M’Cheyne Bible Reading Plan
யூதாவில் எசேக்கியா அரசாள தொடங்கியது
18 எசேக்கியா என்பவன் யூத அரசன் ஆகாஸின் மகன் ஆவான். இவன் ஆளத்தொடங்கும்போது இஸ்ரவேலில் ஏலாவின் மகன் ஓசெயா என்பவனின் மூன்றாம் ஆட்சியாண்டு நிகழ்ந்தது. 2 எசேக்கியா அரசாள வந்தபோது அவனுக்கு 25 வயது. இவன் எருசலேமில் 29 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் ஆபி ஆகும். இவள் சகரியாவின் மகளாவாள்.
3 எசேக்கியா தனது முற்பிதாவான தாவீதைப்போன்றே கர்த்தர் சொன்ன சரியான செயல்களைச் செய்துவந்தான்.
4 எசேக்கியா மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயத்தை அழித்தான். அவர்களின் ஞாபகக் கற்களையும்கூட உடைத்தான். அசெரியாவின் உருவத் தூண்களை வெட்டிப்போட்டான். மோசே செய்த வெண்கல பாம்பை உடைத்துப் போட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். இவ்வெண்கலப் பாம்பானது “நிகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அன்றுவரை இஸ்ரவேலர்கள் இந்த வெண்கலப் பாம்பை தொழுதுவந்தனர்.
5 அவன் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்தான். யூதாவின் அரசர்கள் அனைவரிலும் எசேக்கியாவைப் போன்று அவனுக்கு முன்னும் அவனுக்குப் பின்னும் ஆட்கள் இல்லை. 6 எசேக்கியா கர்த்தருக்கு மிகவும் நம்பிக்கை உள்ளவனாக இருந்தான். இவன் கர்த்தரைப் பின்பற்றுவதை விடவில்லை. மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்கும் அவன் கீழ்ப்படிந்து வந்தான். 7 கர்த்தரும் எசேக்கியாவோடு இருந்தார். எசேக்கியா தான் செய்கிற அனைத்திலும் வெற்றிகரமாக இருந்தான்.
எசேக்கியா அசீரியாவின் ஆட்சித் தலையை விட்டு பிரிந்து, அசீரியாவின் அரசனுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டான். 8 எசேக்கியா பெலிஸ்தியர்களைத் தோற்கடித்தான். காசாவரையும் அதன் சுற்று வட்டாரங்களையும் வென்றான். பெலிஸ்தியரின் சிறியதும் பெரியதுமான (கோட்டையமைந்த) நகரங்களையெல்லாம் தோற்கடித்துவிட்டான்.
அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றியது
9 அசீரியாவின் அரசனான சல்மனாசார் சமாரியாவிற்கு எதிராகச் சண்டையிட்டான். அவனது படை நகரத்தைச் சுற்றிக் கொண்டது. யூதாவில் எசேக்கியாவின் நான்காம் ஆட்சியாண்டின்போது இது நடந்தது. (இது இஸ்ரவேல் அரசனான ஏலாவின் மகன் ஓசேயாவின் ஏழாம் ஆட்சியாண்டு.) 10 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சல்மனாசார் சமாரியாவைக் கைப்பற்றினான். யூத அரசனான எசேக்கியாவின் ஆறாம் ஆட்சியாண்டில் சமாரியாவை இவன் பிடித்துக்கொண்டான். (இது இஸ்ரவேல் அரசனான ஓசேயாவின் ஒன்பதாம் ஆட்சியாண்டு) 11 அசீரியாவின் அரசன் இஸ்ரவேலர்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசென்றான். அவன் அவர்களை கோசான் ஆற்றோரங்களிலுள்ள ஆலாக், ஆபோர், மேதியரின் நகரங்கள் ஆகியவற்றில் குடியேற்றினான். 12 இஸ்ரவேலர்கள் தமது தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியாததால் இது இவ்வாறு நிகழ்ந்தது. அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கையை உடைத்தனர். அவர்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டவற்றுக்கு அடிபணியவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய உடன்படிக்கையைக் கேட்காததோடு, அதனை அவர்கள் கைக்கொள்ளவில்லை.
அசீரியா யூதாவைப் பிடிக்கத் தயாராகிறது
13 எசேக்கியாவின் 14வது ஆட்சியாண்டின்போது சனகெரிப் எனும் அசீரியாவின் அரசன், யூதாவிலுள்ள கோட்டையமைந்த நகரங்கள் அனைத்திலும் தாக்குதல் நடத்தினான். இவன் எல்லா நகரங்களையும் தோற்கடித்தான். 14 பிறகு யூதாவின் அரசனான எசேக்கியா, லாகீசிலிருந்த அசீரியாவின் அரசனுக்கு தூது அனுப்பினான். அவன், “நான் தவறு செய்துவிட்டேன். என்னை தனியாகவிட்டுவிடுங்கள். பிறகு உங்களுக்கு வேண்டியதை நான் தருவேன்” என்றான்.
பிறகு அசீரியாவின் அரசன் யூத அரசனான எசேக்கியாவிடம் 300 தாலந்து வெள்ளியையும் 30 தாலந்து பொன்னையும் கட்டும்படி கூறினான். 15 கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள வெள்ளி முழுவதையும் எசேக்கியா கொடுத்தான் 16 அப்பொழுது, கர்த்தருடைய ஆலய வாசலில் உள்ள கதவுகளிலும் நிலைகளிலும் தான் பதித்திருந்த பொன்னையும் எடுத்து அசீரிய அரசனுக்குக் கொடுத்தான்.
அசீரியாவின் அரசன் எருசலேமிற்கு ஆட்களை அனுப்புகிறான்
17 அசீரியாவின் அரசன் தனது மூன்று மிக முக்கியமான படைத்தளபதி உள்ளப் பெரும்படையோடு எருசலேமிற்கு எசேக்கியா அரசனிடம் அனுப்பினான். அவர்கள் லாகீசிலிருந்து எருசலேமிற்குச் சென்றனர். அவர்கள் வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்து வாய்க்காலில் நின்றனர். 18 அவர்கள் அரசனை வரவழைத்தார்கள். அப்பொழுது இல்க்கியாவின் மகனான எலிகாக்கீம் எனும் அரண்மனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும் ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் எனும் கணக்கனும் அவர்களை சந்திக்கப் போனார்கள்.
19 தளபதிகளில் ஒருவன் (அவனுக்கு ரப்சாக்கே என்ற பட்டம் இருந்தது) அவர்களிடம், “மாபெரும் அசீரிய அரசன் சொன்னதை எசேக்கியாவிடம் கூறவும்” என்று சொன்னான். அவை வருமாறு:
“எதன் மேல் உன் நம்பிக்கையை வைத்திருக்கிறாய்? 20 நீ, வீணான வார்த்தைகளையே பேசுகிறாய். நீ, ‘போருக்கான ஆலோசனையும் பலமும் உண்டு’ என்று சொல்கிறாயா! நீ எனக்கு எதிராகக் கலகம்செய்ய, யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாய்? 21 உடைந்த நாணல் புல்லால் ஆன கைத்தடியை நம்புகிறாய். எகிப்து இத்தகைய கைத் தடியைப் போன்றது! ஒருவன் இக்கைத்தடியின் மீதே முழுக்கச் சாய்ந்தால், அதுவும் உடையும் கையைக் கிழித்து காயத்தை உருவாக்கும். எகிப்தும் தன்னை நம்புகிறவர்களுக்கு இவ்வாறே செய்து வருகிறது. 22 ஒருவேளை நீ, ‘எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம்’ என்று சொல்லலாம். ஆனால் எசேக்கியா கர்த்தருடைய மேடைகளையும் பலிபீடங்களையும் அகற்றினான். அவன் யூதாவையும் எருசலேமையும் நோக்கி, ‘எருசலேமில் உள்ள பலிபீடத்தின் முன் மட்டுமே ஆராதிக்க வேண்டும்’ என்று கூறினானே.
23 “இப்பொழுது எங்கள் எஜமானனான அசீரிய அரசனோடு இந்த ஒப்பந்தம் செய்துகொள். நான் 2,000 குதிரைகளை உன்னிடம் போதுமான சவாரி செய்பவர்கள் இருந்தால் கொடுப்பதாக உறுதி கூறுகிறேன். 24 உன்னால் எங்கள் எஜமானனின் அதிகாரிகளைக் கூட வெல்லமுடியாது! இரதங்களுக்கும் குதிரை வீரர்களுக்கும் நீங்கள் எகிப்தைச் சார்ந்து இருக்கவேண்டும்!
25 “நான் கர்த்தருடைய துணை இல்லாமல் எருசலேமை அழிக்க வரவில்லை. கர்த்தர் என்னிடம், ‘அந்த நாட்டிற்கு எதிராகப் போய் அதனை அழித்துவிடு!’ என்றார்” என்று சொன்னான்.
26 அப்போது இல்க்கியாவின் மகனான எலியாக், செப்னா, யோவாக் மூவரும் தளபதியான ரப்சாக்கேயைப் பார்த்து, “எங்களோடு தயவு செய்து ஆராமிக் மொழியில் பேசும். அந்த மொழிதான் எங்களுக்குப் புரியும். யூதமொழியில் எங்களோடு பேசவேண்டாம். ஏனெனில் சுவரிலுள்ள ஜனங்களின் காதுகளும் அவற்றைக் கேட்கும்!” என்றார்கள்.
27 ஆனால் ரப்சாக்கே அவர்களிடம், “எனது ஆண்டவன் உங்களிடமும் உங்கள் அரசரிடமும் மட்டும் பேச அனுப்பவில்லை. சுவருக்கு மேலேயுள்ள ஜனங்களுடனும் நான் பேசுகிறேன்! அவர்கள் உங்களோடு தங்கள் மலத்தைத் தின்று சிறுநீரைக் குடித்துக்கொள்வார்கள்!” என்றான்.
28 பிறகு தளபதி யூத மொழயில் மிகச் சத்தமாக,
“இச்செய்தியை கேளுங்கள்! அசீரியாவின் மிகப் பெரிய அரசன் உங்களுக்குச் செய்தி அனுப்பியுள்ளான். 29 அரசன், ‘எசேக்கியா உங்களை முட்டாளாக்கும்படி விடாதீர்கள்! எனது பலத்திலிருந்து உங்களை அவனால் காப்பாற்ற முடியாது!’ என்கிறான். 30 அதுபோல் கர்த்தர் மீது நம்பிக்கையை அவன் ஏற்படுத்தும்படியும் விடாதீர்கள். ஏனென்றால் எசேக்கியா, ‘கர்த்தர் நம்மைக் காப்பாற்றுவார்!. இந்நகரத்தை அசீரிய அரசனால் தோற்கடிக்க முடியாது!’ என்று கூறுகிறான்.
31 ஆனால் அவன் கூறுவதைக் கேட்கவேண்டாம்! “அசீரிய அரசன்: என்னோடு சமாதானமாக இருங்கள். என்னோடு வெளியே வாருங்கள். பிறகு ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைபழங்களைத் தின்னலாம், அத்திப்பழங்களைத் தின்னலாம், சொந்தக் கிணற்றிலுள்ளத் தண்ணீரைக் குடிக்கலாம். 32 நீங்கள் இதனை நான் உங்களை அழைத்துப்போய் இதுபோன்ற இன்னொரு நாட்டில் குடியேற்றும்வரை செய்யலாம். அந்த நிலம் தானியங்களும் திராட்சைரசமும் நிறைந்தது, அப்பமும் திராட்சைக் கொடிகளும் நிறைய ஒலிவமரமும் தேனும் நிறைந்தது. பிறகு நீங்கள் மரிக்க வேண்டாம், வாழலாம்.
“எசேக்கியா கூறுவதை கேளாதீர்கள். அவன் உங்கள் மனதை மாற்ற முயல்கிறான். அவனோ, ‘கர்த்தர் நம்மைக் காப்பார்’ என்கிறான். 33 இது போல் வேறு எந்த நாட்டிலாவது அங்குள்ள தேவர்கள் அந்த நாட்டை அசீரிய அரசனிடமிருந்து காப்பாற்றி இருக்கிறதா? இல்லையே! 34 ஆமாத் மற்றும் அர்பாத் எனும் தெய்வங்கள் என்ன ஆனார்கள்? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் நகரங்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என்றைக்காவது காப்பாற்றியதுண்டா? இல்லை! 35 வேறு எந்த நாட்டிலேனும் வேறு எந்த தெய்வங்களும் என்னிடமிருந்து அந்நாட்டைக் காப்பற்றியதுண்டா? இல்லை! கர்த்தர் என்னிடமிருந்து எருசலேமைக் காப்பாற்றுவாரா? காப்பாற்ற முடியாது” என்றான்.
36 ஆனால் ஜனங்கள் அமைதியாக இருந்தனர். அவர்கள் தளபதிக்கு ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஏனென்றால் அரசனான எசேக்கியா அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். அவன், “நீங்கள் அவனுக்கு எதையும் சொல்லவேண்டாம்” என்று கூறி இருந்தான்.
37 இல்க்கியா என்பவனின் மகனான எலியாக்கீம், (அரசனின் அரண்மனைக்குப் பொறுப்பானவன் எலியாக்கீம்.) செப்னா (செயலாளர்) ஆகாப் என்பவனின் மகன் யோவாக் (பதிவேடுகள் பாதுகாப்பாளர்) எல்லாரும் எசேக்கியாவிடம் வந்தார்கள். அவர்களின் ஆடைகள் கிழிந்தவை. (அவர்களின் துக்கத்தையும் கவலையையும் காட்டியது) ஆசாரியன் தளபதி சொன்னதையெல்லாம் எசேக்கியாவிடம் அவர்கள் சொன்னார்கள்.
1 இயேசு கிறிஸ்துவுக்காக சிறைப்பட்டிருக்கிற பவுலும் சகோதரனாகிய தீமோத்தேயுவும் எழுதுவது,
எங்கள் அன்புக்குரிய நண்பனும் எங்களோடு பணியாற்றுகிறவனுமாகிய பிலேமோனுக்கு எழுதுவது: 2 எங்கள் சகோதரியாகிய அப்பியாவுக்கும், எங்களோடுள்ள ஊழியனாகிய அர்க்கிப்புவுக்கும் உங்கள் வீட்டிலே கூடி வருகிற சபைக்கும் எழுதுவது:
3 நமது பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாகட்டும்.
பிலேமோனின் அன்பும் விசுவாசமும்
4 என் பிரார்த்தனைகளில் உங்களை நினைத்துக்கொள்கிறேன். நான் எப்போதும் உங்களுக்காக தேவனிடம் நன்றி செலுத்துகிறேன். 5 கர்த்தராகிய இயேசுவிடம் நீங்கள் கொண்ட விசுவாசத்தையும் தேவனுடைய பரிசுத்தமான அனைத்து மக்களிடமும் நீங்கள் கொண்ட அன்பையும் பற்றி நான் கேள்விப்படுகிறேன். உங்கள் விசுவாசத்துக்கும் அன்புக்கும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 6 இயேசுவில் நாம் கொண்டுள்ள எல்லா நல்லவற்றையும் நீங்கள் புரிந்துகொள்ள, நீங்கள் பகிர்ந்துகொள்ளும் விசுவாசம் உதவட்டும் என நான் பிரார்த்திக்கிறேன். 7 எனது சகோதரனே! தேவனுடைய மக்களிடம் நீ அன்பாக இருந்தாய். அவர்களை மகிழ்ச்சிகொள்ளச் செய்தாய். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறது.
சகோதரனைப் போல ஏற்றுக்கொள்
8 நீங்கள் செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன. நான் உங்களுக்குக் கட்டளையிட முடியும். கிறிஸ்துவில் நம்முடைய உறவானது அப்படிச் செய்யும் உரிமையைக் கொடுக்கிறது என நான் உணருகிறேன். 9 ஆனால், நான் உங்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக அன்பினிமித்தம் நான் இவற்றைச் செய்யுமாறு உங்களை கேட்கிறேன். நான் பவுல். இப்போது நான் ஒரு முதியவன். இயேசு கிறிஸ்துவுக்காகச் சிறைப்பட்டவன். 10 என் மகன் ஒநேசிமுக்காக உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நான் சிறையில் இருந்தபோது அவன் எனக்கு விசுவாசத்தில் மகன் ஆனான். 11 கடந்த காலத்தில் அவன் உங்களுக்குப் பயனற்றவனாக இருந்தான். ஆனால் இப்பொழுதோ அவன் உங்களுக்கும் எனக்கும் பயனுள்ளவன்.
12 நான் அவனை உங்களிடம் மீண்டும் அனுப்புகிறேன். அவனுடன் என் இதயத்தையும் சேர்த்து அனுப்புகிறேன். 13 நற்செய்திக்காகச் சிறைப்பட்டிருக்கிற எனக்கு சேவை செய்வதற்காக அவனை என்னோடு வைத்திருக்க விரும்பினேன். எனக்குக் கிடைக்கும் அவன் உதவி எனக்கு உதவுவதன்மூலம் உண்மையில் உங்களிடமிருந்து வருகிறது. 14 ஆனால் முதலில் உங்களைக் கேட்டுக்கொள்ளாமல் நான் எதையும் செய்ய விரும்பவில்லை. அதற்குப் பின்பு எனக்காக நீங்கள் செய்கிற நல்ல காரியங்கள், என்னுடைய வற்புறுத்தலுக்காக அல்லாமல் நீங்களாகவே விரும்பிச் செய்தவையாக இருக்கும்.
15 கொஞ்சக் காலமாக ஒநேசிமு உங்களை விட்டுப் பிரிந்திருந்தான். ஒருவேளை என்றென்றைக்குமாக நீங்கள் அவனைத் திரும்பப் பெறும் பொருட்டு இது நிகழ்ந்தது. 16 இனிமேல் ஒரு அடிமையாக அல்ல, அடிமைக்கும் மேலானவனாக, அன்புகுரிய சகோதரனாக இருப்பான். நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் அதைவிட மேலாக நேசிக்க வேண்டும். கர்த்தருக்குள் அவனை மனிதனாகவும் நல்ல சகோதரனாகவும் நீங்கள் நேசிக்கவேண்டும்.
17 நீங்கள் என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால், பிறகு அவனையும் திரும்பவும் ஏற்றுக்கொள்ளுங்கள். என்னை வரவேற்பது போலவே அவனையும் வரவேற்றுக்கொள்ளுங்கள். 18 அவன் உங்களிடம் ஏதாவது ஒருவகையில் செய்த குற்றங்களையும் கடன்களையும், என் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். 19 நான் பவுல். நானே என் கையால் உங்களுக்கு இதனை எழுதுகிறேன். நான் ஒநேசிமுவின் கடனைத் தீர்த்துவிடுவேன். உங்கள் வாழ்வுக்காக நீங்கள் என்னிடம் கடன்பட்டுள்ளதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லமாட்டேன். 20 எனவே என் சகோதரனே! ஒரு கிறிஸ்தவன் என்கிற முறையில் எனக்குச் செய்யப்படும் ஒரு உதவியாக நீங்கள் அதைச் செய்யவேண்டும் எனக் கேட்கிறேன். கிறிஸ்துவுக்குள் என் இதயத்தை ஆறுதல்படுத்துங்கள். 21 நான் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக நீங்கள் எனக்குச் செய்வீர்கள் என்று அறிவேன். இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்ற உறுதி எனக்கு இருப்பதால் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
22 மேலும் நான் தங்குவதற்காக ஓர் இடத்தை ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் வேண்டுதலுக்கு தேவன் செவிசாய்ப்பார் என்று நான் நம்புகிறேன். உங்கள் பிரார்த்தனைகள் மூலமாக நான் உங்களிடம் வர முடியும் என்றும் நம்புகிறேன்.
இறுதி வாழ்த்துக்கள்
23 இயேசு கிறிஸ்துவுக்காக எப்பாப்பிராவும் என்னோடு சிறைவைக்கப்பட்டிருக்கிறான். அவனும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறான். 24 மாற்கு, அரிஸ்தர்க்கு, தோமா, லூக்கா போன்றோரும் உங்களுக்கு வாழ்த்துரைக்கிறார்கள். இவர்கள் என்னோடு பணியாற்றுகிறார்கள்.
25 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக.
இஸ்ரவேல் கர்த்தரை மறந்துவிட்டது
11 கர்த்தர், “இஸ்ரவேல் குழந்தையாக இருக்கும்போது நான் (கர்த்தர்) அவனை நேசித்தேன்.
நான் என் மகனை எகிப்தை விட்டு வெளியே அழைத்தேன்.
2 ஆனால் நான் இஸ்ரவேலர்களை மிகுதியாக அழைக்க
அவர்களும் என்னை விட்டு மிகுதியாக விலகினார்கள்.
இஸ்ரவேலர்கள் பாகாலுக்குப் பலிகளைக் கொடுத்தார்கள்.
அவர்கள் விக்கிரகங்களுக்கு நறுமணப் பொருட்களை எரித்தார்கள்.
3 “ஆனால் எப்பிராயீமை கைப்பிடித்து நடக்கப் பழக்கியது நான்.
நான் இஸ்ரவேலர்களை என் கைகளில் எடுத்தேன்.
அவர்களைக் குணப்படுத்தினேன்.
ஆனால் அவர்கள் அதனை அறியாமலிருக்கிறார்கள்.
4 நான் அவர்களைக் கயிறுகளால் வழி நடத்தினேன்.
ஆனால் அவை அன்பு என்னும் கயிறுகள்.
நான் விடுதலை அளிக்கும் மனிதனைப் போன்றவன்.
நான் கீழே குனிந்து அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தேன்.
5 “இஸ்ரவேலர்கள் தேவனிடம் திரும்ப மறுக்கிறார்கள். எனவே அவர்கள் எகிப்துக்குச் செல்வார்கள். அசீரியாவின் அரசன் அவர்கள் அரசனாவான். 6 அவர்களது நகரங்களின் மேல் வாளானது தொங்கிக்கொண்டிருக்கும். அது அவர்களது பலமுள்ள மனிதர்களைக் கொல்லும். அது அவர்களது தலைவர்களை அழிக்கும்.
7 “எனது ஜனங்கள் நான் திரும்பி வருவதை எதிர்ப்பார்க்கின்றார்கள். அவர்கள் மேல் நோக்கி தேவனை அழைப்பார்கள். ஆனால் தேவன் அவர்களுக்கு உதவமாட்டார்.”
கர்த்தர் இஸ்ரவேலை அழிக்க விரும்பவில்லை
8 “எப்பிராயீமே, நான் உன்னைக் கைவிட விரும்பவில்லை.
இஸ்ரவேலே நான் உன்னைப் பாதுகாக்க விரும்புகிறேன்.
நான் உன்னை அத்மாவைப் போலாக்க விரும்பவில்லை.
நான் உன்னை செபோயீமைப் போலாக்க விரும்பவில்லை.
நான் என் மனதை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.
உனக்கான எனது அன்பு பலமானது.
9 நான் எனது பயங்கரமான கோபம் வெல்லுமாறு விடமாட்டேன்.
நான் மீண்டும் எப்பிராயீமை அழிக்கமாட்டேன். நான் தேவன். மனிதனல்ல. நானே பரிசுத்தமானவர்.
நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் எனது கோபத்தைக் காட்டமாட்டேன்.
10 நான் சிங்கத்தைப் போன்று கெர்ச்சிப்பேன்.
நான் கெர்ச்சிப்பேன்.
அப்போது எனது பிள்ளைகள் என்னைப் பின்தொடர்ந்து வருவார்கள்.
எனது பிள்ளைகள் மேற்கிலிருந்து பயத்தால் நடுங்கிக்கொண்டே வருவார்கள்.
11 அவர்கள் எகிப்திலிருந்து பறவைகளைப் போன்று நடுங்கிக்கொண்டே வருவார்கள்.
அவர்கள் அசீரியாவிலிருந்து புறாக்களைப்போன்று நடுங்கிக்கொண்டே வருவார்கள்.
அவர்களை அவர்களுடைய தாய் நாட்டிற்கு எடுத்துச் செல்வேன்.”
கர்த்தர் அதனைச் சொன்னார்.
12 “எப்பிராயீம் அந்நிய தெய்வங்களால் என்னைச் சூழ்ந்தான்.
இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
ஆனால் யூதா இன்னும் தேவனோடு நடந்துக்கொண்டிருக்கிறான்.
யூதா பரிசுத்தமானவர்களோடு உண்மையாய் இருக்கிறான்.”
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் சங்கீதம்
132 கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும்.
2 தாவீது கர்த்தருக்கு ஒரு வாக்குறுதி அளித்தான்.
யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்கு தாவீது ஒரு விசேஷ வாக்குறுதி அளித்தான்.
3 தாவீது, “நான் என் வீட்டிற்குள் போகமாட்டேன்,
நான் என் படுக்கையில் படுக்கமாட்டேன்,
4 நான் தூங்கமாட்டேன்,
என் கண்கள் ஓய்வெடுக்க விடமாட்டேன்,
5 கர்த்தருக்கு ஒரு வீட்டை நான் கண்டுபிடிக்கும் மட்டும்,
யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குரிய வீட்டை நான் காணும்மட்டும், இக்காரியங்களில் ஒன்றையும் நான் செய்யமாட்டேன்!” என்றான்.
6 எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம்.
கீரியாத் யாரீமில் உடன்படிக்கைப் பெட்டியை நாங்கள் கண்டோம்.
7 நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம்.
தேவன் பாதங்களை ஓய்வாக வைக்கும் பாதப்படியில் நாம் தொழுதுகொள்வோம்.
8 கர்த்தாவே நீர் ஓய்வுக்கொள்ளும் இடத்திலிருந்து எழும்பும்.
கர்த்தாவே, உமது வல்லமையுள்ள பெட்டியோடு எழும்பும்.
9 கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் நன்மையை அணிந்திருக்கிறார்கள்.
உம்மைப் பின்பற்றுவோர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
10 உமது பணியாளகிய தாவீதின் நன்மைக்காக,
நீர் தேர்ந்தெடுத்த அரசனைத் தள்ளிவிடாதேயும்.
11 கர்த்தர் தாவீதுக்கு ஒரு வாக்குறுதியை அருளினார்.
தாவீதிடம் நேர்மையோடிருப்பதாக கர்த்தர் வாக்களித்தார். தாவீதின் குடும்பத்திலிருந்து அரசர்கள் வருவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார்.
12 கர்த்தர், “தாவீதே, உனது பிள்ளைகள் என் உடன்படிக்கைக்கும் நான் கற்பிக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தால்,
உன் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் என்றென்றும் அரசராக இருப்பார்கள்” என்றார்.
13 அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்.
அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார்.
14 கர்த்தர், “என்றென்றைக்கும் எப்போதும் இதுவே என் இடமாக இருக்கும்.
நான் இருக்கப்போகும் இடமாக இதனைத் தேர்ந்தெடுக்கிறேன்.
15 நான் இந்நகரை மிகுதியான உணவினால் நிரப்பி ஆசீர்வதிப்பேன்.
ஏழைகளுக்கும் உண்ணும் உணவு மிகுதியாகக் கிடைக்கும்.
16 மீட்பினால் ஆசாரியர்களை நான் உடுத்துவிப்பேன்.
என்னைப் பின்பற்றுவோர் இங்கு மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள்.
17 இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன்.
நான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு ஒரு விளக்கை அளிப்பேன்.
18 தாவீதின் பகைவர்களை வெட்கத்தால் மூடுவேன்.
ஆனால் நான் தாவீதின் அரசைப் பெருகும்படி செய்வேன்” என்றார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று
133 சகோதரர்கள் ஒருமித்து உட்கார்ந்து உண்மையாகவே ஒன்றுபடுவது
மிகவும் நல்லதும் இன்பமுமானது.
2 அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு,
கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும்
வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது.
3 எர்மோன் மலையிலிருந்து சீயோன் மலையில் வீழும் மென்மையான மழையைப்போன்றுமிருக்கும்.
ஏனெனில் சீயோனில் இருந்துதான் நித்திய வாழ்க்கைக்கான ஆசீர்வாதத்தை கர்த்தர் தந்தருளினார்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
134 கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்!
இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.
2 ஊழியர்களே, உங்கள் கரங்களை உயர்த்தி
கர்த்தரைப் போற்றுங்கள்.
3 கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பாராக.
கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
2008 by World Bible Translation Center