Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
நியாயாதிபதிகள் 3

1-2 இஸ்ரவேலரின் தேசத்தை விட்டுப் போகும்படி கர்த்தர் பிற நாட்டினரை வற்புறுத்தவில்லை. கர்த்தர் இஸ்ரவேலரைச் சோதிக்க விரும்பினார். கானான் தேசத்தை எடுத்துக்கொள்ள இக்காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் எவரும் போர் செய்யவில்லை. எனவே கர்த்தர் பிறஜனத்தார் அத்தேசத்தில் வாழ அனுமதித்தார். (ஏற்கெனவே போர் அனுபவமற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்குப் போர் முறையைக் கற்பிக்க கர்த்தர் இதைச் செய்தார்.) கர்த்தர் அந்த தேசத்தில் விட்டு வைத்த ஜனங்களின் பெயர்கள்: பெலிஸ்தியரின் ஐந்து ராஜாக்கள், கானானியர், சீதோனின் ஜனங்கள், பாகால் எர்மோன் மலையிலிருந்து லெபோ ஆமாத் வரைக்குமுள்ள லீபனோனின் மலைகளில் வாழ்ந்த ஏவியர்கள் ஆகியோர். இஸ்ரவேலரைச் சோதிப்பதற்கென்று கர்த்தர் இந்த ஜனங்களை அந்த தேசத்தில் விட்டு வைத்தார். மோசேயின் மூலமாக அவர்களின் முற்பிதாக்களுக்கு கொடுத்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிகிறார்களா என்று பார்க்க கர்த்தர் விரும்பினார்.

கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஜனங்களோடு இஸ்ரவேலர் வாழ்ந்தனர். அந்த ஜனங்களின் பெண்களை இஸ்ரவேலர் மணந்துகொள்ள ஆரம்பித்தனர். தங்களது குமாரத்திகளை மணந்துகொள்ள அவர்களது ஆண்களையும் அனுமதித்தனர். இஸ்ரவேலர் அந்த ஜனங்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்ளவும் ஆரம்பித்தனர்.

முதல் நியாயாதிபதியாகிய ஒத்னியேல்

இஸ்ரவேலர் தீயக்காரியங்களில் ஈடுபடுவதை கர்த்தர் கண்டார். இஸ்ரவேலர் தமது தேவனாகிய கர்த்தரை மறந்து பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அசேராவையும் தொழத்தொடங்கினர். இஸ்ரவேலர்கள் மீது கர்த்தர் கோபங்கொண்டார். மெசொ பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீம் என்பவன் இஸ்ரவேலரைத் தோற்கடித்து அவர்களை ஆள்வதற்கு கர்த்தர் அனுமதித்தார். அம்மன்னனின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேலர் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தனர். ஆனால் இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக அழுது வேண்டினார்கள். அவர்களை மீட்பதற்காக கர்த்தர் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஒத்னியேல். அவன் கேனாஸ் என்னும் மனிதனின் குமாரன். கேனாஸ் காலேபின் இளைய சகோதரன். ஒத்னியேல் இஸ்ரவேலரைக் காப்பாற்றினான். 10 கர்த்தருடைய ஆவி ஒத்னியேல் மீது வந்தது. அவன் இஸ்ரவேலருக்கு நியாயாதிபதி ஆனான். ஒத்னியேல் இஸ்ரவேலரைப் போருக்கு வழிநடத்தினான். மெசொப்பொத்தாமியாவின், ராஜாவாகிய கூஷான்ரிஷதாயீமை வெல்வதற்கு கர்த்தர் ஒத்னியேலுக்கு உதவினார். 11 எனவே கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரிக்கும்வரைக்கும் 40 ஆண்டுகள் தேசம் அமைதியாக இருந்தது.

நியாயாதிபதியாகிய ஏகூத்

12 மீண்டும் இஸ்ரவேலர் தீயகாரியங்களைச் செய்வதை கர்த்தர் கவனித்தார். எனவே மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலரைத் தோற்கடிக்கும் ஆற்றலை அளித்தார். 13 அம்மோனியரும், அமலேக்கியரும் எக்லோனுக்கு உதவினார்கள். அவர்கள் அவனோடு சேர்ந்து இஸ்ரவேலரைத் தாக்கி ஈச்சமரங்களின் நகரமாகிய எரிகோவை விட்டு அவர்கள் போகுமாறு செய்தனர். 14 மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலர்கள் 18 ஆண்டுகள் அடிபணிந்து இருந்தார்கள்.

15 பின் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடம் வந்து அழுதார்கள். இஸ்ரவேலரை மீட்பதற்கு கர்த்தர் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஏகூத். அவன் இடது கைப் பழக்கமுடையவனாயிருந்தான். ஏகூத் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கேரா என்பவனின் குமாரன். மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்கு கப்பம் செலுத்தி வருமாறு இஸ்ரவேலர் ஏகூதை அனுப்பினார்கள். 16 ஏகூத் தனக்காக ஒரு வாளைச் செய்து கொண்டான். அது இருபுறமும் கருக்குள்ளதாகவும் 12 அங்குல நீளமுடையதாகவும் இருந்தது. ஏகூத் தன் வலது தொடையில் வாளைக் கட்டிக்கொண்டு தனது ஆடைகளினுள் அதை மறைத்துக்கொண்டான்.

17 இவ்வாறு ஏகூத் மோவாபின் ராஜா எக்லோனுக்குக் கப்பம் கொண்டு வந்தான். எக்லோன் பருத்த உடல் உடையவன். 18 ஏகூத் எக்லோனுக்கு கப்பம் கொடுத்தபின், கப்பம் கொண்டுவந்த மனிதர்களை ஊருக்குத் திரும்பிச் செல்லுமாறு கூறினான். 19 கில்காலில் தெய்வங்களின் சிலைகளிலிருந்த இடத்திலிருந்து எக்லோன் திரும்பியபொழுது, ஏகூத் எக்லோனிடம், “ராஜாவே, நான் உமக்காக ஒரு இரகசியச் செய்தி வைத்திருக்கிறேன்” என்றான்.

ராஜா, “அமைதியாக இருங்கள்!” என்று சொல்லி அறையிலிருந்த பணியாட்களை வெளியே அனுப்பினான். 20 ராஜாவாகிய எக்லோனுடன் ஏகூத் சென்றான். கோடைக் கால அரண்மனையிலுள்ள மேல் அறையில் எக்லோன் இப்போது தனித்தவனாய் உட்கார்ந்திருந்தான்.

ஏகூத், “தேவனிடமிருந்து ஒரு செய்தியை உமக்குக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான். ராஜா சிங்காசனத்திலிருந்து எழுந்து நின்றான். அவன் ஏகூத்திற்கு மிக அருகில் இருந்தான்.

21 ராஜா சிங்காசனத்திலிருந்து எழுந்த போது, ஏகூத் தனது இடது கையை நீட்டி வலது தொடையில் கட்டப்பட்டிருந்த வாளை எடுத்து அவ்வாளை ராஜாவின் வயிற்றில் செருகினான்.

22 வாளின் பிடிகூட வெளியே தெரியாதபடி வாள் எக்லோனின் வயிற்றினுள் நுழைந்தது. ராஜாவின் பருத்த உடல் வாளை மறைத்தது. எனவே ஏகூத் வாளை எக்லோனின் உடம்பிலேயே விட்டுவிட்டான்.

23 ஏகூத் அறையிலிருந்து வெளியே வந்து கதவுகளை மூடிப் பூட்டிவிட்டான். 24 ஏகூத் புறப்பட்ட சற்று நேரத்தில் வேலையாட்கள் திரும்பிவந்து, அறையின் கதவுகள் மூடப்பட்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “ராஜா கழிவறைக்குப் போயிருக்க வேண்டும்” என்று எண்ணினார்கள். 25 எனவே அவர்கள் அதிக நேரம் காத்திருந்தனர். இறுதியில் அவர்கள் கவலை அடைந்து கதவுகளைத் திறந்தனர். பணியாட்கள் உள்ளே நுழைந்தபோது ராஜா மரணமடைந்து, தரையில் கிடப்பதைப் பார்த்தனர்.

26 பணியாட்கள், ராஜாவுக்காகக் காத்திருந்தபோது, ஏகூத்திற்குத் தப்பிச்செல்ல போதுமான நேரம் இருந்தது. ஏகூத் விக்கிரகங்கள் இருந்த வழியே கடந்துசென்று சேயிரா என்னும் இடத்திற்குச் சென்றான். 27 சேயிராவை அடைந்ததும், அந்த எப்பிராயீம் மலைநாடுகளில் எக்காளம் ஊதினான். இஸ்ரவேலர் அதனைக் கேட்டு, ஏகூத்தின் பின்செல்ல மலைகளிலிருந்து இறங்கி வந்தனர். 28 ஏகூத் இஸ்ரவேலரிடம், “என்னைப் பின்பற்றுங்கள்! நமது பகைவராகிய மோவாபியரை வெல்வதற்கு கர்த்தர் எனக்கு உதவினார்” என்றான்.

எனவே இஸ்ரவேலர் ஏகூதைப் பின்பற்றினார்கள். யோர்தான் நதியை எளிதாகக் கடக்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் ஏகூதைப் பின்பற்றி அவற்றைக் கைப்பற்றுவதற்காகக் சென்றனர். ஒருவரும் யோர்தான் நதியைக் கடந்து செல்வதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அனுமதிக்கவில்லை. 29 மோவாபில் வலிமையும் துணிவும் உள்ள மனிதர்களில் சுமார் 10,000 பேரை இஸ்ரவேலர் கொன்றனர். மோவாபியரில் ஒருவனும் தப்பிச் செல்லவில்லை. 30 அன்றையதினம் இஸ்ரவேலர் மோவாபியரை ஆளத் தொடங்கினார்கள். அத்தேசத்தில் 80 ஆண்டுகள் அமைதி நிலவிற்று.

நியாயாதிபதியாகிய சம்கார்

31 ஏகூத் இஸ்ரவேலரை மீட்டுக் காத்த பின்பு, மற்றொரு மனிதன் இஸ்ரவேலரைக் காத்தான். அவன் ஆனாத்தின் குமாரனாகிய சம்கார். 600 பெலிஸ்தியர்களைச் சம்கார் தாற்றுக்கோலால் கொன்றான்.

அப்போஸ்தலர் 7

ஸ்தேவானின் பேச்சு

தலைமை ஆசாரியன் ஸ்தேவானை நோக்கி, “இந்தக் காரியங்கள் எல்லாம் உண்மைதானா?” என்று கேட்டான். ஸ்தேவான் பதிலாக, “எனது யூத தந்தையரே, சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள். மகிமைபொருந்திய நமது தேவன் நமது தந்தையாகிய ஆபிரகாமுக்குக் காட்சி கொடுத்தார். ஆபிரகாம் மெசொபொதாமியாவில் இருந்தார். அவர் ஆரானில் வாழ்வதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. தேவன் ஆபிரகாமை நோக்கி, ‘உன் நாட்டையும் உன் உறவினர்களையும் விட்டுவிட்டு, நான் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’(A) என்றார்.

“எனவே ஆபிரகாம் கல்தேயா நாட்டை விட்டுச் சென்றார். ஆரானில் வசிப்பதற்காகச் சென்றார். ஆபிரகாமின் தந்தை இறந்த பிறகு, நீங்கள் இப்போது வசிக்கிற இந்த இடத்திற்கு தேவன் அவரை அனுப்பினார். ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு இந்த நாட்டில் எதையும் கொடுக்கவில்லை. ஒரு அடி நிலம் கூடக் கொடுக்கவில்லை. ஆனால் ஆபிரகாமுக்கும் அவர் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இந்நாட்டைக் கொடுப்பதாக தேவன் வாக்களித்தார். (ஆபிரகாமுக்குக் குழந்தை இல்லாதிருந்தபோது இது நடந்தது)

“தேவன் அவருக்குக் கூறியது இதுவாகும். ‘உன் சந்ததியர் மற்றொரு நாட்டில் வாழ்வர். அவர்கள் அந்நியர்களாயிருப்பர். அந்நாட்டின் மக்கள் அவர்களை அடிமைப்படுத்துவர். 400 வருடங்களுக்கு அவர்களை மோசமாக நடத்துவர். ஆனால் அவர்களை அடிமையாக்கிய நாட்டினரை நான் தண்டிப்பேன்.’(B) தேவன் மேலும், ‘இந்தக் காரியங்கள் நடந்தபின் உன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவர். பின் உன் மக்கள் இங்கு இந்த இடத்தில் என்னை வழிபடுவர்’(C) என்றார்.

“தேவன் ஆபிரகாமோடு ஓர் உடன்படிக்கை பண்ணினார். இந்த உடன்படிக்கையின் அடையாளமே விருத்த சேதனமாகும். எனவே ஆபிரகாமுக்கு ஒரு குமாரன் பிறந்ததும், அவன் பிறந்து எட்டு நாட்களான பின் ஆபிரகாம் தன் குமாரனுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். அவரது குமாரனின் பெயர் ஈசாக்கு. ஈசாக்கும் தனது குமாரன் யாக்கோபுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். யாக்கோபும் தனது மக்களுக்கு அதைச் செய்தார். அந்த குமாரன்களே பின்னர் பன்னிரண்டு தந்தையராக மாறினர்.

“இந்தத் தந்தையர் யோசேப்பைக் (அவர்களது இளைய சகோதரன்) கண்டு பொறாமை கொண்டனர். எகிப்தில் ஒரு அடிமையாக யோசேப்பை அவர்கள் விற்றனர். ஆனால் தேவன் யோசேப்போடு இருந்தார். 10 யோசேப்புக்கு அங்கு பல தொல்லைகள் நேர்ந்தாலும், தேவன் அத்தொல்லைகள் எல்லாவற்றிலிருந்தும் அவரைக் காப்பாற்றினார். பார்வோன் எகிப்தின் ராஜாவாக இருந்தான். அவன் யோசேப்புக்கு தேவன் கொடுத்த ஞானத்தைக் கண்டு அவரை விரும்பவும் நேசிக்கவும் செய்தான். எகிப்தின் ஆளுநர் வேலையைப் பார்வோன் யோசேப்புக்குக் கொடுத்தான். பார்வோனின் வீட்டிலுள்ள எல்லா மக்களையும் ஆளுவதற்கும் யோசேப்பை பார்வோன் அனுமதித்தான். 11 ஆனால் எகிப்திலும், கானானிலுமிருந்த எல்லா நிலங்களும் வறண்டு போயின. அங்கு உணவு தானியங்கள் வளர முடியாதபடிக்கு நாடு வறட்சியுற்றது. இது மக்களுக்குப் பெரும் துன்பத்தை விளைவித்தது. நமது தந்தையருக்கு உண்பதற்கு எதுவும் அகப்படவில்லை.

12 “ஆனால் எகிப்தில் உணவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதை யாக்கோபு கேள்விப்பட்டார். எனவே அவர் நமது தந்தையரை அங்கு அனுப்பினார். (இது எகிப்துக்கு அவர்களின் முதற்பயணமாயிருந்தது.) 13 பின்னர், அவர்கள் இரண்டாம் முறையாகவும் அங்கு சென்றார்கள். இந்தத் தடவை யோசேப்பு தன் சகோதரர்களிடம் தான் யாரென்பதைக் கூறினான். பார்வோனுக்கும் யோசேப்பின் குடும்பத்தைக் குறித்துத் தெரிய வந்தது. 14 பின் யோசேப்பு தன் தந்தையாகிய யாக்கோபை எகிப்துக்கு அழைத்து வருவதற்கென்று சில மனிதர்களை அனுப்பினார். தன் எல்லா உறவினர்களையும் கூட (அங்கு மொத்தம் 75 பேர்) அழைத்தார். 15 எனவே யாக்கோபு எகிப்திற்குப் போனார். யாக்கோபும் நமது தந்தையரும் அவர்களின் மரணம் மட்டும் அங்கு வாழ்ந்தனர். 16 பின்னர் அவர்கள் சரீரங்கள் சீகேமுக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் அங்கு ஒரு கல்லறையில் வைக்கப்பட்டனர். (வெள்ளியைக் கொடுத்து ஏமோரின் குமாரர்களிடமிருந்து சீகேமில் ஆபிரகாம் வாங்கிய கல்லறை அது.)

17 “எகிப்தில் யூத மக்களின் தொகை பெருகியது. நமது மக்கள் அங்கு மென்மேலும் பெருகினர். (தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருந்தது) 18 பின் இன்னொரு மன்னன் எகிப்தை ஆளத் தொடங்கினான். அவனுக்கு யோசேப்பைப்பற்றி எதுவும் தெரியாது. 19 இந்த மன்னன் நமது மக்களை ஏமாற்றினான். நம் முன்னோருக்கு அவன் தீமை செய்தான். அம்மன்னன் அவர்களது குழந்தைகளை இறக்கும்படியாக வெளியே போடும்படிச் செய்தான்.

20 “இக்காலத்தில் தான் மோசே பிறந்தார். அவர் அழகான குழந்தையாகவும் தேவனுக்கு இனிமையானவராகவும் இருந்தார். தன் தந்தையின் வீட்டில் மூன்று மாத காலத்துக்கு மோசேயை வைத்துப் பராமரித்தார்கள். 21 மோசேயை வெளியில் விட்டபொழுது பார்வோனின் குமாரத்தி அவனை எடுத்துத் தன் சொந்தக் குழந்தையைப் போன்றே வளர்த்தாள். 22 தங்களிடமிருந்த எல்லா ஞானத்தையும் எகிப்தியர்கள் மோசேக்குக் கற்பித்தனர். அவர் கூறியவற்றிலும் செய்தவற்றிலும் வல்லமைமிக்கவராக இருந்தார்.

23 “மோசே நாற்பது வயதாக இருந்தபோது தன் சகோதரர்களான யூத மக்களைச் சந்திப்பது நல்லது என்று நினைத்தார். 24 எகிப்தியன் ஒருவன் யூதன் ஒருவனுக்கு எதிராகத் தவறு செய்வதை அவர் கண்டார். எனவே அவர் யூதனுக்கு சார்பாகச் சென்றார். யூதனைப் புண்படுத்தியதற்காக மோசே எகிப்தியனைத் தண்டித்தார். மோசே அவனைப் பலமாகத் தாக்கியதால் அவன் இறந்தான். 25 தேவன் அவர்களை மீட்பதற்காக அவரைப் பயன்படுத்துவதை யூத சகோதர்கள் புரிந்துகொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

26 “மறுநாள் இரண்டு யூதர்கள் சண்டையிடுவதை மோசே பார்த்தார். அவர்களுக்குள் அமைதியை நிலை நாட்ட அவர் முயன்றார். அவர், ‘மனிதரே, நீங்கள் இருவரும் சகோதரர்கள். நீங்கள் ஏன் ஒருவரையொருவர் மோசமாக நடத்துகிறீர்கள்?’ என்றார். 27 ஒருவனுக்கு எதிராகத் தவறிழைத்த மற்றொருவன் மோசேயைத் தள்ளிவிட்டான். அவன் மோசேயை நோக்கி, ‘நீ எங்கள் அதிகாரியாகவும் நீதிபதியாகவும் இருக்கும்படி யாராவது கூறினார்களா? இல்லை. 28 நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’(D) என்றான். 29 அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தனர்.

30 “மோசே நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சீனாய் மலையின் அருகேயுள்ள வனாந்தரத்தில் இருந்தார். எரிகின்ற புதரின் ஜூவாலையிலிருந்து ஒரு தேவதூதன் அவருக்குத் தோன்றினான். 31 அதைக் கண்டு மோசே வியந்தார். நன்கு பார்க்கும்படியாக அவர் அருகே சென்றார். மோசே ஒரு சத்தத்தைக் கேட்டார். அது தேவனுடைய குரலாக இருந்தது. 32 தேவன் கூறினார், ‘ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உங்கள் முன்னோரின் தேவன் நானே’(E) என்றார். மோசே பயத்தால் நடுங்க ஆரம்பித்தார். அவர் புதரைப் பார்க்கவும் அஞ்சினார்.

33 “கர்த்தர் அவரிடம், ‘உன் மிதியடிகளைக் கழற்று. நீ நின்றுகொண்டிருக்கும் இந்த இடம் பரிசுத்த பூமி. 34 எகிப்தில் எனது மக்கள் மிகவும் துன்புறுவதைக் கண்டிருக்கிறேன். என் மக்கள் அழுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களைக் காப்பாற்றுவதற்காக இறங்கி வந்துள்ளேன். மோசே! இப்பொழுது வா, நான் எகிப்திற்கு உன்னைத் திரும்பவும் அனுப்புகிறேன்’(F) என்றார்.

35 “யூதர்கள் அவர்களுக்கு வேண்டாமெனக் கூறிய அதே மோசே அவர்தான். அவர்கள் அவரிடம், ‘நீ எங்களுக்கு அதிபதியாகவும், நீதிபதியாகவும் இருக்கமுடியுமென்று யாராவது கூறினார்களா? இல்லை!’ என்றனர். தேவன் அதிபதியாகவும் மீட்பராகவும் மோசேயாகிய அதே மனிதனை அனுப்பினார். தேவன் ஒரு தேவதூதனின் உதவியோடு மோசேயை அனுப்பினார். எரியும் புதரில் மோசே கண்ட தேவ தூதன் இவனே. 36 அதனால் மோசே மக்களை வெளியே நடத்திச் சென்றார். அவர் வல்லமை வாய்ந்த செயல்களையும் அற்புதங்களையும் செய்தார். எகிப்திலும், செங்கடலிலும், வானந்தரத்திலும் 40 ஆண்டுகள் இவற்றை மோசே செய்தார்.

37 “‘தேவன் உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியைக் கொடுப்பார். உங்கள் மக்களிடமிருந்தே அந்தத் தீர்க்கதரிசி வருவார். அவர் என்னைப் போலவே இருப்பார்’(G) என்று கூறிய அதே மோசேதான் அவர். 38 வனாந்தரத்தில் யூதர்களின் கூட்டத்தோடு இருந்தவர் இவரேதான். சீனாய் மலையில் தன்னோடு பேசிய தேவதூதனுடன் இருந்தார். நமது முன்னோரோடும் அவர் இருந்தார். மோசே தேவனிடமிருந்து ஜீவன் தரும் கட்டளைகளைப் பெற்றார். மோசே நமக்கு அந்தக் கட்டளைகளைக் கொடுத்தார்.

39 “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் அவரைத் தள்ளி ஒதுக்கினர். மீண்டும் எகிப்துக்குப் போகவேண்டுமென அவர்கள் விரும்பினர். 40 நம் தந்தையர் ஆரோனை நோக்கி, ‘மோசே நம்மை எகிப்து நாட்டிற்கு வெளியே வழி நடத்தினார். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை நாங்கள் அறியோம். எனவே எங்களுக்கு முன்னே போகவும் எங்களுக்கு வழிகாட்டவும் சில தெய்வங்களை உண்டாக்கும்’(H) என்றனர். 41 எனவே மக்கள் கன்றுக் குட்டியைப் போன்ற ஒரு சிலை உண்டாக்கினர். பின் அவர்கள் அதற்குப் படைப்பதற்காகப் பொருட்களைக் கொண்டு வந்தனர். தங்கள் கைகளால் உண்டாக்கிய அதனைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர்! 42 ஆனால் தேவன் அவர்களுக்கு எதிராகத் திரும்பினார். வானத்திலுள்ள பொய்யான தெய்வங்களின் கூட்டத்தை வழிபடுவதிலிருந்து அவர்களைத் தடுப்பதை தேவன் நிறுத்திக்கொண்டார். தீர்க்கதரிசிகளின் நூலிலும் இவைதான் எழுதப்பட்டுள்ளன. தேவன் சொல்கிறார்,

“‘யூத மக்களாகிய நீங்கள் எனக்கு இரத்தபடைப்புக்களையோ பலிகளையோ 40 ஆண்டுகளாக வனாந்தரத்தில் கொண்டு வரவில்லை.
43 உங்களோடு மோளேகிற்காக ஒரு கூடாரத்தையும் ரெம்பான் என்னும் நட்சத்திர உருவத்தையும் சுமந்து சென்றீர்கள்.
    இந்த விக்கிரகங்களை நீங்கள் வழிபடுவதற்காக உருவாக்கினீர்கள்.
எனவே நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் அனுப்புவேன்.’(I)

44 “வனாந்தரத்தில் பரிசுத்தக் கூடாரம்[a] நமது முன்னோரிடம் இருந்தது. இந்தக் கூடாரத்தை எப்படி உண்டாக்குவது என்று தேவன் மோசேயிடம் கூறினார். தேவன் காட்டிய திட்டத்தின்படியே மோசே அதை உண்டாக்கினார். 45 பின்னால் பிற தேசங்களின் நிலங்களைக் கைப்பற்றும்படியாக யோசுவா நமது தந்தையரை வழி நடத்தினார். நமது மக்கள் அங்குச் சென்றபோது அங்கிருந்த மக்களை தேவன் வெளியேறும்படிச் செய்தார். நமது மக்கள் இப்புதிய நிலத்திற்குச் சென்றபொழுது, இதே கூடாரத்தைத் தம்முடன் எடுத்துச் சென்றனர். தாவீதின் காலம்வரைக்கும் நம் மக்கள் அதை வைத்திருந்தனர். 46 தேவன் தாவீதைக் குறித்து மகிழ்ந்தார். தாவீது தேவனிடம் யாக்கோபின் தேவனாகிய அவருக்கு ஒரு வீட்டைக் கட்ட அனுமதி வேண்டினான். 47 ஆனால் சாலமோன் தான் அந்த ஆலயத்தைக் கட்டினான்.

48 “ஆனால் உன்னதமானவர் மனிதர் தங்கள் கைகளால் கட்டும் வீடுகளில் வசிப்பதில்லை. தீர்க்கதரிசி இதனையே எழுதினார்.

49 “கர்த்தர் கூறுகிறார்,
‘வானம் எனது சிம்மாசனம்.
    பூமி எனது பாதங்கள் வைக்கும் இடம்.
எனக்காக எவ்விதமான வீட்டைக் கட்டப்போகிறீர்கள்?
    ஓய்வெடுக்க எனக்கு ஓர் இடம் தேவையில்லை.
50 நான் இவை எல்லாவற்றையும் உண்டாக்கினேன் என்பதை நினைவுகூருங்கள்!’”(J)

என்றான்.

51 பின் ஸ்தேவான், “பிடிவாதமான யூதத் தலைவர்களே! நீங்கள் உங்கள் இருதயங்களை தேவனுக்குக் கொடுக்கவில்லை! நீங்கள் அவர் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கமாட்டீர்கள்! பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் கூற முயல்வதை எப்போதும் எதிர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தந்தையர் இதைச் செய்தார்கள். நீங்களும் அவர்களைப் போலவே இருக்கிறீர்கள்! 52 உங்கள் தந்தையர் தங்கள் காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் புண்படுத்தினார்கள். அந்தத் தீர்க்கதரிசிகள் வெகு காலத்திற்கு முன்பே நீதியுள்ள ஒருவர் வருவார் எனக் கூறினார்கள். ஆனால் உங்கள் தந்தையர் அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். இப்பொழுது நீங்கள் நீதியுள்ள அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளீர்கள். 53 மோசேயின் சட்டத்தைப் பெற்றவர்கள் நீங்கள். தமது தேவதூதர்களின் மூலமாகக் தேவன் இந்தச் சட்டத்தை உங்களுக்குக் கொடுத்தார். ஆனால் நீங்களோ இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை” என்றான்.

ஸ்தேவான் கொல்லப்படுதல்

54 இவற்றை ஸ்தேவான் கூறுவதை யூதத் தலைவர்கள் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் அடைந்தனர். யூதத் தலைவர்கள் பித்துப் பிடித்தவர்களைப்போல், ஸ்தேவானை நோக்கிப் பற்களைக் கடித்தனர். 55 ஆனால் ஸ்தேவானோ பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக இருந்தான். ஸ்தேவான் வானத்தை அண்ணாந்து பார்த்தான். அவன் தேவனுடைய மகிமையைக் கண்டான். தேவனுடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதைக் கண்டான். 56 ஸ்தேவான், “பாருங்கள்! பரலோகம் திறந்திருப்பதை நான் பார்க்கிறேன். தேவனுடைய வலபக்கத்தில் மனித குமாரன் நிற்பதை நான் காண்கிறேன்!” என்றான்.

57 பின் யூத அதிகாரிகள் எல்லோரும் உரத்த குரலில் சத்தமிட்டார்கள். அவர்கள் கைகளால் தமது காதுகளைப் பொத்திக்கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் ஸ்தேவானை நோக்கி ஓடினர். 58 அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியில் கொண்டு சென்று அவன் சாகும்வரை அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஸ்தேவானுக்கு எதிராகப் பொய் கூறியவர்கள் தங்களது மேலாடைகளை சவுல் என்னும் இளைஞனிடம் கொடுத்தார்கள். 59 பின் அவர்கள் ஸ்தேவானின் மேல் கற்களை வீசினார்கள். ஆனால் ஸ்தேவான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். அவன், “கர்த்தராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்!” என்றான். 60 அவன் முழங்காலில் நின்று, “கர்த்தரே! இந்தப் பாவத்திற்காக அவர்களைக் குற்றம் சாட்டாதிரும்!” என்று பிரார்த்தித்தான். இதைக் கூறிய பிறகு ஸ்தேவான் இறந்து போனான்.

எரேமியா 16

அழிவு நாள்

16 கர்த்தருடைய செய்தி எனக்கு வந்தது: “எரேமியா, நீ திருமணம் செய்துக்கொள்ள கூடாது. இந்த இடத்தில் உனக்கு குமாரர்களோ, குமாரத்திகளோ இருக்க வேண்டாம்.”

கர்த்தர், யூதா நாட்டில் பிறந்த குமாரர்களையும் குமாரத்திகளையும்பற்றி இவ்வாறு சொன்னார். அப்பிள்ளைகளின் தாய்களைப்பற்றியும், தந்தைகளைப்பற்றியும் கர்த்தர் சொன்னது இதுதான்: “அந்த ஜனங்கள் ஒரு பயங்கரமான மரணத்தை அடைவார்கள். அந்த ஜனங்களுக்காக எவரும் அழமாட்டார்கள். அவர்களை எவரும் புதைக்கமாட்டார்கள். அவர்களது உடல்கள் தரையில் எருவைப்போன்று கிடக்கும். அந்த ஜனங்கள் பகைவரின் வாளால் மரிப்பார்கள். அவர்கள் பஞ்சத்தால் மரிப்பார்கள். அவர்களது மரித்த உடல்கள், வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகும்.”

எனவே கர்த்தர், “எரேமியா, மரண உணவு உண்ணும் வீட்டிற்குள் செல்லவேண்டாம். மரித்தவர்களுக்காக அழவும் உனது சோகத்தைக் காட்டவும் நீ போக வேண்டாம். நீ இவற்றை செய்ய வேண்டாம். ஏனென்றால், நான் எனது ஆசீர்வாதத்தைத் திரும்ப எடுத்துக்கொண்டிருக்கிறேன். நான் யூதாவின் ஜனங்களிடம் இரக்கமாக இருக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

“யூதா நாட்டிலுள்ள முக்கிய ஜனங்களும் பொது ஜனங்களும் மரிப்பார்கள். அந்த ஜனங்களை எவரும் புதைக்கமாட்டார்கள், அவர்களுக்காக அழவும்மாட்டார்கள். அந்த ஜனங்களுக்காக வருத்தம் தெரிவிக்கும்படி எவரும் தம்மைத்தாமே வெட்டிக்கொள்ளவோ, தலையை மொட்டையடித்துக்கொள்ளவோமாட்டார்கள். மரித்தவர்களுக்காக அழுகிறவர்களுக்கு எவரும் உணவு கொண்டு வரமாட்டார்கள். தம் தாயையோ தந்தையையோ இழந்தவர்களுக்கு எவரும் ஆறுதல் சொல்லமாட்டார்கள். மரித்தவர்களுக்காக அழுகின்றவர்களுக்கு எவரும் குடிக்கவும் கொடுக்கமாட்டார்கள்.

“எரேமியா, விருந்து நடக்கும் வீடுகளுக்குள் நீ போகாதே. அந்த வீடுகளுக்குப் போய் உட்கார்ந்து உண்ணவோ குடிக்கவோ செய்யாதே. நமது இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘களியாட்டு மனிதரின் சத்தத்தை விரைவில் நிறுத்துவேன். திருமண விருந்துகளில் எழுப்பப்படும் மகிழ்ச்சி ஒலிகளை விரைவில் நான் நிறுத்துவேன். உமது வாழ்நாளில் இவை நடைபெறும். நான் விரைவில் இவற்றைச் செய்வேன்.’

10 “எரேமியா, யூதாவின் ஜனங்களிடம் நீ இவற்றைக் கூறு. ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள், ‘கர்த்தர் எங்களுக்கு ஏன் இத்தகைய பயங்கரமானவற்றைச் சொன்னார்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராக நாங்கள் என்ன பாவம் செய்தோம்?’ 11 நீ அந்த ஜனங்களிடம் இவற்றையெல்லாம் சொல்ல வேண்டும், ‘உங்கள் முற்பிதாக்களால், பயங்கரமானவை உங்களுக்கு ஏற்படும். ஏனென்றால், அவர்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என்னைப் பின் பற்றுவதை விட்டு, அந்நிய தெய்வங்களுக்கு சேவை செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அந்த அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டனர். உங்கள் முற்பிதாக்கள் என்னைவிட்டு விலகினார்கள். எனது சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர். 12 ஆனால் நீங்களோ உங்கள் முற்பிதாக்களை விட மோசமான பாவம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் பிடிவாதமானவர்கள். நீங்கள் விரும்புவதையே செய்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எனக்கு கீழ்ப்படிகிறதில்லை. நீங்கள் செய்ய விரும்புவதை மட்டுமே செய்கிறீர்கள். 13 எனவே, நான் உங்களை இந்த நாட்டுக்கு வெளியே எறிவேன். உங்களை அயல் நாடுகளுக்குப் போகும்படி கட்டாயப்படுத்துவேன். நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், அறிந்திராத நாட்டிற்குப் போவீர்கள். அந்த நாட்டில் நீங்கள் விரும்பும் அந்நிய தெய்வங்களை இரவும் பகலும் சேவிப்பீர்கள். நான் உங்களுக்கு உதவியோ நன்மையோ செய்யமாட்டேன்.”

14 “ஜனங்கள் வாக்குறுதிச் செய்கிறார்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு, கர்த்தர் ஒருவரே எகிப்து நாட்டுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார்’ என்பார்கள். ஆனால் காலம் வந்துகொண்டிருக்கிறது” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்தச் செய்திகளை ஜனங்கள் சொல்லமாட்டார்கள், 15 ஜனங்கள் புதியவற்றைச் சொல்வார்கள். அவர்கள், ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியோ அவ்வளவு அவர் ஒருவரே வட நாடுகளுக்கு வெளியே இஸ்ரவேல் ஜனங்களை அழைத்து வந்தார். அவர்களை அவர் அனுப்பியிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் வெளியே அழைத்து வந்தார்’ என்றனர். ஏன் ஜனங்கள் இவற்றைச் சொல்வார்கள்? ஏனென்றால், நான் இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவேன்.

16 “நான் விரைவில் பல மீன் பிடிப்பவர்களை இந்த நாட்டிற்கு வரும்படி அனுப்புவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “அந்த மீனவர்கள் யூதாவின் ஜனங்களைப் பிடிப்பார்கள். அது நிகழந்த பிறகு, இந்த நாட்டுக்கு சில வேட்டைக்காரர்களை அனுப்புவேன். அந்த வேட்டைக்காரர்கள் ஒவ்வொரு மலையிலும், குன்றிலும், பாறை பிளவுகளிலும், யூதா ஜனங்களை வேட்டையாடுவர். 17 அவர்கள் செய்துக்கொண்டிருக்கிற அனைத்தையும் நான் பார்க்கிறேன். யூதா ஜனங்கள் தாம் செய்கின்றவற்றை என்னிடம் மறைக்க முடியாது. அவர்களது பாவம் என்னிடம் மறைக்கப்படாமல் போகும். 18 நான் யூதா ஜனங்களுக்கு அவர்கள் செய்கின்றவற்றுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களது ஒவ்வொரு பாவத்திற்கும் நான் இருமடங்கு தண்டிப்பேன். நான் இதனைச் செய்வேன். ஏனென்றால், அவர்கள் எனது நாட்டை அருவருப்பான விக்கிரகங்களால் ‘தீட்டு’ ஆக்கிவிட்டனர். நான் அந்த விக்கிரகங்களை வெறுக்கிறேன். ஆனால் அவர்கள் எனது நாட்டை அந்த விக்கிரகங்களால் நிறைத்துவிட்டனர்.”

19 கர்த்தாவே, நீரே எனது பலமும் காவலும்!
    நீரே துன்பக்காலத்தில் நான் ஓடி வரத்தக்கப் பாதுகாப்பான இடம்.
உலகம் முழுவதிலுமிருந்து நாடுகள் உம்மிடம் வரும்.
    அவர்கள், “எங்கள் தந்தையர்கள் அந்நிய தெய்வங்களை வைத்திருந்தனர்.
அவர்கள் அந்தப் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுகொண்டனர்.
    ஆனால் அந்த விக்கிரகங்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் உதவவில்லை” என்பார்கள்.
20 ஜனங்கள் உண்மையான தெய்வங்களை தங்களுக்கென உருவாக்க முடியுமா?
இல்லை! அவர்கள் சிலைகளைச் செய்துக்கொள்ளலாம்.
ஆனால் அச்சிலைகள் உண்மையில் தெய்வங்கள் இல்லை.

21 கர்த்தர், “எனவே, விக்கிரகங்களை உருவாக்கும் அவர்களுக்கு நான் பாடம் கற்பிப்பேன்.
    இப்போது நான் அவர்களுக்கு எனது அதிகாரம் மற்றும் பலம் பற்றி கற்பிப்பேன்.
பிறகு, அவர்கள் நானே தேவன் என்பதை அறிந்துகொள்வார்கள்.
    நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்” என்று கூறுகிறார்.

மாற்கு 2

பக்கவாத வியாதிக்காரன் குணமாகுதல்

(மத்தேயு 9:1-8; லூக்கா 5:17-26)

சில நாட்களுக்குப் பின்னர், இயேசு கப்பர்நகூமுக்கு வந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் என்ற செய்தி பரவியது. ஏராளமான ஜனங்கள் இயேசுவின் போதனையைக் கேட்கக் கூடினார்கள். அந்த வீடு நிறைந்துவிட்டது. அங்கு நிற்பதற்கும் இடமில்லை. வாசலுக்கு வெளியேயும் இடமில்லை. இயேசு அவர்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். ஒரு பக்கவாதக்காரனைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். நான்கு பேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆனால் அவர்களால் அவனை இயேசுவின் அருகில் கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால் மக்கள் கூட்டம் அவ்வீட்டைச் சூழ்ந்திருந்தது. எனவே அவர்கள் கூரைமீது ஏறி இயேசு இருந்த இடத்துக்கு மேல் கூரையில் ஒரு திறப்பை உண்டாக்கினார்கள். பிறகு பக்கவாதக்காரனின் படுக்கையை வீட்டுக்குள் இறக்கினார்கள். அவர்களது அளவுக்கடந்த விசுவாசத்தை இயேசு பார்த்தார். எனவே பக்கவாதக்காரனைப் பார்த்து இயேசு, “இளைஞனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

சில வேதபாரகர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இயேசு செய்வனவற்றைப் பார்த்து விட்டு தங்களுக்குள், “ஏன் இந்த மனிதர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்? இவர் சொல்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதாகவே உள்ளதே. தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கத்தக்கவர்” என்று சொல்லிக் கொண்டனர்.

வேதபாரகர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே இயேசு அறிந்துகொண்டார். எனவே, இயேசு அவர்களிடம், “ஏன் இப்படி யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? பக்கவாதக்காரனைப் பார்த்து, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வது எளிதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்று சொல்வது எளிதா? இரண்டில் எது எளிதாகும்? 10 ஆனால் மனித குமாரனுக்குப் பூமியிலே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் உண்டு என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன்” என்று கூறி பிறகு பக்கவாதக்காரனைப் பார்த்து, 11 “நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திரு, உனது படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார்.

12 பக்கவாதக்காரன் எழுந்து, அவனது படுக்கையை எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். அனைத்து மக்களும் அவனைப் பார்த்தார்கள். அவர்கள் சந்தோஷப்பட்டு தேவனைப் புகழ்ந்தார்கள். அவர்கள், “இதுபோல ஆச்சரியம் மிக்க ஒன்றை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை!” என்றனர்.

லேவி இயேசுவைத் தொடருதல்

(மத்தேயு 9:9-13; லூக்கா 5:27-32)

13 இயேசு மறுபடியும் கடலருகே சென்றார். ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு அவர்களுக்கு உபதேசித்தார். 14 கடற்கரையையொட்டி நடந்து செல்லும்போது அல்பேயுவின் குமாரனான லேவி என்னும் வரி வசூலிப்பவனைக் கண்டார். லேவி வரி வசூலிப்பு அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தான். அவனிடம் இயேசு “என்னைப் பின் தொடர்ந்து வா” என்றார். உடனே லேவி எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.

15 அன்று, அதற்குப் பின் இயேசு லேவியினுடைய வீட்டில் உணவு உண்டார். அங்கே வரி வசூல் செய்பவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவரது சீஷர்களோடும் உணவு உண்டனர். இவர்களோடு பலர் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர். 16 அவர்களோடு வேதபாரகரும் பரிசேயரும் இருந்தனர். அவர்கள் பாவிகளோடும், வரி வசூல் செய்பவர்களோடும் சேர்ந்து இயேசு உணவு உட்கொள்வதைக் கண்டனர். அவர்கள் இயேசுவின் சீஷரை நோக்கி, “ஏன் இவர் வரிவசூல் செய்பவர்களோடும், பாவிகளுடனும் சேர்ந்து உணவு உண்கின்றார்?” என்று கேட்டனர்.

17 இயேசு இதனைக் கேட்டார். அவர் அவர்களை நோக்கி, “சுகமுள்ளவனுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிக்கே மருத்துவர் தேவை. நான் நல்லவர்களை அழைக்க வரவில்லை, பாவிகளை அழைக்கவே வந்தேன்” என்றார்.

பிற தலைவர்களைவிட வித்தியாசமானவர்

(மத்தேயு 9:14-17; லூக்கா 5:33-39)

18 யோவானின் சீஷர்களும், பரிசேயரின் சீஷர்களும் உபவாசம் இருந்தனர். சிலர் இயேசுவிடம் வந்து “யோவானுடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். பரிசேயருடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். உங்களுடைய சீஷர்கள் ஏன் உபவாசம் இருப்பதில்லை?” என்று கேட்டனர்.

19 அதற்கு இயேசு, “ஒரு திருமணத்தில் மணமகன் தம்முடன் இருக்கும்போது மணமகனின் நண்பர்கள் துயரப்படமாட்டார்கள். மணமகன் இன்னும் கூடவே இருக்கிற சந்தர்ப்பத்தில், அவர்களால் உபவாசம் இருக்க முடியாது. 20 ஆனால் மணமகன் பிரிந்து செல்லக்கூடிய ஒரு தருணம் வரும். அப்போது மணமகனைப் பிரிந்த வருத்தத்தில், அவன் நண்பர்கள் துயரமுடன் இருப்பார்கள். அதற்குப் பிறகு அவர்கள் உபவாசம் இருப்பார்கள்.

21 “எவனொருவனும் புதிய துணியோடு பழைய துணியைச் சேர்த்து ஒட்டுப்போட்டு தைக்கமாட்டான். அவன் அவ்வாறு செய்தால் ஒட்டுப்போட்டவை சுருங்கிவிடும். புதியது பழையதை அதிகமாய்க் கிழிக்கும். முன்னதைவிட மோசமாகும். 22 எவனொருவனும் புதிய திராட்சை இரசத்தை பழைய தோல் பையில் ஊற்றி வைக்கமாட்டான். ஊற்றி வைத்தால் புதிய இரசம் பழைய பையைக் கெடுத்துவிடும். அதோடு இரசமும் சிந்திவிடும். புதிய இரசத்தைப் புதிய பைகளிலேதான் மக்கள் ஊற்றி வைப்பார்கள்” என்று சொன்னார்.

யூதர்களின் விமர்சனம்

(மத்தேயு 12:1-8; லூக்கா 6:1-5)

23 ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். 24 பரிசேயர்கள் இதனைப் பார்த்து இயேசுவிடம், “உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ஓய்வு நாளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பது யூதர்களின் சட்டமல்லவா?” என்றனர்.

25 அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் 26 தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அபியத்தார் என்னும் தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த விஷயம் அது. தாவீது தேவனுடைய வீட்டில் நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட அப்பத்தை உண்டான். மோசேயின் விதிகளோ ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்கலாம் என்று கூறுகின்றன. தாவீது தன்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அப்பத்தைக் கொடுத்தான்” என்றார்.

27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. 28 எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center