M’Cheyne Bible Reading Plan
யூதாவில் அசரியா அரசாண்டது
15 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 27வது ஆட்சியாண்டின் போது அமத்சியாவின் குமாரனான அசரியா யூதாவின் ராஜாவானான். 2 அசரியா அரசாள வந்தபோது அவனுக்கு 16 வயது. அவன் எருசலேமில் 52 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயார் எருசலேமின் எக்கோலியாள் ஆகும். 3 அசரியா தன் தந்தையைப் போலவே, கர்த்தர் சொன்ன சரியான வழியில் வாழ்ந்து வந்தான். அமத்சியா செயலாற்றிய விதத்திலேயே அசரியாவும் பின்பற்றிச் செயலாற்றினான். 4 இவன் பொய்த் தெய்வங்களின் ஆலய மேடைகளை அழிக்கவில்லை. அந்த இடங்களில் ஜனங்கள் தொடர்ந்து பலி கொடுத்தும், நறுமணப் பொருட்களை எரித்தும், தொழுதுகொண்டும் வந்தனர்.
5 அசரியாவிற்குத் தொழுநோய் வரும்படி கர்த்தர் செய்தார். மரிக்கும்வரை இவன் தொழுநோயாளியாகவே இருந்தான். இவன் தனி வீட்டில் வாழ்ந்தான். இவனது குமாரனான யோதாம், அரண்மனையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஜனங்களை நியாயம்தீர்த்து வந்தான்.
6 அசரியா செய்த மற்ற அருஞ்செயல்கள் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 7 அசரியா மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். அசரியாவின் குமாரனான யோதாம் அவனுக்குப் பிறகு புதிய ராஜாவானான்.
இஸ்ரவேலில் சகரியாவின் குறுகிய ஆட்சி
8 யெரொபெயாமின் குமாரனான சகரியா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலரை 6 மாத காலத்திற்கு அரசாட்சி செய்தான். இது யூதாவை அசரியா 38வது ஆண்டில் ஆளும் போது நிகழ்ந்தது. 9 கர்த்தரால் தவறானவை என்று சொல்லப்பட்ட அனைத்துக் காரியங்களையும் சகரியா செய்தான். அவன் தன் முற்பிதாக்கள் செய்த பாவங்களையே செய்தான். இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் நிறுத்தவில்லை.
10 யாபேசின் குமாரனான சல்லூம் என்பவன் சகரியாவிற்கு எதிராக திட்டம் தீட்டினான். ஜனங்களுக்கு முன்பு இப்லேயிமில் கொன்று விட்டு புதிய ராஜாவானான். 11 சகரியா செய்த மற்ற செயல்களைப்பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 12 இவ்வாறு கர்த்தருடைய வார்த்தைகள் உண்மையானது. கர்த்தர் யெகூவிடம் அவனது சந்ததியார் 4 தலைமுறையினர் இஸ்ரவேல் தேசத்தை ஆள்வார்கள் என்று கூறியிருந்தார்.
இஸ்ரவேலில் சல்லூமின் குறுகிய கால ஆட்சி
13 யாபேசின் குமாரனான சல்லூம் என்பவன், யூதா வின் ராஜாவாகிய உசியாவின் 39ஆம் ஆட்சியாண்டில் இஸ்ரவேலின் ராஜாவானான். சல்லூம் ஒரு மாதம் சமாரியாவிலிருந்து ஆண்டான்.
14 காதியின் குமாரனான மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து யாபேசின் குமாரனான சல்லூமை வெட்டிக்கொன்றான். பிறகு அவன் புதிய ராஜா ஆனான்.
15 சகரியாவுக்கு எதிராக, சல்லூம் செய்த சதிகள் உட்பட, அவனுடைய எல்லா மீதியான செயல்களைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
இஸ்ரவேலை மெனாகேம் ஆண்டது
16 சல்லூம் மரித்தபிறகு, மெனாகேம் திப்சாவையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் தோற்கடித்தான். ஜனங்கள் அவனுக்கு நகர வாசலைத் திறக்க மறுத்தனர். எனவே அவன் அவர்களைத் தோற்கடித்ததும் நகரத்திலுள்ள கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.
17 மெனாகேம் எனும் காதியின் குமாரன் இஸ்ரவேலின் புதிய ராஜா ஆனபோது, யூதாவில் அசரியாவின் 39வது ஆட்சியாண்டு நடைபெற்றது. மெனாகேம் பத்து ஆண்டுகள் சமாரியாவிலிருந்து அரசாண்டான். 18 கர்த்தரால் தவறு என்று குறிப்பிடப்பட்ட செயல்களையெல்லாம் மெனாகேம் செய்து வந்தான். இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் நிறுத்தவில்லை.
19 அசீரியாவின் ராஜாவாகிய பூல், இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிடவந்தான். மெனாகேம் அவனுக்கு 75,000 பவுண்டு வெள்ளியைக் கொடுத்தான். இவ்வாறு கொடுத்ததன் மூலம் பூலின் உதவியைப் பெற்று தனது அரசை வலுப்படுத்திக்கொண்டான். 20 அனைத்து செல்வர்களிடமும் வல்லமை உள்ளவர்களிடமும் வரி வசூல் செய்து மெனாகேம் செல்வத்தைப் பெருக்கினான். அவன் ஒவ்வொருவருக்கும் 50 வெள்ளி சேக்கல் வரி விதித்தான். பிறகு அதனை இவன் அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்து வந்தான். எனவே, அசீரியாவின் ராஜா இஸ்ரவேலில் தங்காமல் விலகிப்போனான்.
21 மெனாகேம் செய்த மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. 22 மெனாகேம் மரித்ததும் இவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பிறகு இவனது குமாரனான பெக்காகியா புதிய ராஜா ஆனான்.
இஸ்ரவேலை பெக்காகியா அரசாண்டது
23 மெனாகேமின் குமாரனான பெக்காகியா இஸ்ரவேலை சமாரியாவிலிருந்து ஆளத் தொடங்கினான். அப்போது யூதாவில் அசரியாவின் 50வது ஆட்சியாண்டு நடந்துக் கொண்டிருந்தது. பெக்காகியா இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். 24 கர்த்தரால் தவறு என்று சொல்லப்பட்ட செயல்களையெல்லாம் பெக்காகியா செய்து வந்தான். இவனும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை நிறுத்தவில்லை.
25 பெக்காகியாவின் படை அதிகாரியாக ரெமலியாவின் குமாரனான பெக்கா இருந்தான். பெக்கா பெக்காகியாவை, சமாரியா ராஜாவின் அரண்மனையிலேயே கொன்றுபோட்டான். பெக்காகியாவைக் கொன்றபொழுது பெக்காவிடம் கீலேயாத்தின் 50 ஆட்கள் இருந்தனர். பிறகு அவன் புதிய ராஜா ஆனான்.
26 பெக்காகியா செய்த மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
இஸ்ரவேலைப் பெக்கா அரசாண்டது
27 ரெமலியாவின் குமாரனான பெக்கா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலை அரசாண்டான். அப்போது யூதாவில் அசரியாவின் 52வது ஆட்சியாண்டு நடந்துக்கொண்டிருந்தது, பெக்கா 20 ஆண்டுகள் அரசாண்டான். 28 கர்த்தரால் தவறென்று சொல்லப்பட்ட செயல்களையே பெக்கா செய்துவந்தான். இவன், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை நிறுத்தவில்லை.
29 அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர், வந்து இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டான். அப்போது இஸ்ரவேலில் பெக்காவின் ஆட்சி நடந்துக்கொண்டிருந்தது. திகிலாத்பிலேசர், ஈயோன், பெத்மாக்கா எனும் ஆபேல், யனோவாக், கேதேஸ், ஆத்சோர், கீலேயாத், கலிலேயா, நப்தலியின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றி இப்பகுதியிலுள்ள ஜனங்களைச் சிறைபிடித்து அசீரியாவிற்குக் கொண்டுபோனான்.
30 ஏலாவின் குமாரனான ஒசெயா என்பவன் ரெமலியாவின் குமாரனான பெக்காவிற்கு எதிராகச் சதிசெய்தான். அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் 20ஆம் ஆட்சியாண்டில் வெட்டிக்கொன்றான். புதிய ராஜாவானான்.
31 பெக்காவின் மற்ற அருஞ்செயல்கள் அனைத்தும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
யூதாவை யோதாம் அரசாண்டது
32 உசியாவின் குமாரனான யோதாம் யூதாவின் ராஜாவானான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் குமாரனான பெக்காவின் இரண்டாவது ஆட்சியாண்டு நடந்தது. 33 யோதாம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எருசாள், இவள் சாதோக்கின் குமாரத்தி ஆவாள். 34 யோதாம் தன் தந்தை உசியாவைப் போன்று, கர்த்தர் சரி என்று சொன்னதை செய்துவந்தான். 35 ஆனால் இவன் பொய்த் தெய்வங்களின் ஆலய மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடர்ந்து அந்த இடங்களில் பலியிட்டும் நறு மணப் பொருட்களை எரித்தும் தொழுதுகொண்டும் வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள மேல் கதவைக் கட்டினான். 36 யோதாமின் மற்ற அருஞ்செயல்களெல்லாம் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
37 அப்போது, கர்த்தர் ஆராமின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனான பெக்காவையும் யூதாவிற்கு எதிராகப் போரிட அனுப்பத் தொடங்கினார்.
38 யோதாம் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரத்திலே அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பிறகு இவனது குமாரனான ஆகாஸ் என்பவன் புதிய ராஜா ஆனான்.
1 தேவனுடைய ஒரு ஊழியனும், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமான பவுல் எழுதிக்கொள்வது: தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் விசுவாசத்துக்கு உதவும் பொருட்டு நான் அனுப்பப்பட்டேன். மக்கள் உண்மையை அறிந்துகொள்ள உதவுவதற்கே நான் அனுப்பப்பட்டேன். எவ்வாறு தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை அந்த உண்மை நமக்குக் காட்டுகிறது. 2 அந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வுக்கான நம்பிக்கையின் மூலமே வருகின்றது. அவ்வாழ்க்கையை நமக்குத் தருவதாக தேவன் வாக்குறுதி அளித்திருக்கிறார். தேவன் பொய் சொல்வதில்லை. 3 சரியான நேரத்தில் உலகம் அவ்வாழ்வை அறிந்துகொள்ளுமாறு தேவன் செய்தார். தேவன் தம் போதனைகள் மூலம் இதனைச் செய்தார். அப்பணியில் என்னை நம்பியிருக்கிறார். அவற்றை நான் போதித்து வருகிறேன். ஏனென்றால், நமது இரட்சகராக இருக்கிற தேவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
4 தீத்துவுக்கு எழுதிக்கொள்வது: நாம் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிற விசுவாசத்தில் நீ எனக்கு உண்மையான குமாரனைப் போன்றவன்.
கிருபையும், சமாதானமும் பிதாவாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உண்டாவதாக.
கிரேத்தாவில் தீத்துவின் பணி
5 இன்னும் செய்யவேண்டிய பல செயல்களை நீ செய்யும்பொருட்டும் உன்னை நான் கிரேத்தாவில் ஏற்கெனவே உன்னிடம் சொன்னபடி ஒவ்வொரு நகரத்திலும் மூப்பர்களை நியமிக்கும் பொருட்டும் உன்னை அங்கே விட்டுவந்தேன். 6 மூப்பராக இருக்கிறவன் எந்தத் தவறுகளையும் செய்யாத குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாக இருக்க வேண்டும். அவனது பிள்ளைகள் விசுவாசிகளாக இருக்கவேண்டும். கொடுமைக்காரர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் அவர்கள் இருக்கக் கூடாது. 7 ஒரு மூப்பர் தேவனுடைய பணியைக் கவனிக்கும் கடமையை உடையவர். எனவே, அவருக்குத் தவறு செய்தோம் என்ற குற்ற உணர்வு இருக்கக் கூடாது. தற்பெருமையும், சுயநலமும், முன் கோபமும் இல்லாதவராக இருக்கவேண்டும். அவர் குடிகாரனாக இருக்கக் கூடாது. சண்டைப் பிரியனாக இருக்கக் கூடாது. பிறரை ஏமாற்றிச் செல்வம் சேர்ப்பவராகவும் இருக்கக்கூடாது. 8 தம் வீட்டில் அந்நிய மக்களை வரவேற்று உபசரிக்கிறவராகவும், நல்லவற்றின் மீது அன்புடையவராகவும் மூப்பர்கள் இருக்க வேண்டும். ஞானமும், நேர்மையுமாய் வாழ்பவராகவும், தூய்மையும், சுய கட்டுப்பாடும் உடையவராகவும் அவர் இருக்க வேண்டும். 9 நாம் போதிக்கின்றவற்றை மூப்பர் உண்மையிலேயே பின்பற்றுபவராக இருக்கவேண்டும். உண்மையான போதனையின் மூலம் மக்களை உற்சாகப்படுத்த முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். உண்மையான போதனைகளுக்கு எதிரானவர்களை அவர்கள் எங்கே தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வல்லமையும் வேண்டும்.
10 பலர் பணிய மறுக்கிறார்கள். அவர்கள் வீணான வார்த்தைகளைப் பேசி மக்களைத் தவறான வழியில் நடத்திச்செல்கிறார்கள். குறிப்பாக யூதரல்லாதவர்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டுமென்று சொல்கிற யூதர்களை நான் குறிப்பிடுகிறேன். 11 இத்தகையவர்களின் பேச்சு தவறானது என மக்களுக்குச் சுட்டிக்காட்டும் திறமையுடையவராக மூப்பர் இருத்தல் வேண்டும். பயனற்ற இத்தகு பேச்சுக்களைப் பேசுவதை நிறுத்த வேண்டும். எதைப் போதிக்கக் கூடாதோ அதையெல்லாம் போதித்து எல்லாக் குடும்பங்களையும் அவர்கள் அழிக்கிறார்கள். மக்களை ஏமாற்றிச் செல்வம் சேர்க்கவே அவர்கள் இவ்வாறு போதிக்கிறார்கள். 12 கிரேத்தாவில் வசிக்கும் அவர்களின் சொந்த தீர்க்கதரிசி ஒருவர் கூட, “கிரேத்தா மக்கள் பொய்யர்கள், கெட்ட மிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்” என்று கூறி இருக்கிறார். 13 அந்தத் தீர்க்கதரிசி சொன்னதெல்லாம் உண்மைதான். எனவே அவர்கள் தவறானவர்கள் என்று கூறு. அவர்களிடம் நீ கண்டிப்பாக இரு. பிறகே அவர்கள் விசுவாசத்தில் பலம் பெறுவர். 14 இவ்விதம் யூதக் கதைகளைக் கவனித்துக் கேட்பதை அவர்கள் நிறுத்துவார்கள். உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிற அவர்களின் கட்டளைகளையும் பின்பற்றுவதையும் நிறுத்துவார்கள்.
15 தூய்மையானவர்களுக்கு அனைத்தும் தூய்மையாக இருக்கும். பாவம் நிறைந்தவர்களுக்கும், நம்பிக்கை அற்றவர்களுக்கும் எதுவும் தூய்மையாக இராது. உண்மையில் அவர்களின் எண்ணங்கள் பாவம் உடையதாகும். அவர்களின் மனசாட்சி அழிக்கப்பட்டது. 16 தேவனை அறிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்களைப் பார்த்தால் அவர்கள் தேவனை ஏற்றுக்கொள்ளாதது தெரியும். அவர்கள் பயங்கரமானவர்கள். அவர்கள் அடக்கமில்லாதவர்கள், அவர்களால் நன்மை செய்ய இயலாது.
விக்கிரக ஆராதனை அழிவுக்கு வழி நடத்தும்
8 “உன் வாயிலே எக்காளத்தை வை. எச்சரிக்கை செய். கர்த்தருடைய வீட்டின் மேல் ஒரு கழுகைப் போன்றிரு. இஸ்ரவேலர்கள் எனது உடன்படிக்கையை உடைத்து விட்டார்கள். அவர்கள் எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. 2 அவர்கள், ‘எங்கள் தேவனே, இஸ்ரவேலில் உள்ள நாங்கள் உம்மை அறிவோம்!’ என்று கூப்பிடுகின்றார்கள். 3 ஆனால் இஸ்ரவேல் நன்மைகளை மறுத்தான். எனவே பகைவன் அவனைத் துரத்துகிறான். 4 இஸ்ரவேலர்கள் அவர்களது ராஜாக்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர்கள் என்னிடம் ஆலோசனைக்கு வரவில்லை. இஸ்ரவேலர்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அவர்கள் நானறிந்த மனிதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. இஸ்ரவேலர்கள் தமது வெள்ளியையும். பொன்னையும் பயன்படுத்தி தங்களுக்கு விக்கிரகங்கைளைச் செய்தார்கள். எனவே அவர்கள் அழிக்கப்படுவார்கள். 5-6 சமாரியாவே, கர்த்தர் உனது கன்றுகுட்டியை மறுத்துவிட்டார். தேவன் சொன்னார்: ‘நான் இஸ்ரவேலர்களுக்கு எதிராக மிகவும் கோபத்துடன் இருக்கிறேன்.’ இஸ்ரவேல் ஜனங்கள் தமது பாவத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள். யாரோ வேலைக்காரன் அச்சிலைகளைச் செய்தான். அவை தேவன் அல்ல. சமாரியாவின் கன்றுகுட்டி துண்டுதுண்டாக உடைக்கப்படும். 7 இஸ்ரவேலர்கள் காற்றில் விதை விதைக்க முயல்வதுபோன்ற ஒரு முட்டாள்தனமான வேலையைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் தெல்லைகளை மட்டுமே பெறுவார்கள். அவர்கள் சூறைக் காற்றை அறுவடை செய்வார்கள். வயல்களில் பயிர்கள் வளரும். ஆனால் அது தானியத்தைக் கொடுக்காது. அதில் ஏதாவது தானியம் விளைந்தாலும் அந்நியர்கள் அதனைத் தின்றுவிடுவார்கள்.
8 “இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருந்தது.
இதனுடைய ஜனங்கள் தங்கள் நாடுகளுக்குள்ளே தேவையற்ற கிண்ணத்தை வெளியே தூக்கி எறியப்படும் கிண்ணத்தைப்போல சிதறடிக்கப்பட்டார்கள்.
9 எப்பிராயீம் அவனுடைய ‘நேசர்களிடம்’ சென்றான்.
அவன் ஒரு காட்டுக்கழுதையைப் போன்று அசீரியாவில் அலைந்துத் திரிந்தான்.
10 இஸ்ரவேல் பல நாடுகளில் உள்ள தனது நேசர்களிடம் சென்றான்.
ஆனால் நான் இஸ்ரவேலர்களை ஒன்று சேர்ப்பேன்.
ஆனால் வல்லமையான ராஜா சுமத்தும் சுமைகளினால்
அவர்கள் சிறிது துன்பப்பட வேண்டும்.
இஸ்ரவேல் தேவனை மறந்து விக்கிரகங்களை வணங்குகிறது
11 “எப்பிராயீம் மேலும், மேலும் பலிபீடங்களைக் கட்டியது.
அது பாவமானது.
அப்பலிபீடங்கள் எப்பிராயீமின் பாவப் பலி பீடங்களாக இருந்திருக்கின்றன.
12 நான் எப்பிராயீமிற்காக 10,000 சட்டங்களை எழுதினாலும்,
அவன் அவற்றை யாரோ அந்நியர்களுக்குரியதாகவே கருதுவான்.
13 இஸ்ரவேலர்கள் பலிகளை விரும்புகின்றார்கள்.
அவர்கள் இறைச்சியைப் படைத்து உண்ணுகிறார்கள்.
கர்த்தர் அவர்களது பலிகளை ஏற்றுக்கொள்வதில்லை.
அவர்களது பாவங்களை அவர் நினைவில் வைத்திருக்கிறார்.
அவர்களை அவர் தண்டிப்பார்.
அவர்கள் எகிப்திற்குக் கைதிகளாகக் கொண்டுச் செல்லப்படுவார்கள்.
14 இஸ்ரவேல் ராஜாக்களின் வீடுகளைக் கட்டினார்கள். ஆனால் இஸ்ரவேல் அதனை உருவாக்கியவரை மறந்துவிட்டது.
இப்போது யூதா கோவில்களைக் கட்டுகின்றது.
ஆனால் நான் யூதவின் நகரங்களுக்கு நெருப்பை அனுப்புவேன்.
நெருப்பானது அதன் கோட்டைகளை அழிக்கும்!”
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
123 தேவனே, நான் மேலே நோக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
நீர் பரலோகத்தில் ராஜாவாக வீற்றிருக்கிறீர்.
2 தங்களுக்குத் தேவையான பொருள்களுக்காக
அடிமைகள் தங்களின் எஜமானரை சார்ந்திருக்கிறார்கள்.
அவ்வாறே, நாமும் நமது தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறோம்.
நம்மிடம் இரக்கம் காட்டுமாறு நாம் தேவனுக்காகக் காத்திருக்கிறோம்.
3 கர்த்தாவே, எங்களிடம் இரக்கமாயிரும்.
நாங்கள் நீண்டகாலம் அவமானப்படுத்தப்பட்டதால் எங்களிடம் கிருபையாயிரும்.
4 நாங்கள் வெறுப்படையும் அளவுக்கு இழிவுரைகளையும் அவமானங்களையும், சோம்பேறி ஜனங்களாகிய பெருமைக்காரர்களினால் பெற்றிருந்தோம்.
பிறரைக் காட்டிலும் தாங்கள் மேலானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல்.
124 கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
இஸ்ரவேலே, எனக்குப் பதில் கூறு.
2 ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில்
இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
3 கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை
உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
4 நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும்,
நம்மை அமிழ்த்துவிடும் நதியைப் போன்றும்
நம் பகைவர்களின் சேனைகள் நம்மிடம் நடந்துகொண்டிருக்கும்.
5 நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும்
தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள்.
6 கர்த்தரைத் துதியுங்கள்!
நம் பகைவர்கள் நம்மைப் பிடித்துக்கொல்வதற்கு கர்த்தர் அனுமதிக்கவில்லை.
7 வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம்.
வலை அறுந்தது, நாம் தப்பினோம்.
8 நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது.
கர்த்தரே பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
125 கர்த்தருக்குள் நம்பிக்கை வைக்கிறவர்கள் சீயோன் மலையைப் போன்றிருப்பார்கள்.
அவர்கள் அசைக்கப்படுவதில்லை.
அவர்கள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்கள்.
2 எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக் காப்பார்.
3 நல்ல ஜனங்களின் நாட்டைக் கொடிய ஜனங்கள் நிரந்தரமாக ஆளப்போவதில்லை.
அவ்வாறு நிகழ்ந்தால் நல்லோரும் கூட தீய காரியங்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.
4 கர்த்தாவே, நல்லோருக்கு நல்லவராக இரும்.
பரிசுத்த இருதயம் உள்ளோரிடம் நல்லவராக இரும்.
5 கொடிய ஜனங்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள்.
அக்கொடியோரை கர்த்தர் தண்டிப்பார்.
இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!
2008 by World Bible Translation Center