M’Cheyne Bible Reading Plan
இஸ்ரவேலர்களுக்கு தாவீது அரசன் ஆகிறான்
11 இஸ்ரவேலர் அனைவரும் எப்ரோன் நகரத்தில் தாவீதிடம் வந்தனர். அவர்கள் தாவீதிடம், “நாங்கள் உம்முடைய சொந்த சதையும் இரத்தமுமாய் இருக்கிறோம்.” 2 முன்பு, போரில் வழிநடத்தினீர். சவுல் அரசனாக இருந்தபோதிலும் நீர் வழி நடத்தினீர். கர்த்தர் உம்மிடம், “தாவீது, நீதான் என் இஸ்ரவேல் ஜனங்களின் மேய்ப்பனாக இருப்பாய், என் ஜனங்களின் தலைவன் ஆவாய் என்று சொன்னார்” என்றார்கள்.
3 இஸ்ரவேலரின் தலைவர்கள் அனைவரும் எப்ரோன் நகரில் தாவீதிடம் வந்தனர். தாவீது அவர்களிடம் கர்த்தருக்கு முன்பாக எப்ரோனில் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். தலைவர்கள் தாவீதுக்கு அபிஷேகம் செய்தனர். அதனால் அவன் இஸ்ரவேலருக்கு அரசன் ஆனான். கர்த்தர் சொன்னபடியே நடந்தது. கர்த்தர் அந்த வாக்குறுதியைக் கூற சாமுவேலைப் பயன்படுத்தினார்.
தாவீது எருசலேமை கைப்பற்றுகிறான்
4 தாவீதும், இஸ்ரவேல் ஜனங்களும் எருசலேம் நகரத்திற்குச் சென்றனர். அப்போது அந்நகரம் எபூசு என்று அழைக்கப்பட்டது. அங்கு வாழ்ந்த ஜனங்கள் எபூசியர் என அழைக்கப்பட்டனர். நகரத்தில் வாழ்ந்த ஜனங்கள் 5 தாவீதிடம், “எங்கள் நகருக்குள் நீ நுழைய முடியாது” என்றனர். ஆனால் தாவீது அவர்களைத் தோற்கடித்தான். தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினான். அது தாவீதின் நகரமாயிற்று.
6 தாவீது, “எவனொருவன் எபூசியரோடு போரிட வழிநடத்திச் சென்றானோ அவன் என் படை முழுவதற்கும் தளபதியாவான்” என்றான். எனவே, யோவாப் போருக்கு வழிநடத்தினான். யோவாப், செருயாவின் மகன். யோவாப் படைத் தளபதியானான்.
7 தாவீது கோட்டைக்குள் தனது வீட்டை அமைத்துக்கொண்டான். அதனால் அது தாவீதின் நகரம் என்ற பெயரைப்பெற்றது. 8 கோட்டையைச் சுற்றிலும் மில்லோவிலிருந்து சுற்றுச்சுவர்வரைக்கும் தாவீது நகரத்தை நிர்மாணித்தான். நகரத்தின் மற்ற பகுதிகளை யோவாப் பழுதுபார்த்தான். 9 தாவீது தொடர்ந்து பெரியவன் ஆனான். சர்வவல்லமையுள்ள கர்த்தர் அவனோடு இருந்தார்.
மூன்று வீரர்கள்
10 தாவீதினுடைய படைவீரர்களின் சிறப்பான தலைவர்கள் பட்டியல் இது. தாவீதின் அரசாங்கத்தில் இவ்வீரர்கள் வல்லமை உடையவர்களாக விளங்கினார்கள். இவர்களும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அவனுக்கு முழுமையாக உதவி அவனை அரசன் ஆக்கினார்கள். இதுவும் தேவன் சொன்னபடியே ஆயிற்று.
11 இதுதான் தாவீதின் விசேஷ வீரர்களின் விபரம்: அக்மோனியின் மகன் யாஷோபியாம். யாஷோபியாம், இரதப் படைத் தலைவன். இவன் தனது ஈட்டியால் ஒரே நேரத்தில் 300 பேர்களைக் கொன்றுப்போட்டான்.
12 அடுத்து அகோயைச் சேர்ந்த தோதாயின் மகன் எலெயாசார். இவன் மூன்று மாபெரும் வீரர்களில் ஒருவன். 13 எலெயாசார் தாவீதோடு பாஸ்தம்மீமில் இருந்தான். அங்கு பெலிஸ்தர்கள் போரிடுவதற்காக வந்தனர். அங்கு ஒரு வயல் முழுவதும் பார்லி பயிரிடப்பட்டிருந்தது. இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்குத் தப்பி ஓடினார்கள். 14 ஆனால் மூன்று வீரர்கள் அங்கே வயலில் நின்று தோற்கடித்தனர். இஸ்ரவேலர்களுக்கு, கர்த்தர் மாபெரும் வெற்றியைக் கொடுத்தார்.
15 ஒருமுறை, தாவீது அதுல்லாம் குகையில் இருந்தான். அப்போது பெலிஸ்தியர் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டது. முப்பது வீரர்களில் மூன்று பேர் தரையில் ஊர்ந்துப்போய் குகையில் இருந்த தாவீதை அடைந்தார்கள்.
16 இன்னொருமுறை, தாவீது கோட்டையில் இருந்தான். அப்போது பெலிஸ்தர் படைக்குழு ஒன்று பெத்லெகேமில் இருந்தது. 17 அவனது சொந்த ஊரில் உள்ள தண்ணீர் மீது அவனுக்குத் தாகம் ஏற்பட்டது. எனவே, அவன் “பெத்லேகேம் வாசல் அருகேயுள்ள கிணற்று தண்ணீர் மீது எனக்குத் தாகமாய் உள்ளது. யாராவது ஒருவர் கொண்டுவந்து தரவேண்டும் என விரும்புகிறேன்” என்றான். அவன் உண்மையில் அந்த தண்ணீரின் மீது தாகம் கொள்ளவில்லை. எனினும் அவன் அவ்வாறு பேசிக்கொண்டான். 18 ஆனால் மூன்று பேரும் பெலிஸ்தரோடு வழியில் போரிட்ட பிறகே உள்ளே நுழைய முடிந்தது. அவர்கள் பெத்லேகேம் வாசல் அருகில் உள்ள கிணற்று தண்ணீரைக் கொண்டுவந்து தாவீதிடம் கொடுத்தனர். தாவீது அதனைக் குடிக்க மறுத்துவிட்டான். அதனை கர்த்தருக்கு காணிக்கையாகத் தரையில் ஊற்றினான். 19 பிறகு தாவீது, “தேவனே! என்னால் இத்தண்ணீரைக் குடிக்கமுடியாது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து இவர்கள் இத்தண்ணீரைக் கொண்டுவந்தனர். இதனைக் குடிப்பது இவர்களின் இரத்தத்தைக் குடிப்பது போன்றதாகும்” என்றான். இதற்காகத்தான் தாவீது அந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தான். இதுபோல பல்வேறு சாகசங்களை மூன்று வீரர்களும் செய்தனர்.
தாவீதின் மற்ற வீரர்கள்
20 மூன்று வீரர்களுக்கும் தலைவனாக அபிசாய் இருந்தான். இவன் யோவாப்பின் சகோதரன். அவன் 300 வீரர்களோடு சண்டையிட்டு தன் ஈட்டியால் அவர்களைக் கொன்றான். மூன்று வீரர்களைப் போன்றே அபிசாயும் பிரபலமாக இருந்தான். 21 இவன் அவர்களைவிட இரண்டு மடங்கு பிரபலமாக இருந்தான். இவன் அவர்களில் ஒருவனாக இல்லாவிட்டாலும் இவன் அவர்களின் தலைவன் ஆனான்.
22 பெனாயா, யோய்தானின் மகன், யோய்தா ஒரு வல்லமை மிக்கவன். இவன் கப்சேயேல் ஊரான். பெனாயாவும் வல்லமைகொண்டவன். இவன் மோவாபில் உள்ள இருபலம் பொருந்திய மனிதர்களைப் போரிட்டுக் கொன்றான். ஒருமுறை பனி பெய்துகொண்டிருக்கும் சமயத்தில், அவன் ஒரு குகைக்குள்ளே சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான். 23 மேலும் அவன் ஒரு எகிப்திய வீரனையும் கொன்றான். அவன் 7 1/2 அடி உயரம் உள்ளவன். எகிப்திய வீரனிடம் இருந்த ஈட்டி மிக நீளமாகவும் கனமுள்ளதாகவும் இருந்தது. அது நெய்கிறவனின் படை மரக்கனதிபோல் பெரிதாய் இருந்தது. பெனாயாவிடம் ஒரு தடிமட்டுமே இருந்தது. பெனாயா அவனிடமுள்ள ஈட்டியைப் பிடுங்கி அதனாலேயே அவனைக் கொன்றான். 24 யோய்தாவின் மகனாகிய பெனாயா இதுபோல் பல வேலைகளைச் செய்தான். பெனாயாவும் மூன்று வீரர்களைப் போன்று பிரபலமாக இருந்தான். 25 இவன், முப்பது வீரர்களைவிடவும் பிரபலமானவன். ஆனாலும் அவன் அம்மூன்று வீரர்களுள் ஒருவன் அல்ல. தாவீது, இவனை மெய்க்காப்பாளர்களின் தலைவனாக ஆக்கினான்.
முப்பது வீரர்கள்
26 முப்பது நாயகர்களானவர்கள்:
ஆசகேல், யோவாபின் சகோதரன்; பெத்லகேமைச் சேர்ந்த தோதோவின் மகனான எல்க்கானான்.
27 ஆரோதியனான சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
28 தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,
29 ஊசாத்தியனான சிபெக்காய், ஆகோகியனான ஈலாய்,
30 நெத்தோபாத்தியனான மகராயி, நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேத்,
31 பென்யமீன் வம்சத்தானான இபேயா ஊரைச் சேர்ந்த ரிபாயின் மகனான இத்தாயி, பிரத்தோனியனான பெனாய,
32 காகாஸ் நீரோடை நாட்டானான ஊராயி, அர்பாத்தியனான அபியேல்,
33 பகரூமியனான அஸ்மாவேத், சால்போனியனான எலியாபா,
34 கீசோனியனான ஆசேமின் மகன்கள்,
35 ஆராரியனாகிய சாகியின் மகனான யோனத்தான், ஆராரியனாகிய சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் எலிபால்,
36 மெகராத்தியனான எப்பேர், பெலோனியனான அகியா,
37 கர்மேலியனான எஸ்ரோ, எஸ்பாயின் மகன் நாராயி,
38 நாத்தானின் சகோதரனான யோவேல், அகரியின் மகனான மிப்கார்,
39 அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனான நாராயி,
40 இத்தரியனான ஈரா, இத்தாரியனான காரெப்,
41 ஏத்தியனான உரியா, அக்லாயின் மகன் சாபாத்,
42 ரூபனியரின் கோத்திரத்திலிருந்து சீசாவின் மகன் அதினா, அவனோடு சேர்ந்த 30 பேர்,
43 மாகாவின் மகன் ஆனான், மிதினியனான யோசபாத்,
44 அஸ்தரேத்தியனான உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் மகன் சமா, யேகியேல்,
45 சிம்ரியின் மகன் எதியாயேல், தித்சியனான அவன் சகோதரன் யோகா,
46 மாகாவியரின் மகன் எலியேல், எல்நாமின் மகன் எலிபாய், யொசவியா, மோவாபியனான இத்மா,
47 மெசோபாயா ஊராராகிய எலியேல், ஓபேது, யாசீயேல் ஆகியோர்.
தாவீதோடு சேர்ந்த துணிச்சல்காரர்கள்
12 தாவீது சிக்லாகில் இருக்கும்போது அவனிடம் வந்தவர்களின் பட்டியல்: கீசின் மகனாகிய சவுலுக்குப் பயந்து மறைந்துகொள்ளும் காலமது. இவர்கள் போரில் தாவீதிற்கு உதவினார்கள். 2 இவர்கள் தம் வில்களிலிருந்து அம்புகளை வலது அல்லது இடது கைகளால் எய்தனர். இவர்கள் தம் வலது அல்லது இடது கைகளால் கற்களை கவண்களிலிருந்தும் எய்தனர். இவர்கள் சவுலின் உறவினர்கள், பென்யமீன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களின் பெயர்களாவன:
3 அகியேசர் எனும் தலைவன், கிபியேத்தியனான சேமாவின் மகன் யோவாசு, அஸ்மாவேத்தின் மகனான எசியேல், அஸ்மாவேத்தின் மகனான பேலேத்து, பெராக்கா, மற்றும் ஆனதோத்தியனான ஏகூ, ஆகியோர். 4 கிபியோனியனான இஸ்மாயா 30 வீரர்களில் வல்லவன்; அந்த 30 வீரர்களுக்கும் அவன் தலைவன். எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரானான யோசபாத், 5 எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா, 6 எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யாசொபெயாம் என்னும் கோரேகியனும், கோராவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். 7 யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான எரோகாமின் மகன்கள்.
காத்தியர்கள்
8 அந்த வனாந்தரத்திலே, காத்தியரின் கோத்திரத்தில் ஒரு பகுதியினர் தாவீதின் பக்கம் அவனது கோட்டைக் காவலர்களாகச் சேர்ந்துக்கொண்டனர். அவர்கள் போர் பயிற்சிகொண்டவர்கள், வலிமையுள்ளவர்கள். அவர்கள் போரில் ஈட்டியும் கேடயமும் கையாளுவதில் வல்லவர்கள். அவர்கள் சிங்கத்தைப்போன்று காட்சியளித்தார்கள். மலையிலிருந்த கசேலியர்களைப்போன்று வேகமானவர்கள்.
9 எத்சேர் படைத்தலைவன். இவன் காத்தியர் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இரண்டாம் தலைமை நிலையில் ஒபதியா இருந்தான். எலியாப் மூன்றாவது தலைமை நிலையில் இருந்தான். 10 மிஸ்மன்னா நாலாவதாகவும், எரேமியா ஐந்தாவதாகவும், 11 அத்தாயி் ஆறாவதாகவும், எலியேல் ஏழாவதாகவும், 12 யோகனான் எட்டாவதாகவும், எல்சபாத் ஒன்பதாகவும், 13 எரேமியா பத்தாவதாகவும், மக்பன்னாயி பதினோராவதாகவும் இருந்தனர்.
14 இவர்கள் காத்தியப் படைவீரர்களின் தலைவர்கள். இவர்களில் பலவீனமானவர்கள் 100 பேருக்கும் பலமுள்ளவன் 1,000 பேருக்கும் எதிராகப் போரிட வல்லவர்கள். 15 காத்தியர்களின் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்கள் யோர்தான் கரைபுரண்டு ஓடிய ஆண்டின் முதல் மாதத்தில் ஆற்றைக் கடந்தனர். அப்பள்ளத்தாக்கில் உள்ளவர்களை விரட்டி அடித்தனர். இவர்கள் அவர்களைக் கிழக்கிலிருந்து மேற்காகத் துரத்தினார்கள்.
தாவீதோடு சேர்ந்த மற்ற வீரர்கள்
16 பென்யமீன் மற்றும் யூதா கோத்திரங்களில் உள்ளவர்களும் கோட்டைக்கு வந்து தாவீதோடு சேர்ந்துகொண்டனர். 17 தாவீது அவர்களைச் சந்திக்க வெளியே வந்தான். தாவீது அவர்களிடம், “எனக்கு உதவும் எண்ணத்தோடு சமாதானமாய் வந்தால், உங்களை வரவேற்கிறேன். என்னோடு சேர்ந்துக்கொள்ளுங்கள். அவ்வாறில்லாமல் நான் ஒரு தவறும் செய்யாமல் இருக்கும்போது, என்னைக் கவனித்து எதிரிகளிடம் காட்டிக்கொடுக்க நீங்கள் வந்திருந்தால், நம் முற்பிதாக்களின் தேவன் உங்கள் தீய காரியங்களைக் கவனித்து அதற்குரிய தண்டனையைக் கொடுப்பார்” என்றான்.
18 முப்பது வீரர்களின் தலைவன் அமாசாயி, அவன் மேல் ஆவி வந்து இறங்கியது. அதனால் அவன்,
“தாவீது! நாங்கள் உம்முடையவர்கள், ஈசாயின் மகனே!
நாங்கள் உம்மோடு இருப்போம், சமாதானம், உனக்குச் சமாதானம்! ஏனென்றால் உன் தேவன் உனக்கு உதவுகிறார்!” என்றான்.
எனவே தாவீது அவர்களை வரவேற்றான். அவர்களைப் படைக்குத் தலைவர்களாக்கினான்.
19 மனாசேயின் கோத்திரத்தில் உள்ள சிலர் தாவீதோடு சேர்ந்துகொண்டனர். அவன் பெலிஸ்தர்களோடு சேர்ந்துகொண்டு சவுலுக்கு எதிராகச் சண்டை செய்யப் போனபோது மனாசே கோத்திரத்தினர் அவனோடு சேர்ந்தனர். ஆனால், தாவீதும் அவனது ஆட்களும் உண்மையில் பெலிஸ்தர்களுக்கு உதவி செய்யவில்லை. பெலிஸ்திய தலைவர்கள் தாவீது தமக்கு உதவுவதாகப் பேசிக்கொண்டனர். ஆனால், பிறகு அவனை அனுப்பிவிட முடிவு செய்தனர். இராஜாக்கள், “தாவீது தனது எஜமான் சவுலோடு போய் சேர்ந்துகொண்டால் பிறகு நமது தலைகள் அறுபடும்” என்றனர். 20 தாவீது சிக்லாகுக்குத் திரும்பிப் போகும்போது கீழ்க்கண்ட மனாசேயர்கள் அவனோடு சேர்ந்துகொண்டனர். அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி ஆகியோர். இவர்கள் மனாசே கோத்திரத்தினர். தாவீதின் படைக் குழு தலைவர்களானார்கள். 21 இவர்கள், தாவீதின் தீயவர்களுக்கு எதிராகப் போரிட உதவினார்கள். அத்தீயவர்கள் நாடு முழுவதும் சுற்றி ஜனங்களிடம் கொள்ளையடித்தனர். மனாசேயின் வீரர்கள் அனைவரும் பலசாலிகள். இவர்கள் தாவீதின் படையில் தலைவர்களானார்கள்.
22 ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வீரர்கள் தாவீதிற்கு உதவ வந்தனர். எனவே தாவீதிடம் ஒரு பெரியப் பலமிக்க படை இருந்தது.
எப்ரோனில் தாவீதோடு சேர்ந்த மற்ற வீரர்கள்
23 எப்ரோன் நகரத்தில் கீழ்க்கண்ட ஆட்கள் தாவீதோடு சேர்ந்துகொண்டனர். அவர்கள் போர் செய்ய தயாராக இருந்தனர். சவுலின் அரசைத் தாவீதிற்கு அளிப்பதற்காக அவர்கள் வந்தனர். அது கர்த்தர் சொன்னபடி நிகழ்ந்தது. இது அவர்களின் எண்ணிக்கையாகும்.
24 யூதா கோத்திரத்தில் இருந்து 6,800 பேர் போர் செய்ய தயாராயிருந்தனர். அவர்கள் ஈட்டிகளையும் கேடயங்களையும் கொண்டுவந்தனர்.
25 சிமியோனின் கோத்திரத்தில் இருந்து 7,100 பேர் வந்தனர். அவர்கள் தைரியமுள்ளவர்களாக போர் செய்யத் தயாராக இருந்தனர்.
26 லேவியின் கோத்திரத்தில் இருந்து 4,600 பேர் வந்தனர். 27 யோய்தாவும் அந்த குழுவில் உள்ளவன். இவன் ஆரோனின் கோத்திரத்தில் உள்ளவன். இவனும் தலைவன். யோய்தாவுடன் 3,700 பேர் இருந்தனர். 28 சாதோக்கும் அந்த குழுவில் இருந்தான். இவன் வீரமிக்க இளைஞன். இவன் தன் குடும்பத்தில் உள்ள 22 வீரர்களோடு வந்தான்.
29 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து 3,000 பேர் வந்தனர். இவர்கள் சவுலின் உறவினர்கள். இதுவரை இவர்கள் சவுலின் குடும்பத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.
30 எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து 20,800 பேர் வந்தனர். இவர்கள் பலமிக்க வீரர்கள். இவர்கள் தம்தம் குடும்பங்களில் பிரபலமானவர்கள்.
31 மனாசே கோத்திரத்தின் பாதிப்பிரிவில் இருந்து 18,000 பேர் வந்தனர். தாவீதை அரசனாக்குவதற்காக அவர்கள் ஒவ்வொருவராகப் பேர் சொல்லி அழைக்கப்பட்டனர்.
32 இசக்காரின் கோத்திரத்திலிருந்து 200 அறிஞர்கள் வந்தனர். இவர்கள் சரியான காலத்தில் சரியானவற்றை இஸ்ரவேலர்களுக்குச் செய்யத் தெரிந்தவர்கள். இவர்களின் உறவினர்கள் இவர்களுக்குக் கீழாக இவர்களின் கட்டளைப்படி இருந்தனர்.
33 செபுலோனின் கோத்திரத்திலிருந்து 50,000 பயிற்சிப் பெற்ற வீரர்கள் வந்தனர். இவர்கள் எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்த பயிற்சிப் பெற்றிருந்தனர். இவர்கள் தாவீதிற்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.
34 நப்தலி கோத்திரத்திலிருந்து 1,000 அதிகாரிகள் வந்தனர். இவர்களோடு 37,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் ஈட்டியையும் கேடயத்தையும் கொண்டு வந்தனர்.
35 தாணின் கோத்திரத்திலிருந்து 28,600 பேர் போர் செய்ய தயாராக இருந்தனர்.
36 ஆசேரின் கோத்திரத்திலிருந்து 40,000 பயிற்சிப் பெற்ற போர் வீரர்கள் போர் செய்ய தயாராய் இருந்தார்கள்.
37 யோர்தான் ஆற்றுக்குக் கீழ்ப்பகுயில் இருந்து 1,20,000 பேர் வந்தனர். இவர்கள் ரூபன், காத் மற்றும் பாதி மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் எல்லா வகையான ஆயுதங்களும் இருந்தன.
38 இவர்கள் அனைவரும் பலமிக்க போர் வீரர்கள். இவர்கள் தாவீதை அரசனாக்குவதற்கு சம்மதம் தெரிவித்தே எப்ரோன் நகருக்கு வந்தனர். இஸ்ரவேலில் உள்ள மற்ற ஜனங்களும் தாவீது அரசனாக வேண்டும் என எண்ணினார்கள். 39 இவர்கள் எப்ரோனில் தாவீதோடு 3 நாட்களைக் கழித்தனர். இவர்களின் உறவினர்கள் உணவு தயாரித்துக் கொடுத்ததால் இவர்கள் உண்ணுவதும், குடிப்பதுமாய் இருந்தனர். 40 இசக்கார், செபுலோன், நப்தலி ஆகிய கோத்திரங்கள் வசிக்கிற இடத்தின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கழுதைகள், ஒட்டகம், கோவேறு கழுதை, மாடுகள் மீது உணவைக் கொண்டு வந்தனர். இவர்கள் மாவு, அத்திப்பழ அடைகள், காய்ந்த திராட்சைப் பழங்கள், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.
தேவனை பிரியப்படுத்தும் வழிபாடு
13 கிறிஸ்துவுக்குள் நீங்கள் சகோதர சகோதரிகளாவீர்கள். தொடர்ந்து ஒருவரை ஒருவர் நேசியுங்கள். 2 மக்களை உங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்யுங்கள். இதனால் சிலர் அறியாமலேயே தேவ தூதர்களையும் உபசரிப்பதுண்டு. 3 நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோல் சிறையிலுள்ள மக்களை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்களே துன்பமுறுவதைப்போல், துன்பமுற்றுக் கொண்டிருப்பவர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்.
4 திருமணம் என்பது அனைவராலும் மதிக்கத்தக்கது. இது இரண்டு பேருக்கு இடையில் மிகப் பரிசுத்தமாகக் கருதப்படுகிறது. விபசாரம், சோரம் போன்ற பாலியல் குற்றங்களைச் செய்கின்றவர்களை தேவன் கடுமையாகத் தண்டிப்பார். 5 பண ஆசையில் இருந்து உனது வாழ்வை விலக்கிவை. உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்துகொள். தேவன்,
“நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்.
நான் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கூறியிருக்கிறார். (A)
6 எனவே,
“கர்த்தர் எனக்கு உதவுபவர்.
நான் அச்சப்படத் தேவையில்லை.
எவரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக நீங்கள் சொல்லலாம். (B)
7 உங்கள் தலைவர்களை நினைத்துப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைக் கற்றுத்தந்தார்கள். அவர்கள் எவ்வாறு வாழ்ந்து மடிந்தார்கள் என எண்ணுங்கள். அவர்களின் விசுவாசத்தைக் கடைப்பிடியுங்கள். 8 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், நாளையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பவர். 9 எல்லா வகையான தவறான உபதேசங்களும் உங்களைத் தவறான வழியில் செலுத்தாதபடிக்குக் கவனமாக இருங்கள். உங்கள் இதயம் தேவனுடைய கிருபையால் பலம் பெறட்டும். அது உணவு பற்றிய சட்டங்களால் நிறையாமல் இருக்கட்டும். அது உங்களுக்குப் பயன் தராது.
10 பரிசுத்த கூடாரத்தில் சேவை செய்கிற அந்த யூத ஆசாரியர்கள் இருந்து சாப்பிடும் உரிமையற்ற ஒரு பலி நம்மிடம் உண்டு. 11 பிரதான ஆசாரியர் மிருக இரத்தத்தை எடுத்துக்கொண்டு மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்லுகிறார். அவர் பாவங்களுக்காக அதனைச் செலுத்துகிறார். ஆனால் அந்த மிருகங்களின் சரீரம் வெளியே எரிக்கப்படுகிறது. 12 எனவே, இயேசுவும் நகரத்திற்கு வெளியே துன்பப்பட்டார். அவர் தன் இரத்தத்தைப் பாவத்துக்காகவே சிந்தினார். தன் மக்களைப் பரிசுத்தப்படுத்துவதற்காக இரத்தம் சிந்தி மரித்தார். 13 எனவே, நாம் கூடாரத்துக்கு வெளியே சென்று அவருடைய அவமானத்தில் பகிர்ந்துகொள்வோம். இயேசுவுக்கு நேர்ந்த அதே அவமானத்தை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 14 இந்த உலகத்தில் என்றென்றும் நிலைத்திருக்கிற ஒரு நகரம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகிற என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற நகரத்திற்காகக் காத்திருக்கிறோம். 15 எனவே, அவர் மூலமாக நம் தினசரி துதி காணிக்கையை நாம் தேவனுக்கு வழங்குவோம். அது அவர் பெயரைத் துதிக்கும் உதடுகளின் கனியாகும். 16 மற்றவர்களுக்கு நன்மை செய்யவும், பகிர்ந்துகொள்ளவும் மறக்காதீர்கள். இவையே தேவன் விரும்பும் பலியாகும்.
17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்களின் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு நடவுங்கள். அவர்கள் உங்கள் மேல் பொறுப்புள்ளவர்கள். அவர்கள் உங்கள் ஆன்மாவைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் துக்கத்தோடு அல்ல சந்தோஷத்தோடு அவற்றைச் செய்பவர்கள். நீங்கள் அவர்களுக்குப் பணியாமல் அவர்களின் பணியை கடினப்படுத்தினால் அது எவ்வகையிலும் உங்களுக்கு உதவாது.
18 எங்களுக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். சுத்தமான மனசாட்சி உடையவர்களாய் நாங்கள் இருக்கிறோம். என்றும், எப்போதும் நல்ல செயல்களையே செய்ய விரும்புகிறோம் என்றும் நாங்கள் உறுதி கூறுகிறோம். 19 உங்களிடத்தில் நான் மிக விரைவில் வருவதற்கு வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் மற்ற அனைத்தையும் விட இதனையே பெரிதும் விரும்புகிறேன்.
20-21 சமாதானத்தின் தேவன் எல்லா நன்மைகளையும் உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். எனவே அவர் விரும்புகிறபடி நீங்கள் செய்யுங்கள். தேவன் ஒருவரே தம் மந்தையின் பெரிய மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினால் எழுப்பினார். அவர் விரும்புவதை நீங்கள் செய்யும்படிக்கு ஒவ்வொரு விதமான நன்மையையும் செய்யும் திறமையை உங்களுக்கு வழங்கவேண்டும் என நான் வேண்டுகிறேன். இயேசுவுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
22 என் சகோதர சகோதரிகளே! உங்களை உற்சாகப்படுத்த நான் எழுதிய சிறு செய்தியை நீங்கள் பொறுமையுடன் கேட்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவை உங்களை பலப்படுத்தும். இது நீண்ட நிருபம் அன்று. 23 நம் சகோதரன் தீமோத்தேயு சிறைக்கு வெளியே உள்ளான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவன் மிக விரைவில் வந்து சேர்ந்தால், நாங்கள் இருவருமே சேர்ந்து உங்களைப் பார்ப்போம்.
24 உங்கள் தலைவர்களுக்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லுங்கள். இத்தாலியில் உள்ள தேவனுடைய பிள்ளைகள் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.
25 உங்கள் அனைவரோடும் தேனுடைய கிருபை இருப்பதாக.
வெட்டுக்கிளிகளின் தரிசனம்
7 கர்த்தர் என்னிடம் இதனைக் காட்டினார். அரசனின் முதல் அறுவடைக்குப் பின் இரண்டவாது விளைச்சல் தொடங்குகிற காலத்தில் அவர் வெட்டுக்கிளிகளை உருவாக்கினார். 2 வெட்டுக்கிளிகள் நாட்டிலுள்ள புல் அனைத்தையும் தின்றன. அதற்குப் பிறகு நான், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, உம்மைக் கெஞ்சுகிறேன். எங்களை மன்னியும்! யாக்கோபு உயிர்ப்பிழைக்க முடியாது. அவன் மிகவும் சிறியவன்!” என்று சொன்னேன்.
3 பிறகு கர்த்தர் இதைப்பற்றி அவரது மனதை மாற்றினார். கர்த்தர், “அந்த காரியம் நடைபெறாது” என்றார்.
நெருப்பின் தரிசனம்
4 எனது கர்த்தராகிய ஆண்டவரே, என்னிடம் இவற்றைக் காட்டினார். நான் அக்கினியாலே நியாயத்தீர்ப்புக்காகக் கூப்பிடுகிற தேவனாகிய கர்த்தரை பார்த்தேன். நெருப்பு பெரிய ஆழியை அழித்தது. நெருப்பு நாட்டை அழிக்கத் தொடங்கியது. 5 ஆனால் நான், “தேவனாகிய கர்த்தாவே, நிறுத்தும், நான் உம்மைக் கெஞ்சுகிறேன். யாக்கோபு உயிரோடு வாழ முடியாது. அவன் மிகவும் சிறியவன்!” என்றேன்.
6 பிறகு கர்த்தர் இதைப்பற்றி தம் மனதை மாற்றிக்கொண்டார். தேவனாகிய கர்த்தர், “அந்தக் காரியம் நடைபெறாது” என்றார்.
தூக்குநூலின் தரிசனம்
7 கர்த்தர் எனக்கு இதனைக் காட்டினார். கர்த்தர் ஒரு சுவரின் பக்கத்தில் தூக்கு நூலைத் தம் கரத்தில் பிடித்துக்கொண்டு நின்றார். (அச்சுவர் தூக்கு நூலினால் குறிக்கப்பட்டிருந்தது) 8 கர்த்தர், “ஆமோஸ், என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
நான், “ஒரு தூக்கு நூல்” என்றேன்.
பிறகு என் ஆண்டவர், “பார், என் இஸ்ரவேல் ஜனங்களிடம் தூக்கு நூலை நான் விடுவேன். நான் அவர்களது ‘கோணல் தன்மை’ இனிமேலும் பரிசோதனையைக் கடந்து செல்ல விடமாட்டேன். நான் அந்தக் கெட்ட பகுதிகளை நீக்குவேன். 9 ஈசாக்கின் மேடைகள் அழிக்கப்படும். இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் கற்குவியல்கள் ஆக்கப்படும். நான் யெரோபெயாம் குடும்பத்தை வாளால் தாக்கிக் கொல்வேன்” என்றார்.
அமத்சியா, ஆமோசைத் தடுக்க முயல்கிறான்
10 பெத்தேலின் ஆசாரியன் அமத்சியா இஸ்ரவேலின் அரசனான யெரோபெயாமுக்கு இச்செய்தியை அனுப்பினான். “ஆமோஸ் உனக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டுகிறான். அவன், இஸ்ரவேல் உனக்கு எதிராகப் போராட முயற்சி செய்கிறான். இந்த நாடு அவனது வார்த்தைகளையெல்லாம் சகித்துக்கொள்ளாது. 11 ஆமோஸ், ‘யெரொபெயாம் வாளால் கொல்லப்படுவான். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களது நாட்டிலிருந்து சிறைகளாகச் செல்வார்கள்’” என்று சொல்லியிருக்கிறான்.
12 அமத்சியாவும் ஆமோஸிடம் சொன்னான்: “தீர்க்கதரிசியே போ, யூதாவுக்குப் போய் அங்கு சாப்பிடு. அங்கே உனது பிரச்சாரத்தைச் செய். 13 ஆனால் இனிமேல் பெத்தேலில் தீர்க்கதரிசனம் சொல்லாதே. இது யெரோபெயாமின் பரிசுத்தமான இடம். இது இஸ்ரவேலின் ஆலயம்!”
14 பிறகு ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதில் சொன்னான். “நான் தொழில்ரீதியான தீர்க்கதரிசி இல்லை. நான் தீர்க்கதரிசியின் குடும்பத்திலிருந்து வரவில்லை. நான் மந்தையைப் பாதுகாக்கிறவன். நான் காட்டத்தி மரங்களைக் கவனித்து வருபவன். 15 நான் ஒரு மேய்ப்பன், நான் மந்தையின் பின்னால் போகிறபோது கர்த்தர் என்னை அழைத்தார். கர்த்தர், ‘போ, எனது இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறு’ என்று என்னிடம் சென்னார். 16 எனவே கர்த்தருடைய செய்தியைக் கேள், ‘இஸ்ரவேலுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம். ஈசாக்கின் குடும்பத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யாதே’ என்று நீ சொல்கிறாய். 17 ஆனால் கர்த்தர் கூறுகிறார்: ‘உன் மனைவி நகரத்தில் விபச்சாரி ஆவாள். உனது மகன்களும் மகள்களும் வாளால் கொல்லப்படுவார்கள். மற்ற ஜனங்கள் உனது நாட்டை எடுத்து தங்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள். நீ அயல் நாட்டில் மரணமடைவாய். இஸ்ரவேல் ஜனங்கள் நிச்சயமாக இந்த நாட்டை விட்டுச் சிறையெடுக்கப்படுவார்கள்.’”
இயேசுவின் பிறப்பு(A)
2 அக்காலத்தில் ரோம ஆளுகைக்குட்பட்ட எல்லா நாட்டினருக்கும் அகஸ்து இராயன் ஒரு கட்டளை அனுப்பினான். எல்லா மக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அக்கட்டளை கூறியது. 2 அதுவே முதல் பதிவாக இருந்தது. சீரியாவின் ஆளுநராக சிரேனியு இருந்தபோது அது நடந்தது. 3 எல்லா மக்களும் பதிவு செய்வதற்கென தங்கள் சொந்த நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்கள்.
4 கலிலேயாவில் உள்ள நகரமாகிய நாசரேத்தை விட்டு யோசேப்பு புறப்பட்டான். யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்னும் நகரத்துக்குச் சென்றான். பெத்லகேம் தாவீதின் நகரம் ஆகும். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையால் யோசேப்பு அங்கு சென்றான். 5 மரியாள் அவனைத் திருமணம் செய்யும்பொருட்டு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் சேர்ந்து பதிவு செய்துகொண்டனர். (அந்தச் சமயத்தில் மரியாள் கருவுற்றிருந்தாள்.) 6 யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் இருந்தபோது மரியாளின் குழந்தைப் பேற்றுக்காலம் நெருங்கியது. 7 அவள் தன் முதல் மகனைப் பெற்றெடுத்தாள். விடுதிகளில் அறைகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மரியாள் குழந்தையைத் துணிகளால் சுற்றி ஆடுமாடுகள் உணவு உண்ணும் ஓர் இடத்தில் வைத்தாள்.
மேய்ப்பர்களின் வருகை
8 அந்த இரவில் சில மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கள் ஆடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். 9 தேவதூதன் அம்மேய்ப்பர்கள் முன்னே தோன்றினான். கர்த்தரின் மகிமை அவர்களைச் சுற்றிலும் ஒளிவீசியது. மேய்ப்பர்கள் மிகவும் பயந்தனர். 10 தூதன் அவர்களை நோக்கி, “பயப்படாதீர்கள். நான் உங்களுக்கு ஒரு நற்செய்தியைக் கூறப் போகிறேன். அது எல்லாரையும் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கும். 11 தாவீதின் நகரில் இன்று உங்கள் இரட்சகர் பிறந்துள்ளார். அவரே கிறிஸ்துவாகிய கர்த்தர். 12 ஒரு குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு ஆடுமாடுகள் உணவுண்ணும் இடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவே நீங்கள் அவரை அறிந்துகொள்ளுவதற்குரிய அடையாளம்” என்றான்.
13 அதே சமயத்தில் ஒரு பெரிய கூட்டமான தூதர்கள் பரலோகத்திலிருந்து வந்து முதல் தூதனோடு சேர்ந்துகொண்டார்கள். எல்லா தூதர்களும்,
14 “பரலோகத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
பூமியில் தேவனை பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்”
என்று சொல்லி தேவனைப் போற்றினார்கள்.
15 தூதர்கள் மேய்ப்பர்களிடமிருந்து கிளம்பி மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார்கள். மேய்ப்பர்கள் ஒருவருக்கொருவர், “நாம் பெத்லகேமுக்குப் போய் கர்த்தரால் நமக்குத் தெரிவிக்கப்பட்ட இக்காரியத்தைக் காண்போம்” என்று கூறிக்கொண்டனர்.
16 எனவே மேய்ப்பர்கள் வேகமாகச் சென்று மரியாளையும் யோசேப்பையும் கண்டனர். குழந்தை ஆடுமாடுகள் உணவு உண்ணும் இடத்தில் படுத்திருந்தது. 17 மேய்ப்பர்கள் குழந்தையைப் பார்த்தனர். பின்பு தூதர்கள் குழந்தையைக்குறித்துக் கூறியவற்றை அவர்களுக்குச் சொன்னார்கள். 18 மேய்ப்பர்கள் கூறியவற்றைக் கேட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். 19 மரியாள் அவற்றைத் தன் இதயத்தில் வைத்துக்கொண்டாள். அவள் அவற்றைக்குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். 20 தாங்கள் கண்டவற்றிற்காகவும் கேட்டவற்றிற்காகவும் தேவனை வாழ்த்திக்கொண்டும், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டும், மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகள் இருந்த இடத்திற்குச் சென்றனர். தூதர்கள் அவர்களிடம் கூறியபடியே அனைத்தும் நடந்திருக்கக் கண்டனர்.
21 குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனதும், விருத்தசேதனம் செய்யப்பட்டது. அதற்கு “இயேசு” என்று பெயரிட்டனர். மரியாளின் கரு உருவாகுமுன்னே தூதன் குழந்தைக்கு வைத்த பெயர் இதுவேயாகும்.
தேவாலயத்தில் இயேசு
22 குழந்தை பெற்ற பெண் சுத்தமாகும் [a] பொருட்டு மோசேயின் விதிகள் கூறியவற்றைச் செய்யும்படியான காலம் வந்தது. யோசேப்பும், மரியாளும், இயேசுவை தேவனிடம் அர்ப்பணிக்குமாறு எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். 23 தேவனுடைய பிரமாணத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: “வீட்டின் முதற்பேறான மகன் பிறந்ததும் அவன், ‘தேவனுக்கு விசேஷமானவனாகக் கருதப்படுவான்.’”c 24 “இரண்டு காட்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகக் கொடுக்கக்வேண்டும்”d என்றும் கூறுகிறது. எனவே இதைச் செய்வதற்காக யோசேப்பும், மரியாளும் எருசலேமுக்குச் சென்றனர்.
சிமியோன் இயேசுவைக் காணல்
25 எருசலேமில் சிமியோன் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் வாழ்ந்தான். அவன் நல்லவனும், பக்திமானுமாக இருந்தான். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உதவும் காலத்தை சிமியோன் எதிர்பார்த்திருந்தான். பரிசுத்த ஆவியானவர் அவனோடு இருந்தார். 26 கர்த்தரிடமிருந்து வரும் கிறிஸ்துவைக் காணுமட்டும் அவன் மரிப்பதில்லை என்று பரிசுத்த ஆவியனவர் சிமியோனுக்குக் கூறியிருந்தார். 27 ஆவியானவர் சிமியோனை தேவாலயத்திற்குள் அழைத்து வந்தார். செய்யவேண்டியவற்றை நிறைவேற்றுவதற்காக மரியாளும், யோசேப்பும் தேவாலயத்திற்குள் சென்றனர். அவர்கள் குழந்தையாகிய இயேசுவை தேவாலயத்திற்குள் கொண்டு வந்தனர். 28 சிமியோன் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக்கொண்டு,
29 “ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும்.
30 நீர் நல்கும் இரட்சிப்பை என் கண்களால் கண்டேன்.
31 நீர் அவரை எல்லா மக்களுக்கும் முன்பாக ஆயத்தப்படுத்தினீர்.
32 யூதரல்லாத மக்களுக்கு உம் வழியைக் காட்டும் ஒளி அவர்.
உம் மக்களாகிய இஸ்ரவேலுக்கு பெருமையை அவர் தருவார்”
என்று தேவனுக்கு நன்றி செலுத்தினான்.
33 இயேசுவின் தந்தையும், தாயும் சிமியோன் இயேசுவைக் குறித்துக் கூறியதைக் கேட்டு வியந்தனர். 34 சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து இயேசுவின் தாயாகிய மரியாளிடம், “இந்தப் பாலகனின் நிமித்தமாக யூதர்கள் விழுவர்; பலர் எழுவர். சிலரால் ஏற்றுக்கொள்ளப்படாத தேவனின் அடையாளமாக இவர் இருப்பார். 35 இரகசியமாக மக்கள் நினைப்பவை வெளியரங்கமாகும். நடக்கவிருக்கும் காரியங்கள் உங்கள் மனதை மிகவும் துக்கப்படுத்தும்” என்றான்.
அன்னாள் இயேசுவைக் காணல்
36 தேவாலயத்தில் அன்னாள் என்னும் பெண் தீர்க்கதரிசி இருந்தாள். அவள் ஆசேர் என்னும் கோத்திரத்தைச் சார்ந்த பானுவேல் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவள். அன்னாள் வயது முதிர்ந்தவள். அவள் திருமணமாகித் தன் கணவனுடன் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவள். 37 பின் அவள் கணவன் இறந்து போனான். அவள் தனித்து வாழ்ந்து வந்தாள். அவள் எண்பத்து நான்கு வயது முதியவளாக இருந்தாள். அன்னாள் எப்போதும் தேவாலயத்திலேயே இருந்தாள். அவள் உபவாசமிருந்து இரவும் பகலும் தேவனை வழிபட்டுக்கொண்டிருந்தாள்.
38 தேவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம் அன்னாளும் அப்போது அங்கே இருந்தாள். தேவன் எருசலேமுக்கு விடுதலை அருள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த எல்லா மக்களுக்கும் அவள் இயேசுவைக் குறித்துக் கூறினாள்.
யோசேப்பும் மரியாளும் வீடு திரும்பல்
39 தேவனின் பிரமாணம் கட்டளையிட்டபடியே அனைத்துக் காரியங்களையும் யோசேப்பும், மரியாளும் செய்து வந்தனர். பின்னர் கலிலேயாவில் உள்ள தங்கள் சொந்த நகரமாகிய நாசரேத்திற்குத் திரும்பினர். 40 சிறு பாலகன் வளர்ந்து வந்தார். அவர் வல்லமையும், ஞானமும் உடையவரானார். தேவனின் ஆசீர்வாதம் அவரோடிருந்தது.
சிறுவனாக இயேசு
41 ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்காக இயேசுவின் பெற்றோர் எருசலேமுக்குச் சென்று வந்தனர். 42 வழக்கம் போலவே இயேசு பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் அப்பண்டிகைக்குச் சென்றனர். 43 பண்டிகை நாட்கள் முடிந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். அவர்களுக்குத் தெரியாமலேயே இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். 44 யோசேப்பும், மரியாளும் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தனர். இயேசு கூட்டத்தினரோடுகூட இருப்பதாக அவர்கள் எண்ணினர். சுற்றத்தார்களிடையேயும், நெருங்கிய நண்பர்களிடமும் இயேசுவைத் தேட ஆரம்பித்தனர். 45 ஆனால் யோசேப்பும் மரியாளும் கூட்டத்தில் இயேசுவைக் காணாததால் அவரைத் தேடும்பொருட்டு எருசலேமுக்குத் திரும்பினர்.
46 மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரைக் கண்டனர். மத போதகர்கள் கூறுவதைக் கேட்பதும் அவர்களிடம் வினா எழுப்புவதுமாக இயேசு தேவாலயத்திற்குள் அமர்ந்திருந்தார். 47 எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டனர். அவரது புரிந்துகொள்ளும் திறனையும் ஞானம் நிரம்பிய பதில்களையும் உணர்ந்து அவர்கள் வியந்தனர். 48 இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கண்டதும் வியப்புற்றனர். அவரது தாய் அவரை நோக்கி, “மகனே, நீ ஏன் இதை எங்களுக்குச் செய்தாய்? உனது தந்தையும் நானும் உன்னை நினைத்துக் கவலைப்பட்டோமே. நாங்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம்” என்றாள்.
49 இயேசு அவர்களை நோக்கி, “ஏன் என்னைத் தேடினீர்கள்? எனது பிதாவின் வேலை இருக்கிற இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!” என்றார். 50 அவர் கூறியதன் ஆழமான உள் பொருளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
51 இயேசு அவர்களோடு நாசரேத்துக்குச் சென்றார். அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார். அவரது தாய் நடந்த எல்லாவற்றைக் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தாள். 52 இயேசு மேலும் மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார்.
2008 by World Bible Translation Center