Historical
கோகும் அவனது படையும் மரணமடைதல்
39 “மனுபுத்திரனே, எனக்காகக் கோகிற்கு விரோதமாகப் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவனிடம் சொல், ‘கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய இரு நாடுகளிலும் மிக முக்கியமான தலைவன்! ஆனால், நான் உனக்கு விரோதமானவன். 2 நான் உன்னைக் கைப்பற்றி இங்கே கொண்டு வருவேன். நான் உன்னை வட திசையிலிருந்து கொண்டுவருவேன். நான் உன்னை இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாகப் போரிட அழைப்பேன். 3 ஆனால் நான் உனது இடது கையிலுள்ள வில்லைத் தட்டிவிடுவேன். நான் உனது வலது கையிலுள்ள அம்புகளைத் தட்டிவிடுவேன். 4 நீ இஸ்ரவேலின் மலைகளில் கொல்லப்படுவாய். அப்போரில் நீயும் உன்னோடுள்ள படை வீரர்களும், உன்னோடுள்ள பிற நாட்டவர்களும் கொல்லப்படுவார்கள். நான் உங்களை இறைச்சியைத் தின்னுகிற எல்லாவகைப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகக் கொடுப்பேன். 5 நீ நகரத்திற்குள் நுழையமாட்டாய். நீ வெளியே திறந்த வெளியில் கொல்லப்படுவாய். நான் சொன்னேன்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
6 தேவன் சொன்னார்: “நான் மாகோகுக்கு விரோதமாகவும் தீவுகளில் பாதுகாப்பாக வாழ்கிற ஜனங்களுக்கு விரோதமாகவும் நெருப்பை அனுப்புவேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். 7 நான் எனது பரிசுத்தமான நாமம் இஸ்ரவேல் ஜனங்களிடம் தெரியும்படிச் செய்வேன். நான் இனிமேல் என் நாமத்தை ஜனங்கள் அழிக்கும்படி விடமாட்டேன். நானே கர்த்தர் என்பதை நாடுகள் அறியும். நான் இஸ்ரவேலில் பரிசுத்தமானவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். 8 அந்தக் காலம் வருகின்றது! இது நிகழும்!” கர்த்தர் இவற்றைச் சொன்னார்: “நான் பேசுகிறது அந்த நாளைப்பற்றித்தான்.
9 “அந்த நேரத்தில், இஸ்ரவேல் நகரங்களில் வாழ்கின்ற ஜனங்கள் வயல்களைவிட்டு வெளியே செல்வார்கள். அவர்கள் பகைவர்களின் ஆயுதங்களைப் பொறுக்கி அவற்றை எரிப்பார்கள். அவர்கள் எல்லா கேடயங்களையும், வில்லம்புகளையும், வளை தடிகளையும், ஈட்டிகளையும் எரிப்பார்கள். அவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு அவற்றை விறகாகப் பயன்படுத்துவார்கள். 10 அவர்கள் வயல்களில் விறகு பொறுக்குவதையோ அல்லது காடுகளில் விறகு வெட்டவோமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் ஆயுதங்களை விறகாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் தம்மைக் கொள்ளையிட்ட வீரர்களிடமிருந்து விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பார்கள். தங்களிடமிருந்து நல்ல பொருட்களைச் சூறையாடியவர்களிடமிருந்து, நல்ல பொருட்களை அவர்கள் சூறையாடுவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
11 தேவன் சொன்னார்: “அந்நாளில், நான் இஸ்ரவேலில் கோகைப் புதைக்கிற இடத்தைத் தேர்ந்தெடுப்பேன். அவன், சவக் கடலின் கிழக்கே பயணக்காரர்களின் பள்ளத்தாக்கில் புதைக்கப்படுவான். அது பயணிகளின் வழியை அடைக்கும். ஏனென்றால், கோகும் அவனது படையும் அந்த இடத்தில் புதைக்கப்படுவார்கள். ஜனங்கள் இதனை ‘ஆமோன் கோகின் பள்ளத்தாக்கு’ என்று அழைப்பார்கள். 12 இஸ்ரவேல் வம்சத்தார் அவர்களை புதைத்து பூமியைச் சுத்தப்படுத்த ஏழு மாதங்கள் ஆகும். 13 பொது ஜனங்கள் அந்த பகைவீரர்களைப் புதைப்பார்கள். நானே எனக்கு மகிமைக் கொண்டுவரும், அந்த நாளில் அவர்கள் புகழடைவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றை கூறினார்.
14 தேவன் சொன்னார்: “ஜனங்கள் வேலைக்காரர்களுக்கு மரித்த வீரர்களைப் புதைக்க முழுநாள் வேலையைக் கொடுப்பார்கள். இவ்வாறு, அவர்கள் பூமியைச் சுத்தம் செய்தார்கள். வேலைக்காரர்கள் ஏழு மாதங்கள் வேலைசெய்வார்கள். அவர்கள் மரித்த உடல்களைத் தேடி சுற்றிலும் அலைவார்கள். 15 அவ்வேலைக்காரர்கள் தேடியலைவார்கள். அவர்களில் ஒருவன் எலும்பைப் பார்த்தால் அவன் அதில் ஒரு அடையாளம் இடுவான். அந்த அடையாளமானது கல்லறைக்குழி தோண்டுகிறவர்கள் வந்து அந்த எலும்பை கோகின் பள்ளத்தாக்கில் புதைக்கும்வரை இருக்கும். 16 மரித்த ஜனங்களின் நகரமானது ஆமோனா என்று அழைக்கப்படும். இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவார்கள்.”
17 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “மனுபுத்திரனே, எனக்காக எல்லாப் பறவைகளிடமும் காட்டு மிருகங்களிடமும் பேசு: ‘இங்கே வாருங்கள்! இங்கே வாருங்கள்! சுற்றிலும் கூடுங்கள். நான் உங்களுக்காகத் தயார் செய்து வைத்த இந்தப் பலியை உண்ணுங்கள், இஸ்ரவேலின் மலைகளில் மிகப் பெரிய பலி இருக்கும். வாருங்கள் இறைச்சியைத் தின்று இரத்தத்தைக் குடியுங்கள். 18 நீங்கள் பலமான வீரர்களின் உடல்களிலுள்ள இறைச்சியைத் தின்பீர்கள். உலகத் தலைவர்களின் இரத்தத்தை நீங்கள் குடிப்பீர்கள். அவர்கள் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக் கடாக்களுக்கும், ஆட்டுக் குட்டிகளுக்கும், வெள்ளாட்டுக் கடாக்களுக்கும், காளைகளுக்கும் சமமானவர்கள். 19 நீங்கள் உங்கள் விருப்பம்போல் கொழுப்பை எல்லாம் உண்ணலாம். நீங்கள் வயிறு நிறைய இரத்தம் குடிக்கலாம். நான் உங்களுக்காகக் கொன்ற எனது பலிகளிலிருந்து நீங்கள் உண்பீர்கள், குடிப்பீர்கள். 20 எனது மேசையில் உங்களுக்கு உண்ண நிறைய ஏராளமாக இறைச்சி இருக்கும். அங்கே குதிரைகளும், இரதமோட்டிகளும், ஆற்றலுடைய வீரர்களும், போர் வீரர்களும் இருப்பார்கள்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
21 தேவன் சொன்னார்: “நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை பிற நாட்டினரைப் பார்க்கச் செய்வேன். அந்த நாடுகள் என்னை மதிக்கத் தொடங்கும்! அவர்கள் எனது வல்லமையைப் பார்ப்பார்கள். இந்த வல்லமை அந்தப் பகைவனுக்கு எதிராகப் பயன்படுத்தியது. 22 பிறகு அந்நாளிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் நானே அவர்களது கர்த்தராகிய ஆண்டவர் என்பதை அறிவார்கள். 23 அந்நாடுகள் இஸ்ரவேல் வம்சத்தார் ஏன் பிற நாடுகளுக்குச் சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டார்கள் என்பதை அறியும். என் ஜனங்கள் எனக்கு விரோதமாக மாறினார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே நான் அவர்களிடமிருந்து விலகினேன். நான் அவர்களை அவர்களது பகைவர்கள் தோற்கடிக்கும்படிச் செய்தேன். எனவே, என் ஜனங்கள் போரில் கொல்லப்பட்டார்கள். 24 அவர்கள் பாவம் செய்து தம்மைத்தாமே அசுத்தம் செய்துகொண்டார்கள். எனவே அவர்கள் செய்தவற்றிற்காக நான் அவர்களைத் தண்டித்தேன். நான் அவர்களிடமிருந்து விலகி அவர்களுக்கு உதவி செய்ய மறுத்தேன்.”
25 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இப்பொழுது நான் யாக்கோபு வம்சத்தாரை சிறையிருப்பிலிருந்து கொண்டுவருவேன். நான் இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோர் மீதும் இரக்கம் கொள்வேன். நான் எனது பரிசுத்தமான நாமத்திற்காக பலமான உணர்ச்சியைக் காட்டுவேன். 26 ஜனங்கள் கடந்தகாலத்தில் எனக்கு விரோதமாகச் செய்தத் தீயச்செயல்களுக்காக வெட்கப்படுவார்கள். அவர்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். எவரும் அவர்களை அச்சப்படுத்தமுடியாது. 27 நான் மற்ற நாடுகளிலிருந்து என் ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன். அவர்களின் பகைவரது நாடுகளிலிருந்து அவர்களை ஒன்று கூட்டுவேன். பிறகு, பல நாடுகள் நான் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதைக் காணும். 28 அவர்கள் நானே அவர்களது தேவனாகிய கர்த்தர் என்பதை அறிவார்கள். ஏனென்றால், நான் அவர்களைத் தம் சொந்த வீட்டினை விட்டு நாடு கடத்தப்பட்டு சிறை இருக்கச் செய்தேன். நான் அவர்களை ஒன்று கூட்டி அவர்களது நாட்டுக்குத் திரும்பக் கொண்டுவந்தேன். எந்த இஸ்ரவேலனும் சிறையிருப்பில் இருக்கமாட்டான். 29 நான் எனது ஆவியை இஸ்ரவேல் வம்சத்தாரிடம் ஊற்றுவேன். அதற்குப் பிறகு, நான் மீண்டும் என் ஜனங்களைவிட்டு விலகமாட்டேன்” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
புதிய ஆலயம்
40 நாங்கள் சிறைப்பட்ட 25ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதலாம் மாதம் (அக்டோபர்) பத்தாம் நாளன்று கர்த்தருடைய வல்லமை என்மேல் வந்தது. பாபிலோனியர்கள் எருசலேமைப் பிடித்து 14 ஆண்டுகளாயிற்று, ஒரு தரிசனத்தில் கர்த்தர் என்னை அங்கே எடுத்துக்கொண்டு போனார்.
2 தரிசனத்தில், தேவன் என்னை இஸ்ரவேல் நாட்டுக்குக் கொண்டுபோனார். ஒரு உயரமான மலையில் என்னை அவர் வைத்தார். மலையின் மேல் ஒரு கட்டிடம் நகரத்தைப்போன்று காட்சியளித்தது. அந்நகரம் கிழக்கு நோக்கி இருந்தது. 3 கர்த்தர் என்னை அங்கே கொண்டுபோனார். அங்கே ஒரு மனிதன் இருந்தான். அவன் துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போன்று பளபளப்பாக இருந்தான். அவன் கையில் சணல்கயிறும, அளவு கோலும் இருந்தன. அவன் வாசலருகில் நின்றுகொண்டிருந்தான். 4 அம்மனிதன் என்னிடம் சொன்னான், “மனுபுத்திரனே, உன் கண்களையும், காதுகளையும் பயன்படுத்து. இவற்றைப் பார், என்னைக் கவனி! நான் காட்டுகிற எல்லாவற்றிலும் உன் கவனத்தைச் செலுத்து. ஏனென்றால், நீ கொண்டுவரப்பட்டாய். எனவே நான் உனக்கு இவற்றைக் காட்டுகிறேன். நீ பார்த்தவற்றையெல்லாம் பற்றி இஸ்ரவேல் வம்சத்தாரிடம் கூறவேண்டும்.”
5 நான் ஆலயத்தைச் சுற்றிலும் கட்டப்பட்ட ஒரு சுவரைக் கண்டேன். அந்த மனிதனின் கையில் ஒரு அளவுகோல் இருந்தது, அது ஆறு முழ நீளமுள்ளதாக (10'6") இருந்தது. எனவே அம்மனிதன் அச்சுவரின் கனத்தை அளந்தான். அது ஒரு அளவுகோலின் (10'6") கனமுள்ளதாக இருந்தது. அம்மனிதன் சுவரின் உயரத்தை அளந்தான். அது ஒரு அளவுகோல் உயரமுடையதாக (10'6") இருந்தது.
6 பிறகு அம்மனிதன் கிழக்கு வாசலுக்குச் சென்றான். அம்மனிதன் படிகளில் ஏறிப்போய் வாசலின் இடைவெளியை அளந்தான். அது ஒரு அளவு கோல் (10'6") அகலமுடையதாக இருந்தது. மறுவாசற்படியையும் ஒரு அளவு கோல் (10'6") அகலமுடையதாக அளந்தான். 7 காவலாளிகளுக்குரிய அறைகள் ஒரு அளவு கோல் (10'6") நீளமுடையதாகவும் ஒரு அளவு கோல் (10'6") அகலமுடையதாகவும் இருந்தன. அறைகளுக்கு இடையில் 5 முழ (8'9") இடமிருந்தது. மண்டபத்தருகேயுள்ள இடைவெளி, ஆலயத்தை எதிர்நோக்கியிருந்த வாசல் வழியின் கடைசியிலிருந்தது. அங்கும் ஒரு அளவு கோல் (10'6") அகலமுடையதாக இருந்தது. 8 பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தையும் உள்ளே ஒரு கோல் (10'6") அகலமுடையதாக அளந்தான். 9 பிறகு அம்மனிதன் வாசலின் மண்டபத்தை அளந்தான். அது எட்டு முழமுடையதாக (14') இருந்தது. அம்மனிதன் வாசலின் ஒவ்வொரு பக்கத்திலிருந்த சுவர்களை அளந்தான். ஒவ்வொரு பக்கமும் 2 முழம் (3'6") கொண்டதாக இருந்தது. வாசலின் மண்டபம் ஆலயத்தை எதிர் நோக்கியிருந்த வாசல் வழியின் கடைசியிலிருந்தது. 10 வாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று சிறிய அறைகள் இருந்தன. இம்மூன்று சிறு அறைகளும் ஒவ்வொரு பக்கத்திலும் சம அளவுடையதாக இருந்தன. இருபக்கங்களிலும் இருந்த பக்கச்சுவர்கள் சம அளவுடையதாக இருந்தது. 11 அம்மனிதன் வாசல் கதவுகளின் அகலத்தை அளந்தான். அவை 10 முழம் (17'6") அகலமுடையதாக இருந்தன. அந்த முழு வாசலும் 13 முழம் நீளம் உடையதாக இருந்தன. 12 ஒவ்வொரு அறையின் முன்பும் சிறு சுவர் இருந்தது. அச்சுவர் 1 முழம் (1'6") உயரமும் 1 முழம் (1'6") கனமும் உடையதாக இருந்தது. அவ்வறைகள் 6 முழம் (10'6") நீளமுடையதாக ஒவ்வொரு பக்கத்திலும் இருந்தன.
13 அம்மனிதன் வாசலில் இருந்து அறையின் மெத்தையினின்றும் மற்ற அறையின் மெத்தை மட்டும் அளந்தார். அது 25 முழமாக (43'9") இருந்தது. ஒவ்வொரு கதவும் இன்னொரு கதவிற்கு நேர் எதிராக இருந்தது. 14 அம்மனிதன் முற்றத்திலிருந்து மண்டபத்தின் இரு பக்கங்களிலிருந்த பக்கசுவர்கள் உள்பட எல்லா பக்கச்சுவர்களின் முன்புறங்களையும் அளந்தான். அது மொத்தம் 60 முழம். 15 வெளிவாயிலின் உட்புற முனையிலிருந்து மண்டபத்தின் கடைசி முனைவரை 50 முழங்களாகும். 16 எல்லா அறைகளிலும், பக்கச்சுவர்களின் மேலும் வாயில் மண்டபங்களின் மேலும் சிறு, சிறு ஜன்னல்கள் இருந்தன. ஜன்னல்களின் அகலப்பகுதி நுழை வாயிலை நோக்கியிருந்தது. நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் பேரீச்சமரங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
வெளிப்பிரகாரம்
17 பிறகு, அம்மனிதன் என்னை வெளிப்பிரகாரத்திற்கு அழைத்து வந்தான். நான் அறைகளையும் தள வரிசைகளையும் பார்த்தேன். அவை பிரகாரத்தைச் சுற்றிலும் இருந்தன. சுவற்றின் வழியே நடை பாதையை உள்நோக்கி 30 அறைகள் இருந்தன. 18 அத்தள வரிசை வாசலின் பக்கம்வரை சென்றது. தளவரிசை வாசல்களின் நீளத்திற்கு இருந்தது. இது தாழ்ந்த தளவரிசையாக இருந்தது. 19 பிறகு அம்மனிதன் கீழ்வாசலின் உள்பக்கத்திலிருந்து உள்முற்றத்தின் வெளிப்பக்கம் வரையுள்ள அகலத்தை அளந்தான். அது கிழக்குப்பக்கமும் வடக்குப்பக்கமும் 100 முழம் அளவு இருந்தது.
20 வெளிப்பிரகாரத்தைச் சுற்றியுள்ள சுவரில் வடக்கு வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அம்மனிதன் அளந்தான். 21 அது இரு பக்கங்களிலும் மூன்று அறைகளுடையதாக இருந்தது. அதன் வாசல் தூண்களும் மண்டபமும் முதல் வாசலின் அளவுகளைப் போன்றே இருந்தன. அது 50 முழம் (87'6") நீளமும் 25 முழம் (43'9") அகலமும் உடையதாக இருந்தது. 22 அதன் ஜன்னல்களும் மண்டபமும் பேரிச்ச மரச் செதுக்கல்களும் கிழக்கு நோக்கியிருந்த வாசலை போன்றதாகவே இருந்தது. வாசலை நோக்கி ஏழு படிகள் மேலே போயின. வாசலின் மண்டபம் நுழைவாயிலின் உள்பக்கம் கடைசியில் இருந்தது. 23 வடக்கு நுழைவாயிலிலிருந்து முற்றத்துக்குக் குறுக்கே உள்முற்றத்துக்கு ஒரு நுழைவாயில் இருந்தது. அது கிழக்கில் இருந்த நுழைவாயிலைப் போன்றிருந்தது. ஒரு நுழைவாயிலிலிருந்து இன்னொரு நுழைவாயில்வரை அளந்தான். அது 100 முழம் (175') அகலம் இருந்தது.
24 பிறகு அம்மனிதன் என்னைத் தெற்கே நடத்திச் சென்றான். நான் தெற்கே ஒரு வாசலைக் கண்டேன். அம்மனிதன் பக்கச் சுவர்களையும் மண்டபத்தையும் அளந்தான். அவை மற்ற வாசல்களைப்போன்றே அளவுடையதாக இருந்தன. 25 வாசலும் அதன் மண்டபமும் மற்ற வாசல்களைப்போன்றே ஜன்னல்கள் உடையதாக இருந்தன. அவை 50 முழம் (87'6") நீளமும் 25 முழம் (43'9") அகலமும் கொண்டதாக இருந்தன. 26 வாசலில் ஏழு படிகள் மேல் நோக்கிச் சென்றன. அதன் மண்டபம் நுழைவாயிலின் உட்புறமாக கடைசியில் இருந்தது. சுவர்கள் மேல் இரு பக்கமும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. 27 உட்பிரகாரத்தின் தென் பக்கமும் ஒரு வாசல் இருந்தது. அம்மனிதன் தெற்கு நோக்கி உள் வாசலில் இருந்து இன்னொரு வாசலுக்கு அளந்தான். அது 100 முழம் (175') அகலமுடையதாக இருந்தது.
உட்பிரகாரம்
28 பிறகு, அம்மனிதன் என்னைத் தெற்கு வாசல் வழியாக உட்பிரகாரத்திற்கு அழைத்துப்போனான். அவன் இந்த வாசலை அளந்தான். அத்தெற்கு வாசலும் மற்ற வாசல்களைப்போன்று அளவுடையதாக இருந்தது. 29 தெற்கு வாசலில் உள்ள அறைகள், அதன் பக்கச்சுவர்கள், அதன் மண்டபம் ஆகியவை மற்ற வாசல்களில் உள்ள அளவையே கொண்டிருந்தன. வாசலையும் மண்டபத்தையும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. வாசல் 50 முழம் (87'6") நீளமும் 25 முழம் (43'9") அகலமும் இருந்தது. 30 மண்டபம் 25 முழம் (43'9") அகலமும் 5 முழம் (8'9") நீளமும் இருந்தது. 31 தென்பக்க வாசல் மண்டபம் வெளிப்பிரகாரத்தை நோக்கி இருந்தது. நுழைவாயிலின் இரு பக்கச்சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதில் ஏறிட 8 படிகளும் இருந்தன.
32 அம்மனிதன் என்னை கிழக்குப் புறமுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்து வந்தான். அவன் வாசலை அளந்தான். அது மற்ற வாசல்களைப்போன்றே அளவுடையதாக இருந்தது. 33 கிழக்கு வாசலின் அறைகளும், பக்கச்சுவர்களும், மண்டபமும் மற்ற வாசல்களைப்போன்றே அளக்கப்பட்டன. வாசலையும் அதன் மண்டபத்தையும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. கிழக்கு வாசல் 50 முழம் (87'6") நீளமும் 25 முழம் (43'9") அகலமும் உடையதாக இருந்தது. 34 அதன் மண்டபம் வெளிப்பிரகாரத்தை நோக்கி இருந்தது. நுழைவாயிலின் இரு பக்கச்சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதற்குப் போக எட்டுப் படிகள் இருந்தன.
35 பிறகு அந்த மனிதன் என்னை வடக்கு வாசலுக்கு அழைத்து வந்தான். அவன் அதை அளந்தான். அது மற்ற வாசல்களைப்போன்று அதே அளவுடையதாக இருந்தது. 36 இதன் அறைகள், இதன் பக்கச் சுவர்களும், வாயில் மண்டபமும் கூட, மற்ற நுழை வாயில்களின் அளவுடையதாக இருந்தன. வாசலைச் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. இது 50 முழம் (87'6") நீளமும் 25 முழம் (43'9") அகலமும் கொண்டதாக இருந்தது. 37 இதன் வாயில் மண்டபம், நுழை வாயிலின் கடைசியில் வெளிமுற்றத்திற்குப் பக்கத்தில் இருந்தது. நுழைவாயிலின் இருபக்கச் சுவர்களிலும் பேரீச்ச மர உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. இதில் மேலே போக 8 படிகள் இருந்தன.
பலிகளை ஆயத்தப்படுத்தும் அறைகள்
38 வாயில் மண்டபத்தில் கதவுள்ள ஒரு அறை இருந்தது. இதுதான் ஆசாரியர்கள் தம் தகனபலிக்காக மிருகங்களைக் கழுவும் இடம். 39 மண்டபத்தின் கதவின் இரண்டு பக்கத்திலும் இரண்டு மேசைகள் இருந்தன. தகனபலி, பாவநிவாரண பலி, குற்ற நிவாரணப் பலி ஆகியவற்றின் மிருகங்களை மேசை மேல் வைத்துக் கொல்லுவார்கள். 40 மண்டபத்துக்கு வெளியே, வடக்கு வாசல் திறந்திருக்கிற இடத்தில், இரண்டு மேசைகள் இருந்தன. இம்மண்டபத்தின் வெளிவாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு மேசைகள் இருந்தன. 41 இவ்வாறு உள்ளே நான்கு மேசைகள் இருந்தன. வெளியே நான்கு மேசைகள் இருந்தன. இந்த எட்டு மேசைகளின் மேல் ஆசாரியர்கள் பலிகளுக்கான மிருகங்களைக் கொன்றார்கள். 42 நான்கு மேசைகள் தகனபலிக்காகக் கல்லால் செய்யப்பட்டிருந்தன. இம்மேசைகள் 1 1/2 முழம் (2'7 1/2") நீளமும் 1 1/2 முழம் (2'7 1/2") அகலமும் 1 முழம் (1'6") உயரமும் உள்ளதாக இருந்தன. மேசைகளின்மேல் ஆசாரியர்கள் தகன பலிகள் மற்றும் இதர பலிகளுக்கான மிருகங்களைக் கொல்வதற்கான கருவிகளை வைத்திருந்தார்கள். 43 கொக்கிகள் 1 சாண் (3") நீளமுள்ள இறைச்சிக் கொக்கிகள் இப்பகுதியிலுள்ள எல்லாச் சுவர்களிலும் அடிக்கப்பட்டிருந்தன. காணிக்கைகளின் இறைச்சி மேசைமேல் வைக்கப்பட்டது.
ஆசாரியர்களின் அறைகள்
44 உட்புற முற்றத்தில் இரண்டு அறைகள் இருந்தன. ஒன்று வடக்கு வாசலில் இருந்தது. அது தெற்கு நோக்கி இருந்தது. இன்னொன்று தெற்கு வாசலில் இருந்தது. அது வடக்கு நோக்கி இருந்தது. 45 அம்மனிதன் என்னிடம் சொன்னான், “தெற்கு நோக்கி இருக்கும் இந்த அறை ஆலயத்தில் பணியிலிருந்து சேவை செய்கிற ஆசாரியரின் அறை. 46 ஆனால் வடக்கு நோக்கி இருக்கும் அறை பலிபீடத்தில் பணிசெய்கிற ஆசாரியரின் அறையாகும். இந்த ஆசாரியர்கள் லேவியின் தலைமுறையைச் சார்ந்தவர்கள். ஆனால் இந்த இரண்டாவது ஆசாரியக் குழு சாதோக்கின் வாரிசுகள். அவர்கள் மாத்திரமே பலிகளை பலிபீடத்திற்குச் சுமந்துசென்று கர்த்தருக்குச் சேவை செய்ய முடியும்.”
47 அம்மனிதன் பிரகாரத்தை அளந்தான். அது சரியான சதுரமாக இருந்தது. இது 100 முழம் (175') நீளமும் 100 முழம் (175') அகலமும் உடையதாக இருந்தது. பலிபீடம் ஆலயத்தின் முன்னால் இருந்தது.
ஆலயத்தின் மண்டபம்
48 பிறகு, அம்மனிதன் என்னை ஆலய மண்டபத்துக்குக் கொண்டுபோனான். மண்டபத்தின் இரு பக்கங்களிலும் இருந்த சுவர்களை அளந்தான். ஒவ்வொரு பக்கச்சுவரின் கனம் 5 முழமாகவும் அகலம் 3 முழமாகவும் இருந்தது. அவைகளுக்குள் இருந்த இடைவெளி 14 முழமாயிருந்தது. 49 மண்டபம் 20 முழம் (35') நீளமும் 12 முழம் (19'3") அகலமும் உள்ளது. மண்டபத்தின் மேலே செல்ல 10 படிகள் இருந்தன. தூணாதரங்களிலே இந்தப் புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.
ஆலயத்தின் பரிசுத்த இடம்
41 பின்பு அவன் என்னை ஒரு அறைக்கு (பரிசுத்தமான இடத்திற்கு) அழைத்துக் கொண்டு போனான். அவன் அறையின் இருபுறமுள்ள சுவர்களை அளந்தான். அவை 6 முழம் (10'6") கனமுடையதாக ஒவ்வொரு பக்கமும் இருந்தன. 2 கதவானது 10 முழம் (17'6") அகலமுடையதாக இருந்தது. வாசல் நடையின் பக்கங்கள் ஒவ்வொரு புறத்திலும் 5 முழம் (8'9") உடையன. அம்மனிதன் அந்த அறையை அளந்தான். அது 40 முழம் (70') நீளமும் 20 முழம் (35') அகலமும் கொண்டது.
ஆலயத்தின் மகா பரிசுத்த இடம்
3 பிறகு, அவன் கடைசி அறைக்குள் சென்றான். அவன் வாசலின் இருபக்கச் சுவர்களையும் அளந்தான். ஒவ்வொரு பக்கச்சுவரும் 2 முழம் கனமாகவும் 7 முழம் அகலமாகவும் இருந்தது. வாசல் வழியானது 6 முழம் அகலமுடையதாயிருந்தது. 4 பிறகு, அம்மனிதன் அறையின் நீளத்தை அளந்தான். அது 20 முழம் (35') நீளமும் 20 முழம் (35') அகலமுமாக ஆலயத்தின் முன்புறத்தில் அளந்தான். அம்மனிதன் என்னிடம், “இது மிகவும் பரிசுத்தமான இடம்” என்றான்.
ஆலயத்தைச் சுற்றியுள்ள மற்ற அறைகள்
5 பிறகு அம்மனிதன் ஆலயத்தின் சுவரை அளந்தான். அது 6 முழம் கனமாகயிருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் பக்கத்து அறைகள் இருந்தன. இவை 4 முழம் (7') அகலமுடையதாக இருந்தன. 6 இந்த பக்கத்து அறைகள் மூன்று வேறுபட்ட தளங்களில் இருந்தன. அவை ஒன்றின் மேல் ஒன்றாக இருந்தன. ஒவ்வொரு தளத்திலும் 30 அறைகள் இருந்தன. இந்த பக்கத்து அறைகள் சுற்றிலும் உள்ள சுவரால் தாங்கப்பட்டிருந்தன. எனவே ஆலயச் சுவர் தானாக அறைகளைத் தாங்கவில்லை. 7 ஆலயத்தைச் சுற்றிலும் பக்கத்து அறைகளின் ஒவ்வொரு தளமும் கீழே உள்ள தளத்தைவிட அகலம் அதிகமாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றியுள்ள உயர மேடையானது ஒவ்வொரு தளத்திலும் ஆலயத்தைச் சுற்றிப் பரந்திருந்தது, எனவே, மேல் தளங்களின் அறைகள் அகலமாயிருந்தன. ஆதலால் கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளம் வழியாய் மேல் தளத்திற்கு ஏறும் வழி இருந்தது.
8 ஆலயத்தைச் சுற்றி உயர்த்தப்பட்ட அடிப்பாகம் இருப்பதைப் பார்த்தேன். அது பக்கத்து அறைகளுக்கு அஸ்திபாரமாக இருந்தது. அது ஒரு முழுக் கோலின் உயரம் கொண்டதாயிருந்தது. 9 பக்கத்து அறைகளின் வெளிச் சுவரின் அகலம் 5 முழமாக (8'9") இருந்தது. ஆலயத்தின் பக்கத்து அறைகளுக்கும் ஆசாரியரின் அறைகளுக்கும் இடையே ஒரு திறந்தவெளி இருந்தது. 10 அது ஆலயத்தைச் சுற்றிலும் 20 முழம் (35') அகலமாக இருந்தது. 11 பக்கத்து அறைகளின் கதவுகள், உயர்த்தப்பட்ட அடிப்பாகத்தை நோக்கித் திறந்திருந்தன. ஒரு வாசல்நடை வடகேயும் ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தன. உயர்த்தப்பட்ட அடிப்பாகத்தின் அகலம் 5 முழமாய் (8'9") சுற்றிலும் இருந்தது.
12 தடைசெய்யப்பட்ட ஆலய முற்றத்தின் முன்பிருந்த மேற்கு திசையிலுள்ள கட்டிடம் 70 முழம் (122'6") அகலமுடையதாய் இருந்தது, அக்கட்டிடத்தின் சுற்றுச் சுவர்கள் 5 முழம் (8'9") கனமுடையதாய் இருந்தன. அது 90 முழம் (157'6") நீளமுடையது. 13 பிறகு அம்மனிதன் ஆலயத்தை அளந்தான். அது 100 முழம் (175') நீளமுடையது. தடைசெய்யப்பட்ட பரப்பையும், கட்டிடத்தையும், அதன் சுவர்களையும் 100 முழம் (175') அகலமுடையதாக அளந்தான். 14 ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான தடைச் செய்யப்பட்ட பரப்பும் 100 முழம் (175') அகலமுடையதாக இருந்தது.
15 அம்மனிதன் தடைசெய்யப்பட்ட பரப்பின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த கட்டிடத்தின் நீளத்தையும் அதற்கு இரு புறத்திலும் இருந்த நடை பந்தல்களையும் அளந்தான். அது 100 முழம் (175') நீளமுடையது.
மகா பரிசுத்த இடமும், பரிசுத்த இடமும், மண்டபமும், உள் அறையை நோக்கியிருந்தன. 16 அவற்றின் சுவர்கள் முழுவதும் மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தன. மூன்று பக்கங்களிலும் சுற்றி ஜன்னல்கள் இருந்தன. வாசல்களுக்கு எதிரான நடைப் பந்தல்களும் சுற்றிலும் தரை தொடங்கி ஜன்னல்கள் வரை பலகை அடித்திருந்தது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. 17 வாசலின் மேலே தொடங்கி,
ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் பலகைகளால் மூடப்பட்டிருந்தன. சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் 18 கேருபீன்களும் பேரீச்ச மரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. கேருபீன்களுக்கு இடையில் பேரீச்சமரம் இருந்தது. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரு முகங்கள் இருந்தன. 19 ஒரு முகம் மனிதமுகமாய் பேரீச்ச மரத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்தவாறு இருந்தது. இன்னொரு முகம் சிங்க முகமாய் பேரீச்ச மரத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்த்தவாறு இருந்தது. அவை ஆலயத்தைச் சுற்றிலும் செதுக்கப்பட்டிருந்தன. 20 தரையிலிருந்து வாசலின் மேல்புறம்வரை பரிசுத்த இடத்தின் சுவர்களில் கேருபீன்களும் பேரீச்ச மரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன.
21 பரிசுத்த இடத்தின் இருபக்கத்திலும் இருந்த சுவர்கள் சதுரமானவை. மகாபரிசுத்தமான இடத்துக்கு எதிரில் ஏதோ ஒன்று பலிபீடத்தைப்போலக் காணப்பட்டது. 22 அது மரத்தால் செய்யப்பட்ட பலிபீடத்தைப் போன்றிருந்தது. அது 3 முழம் உயரமும் 2 முழம் நீளமுமாயிருந்தது. அதன் மூலைகள், அடிப்பாகம், பக்கங்கள் எல்லாம் மரத்தால் ஆனவை. அம்மனிதன் என்னிடம், “இதுதான் கர்த்தருக்கு முன்னால் உள்ள மேசை” என்றான்.
23 நடு அறையும் (பரிசுத்தமான இடமும்) மிகப் பரிசுத்தமான இடமும் இரட்டைக் கதவுகளைக் கொண்டவை. 24 வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகள் இருந்தன. ஒவ்வொரு வாசலுக்கும் இரண்டு சிறு கதவுகளும் இருந்தன. 25 பரிசுத்த இடத்தின் கதவுகளிலும் கேருபீன்களும் பேரிச்ச மரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அவை சுவற்றில் செதுக்கப்பட்டிருந்தவை போன்றிருந்தன. வெளியே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மண்டபத்தின் முன் பாகத்திற்குமேல் ஒரு மரக் கூரையிருந்தது. 26 இருபுறங்களிலும் ஆலயத்தின் சுற்றுக் கட்டுக்களிலும் சட்டங்கள் பொருந்திய ஜன்னல்கள் இருந்தன. சுவர்களிலும் ஆலயத்தைச் சுற்றியுள்ள அறைகளிலும் வரையப்பட்ட பேரீச்ச மரங்களும் இருந்தன.
2008 by World Bible Translation Center