Historical
1 இந்தப் புத்தகம் எல்கோசனாகிய நாகூமின் தரிசனம். இது நினிவே நகரத்தைப் பற்றிய துயரமான இறைவாக்கு.
கர்த்தர் நினிவே மேல் கோபமாயிருக்கிறார்
2 கர்த்தர் ஒரு எரிச்சலுள்ள தேவன், கர்த்தர் குற்றமுடையவர்களைத் தண்டிக்கிறார்.
கர்த்தர் குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கிறவரும்,
மிகவும் கோபமானவருமாயிருக்கிறார்!
கர்த்தர் தனது பகைவர்களைத் தண்டிக்கிறார்.
அவர் தனது பகைவர்கள் மீது கோபத்தை வைத்திருக்கிறார்.
3 கர்த்தர் பொறுமையானவர்.
ஆனால் அவர் வல்லமையுடையவராகவும் இருக்கிறார்.
கர்த்தர் குற்றம் செய்கிறவர்களைத் தண்டிப்பார்.
அவர் அவர்களை விடுதலை பெற விடமாட்டார்.
கர்த்தர் தீயவர்களைத் தண்டிக்க வந்துக்கொண்டிருக்கிறார்.
அவர் தமது ஆற்றலைக் காட்டுவதற்காகப் புயலையும் சுழற்காற்றையும் பயன்படுத்துவார்.
ஒரு மனிதன் தரையின் மேலும் புழுதியின் மேலும் நடக்கிறான்.
ஆனால் கர்த்தரோ மேகங்களின்மேல் நடக்கிறார்.
4 கர்த்தர் கடலிடம் அதட்டி பேசுவார் அது வறண்டுப்போகும்.
அவர் அனைத்து ஆறுகளையும் வற்றச்செய்வார்.
வளமான நிலமுடைய பாசானும் கர்மேலும் வறண்டுப்போகும்.
லீபனோனின் மலர்கள் வாடிப்போகும்.
5 கர்த்தர் வருவார்,
குன்றுகள் அச்சத்தால் நடுங்கும்,
மலைகள் உருகிப்போகும்.
கர்த்தர் வருவார், பூமி அச்சத்தால் நடுங்கும்.
உலகமும் அதிலுள்ள ஒவ்வொருவரும் அச்சத்தால் நடுங்குவார்கள்.
6 கர்த்தருடைய பெருங்கோபத்திற்கு எதிராக எவரும் நிற்கமுடியாது.
எவராலும் அவரது பயங்கரக் கோபத்தைத் தாங்க முடியாது.
அவரது கோபம் நெருப்பைப்போன்று எரியும்.
அவர் வரும்போது கல்மலைகள் பேர்க்கப்படும்.
7 கர்த்தர் நல்லவர்.
அவர் இக்கட்டான காலங்களில் நாம் செல்லக்கூடிய பாதுகாப்பான இடம்.
அவர் தன்னை நம்புகிறவரைக் கவனிக்கிறார்.
8 ஆனால் அவர் அவரது எதிரிகளை முழுவதுமாக அழிப்பார்.
அவர் ஒரு வெள்ளத்தைப்போன்று அவர்களை அழிப்பார்.
அவர் தமது எதிரிகளை இருளுக்குள் துரத்துவார்.
9 நீங்கள் ஏன் கர்த்தருக்கு எதிராகத் திட்டமிடுகிறீர்கள்.
அவர் முழுமையான அழிவைக் கொண்டுவருவார்,
எனவே நீங்கள் மீண்டும் துன்பங்களுக்கு காரணராகமாட்டீர்கள்.
10 முட்செடிகள் பானையின் கீழ் எரிந்து அழிவது போல
நீங்கள் முற்றிலும் அழிக்கப்படுவீர்கள்.
காய்ந்துப்போன பதர் வேகமாக எரிவதுப்போன்று
நீங்கள் வெகு விரைவாக அழிக்கப்படுவீர்கள்.
11 அசீரியாவே, உன்னிடமிருந்து ஒரு மனிதன் வந்தான்.
அவன் கர்த்தருக்கு எதிராகத் தீயவற்றை திட்டமிட்டான்.
அவன் தீய ஆலோசனைகளைத் தந்தான்.
12 கர்த்தர் யூதாவுக்கு இதனைச் சொன்னார்:
“அசீரியாவின் ஜனங்கள் முழுபலத்தோடு இருக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் வெட்டி எறியப்படுவார்கள். அவர்கள் அனைவரும் முறியடிக்கப்படுவார்கள்.
என் ஜனங்களே, நான் உங்களைத் துன்புறுத்தினேன்.
ஆனால் நான் இனிமேல் உங்களைத் துன்புறுத்தமாட்டேன்.
13 இப்பொழுது நான் உங்களை அசீரியாவின் அதிகாரத்தில் இருந்து விடுதலை செய்வேன்.
நான் உங்கள் கழுத்தில் உள்ள அந்த நுகத்தை எடுப்பேன்.
நான் உங்களைக் கட்டியிருக்கிற சங்கிலிகளை அறுப்பேன்.”
14 அசீரியாவின் ராஜாவே, கர்த்தர் உன்னைக் குறித்து இந்தக் கட்டளையை கொடுத்தார்:
“உன் பெயரை வைத்துக்கொள்ள சந்ததியார் யாரும் உனக்கு இருக்கமாட்டார்கள்.
நான் உன் தெய்வங்களின் ஆலயங்களில் உள்ள செதுக்கப்பட்ட
விக்கிரகங்களையும் உலோகச் சிலைகளையும் அழிப்பேன்.
நான் உனக்காக உனது கல்லறையைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்.
உனது முடிவு விரைவில் வர இருக்கிறது.”
15 யூதாவே, பார்!
அங்கே பார், குன்றுகளுக்கு மேல் வருவதைப் பார்.
இங்கே நல்ல செய்தியைத் தாங்கிக்கொண்டு தூதுவன் வருகிறான்.
அங்கே சமாதானம் இருக்கிறது என்று அவன் சொல்கிறான்.
யூதாவே, உனது விடுமுறை நாட்களைக் கொண்டாடு.
யூதாவே, நீ வாக்களித்தவற்றைச் செய்.
தீய ஜனங்கள் உன்னை மீண்டும் தாக்கித் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனெனில் அந்தத் தீய ஜனங்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்.
நினிவே அழிக்கப்படும்
2 ஒரு பகைவன் உன்னைத் தாக்க வந்துகொண்டிருக்கிறான்.
எனவே உன் நகரத்தின் வலிமையான பகுதிகளைக் காவல் செய்.
சாலைகளைக் காவல் காத்திடு.
போருக்குத் தயாராக இரு.
யுத்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய்.
2 ஆம், கர்த்தர் யாக்கோபின் மகிமையை மாற்றினார்.
இது இஸ்ரவேலரின் மகிமை போன்றிருக்கும்.
பகைவன் அவற்றை அழித்தான்.
அவர்களின் திராட்சைக் கொடிகளை அழித்தான்.
3 அவ்வீரர்களின் கேடயங்கள் சிவந்திருக்கிறது.
அவர்களின் சீருடைகள் பிரகாசமான சிவப்பாக உள்ளது.
அவர்களின் இரதங்கள் போருக்கு வரிசையாக உள்ளன,
நெருப்பின் ஜூவாலையைப் போன்று மின்னுகின்றன.
அவர்களின் குதிரைகள் போவதற்கு தயாராக உள்ளன.
4 அவர்களின் இரதங்கள் தெருக்களில் போட்டியிட்டு ஓடுகின்றன.
தெருக்களின் இடது சாரியாகவும் வலதுசாரியாகவும் ஓடுகின்றன.
அவை எரியும் பந்தங்களைப் போன்றும்,
அங்குமிங்கும் மின்னும் மின்னலைப் போலவும் காணப்படுகின்றன.
5 விரோதி தனது சிறந்த வீரர்களை அழைக்கிறான்.
ஆனால் அவர்கள் மதிற்சுவரை நோக்கி ஓடி,
அங்குள்ள சுவர்களைத் தகர்க்கும் கருவியின்மேல்
அவர்களின் கேடயத்தை நிறுவுகிறார்கள்.
6 ஆனால் ஆற்றின் மதகுகள் திறக்கப்படுகின்றன.
எதிரிகள் அவ்வழியாக வந்து ராஜாவின் வீட்டை அழிக்கிறார்கள்.
7 பகைவர்கள் ராணியைப் பிடித்துச் செல்வார்கள்.
அவளது அடிமைப்பெண்கள் புறாக்களைப் போன்று துக்கத்துடன் அழுவார்கள்.
அவர்கள் தம் மார்பில் அடித்துக்கொண்டு தமது துக்கத்தைக் காட்டுவார்கள்.
8 நினிவே, தண்ணீர் வற்றிப்போன
குளத்தைப்போன்று இருக்கிறது.
ஜனங்கள், “நிறுத்துங்கள்! ஓடுவதை நிறுத்துங்கள்!” என்று சொன்னார்கள்.
ஆனால் அது பயன் தரவில்லை.
9 நினிவேயை அழிக்கப்போகும் வீரர்களாகிய நீங்கள், வெள்ளியை எடுங்கள்!
தங்கத்தை எடுங்கள்!
அங்கே எடுப்பதற்கு ஏராளமாக உள்ளன.
அங்கே ஏராளமான கருவூலங்கள் உள்ளன.
10 இப்பொழுது, நினிவே காலியாக இருக்கிறது.
எல்லாம் திருடப்பட்டன.
நகரம் அழிக்கப்பட்டது.
ஜனங்கள் தங்கள் தைரியத்தை இழந்தனர்.
அவர்களது இதயங்கள் அச்சத்தால் உருகின.
அவர்களது முழங்கால்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டன,
அவர்களது உடல்கள் நடுங்குகின்றன, முகங்கள் அச்சத்தால் வெளுத்தன.
11 இப்பொழுது சிங்கத்தின் குகை (நினிவே) எங்கே?
ஆண்சிங்கமும் பெண்சிங்கமும் அங்கே வாழ்ந்தன.
அவற்றின் குட்டிகள் அஞ்சவில்லை.
12 சிங்கமானது (நினிவேயின் ராஜா) தனது குட்டிகளுக்கும் பெண்சிங்கத்திற்கும்
உணவு கொடுப்பதற்காக ஏராளமான ஜனங்களைக் கொன்று அழித்தது.
அது தனது குகையை (நினிவே) ஆண்களின் உடல்களால் நிறைத்தது.
அது தான் கொன்ற பெண்களின் உடல்களால் குகையை நிறைத்தது.
13 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
நான் உனது இரதங்களை எரிப்பேன், உனது ‘இளஞ்சிங்கங்களைப்’ போரில் கொல்வேன்.
நீ இந்த பூமியில் மீண்டும் எவரையும் வேட்டையாடமாட்டாய்.
ஜனங்கள் உனது தூதுவர்களிடமிருந்து மீண்டும் கெட்ட செய்திகளைக் கேட்கமாட்டார்கள்.”
நினிவேவுக்குச் கெட்டச் செய்தி
3 அந்த கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது மிகவும் கெட்டதாக இருக்கும்.
நினிவே, பொய்கள் நிறைந்த நகரமாக இருக்கிறது.
இது மற்ற நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களால் நிறைந்திருக்கிறது.
இந்நகரம், கொன்றும், கொள்ளையடித்தும் கொண்டுவந்த ஜனங்களாலும் அதிகமாக நிறைந்துள்ளது.
2 நீங்கள், சவுக்குகளின் ஓசையையும்,
சக்கரங்களின் அதிர்ச்சியையும்,
குதிரைகளின் பாய்ச்சலையும்,
இரதங்களின் ஓடுகிற சத்தத்தையும் கேட்கமுடியும்.
3 குதிரைமேல் வந்த வீரர்கள் தாக்குகின்றனர்.
அவர்களின் வாள்கள் மின்னுகின்றன.
அவர்களின் ஈட்டிகள் மின்னுகின்றன.
அங்கே, ஏராளமான மரித்த ஜனங்கள், மரித்த உடல்கள் குவிந்துள்ளன.
எண்ணுவதற்கு முடியாத ஏராளமான உடல்கள் உள்ளன.
ஜனங்கள் மரித்த உடல்களில் தடுக்கி விழுகின்றனர்.
4 இவை அனைத்தும் நினிவேயால் ஏற்பட்டன.
நினிவே, ஒரு வேசியைப் போன்றவள்.
அவளுக்குத் திருப்தி இல்லை. அவள் மேலும், மேலும் விரும்பினாள்.
அவள் தன்னைத்தானே பல நாடுகளுக்கு விற்றாள்.
அவள் அவர்களைத் தன் அடிமையாக்க மந்திரத்தைப் பயன்படுத்தினாள்.
5 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
நான் உனது ஆடைகளை உன் முகம் மட்டும் தூக்குவேன்.
நான் உனது நிர்வாண உடலை தேசங்கள் பார்க்கும்படிச் செய்வேன்.
அந்த இராஜ்யங்கள் உனது அவமானத்தைக் காணும்.
6 நான் உன்மேல் அசுத்தமானவற்றை எறிவேன்.
நான் உன்னை வெறுக்கத்தக்க முறையில் நடத்துவேன்.
ஜனங்கள் உன்னைப் பார்த்து சிரிப்பார்கள்.
7 உன்னைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைவார்கள்.
அவர்கள், ‘நினிவே அழிக்கப்படுகிறது.
அவளுக்காக யார் அழுவார்கள்?’ என்பார்கள்.
நினிவே, என்னால் உன்னை ஆறுதல்படுத்தும் எவரையும்
கண்டுபிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.”
8 நினிவே, நீ நல்ல ஆற்றங்கரையிலுள்ள தீப்ஸ்ஸைவிடச் சிறந்ததா? இல்லை! தீப்ஸும் தன்னைச் சுற்றி தண்ணீர் நிறைந்துள்ளது. தீப்ஸ் தன்னைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள தண்ணீரை பயன்படுத்துகிறது. அவள் தண்ணீரைச் சுவரைப்போன்று பயன்படுத்துகிறாள். 9 எத்தியோப்பியாவும் எகிப்தும் தீப்ஸ்ஸுக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தன. சூடான், லிபியா தேசங்கள் அவளுக்கு உதவின. 10 ஆனால், தீப்ஸ் தோற்கடிக்கப்பட்டது. அவளது ஜனங்கள் அந்நிய நாடுகளுக்குக் கைதிகளாகக் கொண்டுச்செல்லப்பட்டனர். வீரர்கள் ஒவ்வொரு தெரு முனையிலும் அவளது சிறு குழந்தைகளைக் கொல்வதற்காக அடித்தனர். அவர்கள் சீட்டுப்போட்டு முக்கியமான ஜனங்களை யார் அடிமைகளாக வைத்துக்கொள்வது என்பது பற்றி முடிவெடுத்தனர். தீப்ஸ்ஸில் உள்ள முக்கியமானவர்கள் மீது சங்கிலிகளைப் பூட்டினார்கள்.
11 எனவே நினிவே, நீயும் ஒரு குடிக்காரனைப் போன்று விழுவாய். நீ ஒளிந்துக்கொள்ள முயல்வாய். நீ பகைவரிடமிருந்து மறைய ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவாய். 12 ஆனால் நினிவே, உனது பலமுள்ள அனைத்து இடங்களும் அத்தி மரங்களைப் போன்றவை புதியப்பழங்கள் பழுக்கும். ஒருவன் வந்து மரத்தை உலுக்குவான். அந்த அத்திப்பழங்கள் அவனது வாயில் விழும். அவன் அவற்றை உண்பான். அவைகள் தீர்ந்துவிட்டன.
13 நினிவே, உன் ஜனங்கள் அனைவரும் பெண்களைப் போன்றிருக்கின்றனர். பகை வீரர்கள் அவர்களை எடுத்துச்செல்லத் தயாராக இருப்பார்கள். உங்கள் நாட்டின் வாசல்கள் எதிரிகள் நுழைவதற்காகத் திறந்தே கிடக்கும், வாசலின் குறுக்காக கிடக்கும் மரச்சட்டங்களை நெருப்பு அழித்திருக்கிறது.
14 நீங்கள் தண்ணீரை உங்களது நகருக்குள் சேமியுங்கள். ஏனென்றால், பகைவீரர்கள் உங்கள் நகரை முற்றுகையிடுவார்கள். அவர்கள் எவரையும் தண்ணீரும் உணவும் நகருக்குள் கொண்டுசெல்ல விடமாட்டார்கள். நீங்கள் உங்களது அரண்களைப் பலப்படுத்துங்கள். அதிகமான செங்கல்களைச் செய்ய களி மண்ணைக் கொண்டு வாருங்கள். சாந்தைக் கலந்து செங்கல்களுக்கு உருவம் அளிக்கும் பொருளை பெற்றுக்கொள்ளுங்கள். 15 நீங்கள் எல்லாவற்றையும் செய்யலாம். ஆனால் நெருப்பு அவற்றை முழுமையாக அழித்துவிடும். வாள் உங்களைக் கொல்லும். உங்கள் நிலம் பச்சைக்கிளிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டதுபோல் ஆகும்.
நினவே, நீ மேலும், மேலும் வளர்வாய். நீ பச்சைக்கிளிகளைப்போல மாறுவாய். முன்பு நீ வெட்டுக்கிளியைப் போன்றிருந்தாய். 16 உன்னிடம் ஒவ்வொரு இடங்களுக்கும் போய் பொருட்களை வாங்குகிற வியாபாரிகள் அதிகமாக உள்ளனர். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப்போன்று என்ணிக்கை உடையவர்கள். அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போன்று வந்து எல்லாம் அழியும்வரை உண்டு, பின் சென்றுவிடுவார்கள். 17 உங்களது அரசு அதிகாரிகளும் வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள். அவர்கள் குளிர் நாளில் சுவர்களுக்குமேல் இருக்கும் வெட்டுக் கிளிகளைப் போன்றுள்ளனர். ஆனால் சூரியன் மேலே வந்தபோது, பாறைகள் சூடாகும். வெட்டுக்கிளிகள் வெளியே பறந்துப்போகும். ஒருவரும் எங்கே என்று அறியமாட்டார்கள். உங்களது அதிகாரிகளும் அத்தகையவர்களே.
18 அசீரியாவின் ராஜாவே, உங்களது மேய்ப்பர்கள் (தலைவர்கள்) தூங்கிவிழுந்தனர். அப்பலமிக்க மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உங்கள் ஆடுகள் (ஜனங்கள்) குன்றுகளின் மேல் அலைந்திருக்கின்றன. அவற்றைத் திருப்பிக் கொண்டுவர எவருமில்லை. 19 நினிவே நீ மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாய். உன் காயத்தை எவராலும் குணப்படுத்த முடியாது. உனது அழிவைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவரும் கைத்தட்டுவார்கள். அவர்கள் அனைவரும் மகிழ்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அனைவரும் உன்னால் எப்பொழுதும் ஏற்பட்ட வலியை உணர்ந்தவர்கள்.
ஆபகூக் தேவனிடம் முறையிடுகின்றான்
1 ஆபகூக் எனும் தீர்க்கதரிசிக்கு கொடுக்கப்பட்ட செய்தி இதுதான்.
2 கர்த்தாவே, நான் தொடர்ந்து உம்முடைய உதவியை வேண்டுகிறேன். எப்பொழுது எனக்கு செவிகொடுப்பீர். நான் வன்முறையைப்பற்றி உம்மிடம் அழுதேன். ஆனால் நீர் எதுவும் செய்யவில்லை. 3 ஜனங்கள் திருடிக்கொண்டும், மற்றவர்களை காயப்படுத்திக்கொண்டும், விவாதித்துக்கொண்டும், சண்டையிட்டுக்கொண்டும், இருக்கிறார்கள், நீர் ஏன் என்னை இவற்றையெல்லாம் பார்க்கும்படிச் செய்கிறீர். 4 சட்டமானது பலவீனமுடையதாகவும், ஜனங்களுக்கு நேர்மையில்லாததாகவும் உள்ளது. தீய ஜனங்கள், நல்ல ஜனங்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெறுகிறார்கள். எனவே, சட்டம் எப்பொழுதும் நேர்மையானதாக இருப்பதில்லை. நீதி எப்பொழுதும் வெற்றி பெறுகிறதில்லை.
தேவன் ஆபகூக்குக்குப் பதிலளிக்கிறார்
5 கர்த்தர், “மற்ற நாடுகளைப் பாருங்கள். அவர்களைக் கவனியுங்கள். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நான் உங்கள் வாழ்நாட்களுக்குள் சிலவற்றைச் செய்வேன். அவை உங்களை ஆச்சரியப்படுத்தும். நீங்கள் அவற்றைக் கண்டபின்தான் நம்புவீர்கள். அதை உங்களுக்குச் சொல்லியிருந்தால் நம்பமாட்டீர்கள். 6 நான் பாபிலோனிய ஜனங்களை ஒரு பலமுள்ள நாட்டினராகச் செய்வேன். அந்த ஜனங்கள் இழிவான, வல்லமை பொருந்திய போராளிகளாக இருப்பார்கள். அவர்கள் பூமியைக் கடந்து செல்வார்கள். அவர்கள் தங்களுக்கு உரிமையில்லாத வீடுகளையும் நகரங்களையும் எடுத்துக்கொள்வார்கள். 7 பாபிலோனிய ஜனங்கள் பிற ஜனங்களை பயமுறுத்துவார்கள். பாபிலேனிய ஜனங்கள் தாம் விரும்புவதைச் செய்வார்கள், தாம் போகவிரும்பும் இடத்துக்குப் போவார்கள். 8 அவர்களின் குதிரைகள் சிறுத்தையைவிட வேகமாகச் செல்லும், மாலைநேரத்து ஓநாய்களைவிடவும் கொடியவராக இருப்பார்கள். அவர்களின் குதிரைவீரர்கள் தொலை தூரங்களிலிருந்து வருவார்கள். அவர்கள் தங்கள் பகைவர்களை வானத்திலிருந்து பாய்ந்து தாக்கும் பசிகொண்ட கழுகுகளைப்போன்று தாக்குவார்கள். 9 அவர்கள் விரும்பும் ஒரே செயல் சண்டையிடுவதுதான். அவர்களது படைகள் பாலைவனத்து காற்றைப்போன்று வேகமாகச் செல்லும். பாபிலேனிய வீரர்கள் பல சிறைக்கைதிகளை மணல்போன்ற எண்ணிக்கையில் கைபற்றுவார்கள்.
10 “பாபிலோனிய வீரர்கள் பிறநாடுகளில் உள்ள ராஜாக்களைப் பார்த்து நகைப்பார்கள். அந்நிய ஆளுநர்கள் இவர்களுக்குப் பரிகாசத்துக்குரியவர்களாவார்கள். பாபிலோனிய வீரர்கள் நகரங்களில் உயர்ந்த உறுதியான சுவர்களைப் பார்த்து சிரிப்பார்கள். வீரர்கள் மண்மேடுகளை சுவர்களின் உச்சிவரை குவித்து எளிதாக நகரங்ளை தோற்கடிப்பார்கள். 11 பிறகு அவர்கள் காற்றைப் போன்று விரைந்துசென்று, மற்ற இடங்களில் போரிடச் செல்வார்கள். பாபிலோனியர்கள் தம் சொந்த பலத்தையே தொழுதுகொள்வார்கள்” என்று பதில் சொன்னார்.
ஆபகூக்கின் இரண்டாவது முறையீடு
12 பிறகு ஆபகூக் சொன்னான்,
“கர்த்தாவே, நீரே என்றென்றும் வாழ்கிற கர்த்தர்.
நீர் என்றென்றும் மரணமடையாத என் பரிசுத்தமான தேவன்.
கர்த்தாவே, நீர் பாபிலோனிய ஜனங்களை எதைச் செய்ய வேண்டுமோ அதற்காகப் படைத்தீர்.
எங்கள் அடைக்கலப் பாறையே, நீர் அவர்களை யூதாவிலுள்ள ஜனங்களை தண்டிப்பதற்காகப் படைத்தீர்.
13 உம்முடைய கண்கள் மிகவும் பரிசுத்தமானதால் அவை தீமையை நோக்குவதில்லை.
ஜனங்கள் பாவம் செய்வதை உம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
எனவே, இத்தீய ஜனங்கள் வெற்றிப்பெறுவதை எப்படி உம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியும்.
தீய ஜனங்கள் நல்லவர்களை அழிப்பதைக் கண்டு ஒன்றும் செய்யாமல் நீர் எப்படி பார்த்திருக்கக்கூடும்?
14 “நீர் ஜனங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும்,
கடலில் உள்ள தலைவனற்ற சிறிய உயிரினங்களைப்போன்றும் படைத்துள்ளீர்.
15 பகைவர் அவர்களனைவரையும் தூண்டிலாலும் வலைகளாலும் பிடிப்பார்கள்.
பகைவன் தனது வலையால் அவர்களை பிடித்து இழுத்துப் போவான்.
பகைவன் தான் கைப்பற்றியதுப்பற்றி மகிழுவான்.
16 அவனது வலை அவன் செல்வந்தனாக வாழ்ந்து
நல்ல உணவை உண்டு மகிழ உதவுகிறது.
எனவே பகைவன் தனது வலைகளை தொழுதுகொள்கிறான்,
அவன் தனது வலையைக் கௌரவப்படுத்த பலிகளை செலுத்தி நறுமணப் பொருட்களையும் எரிக்கிறான்.
17 அவன் தனது வலையுடன் செல்வத்தைத் தொடர்ந்து எடுப்பானா?
அவன் தொடர்ந்து இரக்கமில்லாமல் ஜனங்களை அழிப்பானா?
2 “நான் ஒரு காவலாளியைப்போன்று நின்று கவனிப்பேன்.
கர்த்தர் என்னிடம் என்ன சொல்லப் போகிறார் என்று காண நான் காத்திருப்பேன்.
அவர் எவ்வாறு என் வினாக்களுக்கு பதில் சொல்கிறார் என்பதைக் காத்திருந்து கவனிப்பேன்.”
தேவன் ஆபகூக்குக்கு பதிலளிக்கிறார்
2 கர்த்தர் எனக்குப் பதிலாக, “நான் உனக்குக் காண்பிக்கின்றவற்றை கற்பலகையில் எழுது. அதனை ஜனங்கள் எளிதாகப் படிக்க முடியும்படி அவற்றை தெளிவாக எழுது. 3 இச்செய்தியானது வருங்காலத்தில் உள்ள ஒரு சிறப்பான காலம் பற்றியது. இந்தச் செய்தி முடிவை பற்றியது; இப்பொழுது இது உண்மையாகும். அது என்றென்றும் வராது என்பது போல தோன்றுகிறது. ஆனால் பெறுமையாக அதற்குக் காத்திரு. அந்த நேரம் வரும். இது தாமதம் ஆகாது. 4 இச்செய்தி ஜனங்களுக்கு கேட்க மறுக்கின்றவர்களுக்கு உதவாது. ஆனால் ஒரு நல்லவன் இச்செய்தியை நம்புவான். நல்லவன் தனது விசுவாசத்தினால் ஜீவிப்பான்” என்றார்.
5 தேவன், “மதுபானம் எத்தனை அதிகமாக ஒரு அகங்காரம் உள்ள மனிதனை ஏமாற்றுகிறது. அதே வழியில், வலிமையான ஒருவனின் பேராசை அவனை முட்டாளாக்கும். ஆனால் அவன் சமாதானத்தைப் பெறமாட்டான். அவன் மரணத்தைப் போன்றவன். அவன் எப்போதும் அதிகமாக சேர்க்க விரும்புகிறான். அவன் மரணத்தைப் போன்று எப்பொழுதும் திருப்தியைடையமாட்டான். அவன் தொடர்ந்துப் பிற நாடுகளைத் தோற்கடிப்பான். அவன் தொடர்ந்து அந்த ஜனங்களைச் சிறைக் கைதிகளாக்குவான். 6 ஆனால் ஜனங்கள் அவனைப் பார்த்து விரைவில் நகைப்பார்கள். அவர்கள் அவனது தோல்வியைப்பற்றி நகைத்து சொல்வார்கள், ‘இது மிகவும் மோசமானது. அந்த மனிதன் பலவற்றை எடுத்தான், அவன் தனக்கு உரிமையில்லாதவற்றை எடுத்தான், அவன் அதிகமான கடன்களை வசூலித்து அதினால் செல்வந்தனானான்.’”
7 “பலவானே, நீ ஜனங்களிடமிருந்து பணத்தை எடுத்திருக்கிறாய். ஒருநாள் அந்த ஜனங்கள் விழித்தெழுந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று உணர்வார்கள். அவர்கள் உனக்கு எதிராக நிற்பார்கள். பிறகு அவர்கள் உன்னிடமிருந்து பொருட்களை எடுத்துக்கொள்வார்கள். நீ மிகவும் அஞ்சுவாய் 8 நீ பல நாடுகளிலிருந்து பொருட்களை எடுத்திருக்கிறாய். எனவே, அந்த ஜனங்கள் உன்னிடமிருந்து மிகுதியாக எடுப்பார்கள். நீ ஏராளமான ஜனங்களைக் கொன்றிருக்கிறாய். நீ நிலங்களையும் நகரங்களையும் அழித்திருக்கிறாய். அங்கே உள்ள அனைத்து ஜனங்களையும் கொன்றிருக்கிறாய்.
9 “ஆமாம், தவறான காரியங்களால் செல்வம் சேர்த்தவனுக்குப் பெருங்கேடு ஏற்படும். அம்மனிதன் பாதுபாப்பான இடத்தில் வாழ்வதற்கு அவற்றைச் செய்கிறான். அவனிடமிருந்து மற்ற ஜனங்கள் பொருட்களைத் திருடாமல் தடுக்கமுடியும் என்று நினைக்கிறான். ஆனால் அவனுக்கு கேடுகள் ஏற்படும். 10 நீ (பலமுள்ளவன்) ஏராளமான ஜனங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறாய். ஆனால் அத்திட்டங்கள் உன் வீட்டிற்கு அவமானத்தைக் கொண்டுவரும். நீ கேடான காரியங்களைச் செய்திருக்கிறாய். நீ உனது வாழ்க்கையை இழப்பாய். 11 உனக்கு எதிராக சுவர்களிலுள்ள கற்களும் அழும். உன் சொந்த வீட்டிலுள்ள மர உத்திரங்களும் உனக்கெதிராக குற்றஞ்சாட்டும்.
12 “ஒரு நகரத்தை உருவாக்குவதற்காக ஜனங்களுக்குத் தீமைச் செய்து அவர்களைக் கொலை செய்கிற தலைவனுக்குப் பெருங்கேடு ஏற்படும். 13 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நகரைக் கட்டுவதற்காக ஜனங்கள் உழைத்த உழைப்பை தீயினால் எரித்துப்போடும்படி தீர்மானம் செய்திருக்கிறார். அவர்களது அனைத்து வேலைகளும் வீணாகும். 14 பிறகு எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்கள் கர்த்தருடைய மகிமையை அறிவார்கள். கடலுக்குள் தண்ணீர் பரவுவதுபோல இச்செய்தி பரவும். 15 தன்னுடைய நண்பர்களுக்குப் போதை ஏற்றுகிறவனுக்குக் கேடு விளையும். அவன் திராட்சைரசத்தோடு விஷத்தைக் கலக்கிறான். பிறகு அவர்களது நிர்வாணத்தைப் பார்க்கிறான்.
16 “ஆனால், அந்த மனிதன் கர்த்தருடைய கோபத்தை அறிவான். அக்கோபமானது கர்த்தருடைய வலதுகையில் உள்ள விஷம் நிறைந்த கிண்ணத்தைப் போன்றது. அம்மனிதன் அக்கோபத்தைச் சுவைப்பான். அவன் குடிக்காரனைப்போன்று கீழே தரையில் விழுவான்.
“தீமையான ராஜாவே, நீ அக்கிண்ணத்திலிருந்து குடிப்பாய். நீ மகிமையை அல்ல அவமானத்தைப் பெறுவாய். 17 லீபனோனில் உள்ள பல ஜனங்கள் உன்னால் பாதிக்கப்பட்டனர். நீ அங்கே பல மிருகங்களைத் திருடினாய். எனவே, நீ அஞ்சுகிறாய். ஏனென்றால் மரித்துப்போன ஜனங்களும் அந்நாட்டில் நீ செய்த அக்கிரமங்களும், இதற்கு காரணமாகும். நீ அந்த நகரங்களுக்கும், அவற்றில் வாழ்ந்த ஜனங்களுக்கும் பயப்படுவாய்” என்றார்.
விக்கிரகங்கள் பற்றிய செய்தி
18 அந்த நபரின் விக்கிரகங்கள் அவனைக் காப்பாற்றுவதில்லை. ஏனென்றால், அது வெறுமனே உலோகத்தால் மூடப்பட்ட சிலைதான். அது சிலை மட்டும்தான். எனவே, அந்தச் சிலையைச் செய்த நபர் அந்த சிலையினிடத்திலிருந்து உதவிகிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தச் சிலையால் பேசக்கூட முடியாது. 19 மரச்சிலையைப் பார்த்து “எழும்பு!” என்று சொல்கிறவன் மிகவும் மோசமானவன். பேசமுடியாத ஒரு கற்சிலையிடம் ஒருவன் “விழித்தெழு!” என்று கூறுவது அவனுக்கு மிகவும் கேடானது. அவை அவனுக்கு உதவாது. அச்சிலை வேண்டுமானால் பொன்னாலும் வெள்ளியாலும் மூடப்பட்டிருக்கலாம், ஆனால் அச்சிலைக்குள் உயிரில்லை.
20 ஆனால் கர்த்தர் வித்தியாசமானவர். கர்த்தர் தனது பரிசுத்தமான ஆலயத்தில் உள்ளார். எனவே, பூமிமுழுவதும் அமைதியாக இருந்து கர்த்தருக்கு முன் மரியாதை காட்டட்டும்.
ஆபகூக்கின் ஜெபம்
3 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் செய்த ஜெபம்.
2 கர்த்தாவே, நான் உம்மைப்பற்றிய செய்திகளைக் கேட்டிருக்கிறேன்.
கர்த்தாவே, நீர் கடந்த காலத்தில் செய்த வல்லமைமிக்க செயல்களால் ஆச்சரியப்படுகிறேன்.
இப்பொழுது நான், நீர் எங்கள் காலத்தில் பெருஞ் செயல்கள் செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.
தயவுசெய்து அச்செயல்கள் எங்கள் காலத்தில் நிகழுமாறு செய்யும்.
ஆனால் நீர் கோபங்கொள்ளும்போதும்
எங்கள் மீது இரக்கம் காட்ட நினைத்துக்கொள்ளும்.
3 தேவன் தேமானிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்,
பரிசுத்தமானவர் பாரான் மலையிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்.
கர்த்தருடைய மகிமை பரலோகங்களை நிறைத்துள்ளது.
அவரது துதி பூமியில் நிறைந்துள்ளது.
4 அவரது கையிலிருந்து பிரகாசமான கதிர்கள் வரும். இது பிரகாசமான வெளிச்சம் போன்றது.
அத்தகைய வல்லமை அவரது கையில் மறைந்துகொண்டிருக்கும்.
5 அவருக்கு முன்னால் கொள்ளைநோய் போனது.
அழிப்பவன் அவரைப் பின் தொடர்வான்.
6 கர்த்தர் நின்று பூமியை அசைத்தார்.
அவர் அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களைப் பார்த்தார்.
அவர்கள் அச்சத்துடன் நடுங்கினார்கள்.
பல ஆண்டுகளாகக் குன்றுகள் பலமாக நின்றுக்கொண்டிருக்கின்றன.
ஆனால் அக்குன்றுகள் விழுந்து துண்டுகளாகின.
பழைய குன்றுகள் விழுந்துவிட்டது.
தேவன் எப்பொழுதும் அப்படியே இருந்திருக்கிறார்.
7 நான் குஷான் நகரங்கள் துன்பத்தில் இருப்பதைப் பார்த்தேன்.
மீதியான் வீடுகள் அச்சத்தால் நடுங்கின.
8 கர்த்தாவே, உமக்கு நதிகள் மீது கோபமா?
தண்ணீரோடைகள் மீது உமக்குக் கோபமா?
கடல்மீது உமக்குக் கோபமா?
உம்முடைய குதிரைகள் மீதும், உமது இரதங்கள் மீதும் வெற்றிநோக்கி பவனி சென்றபோது கோபப்பட்டீரா?
9 அதற்குப்பிறகும் நீர் உமது வானவில்லைக் காட்டினீர்.
பூமியில் உள்ள குடும்பத்தினருடன் உமது உடன்படிக்கைக்கு இது சான்றாயிற்று.
வறண்ட நிலம் ஆறுகளைப் பிளந்தன.
10 மலைகள் உம்மை பார்த்து அதிர்ந்தன.
தண்ணீர் நிலத்தில் பாய்ந்து வடிந்து போனது.
கடலில் உள்ள தண்ணீர் தனது பூமியின் மேலிருந்த அதிகாரத்தை இழந்துவிட்டதாக உரத்த சத்தம் எழுப்பியது.
11 சூரியனும் சந்திரனும் தங்கள் பிரகாசத்தை இழந்தன.
அவை உமது மின்னல்களின் பிரகாசத்தைப் பார்த்து வெளிச்சத்தை நிறுத்திக்கொண்டன.
மின்னலானது காற்று வழியாகப் பாயும் அம்புகளைப்போன்றும், ஈட்டிகளைப் போன்றும் உள்ளன.
12 நீர் கோபத்துடன் பூமியின்மேல் நடந்தீர்;
பல தேசங்களைத் தண்டித்தீர்.
13 நீர் உமது ஜனங்களைக் காப்பாற்ற வந்தீர்.
நீர் தேர்ந்தெடுத்த ராஜாவை வெற்றி நோக்கி நடத்த வந்தீர்.
ஒவ்வொரு தீமை செய்கிற குடும்பத்திலும் உள்ள தலைவர்களை,
முக்கியமானவர்களானாலும்
முக்கியமற்றவர்களானாலும் அவர்களைக் கொன்றீர்.
14 நீர் மோசேயின் கைத்தடியைப் பயன்படுத்தி
பகை வீரர்களைத் தடுத்தீர்.
அவ்வீரர்கள் எனக் கெதிராகப் போரிட
வல்லமைமிக்கப் புயலைப் போல் வந்தார்கள்.
ஒரு ஏழையை ரகசியமாகக் கொள்ளையிடுவது போல்
எங்களை எளிதாக வெல்லமுடியுமென எண்ணினார்கள்.
15 ஆனால் நீர் உம் குதிரைகளை
ஆழமான தண்ணீர் வழியாக மண்ணைக் கலங்கும்படி நடக்கச் செய்தீர்.
16 நான் அந்தக் கதையைக் கேட்டபோது என் உடல் முழுவதும் நடுங்கியது.
நான் உரக்க பரிகசித்தேன்.
நான் என் எலும்புகளின் பலவீனத்தை உணர்ந்தேன்.
நான் அங்கே நின்று நடுங்கிக்கொண்டிருந்தேன்.
எனவே நான் பகைவர் வந்து தாக்கும் அந்த அழிவின் நாளுக்காகக் காத்திருப்பேன்.
கர்த்தருக்குள் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்
17 அத்திமரங்களில் அத்திப்பழங்கள் வளராமலிருக்கலாம்.
திராட்சைக்கொடிகளில் திராட்சைப் பழங்கள் வளராமலிருக்கலாம்.
ஒலிவ மரங்களில் ஒலிவ பழங்கள் வளராமலிருக்கலாம்,
வயல்களில் தானியம் விளையாமலிருக்கலாம்,
கிடையில் ஆட்டு மந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
தொழுவத்தில் மாடுகள் இல்லாமல் இருக்கலாம்.
18 ஆனால், கர்த்தருக்குள் நான் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்பேன்.
எனது இரட்சகரான தேவனில் நான் மகிழ்வேன்.
19 எனக்கு அதிகாரியான என் கர்த்தர் எனக்குப் பலத்தை கொடுக்கிறார்.
அவர் என்னை மானைப்போன்று ஓட உதவுகிறார்.
அவர் என்னைக் குன்றுகளில் பாதுகாப்பாக வழிநடத்துகிறார்.
இது இசையமைப்பாளருக்கு எனது நரம்பு வாத்தியங்களில் வாசிக்க வேண்டியது.
2008 by World Bible Translation Center