு செய்தியை அனுப்பினான். அவன், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘நீ அசீரிய ராஜாவாகிய சனகெரிபிற்கு எதிராக செய்த ஜெபங்களை நான் கேட்டுக்கொண்டேன்’ என்று சொன்னார்” என்றான்.

21 “சனகெரிப் பற்றிய கர்த்தருடைய செய்தி இவ்வாறு இருந்தது:

“சீயோனின் (எருசலேமின்) கன்னிப் பெண் உன்னை முக்கியமாக நினைக்கவில்லை.
    உன்னைப் பற்றி கேலிச்செய்கிறாள்!
எருசலேமிலுள்ள பெண் அவளது தலையை உனக்குப் பின்னால் குலுக்குகிறாள்.
22 ஆனால் நீ அவமானப்படுத்தியதும் கேலிச்செய்ததும் யாரை?
    யாருக்கு எதிராக நீ உனது குரலை உயர்த்தியிருக்கிறாய்?
நீ இஸ்ரவேலின் பரிசுத்தமானவருக்கு எதிரானவன்!
    நீ அவரைவிடச் சிறந்தவனைப் போல் நடித்தாய்!
23 கர்த்தரை அவமானப்படுத்தவே நீ உன் தூதுவர்களை அனுப்பினாய்.
    ‘நான் ஏராளமான இரதங்களோடு மலை உச்சிகளுக்கும், லீபனோனின் உள்புறத்துக்கும் வந்தேன்.
நான் லீபனோனின் உயர்ந்த கேதுரு மரங்களையும் சிறந்த தேவதாரு மரங்களையும் வெட்டினேன்.
    நான் லீபனோனின் உயர்ந்த பகுதிகளுக்கும் அடர்ந்த காடுகளுக்கும் போனேன்.
24 நான் புதிய இடங்களில் கிணறுகளைத் தோண்டி தண்ணீரைக் குடித்தேன்.
    நான் எகிப்து ஆறுகளை வற்றச்செய்து அந்த நாட்டினில் நடந்து சென்றேன்’ என்று சொன்னாய்.

25 “இதைத்தான் நீ சொன்னாய்
ஆனால் தேவன் சொன்னதை நீ கேட்டிருக்கவில்லை.
    நான் (தேவன்) நீண்ட காலத்திற்கு முன்பே அதனைத் திட்டமிட்டேன்.
பழங்காலத்திலிருந்தே நான் அதனைத் திட்டமிட்டேன்.
    இப்போது, நிகழும்படி செய்கிறேன்.
கோட்டையமைந்த நகரங்களை அழிக்க உன்னை அனுமதித்தேன்.
    அவற்றை பாறைகளாகும்படி மாற்றினேன்.
26 அந்நகரங்களில் உள்ள ஜனங்களுக்கு சக்தி இருக்கவில்லை.
    அந்த ஜனங்கள் பயந்து, குழம்பினார்கள்.
அவர்கள் வயல் புறத்தில் வெட்டி எறியப்படப்போகிற புல்லைப் போலவும், செடியைப் போலவும் இருந்தார்கள்.
    அவர்கள் வீட்டின்மேல் வளர்ந்த செடியைப் போன்றவர்கள்.
    வளர்வதற்கு முன்பே அழிந்துப்போனவர்கள்.
27 நீ உட்கார்ந்திருப்பதையும் நான் அறிவேன்.
    நான் நீ போருக்குப்போகும் பொழுதையும் அறிவேன்.
நீ வீட்டிற்கு வந்ததையும் அறிவேன்.
    நீ என்னிடம் அலுத்துக் கொண்டதையும் அறிவேன்.
28 ஆமாம் நீ என்னிடம் அலுத்துக்கொண்டாய்.
    உனது பெருமிதமான நிந்தனைகளைக் கேட்டேன்.
எனவே நான் உனது மூக்கில் துறட்டை மாட்டுவேன்.
    நான் உனது வாயிலே எனது கடிவாளத்தை மாட்டுவேன்.
பிறகு நான் உன்னை சுற்றிவிடுவேன்.
    வந்த வழியே திரும்பிப்போகச் செய்வேன்” என்றார்.

எசேக்கியாவிற்கு கர்த்தருடைய செய்தி

29 “நான் உனக்கு உதவி செய்வேன் என்பதற்கு இதுதான் அடையாளம்: இவ்வாண்டில் நீங்கள்தானாக விளைந்த தானியங்களைத் தின்பீர்கள். அடுத்த ஆண்டு அதன் விதையில் வளர்ந்த தானியத்தை உண்பீர்கள். ஆனால் மூன்றாவது ஆண்டில் நீங்கள் பயிர் செய்தவற்றிலிருந்து தானியத்தை பெறுவீர்கள். நீங்கள் திராட்சைத் தோட்டங்களைப் பயிர்செய்து அவற்றிலுள்ள திராட்சைப் பழங்களை உண்பீர்கள். 30 யூதாவின் குடும்பத்திலிருந்து தப்பித்து பிழைத்த ஜனங்கள் மீண்டும் வளரத் தொடங்குவார்கள். 31 ஏனென்றால் சிலர் உயிரோடு இருப்பார்கள். அவர்கள் எருசலேமைவிட்டு வெளியேறுவார்கள். உயிர் பிழைத்தவர்கள் சீயோன் மலையிலிருந்து வெளியேறுவார்கள். கர்த்தருடைய உறுதியான வைராக்கியமே இதைச்செய்யும்.

32 “எனவே, அசீரிய ராஜாவைப்பற்றிக் கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்:

‘அவன் இந்நகரத்திற்குள் வரமாட்டான்.
    அவன் இந்நகரத்திற்குள் ஒரு அம்பையும் எய்யமாட்டான்.
அவன் இந்நகரத்திற்குள் கேடயங்களைக் கொண்டு வரமாட்டான்.
    அவன் இந்நகரச் சுவர்களைத் தாக்குவதற்கு கொத்தளம் அமைக்கப்போவதில்லை.
33 அவன் வந்த வழியாகவே திரும்பிப் போவான்.
    அவன் இந்நகரத்திற்குள் வரமாட்டான். இதனைக் கர்த்தர் கூறுகிறார்!
34 நான் இந்நகரத்தைப் பாதுகாத்து காப்பாற்றுவேன்.
    இதனை நான் எனக்காகவும் என் தொண்டன் தாவீதிற்காகவும் செய்வேன்.’”

அசீரியப்படை அழிந்தது

35 அன்று இரவு, கர்த்தருடைய தூதன் போய் 1,85,000 ஜனங்களை அசீரியப் படையில் கொன்று போட்டான். ஜனங்கள் காலையில் எழுந்தபோது, மரித்த உடல்களைப் பார்த்தனர்.

36 எனவே அசீரிய ராஜாவாகிய சனகெரிப் என்பவன் விலகிப்போய் நினிவே நகரத்திற்கு திரும்பிப் போனான். 37 ஒரு நாள் சனகெரிப் தனது தெய்வமான நிஸ்ரோகின், ஆலயத்தில் தொழுகை செய்துக்கொண்டிருந்தான். அப்போது அவனை அவனது குமாரர்களான அத்ரமலேக் என்பவனும் சரேத்சேர் என்பவனும் சேர்ந்து வாளால் கொன்றனர். பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஆரராத் நாட்டிற்கு ஓடினார்கள். சனகெரிப்பிற்குப் பிறகு அவனது குமாரன் எசரத்தோன் என்பவன் புதிய ராஜா ஆனான்.

எபிரேயர் 1

தேவன் தன் குமாரன் மூலமாகப் பேசியிருக்கிறார்

கடந்த காலத்தில் தேவன், தீர்க்கதரிசிகள் மூலம் நமது மக்களிடம் பேசியிருக்கிறார். அவர், பல வேறுபட்ட வழிகளிலும் பல சமயங்களிலும் பேசினார். இப்போது இந்த இறுதி நாட்களில் மீண்டும் தேவன் நம்மோடு பேசியிருக்கிறார். அவர் தன் குமாரன் மூலம் நம்மோடு பேசி இருக்கிறார். அவர் தன் குமாரன் மூலமாக இந்த முழு உலகையும் படைத்தார். எல்லாவற்றிற்கும் உரிமையாளராக தேவன் தன் குமாரனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தக் குமாரன் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய தன்மையை முழுவதுமாக வெளிக்காட்டும் உருவமாக அவர் இருக்கிறார். அவர் தனது வலிமைமிக்க கட்டளைகளினால் ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார். குமாரனானவர் மக்களைப் பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்தினார். பிறகு அவர் தேவனுடைய வலது பக்கத்தில் பரலோகத்தில் அமர்ந்தார். அவர் தேவதூதர்களைவிட மிகச் சிறந்த பெயரை தேவனிடமிருந்து பெற்றார். அவர் தேவதூதர்களை விட மிகவும் சிறப்புக்குரியவரானார்.

கீழ்க்கண்டவற்றை தேவன் ஒருபோதும் தேவதூதர்களிடம் சொன்னதில்லை,

“நீர் எனது குமாரன்,
    இன்று நான் உமக்குப் பிதா ஆனேன்.”(A)

அதோடு எந்த தேவதூதனிடமும் தேவன் இவ்வாறு சொன்னதில்லை,

“நான் அவரது பிதாவாக இருப்பேன்.
    அவர் எனது குமாரனாக இருப்பார்.”(B)

மேலும் தனது முதற்பேறான குமாரனை பூமிக்கு அனுப்புகிறபோது,

“தேவதூதர்கள் எல்லோரும் அந்தக் குமாரனைத் தொழுதுகொள்ளக்கடவர்கள்”[a]

என்று கூறினார்.

தேவன் தேவதூதர்களைப் பற்றிக் கூறும்போது,

“தேவன் தன் தேவதூதர்களைக் காற்றைப் போன்றும் தன் ஊழியர்களை நெருப்பு
    ஜூவாலைகளைப் போன்றும் செய்கிறார்”(C)

எனக் குறிப்பிடுகிறார்.

ஆனால் தேவன் தம் குமாரனைப் பற்றிச் சொல்லும்போது,

“தேவனே! உமது சிம்மாசனம் என்றென்றைக்கும் உள்ளது.
    சரியான தீர்ப்புகளால் உமது இராஜ்யத்தை நீர் ஆள்வீர்.
நீர் நீதியை விரும்புகிறீர். அநீதியை வெறுக்கின்றீர்.
    ஆகையால் தேவனே, உமது தேவன் உம்மோடு இருப்பவர்களுக்குக்
    கொடுத்ததைக் காட்டிலும் பெருமகிழ்ச்சியை உமக்குத் தந்திருக்கிறார்.”(D)

10 மேலும் தேவன்,

“கர்த்தாவே, ஆரம்பத்தில் நீர் பூமியைப் படைத்தீர்.
    மேலும் உமது கைகள் ஆகாயத்தைப் படைத்தன.
11 இவை மறைந்து போகலாம். ஆனால் நீரோ நிலைத்திருப்பீர்.
    ஆடைகளைப் போன்று அனைத்தும் பழசாகிப் போகும்.
12 நீர் அவற்றை ஒரு சால்வையைப் போல மடித்துவிடுவீர்.
    அவை ஓர் ஆடையைப் போன்று மாறும்.
ஆனால் நீரோ மாறவேமாட்டீர்.
    உமது ஜீவன் ஒருபோதும் அழியாது”(E)

என்றும் கூறுகிறார்.

13 தேவன் எந்த தேவ தூதனிடமும்,

“உமது பகைவர்களை உம்முடைய அதிகாரத்துக்குக் கீழ்க்கொண்டு வரும்வரை
    எனது வலது பக்கத்தில் உட்காரும்”(F)

என்று என்றைக்கும் சொன்னதில்லை.

14 தேவதூதர்கள் எல்லாரும், தேவனுக்கு சேவை செய்துகொண்டிருக்கிற ஆவிகள் ஆவார்கள். இரட்சிப்பைப் பெறப் போகிறவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

ஓசியா 12

கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராக இருக்கிறார்

12 எப்பிராயீம் தனது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறான். இஸ்ரவேல் நாள் முழுவதும் “காற்றைத் துரத்திக்கொண்டிருக்கிறான்.” ஜனங்கள் மேலும், மேலும் பொய்களைச் சொல்கிறார்கள். அவர்கள் மேலும், மேலும் களவு செய்கிறார்கள். அவர்கள் அசீரியாவோடு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார்கள். அவர்கள் தங்கள் ஒலிவ எண்ணெயை எகிப்துக்கு எடுத்துச் சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.

கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் இஸ்ரவேலுக்கு எதிராக ஒரு வாக்குவாதம் உண்டு. யாக்கோபு தான் செய்த செயலுக்காக தண்டிக்கப்படவேண்டும். அவன் செய்த தீயவற்றுக்காக அவன் தண்டிக்கப்படவேண்டும். யாக்போபு இன்னும் தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தன் சகோதரனோடு தந்திரம் செய்யத் தொடங்கினான். யாக்கோபு ஒரு பலமான இளைஞனாக இருந்தான். அந்தக் காலத்தில் அவன் தேவனோடு போராடினான். யாக்கோபு தேவனுடைய தூதனோடு போராடி வென்றான். அவன் உதவி கேட்டுக் கதறினான். அது பெத்தேலில் நடந்தது. அந்த இடத்தில் அவன் நம்மோடு பேசினான். ஆம், யேகோவா படைகளின் தேவன். அவரது பெயர் யேகோவா (கர்த்தர்). எனவே, உனது தேவனிடம் திரும்பி வா. அவருக்கு விசுவாசமாக இரு. நல்லவற்றைச் செய்! நீ எப்பொழுதும் உன் தேவனிடம் நம்பிக்கையாய் இரு!

“யாக்கோபு ஓர் உண்மையான வியாபாரி. அவன் தன் நண்பனைக்கூட ஏமாற்றுகிறான். அவனது தராசும் கள்ளத்தராசு. எப்பிராயீம் சொன்னான் ‘நான் செல்வந்தன்! நான் உண்மையான செல்வத்தைக் கண்டுபிடித்துள்ளேன்! எனது குற்றங்களை யாரும் கண்டுகொள்ள முடியாது. யாரும் எனது பாவங்களைத் தெரிந்து கொள்ளமாட்டான்.’

“ஆனால் நீ எகிப்து தேசத்திலிருந்த நாள் முதல், நான் உன் தேவனாகிய கர்த்தராயிருந்திருக்கிறேன், நான் உன்னைப் பண்டிகை நாட்களைப் போன்று (ஆசாரிப்பு கூடார நாட்களைப் போல்) கூடாரங்களில் தங்கச் செய்வேன். 10 நான் தீர்க்கதரிசிகளோடு பேசினேன். நான் அவர்களுக்குப் பல தரிசனங்களைக் கொடுத்தேன். எனது பாடங்களை உனக்குக் கற்பிக்கப் பல வழிகளைத் தீர்க்கதரிசிகளுக்குக் கொடுத்தேன். 11 ஆனால் கீலேயாத் ஜனங்கள் பாவம் செய்தார்கள். அந்த இடத்தில் ஏராளமான பயங்கர விக்கிரகங்கள் இருக்கின்றன. ஜனங்கள் கில்காலில் காளைகளுக்குப் பலிகளைக் கொடுக்கிறார்கள். அந்த ஜனங்களுக்கு ஏராளமான பலிபீடங்கள் இருக்கின்றன. வயல் வரப்புகளில் உள்ள கல் குவியல்களைப் போன்று வரிசை வரிசையாகப் பலிபீடங்கள் இருக்கின்றன.

12 “யாக்கோபு ஆராம் நாட்டுக்கு ஓடிப்போனான். அந்த இடத்தில் இஸ்ரவேல் ஒரு மனைவிக்காக வேலை செய்தான். இன்னொரு மனைவிக்காக அவன் ஆடு மேய்த்தான். 13 ஆனால் கர்த்தர் தீர்க்கதரிசியை உபயோகித்து இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைப் பயன்படுத்தி இஸ்ரவேலைப் பத்திரமாகப் பாதுகாத்தார். 14 ஆனால் எப்பிராயீம் கர்த்தருடைய மிகுந்த கோபத்துக்குக் காரணமாக இருந்தான். எப்பிராயீம் பலரைக் கொன்றான். எனவே அவன் தன் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படுவான். அவனது ஆண்டவர் (கர்த்தர்) அவன் அவமானம் அடையும்படிச் செய்வார்.”

சங்கீதம் 135-136

135 கர்த்தரைத் துதிப்போம்!

கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம்!
    கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
தேவனுடைய ஆலய முற்றத்தில்,
    கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    அவரது நாமத்தைத் துதியுங்கள், ஏனெனில் அது இன்பமானது.

கர்த்தர் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.
    இஸ்ரவேல் தேவனுக்கு உரியது.
கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்!
    நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!
பரலோகத்திலும், பூமியிலும், கடல்களிலும் ஆழமான.
    சமுத்திரங்களிலும், கர்த்தர் அவருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்கிறார்.
பூமியின்மேல் மேகங்களை தேவன் உண்டாக்குகிறார்.
    தேவன் மின்னலையும் மழையையும் உண்டாக்குகிறார்.
    தேவன் காற்றையும் உண்டாக்குகிறார்.

எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும்,
    எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.
எகிப்தில் தேவன் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தினார்.
    பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் தேவன் அக்காரியங்களை நிகழப்பண்ணினார்.
10 தேவன் பல தேசங்களை முறியடித்தார்.
    தேவன் வல்லமையுடைய ராஜாக்களைக் கொன்றார்.
11 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார்.
    பாஷானின் ராஜாவாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார்.
    கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.
12 தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார்.
    அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.

13 கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும்.
    கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.
14 கர்த்தர் தேசங்களைத் தண்டித்தார்.
    ஆனால் கர்த்தர் அவரது ஊழியரிடம் தயவுடையவராயிருந்தார்.

15 பிற ஜனங்களின் தெய்வங்கள் வெறும் பொன்னாலும் வெள்ளியாலுமாகிய சிலைகள் மட்டுமே.
    அவர்களின் தெய்வங்கள் ஜனங்கள் செய்த வெறும் சிலைகள் மட்டுமே.
16 சிலைகளுக்கு வாய்கள் இருந்தன, ஆனால் பேச முடியவில்லை.
    சிலைகளுக்குக் கண்கள் இருந்தன, ஆனால் பார்க்க முடியவில்லை.
17 சிலைகளுக்குக் காதுகள் இருந்தன, ஆனால் கேட்க முடியவில்லை.
    சிலைகளுக்கு மூக்குகள் இருந்தன, ஆனால் முகர்ந்துபார்க்க முடியவில்லை.
18 அச்சிலைகளைச் செய்த ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
    ஏனெனில் அச்சிலைகள் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று அவர்கள் நம்பினார்கள்.

19 இஸ்ரவேலின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
    ஆரோனின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
20 லேவியின் குடும்பமே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
    கர்த்தரைப் பின்பற்றுவோரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்!
21 கர்த்தர் சீயோனிலிருந்தும்,
    அவரது வீடாகிய எருசலேமிலிருந்தும் போற்றப்படுகிறார்.

கர்த்தரைத் துதியுங்கள்!

136 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவாதி தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

10 எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
11 தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
12 தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
13 தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
14 தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
15 தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

16 தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
17 தேவன் வல்லமையுள்ள ராஜாக்களைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
18 தேவன் பலமுள்ள ராஜாக்களைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
19 தேவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
20 தேவன் பாஷானின் ராஜாவாகிய ஓகைத் தோற்கடித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
21 தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
22 இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

23 நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
24 தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
25 தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார்.
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்!
    அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center