Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CEV. Switch to the CEV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 நாளாகமம் 24-25

யோவாஸ் ஆலயத்தை மீண்டும் கட்டுகிறான்

24 யோவாஸ் ராஜாவாகியபோது அவனுக்கு 7 வயது. அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் சிபியாள். அவள் பெயர்செபா நகரத்தவள். யோய்தா ஆசாரியன் உயிரோடிருந்தவரை, யோவாஸ் கர்த்தருடைய முன்னிலையில் சரியானதைச் செய்துவந்தான். யோய்தா, யோவாசுக்கு இரண்டு மனைவியரைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு குமாரர்களும் குமாரத்திகளும் இருந்தனர்.

பின்னர், யோவாஸ் கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்ட முடிவுசெய்தான். யோவாஸ் ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றாகத் திரட்டினான். அவன் அவர்களிடம், “யூதாவின் நகரங்களுக்குச் சென்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் பணத்தைச் சேகரியுங்கள். ஆண்டுதோறும் தேவனுடைய ஆலயத்தைப் பழுது பார்த்து மேலும் கட்ட வேண்டும். வேகமாகப் போய் இதனைச் செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்கள் அவசரப்படவில்லை.

எனவே, ராஜா தலைமைஆசாரியனான யோய்தாவை அழைத்தான். அவனிடம் ராஜா, “யோய்தா, யூதாவிலும் எருசலேமிலும் வரியை வசூலிக்க நீங்கள் ஏன் லேவியர்களை அனுப்பவில்லை? கர்த்தருடைய ஊழியக்காரனான மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் அந்த வரிப்பணத்தை பரிசுத்தக் கூடாரத்திற்குப் பயன்படுத்தினார்களே” என்றான்.

முற்காலத்தில் அத்தாலியாளின் குமாரர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் உடைத்துக் கொண்டுசென்றார்கள். அவர்கள் இங்குள்ள பரிசுத்தமானப் பொருட்களை எல்லாம் கொண்டுபோய் பாகால் ஆலயத்தில் பயன்படுத்தினார்கள். அத்தாலியாள் மிகவும் தீயப் பெண்.

ஒரு பெட்டியைச் செய்து வாசலுக்கு வெளியில் கர்த்தருடைய ஆலயத்தில் வைக்குமாறு யோவாஸ் ராஜா கட்டளையிட்டான். பிறகு யூதாவிலும், எருசலேமிலும் லேவியர்கள் ஒரு அறிவிப்பு செய்தனர். கர்த்தருக்கு வரிப்பணத்தைக் கொண்டுவரும்படி அவர்கள் ஜனங்களை வேண்டிக் கேட்டுக்கொண்டனர். இஸ்ரவேலர்கள் பாலைவனத்தில் இருந்தபோது, தேவனின் ஊழியனான மோசே எங்களிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட பணத்தின் அளவு தான் இவ்வரிப் பணம் ஆகும். 10 அனைத்து தலைவர்களும் ஜனங்களும் மகிழ்ந்தனர். அவர்கள் தம் பணத்தைக் கொண்டுவந்து பெட்டியில் போட்டனர். பெட்டி நிரம்பும்வரை அவர்கள் போட்டுக்கொண்டிருந்தனர். 11 பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை ராஜாவின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். ராஜாவின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள். 12 பிறகு யோவாஸ் ராஜாவும், யோய்தா ஆசாரியனும் அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக மரம் குடைவதில் திறமை பெற்றவர்களையும், தச்சர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள். மேலும் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக இரும்பிலும் வெண்கலத்திலும் வேலைச் செய்வதில் திறமைமிக்கவர்களையும் வேலைக்கு அமர்த்தினார்கள்.

13 வேலையை மேற்பார்வை செய்பவர்கள் உண்மையானவர்கள். கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் வேலை வெற்றியடைந்தது. அவர்கள் தேவனுடைய ஆலயத்தை முன்பு இருந்தது போலவே அழகாகவும், பலமாகவும் கட்டினார்கள். 14 எல்லா வேலைகளும் முடிந்த பிறகு மீதியான பணத்தை ராஜாவிடமும், யோய்தா ஆசாரியனிடமும் கொண்டு வந்தனர். கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் அப்பணத்தைச் செலவுசெய்தனர். அப்பொருட்கள் ஆலயத்தில் சேவைச்செய்யவும் சர்வாங்கத் தகனபலிகள் போன்றவற்றை செய்யவும் பயன்பட்டன. அவர்கள் கலசங்களையும், வேறு பொருட்களையும் பொன்னாலும், வெள்ளியாலும் செய்தனர். யோய்தா உயிரோடு இருக்கும்வரை ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் தினந்தோறும் தகனபலிகளைக் கொடுத்துவந்தனர்.

15 யோய்தா முதியவனானான். நீண்ட வாழ்க்கை வாழ்ந்து பின் மரித்துப்போனான். அவன் மரிக்கும்போது அவனுக்கு 130 வயது. 16 யோய்தாவை தாவீதின் நகரத்திலே ராஜாக்களை அடக்கம் செய்யக் கூடிய இடத்தில் ஜனங்கள் அடக்கம் செய்தனர். இஸ்ரவேலில் தேவனுக்கும் தேலாயத்திற்கும் ஏராளமான அளவில் நற்சேவை செய்திருக்கிறான் என்பதாலேயே ஜனங்கள் அந்த இடத்தில் அவனை அடக்கம் செய்தனர்.

17 யோய்தா மரித்தப் பிறகு, யூதாவின் தலைவர்கள் ராஜா யோவாசிடம் வந்து பணிந்து வணங்கினார்கள். அவர்கள் கூறுவதை ராஜா கவனித்தான். 18 ராஜாவும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். ராஜாவும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார். 19 தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி ஜனங்களைத் தன்னிடம் திரும்ப அழைக்க முயன்றார். தீர்க்கதரிசிகள் ஜனங்களை எச்சரித்தனர். ஜனங்கள் கேட்க மறுத்து விட்டனர்.

20 தேவனுடைய ஆவி சகரியா மீது வந்தது. சகரியாவின் தந்தை ஆசாரியனாகிய யோய்தா ஆவான். சகரியா ஜனங்களின் முன்பு நின்று, “தேவன் சொல்வது இதுதான்: ‘நீங்கள் ஏன் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றீர்கள்? நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். நீங்கள் கர்த்தரைவிட்டு விலகிவிட்டீர்கள். எனவே கர்த்தரும் உங்களை விட்டு விலகிவிட்டார்!’” என்றான்.

21 ஆனால் ஜனங்கள் சகரியாவிற்கு எதிராகத் திட்டமிட்டனர். சகரியாவைக் கொல்லும்படி ராஜா கட்டளையிட்டான். எனவே அவன் மரிக்கும்வரை ஜனங்கள் அவன் மீது கற்களை எறிந்தார்கள். ஜனங்கள் இதனை ஆலய பிரகாரத்திலேயே செய்தனர். 22 யோய்தா தன் மீது காட்டிய கருணையை யோவாஸ் ராஜா நினைவுக்கூரவில்லை. யோய்தா சகரியாவின் தந்தை. எனினும் யோவாஸ், யோய்தாவின் குமாரனாகிய சகரியவைக் கொன்றான். மரிப்பதற்கு முன்பு சகரியா, “நீ செய்வதை கர்த்தர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உன்னைத் தண்டிப்பார்!” என்றான்.

23 ஆண்டு முடிவில், யோவாசுக்கு எதிராக ஆராமியப்படை வந்தது. அவர்கள் யூதாவையும் எருசலேமையும் தாக்கினார்கள். மேலும் அவர்கள் அந்த ஜனங்களின் தலைவர்கள் அனைவரையும் கொன்றார்கள். தமஸ்கு ராஜாவுக்கு விலையுயர்ந்தப் பொருட்கள் அனைத்தையும் அனுப்பிவைத்தனர். 24 மிகவும் குறைந்த எண்ணிகையுள்ள வீரர்களுடைய குழுவுடனேயே ஆராமியப்படை வந்தது. ஆயினும் அது பெரும் அளவுடைய யூதாவின் படையை வெல்லுமாறு கர்த்தர் அருளினார். யூதாவின் ஜனங்கள் தம் முற்பிதாக்கள் வழிபட்ட தேவனாகிய கர்த்தரை விட்டு விலகியதால், கர்த்தர் இவ்வாறு செய்தார். எனவே யோவாஸ் தண்டிக்கப்பட்டான். 25 ஆராமியர்கள் யோவாசைவிட்டுப் போகும்போது அவன் பெருத்த காயம் அடைந்திருந்தான். யோவாசின் சொந்த வேலைக்காரர்களும் அவனுக்கெதிராகத் திட்டமிட்டனர். அவன் யோய்தா ஆசாரியனின் குமாரனான சகரியாவைக் கொன்றான் என்பதனால் அவர்கள் இதைச் செய்தார்கள். வேலைக்காரர்கள் யோவாசை அவனுடைய படுக்கையிலேயே கொன்று போட்டனர். யோவாஸ் மரித்ததும், அவனை தாவீதின் நகரத்திலேயே அடக்கம் செய்தனர். ஆனால் ராஜாக்களை அடக்கம் செய்யும் இடத்தில் அவனை அடக்கம் செய்யவில்லை.

26 யோவாசுக்கு எதிராகத் திட்டமிட்ட வேலைக்காரர்கள் சாபாத்தும், யோசபாத்தும் ஆவார்கள். சாபாத்தின் தாயின் பெயர் சீமாத் ஆகும். இவள் அம்மோனியப் பெண் ஆவாள். யோசபாத்தின் தாயின் பெயர் சிம்ரீத் ஆகும். இவள் மோவாபிய பெண் ஆவாள். 27 யோவாசின் குமாரர்களைப்பற்றியும், அவனுக்கு எதிரான தீர்க்கதரிசனங்களைப் பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் புதுப்பித்ததைப்பற்றியும் ராஜாக்களின் சரித்திரம் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாசுக்குப் பிறகு அமத்சியா புதிய ராஜாவானான். அமத்சியா யோவாசின் குமாரன்.

யூதாவின் ராஜாவாகிய அமத்சியா

25 ராஜாவாகியபோது அமத்சியாவுக்கு 25 வயது. அவன் எருசலேமிலிருந்து 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் யோவதானாள். இவள் எருசலேமியப் பெண். கர்த்தர் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினாரோ அதையே அமத்சியா செய்தான். ஆனால் அவன் அவற்றை முழு மனதோடு செய்யவில்லை. அமத்சியா பலமுள்ள ராஜா ஆனான். தன் தந்தையைக் கொன்ற அதிகாரிகளைக் கொன்றான். ஆனால் அவன் அந்த அதிகாரிகளின் பிள்ளைகளைக் கொல்லவில்லை. ஏனென்றால் மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டங்களுக்கு அவன் அடிபணிந்தான். கர்த்தர், “பிள்ளைகளின் செயல்களுக்காகப் பெற்றோர்கள் கொல்லப்படக்கூடாது. பெற்றோர்கள் செய்த செயல்களுக்காகப் பிள்ளைகளும் கொல்லப்படக்கூடாது. ஒருவன் தான் செய்த பாவத்துக்காகமட்டுமே தண்டிக்கப்படவேண்டும்” என்று கட்டளையிட்டிருக்கிறார்.

அமத்சியா யூதாவின் ஜனங்களை அனைவரையும் ஒன்றாகத் திரட்டினான். சில குழுக்களாக அவர்களை அவன் பிரித்தான். பிறகு அக்குழுக்களுக்கு தளபதிகளையும், தலைவர்களையும் நியமித்தான். அவர்கள் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தின் வீரர்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இருபதும் அதற்கு மேலும் வயதுடைய வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் ஈட்டியும் கேடயமும் கொண்டு போரிடும் வீரர்கள் 3,00,000 பேர் இருந்தனர். அமத்சியா இஸ்ரவேலில் இருந்து 1,00,000 வீரர்களை அழைத்தான். அவர்களுக்கு 100 தாலந்து வெள்ளியைக் கூலியாகக் கொடுத்தான். ஆனால் ஒரு தேவமனிதன் (தீர்க்கதரிசி) ஒருவன் அமத்சியாவிடம் வந்தான். அவன், “ராஜாவே இஸ்ரவேல் வீரர்களை உன்னோடு அழைத்துக் கொண்டு போகாதே. கர்த்தர் இஸ்ரவேலர்களோடு இல்லை. எப்பிராயீம் ஜனங்களோடும் கர்த்தர் இல்லை. உன்னை நீயே பலப்படுத்திக்கொண்டு போருக்கு தயாராகலாம். ஆனால் நீ வெற்றிபெறவோ அல்லது தோல்வியடையவோ தேவன் உதவுவார்” என்றான். அமத்சியா தேவமனிதனிடம், “இஸ்ரவேல் படைக்கு நான் ஏற்கெனவே கொடுத்தப் பணத்துக்கு என்ன செய்ய?” என்று கேட்டான். அதற்கு தேவ மனிதன், “கர்த்தரிடம் ஏராளமாக உள்ளது. அவர் உனக்கு அவற்றைவிட மிகுதியாகக் கொடுப்பார்” என்றான்.

10 எனவே, அமத்சியா இஸ்ரவேல் படையை எப்பிராயீமுக்குத் திருப்பி அனுப்பிவிட்டான். அவர்களுக்கு ராஜா மீதும், யூதா ஜனங்கள் மீதும் கோபம் மிகுந்தது. அவர்கள் கோபத்தோடு வீட்டிற்குத் திரும்பினார்கள்.

11 பிறகு அமத்சியா மிகுந்த தைரியத்தோடு தனது படையை ஏதோம் நாட்டிலுள்ள உப்புப் பள்ளத்தாக்குக்கு நடத்திச் சென்றான். அங்கே அமத்சியாவின் படையானது 10,000 சேயீர் ஆண்களைக் கொன்றது. 12 யூதாவின் படை சேயீரிலிருந்து 10,000 ஆண்களையும் பிடித்தது. அவர்களை ஒரு மலை உச்சிக்குக் கொண்டுபோனார்கள். அந்த ஆட்கள் இன்னமும் உயிருடன் இருந்தார்கள். பின்னர் யூதாவின் படை அவர்களை மலையுச்சியில் இருந்து கீழே வீசி எறிந்தது. அவர்களது உடல்கள் கீழேயிருந்த பாறைகளின் மேல் உடைந்தன.

13 அதே நேரத்தில், இஸ்ரவேல் படையானது யூதா நகரங்களைத் தாக்கியது. அவர்கள் பெத்தொரோன் முதல் சமாரியாவரையுள்ள நகரங்களை எல்லாம் தாக்கினார்கள். அவர்கள் 3,000 பேரை கொன்று விலைமதிப்புள்ள பொருட்களைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களை அமத்சியா தன்னோடு போருக்கு அழைத்து போகாததால் அவர்கள் கோபமாக இருந்தனர்.

14 ஏதோமிய ஜனங்களை வென்ற பிறகு அமத்சியா வீட்டிற்குத் திரும்பினான். சேயீர் ஜனங்கள் தொழுது கொண்ட தெய்வ விக்கிரகங்களை அவன் கொண்டு வந்தான். அமத்சியா அவற்றைத் தொழுதுகொள்ள ஆரம்பித்துவிட்டான். அவற்றின் முன்னால் அவன் தரையில் விழுந்து வணங்கி அவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தான். 15 அதனால் அமத்சியாவின் மேல் கர்த்தருக்குக் கோபம் உண்டானது. அவர் அவனிடம் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அத்தீர்க்கதரிசி, “அமத்சியா, அந்த ஜனங்கள் தொழுது கொண்ட தெய்வங்களை நீ ஏன் தொழுதுகொள்கிறாய்? அத்தெய்வங்களால் அவர்களை உன்னிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லையே!” என்றான்.

16 அவ்வாறு அந்த தீர்க்கதரிசி பேசி முடித்ததும், ராஜா அவனிடம், “ராஜாவுக்கு ஆலோசனை சொல்லும்படி உன்னை நியமிக்கவில்லை! ஆகவே சும்மாயிரு. இல்லாவிட்டால் நீ கொல்லப்படுவாய்” என்றான். தீர்க்கதரிசி அமைதியானான். ஆனால் பிறகு, “தேவன் உண்மையில் உன்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஏனென்றால் நீ தீயவற்றைச் செய்ததோடு எனது ஆலோசனைகளையும் கேட்கவில்லை” என்றான்.

17 யூதாவின் ராஜாவாகிய அமத்சியா, தனது ஆலோசகர்களோடு ஆலோசனை செய்தான். பிறகு அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுக்குத் தூது அனுப்பினான். அமத்சியா யோவாசிடம், “நாம் இருவரும் நேருக்குநேர் சந்திப்போம்” என்று அழைத்தான். யோவாஸ் யோவாகாசின் குமாரன் ஆவான். யோவாகாஸ் யெகூவின் குமாரன் ஆவான்.

18 பிறகு யோவாஸ் தனது பதிலை அமத்சியாவிற்கு அனுப்பினான். யோவாஸ் இஸ்ரவேலின் ராஜா. அமத்சியா யூதாவின் ராஜா. யோவாஸ், “லீபனோனில் உள்ள முட்செடியானது லீபனோனில் உள்ள கேதுரு மரத்திற்குத் தூது அனுப்பி, ‘நீ உன் குமாரத்தியை என் குமாரனுக்கு மணமுடித்து தருவாயா’ என்று கேட்டது. ஆனாலும் ஒரு காட்டு மிருகம் அந்த வழியாகப் போகும்போது அந்த முட்செடியை மிதித்துப் போட்டது. 19 நீ உனக்குள்ளே, ‘நான் ஏதோமியரை வென்றிருக்கிறேன்’ என்று கூறுகிறாய். அதற்காக நீ பெருமைப்படுகிறாய். ஆனால் நீ உன் வீட்டிலேயே இரு. நீ துன்பத்தில் சிக்கிக்கொள்ள வேண்டிய தேவையில்லை. என்னிடம் போரிட வந்தால் நீயும், யூதாவும் அழிந்துப்போவீர்கள்” என்று சொல்லி அனுப்பினான்.

20 ஆனால் அமத்சியா அதனைக் கேட்கவில்லை. இது தேவனால் உண்டானது. தேவன் இஸ்ரவேல் மூலம் யூதாவைத் தோற்கடிக்க எண்ணினார். அதற்கு காரணம், யூதா நகர ஜனங்கள் ஏதோமியரின் தெய்வங்களைப் பின்பற்றி தொழுதுகொண்டு வந்தனர் என்பதாகும். 21 ஆகையால் இஸ்ரவேல் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவை நேருக்கு நேராக பெத்ஷிமேசிலே சந்தித்தான். பெத்ஷிமேசு யூதாவிலே உள்ளது. 22 இஸ்ரவேல் யூதாவைத் தோற்கடித்தது. யூதாவைச் சேர்ந்த ஒவ்வொருவனும் தன் வீட்டிற்கு ஓடிப்போனான். 23 யோவாஸ் அமத்சியாவைப் பிடித்து எருசலேமிற்குக் கொண்டு போனான். அமத்சியாவின் தந்தையின் பெயர் எகோவஸ். இஸ்ரவேல் ராஜா எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் முதல் மூலை வாசல்வரை 400 முழ நீளம் இடித்துப்போட்டான். 24 பிறகு யோவாஸ் தேவனுடைய ஆலயத்தில் இருந்த பொன்னையும், வெள்ளியையும், இன்னும் பல பொருட்களையும் கொண்டுப் போனான். ஓபேத்ஏதோம் ஆலயத்திலுள்ள பொருட்களுக்குப் பொறுப்பாளியாக இருந்தான். யோவாஸ் அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டான். சிலரைச் சிறைப்பிடித்தான். பின் சமாரியாவிற்குத் திரும்பிப்போனான்.

25 யோவாஸ் மரித்தபிறகு அமத்சியா 15 ஆண்டுகள் வாழ்ந்தான். அமத்சியாவின் தந்தை யூதாவின் ராஜாவாகிய யோவாஸ் ஆவான். 26 அமத்சியா தொடக்கத்திலிருந்தது முதல் இறுதிவரை செய்த மற்ற செயல்கள் எல்லாவற்றைப் பற்றியும் யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 27 அமத்சியா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை நிறுத்தியதும் எருசலேமிலுள்ள ஜனங்கள் ராஜாவுக்கு எதிராகத் திட்டமிட்டனர். அமத்சியா லாகீசுக்கு ஓடிப்போனான். ஜனங்கள் அங்கும் ஆட்களை அனுப்பி அமத்சியாவைக் கொன்றனர். 28 பிறகு அமத்சியா உடலை அங்கிருந்து குதிரையில் வைத்துக் கொண்டு வந்தனர். அவனை யூதாவின் நகரத்தில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.

ரோமர் 12

வாழ்க்கையை தேவனுக்குக் கொடுங்கள்

12 சகோதர சகோதரிகளே! ஏதாவதுகொஞ்சம் செய்யுங்கள் என வேண்டுகிறேன். தேவன் நம்மிடம் மிகுந்த இரக்கத்தைக் காட்டியிருக்கிறார். உங்கள் சரீரங்களை தேவனுக்கு உயிர்ப் பலியாகத் தாருங்கள். இதுவே அவரை வழிபடுவதற்கான பக்தி வழியாகும். தேவன் இதில் திருப்தியடைகிறார். உலகிலுள்ள மக்களைப் போன்று ஆக வேண்டுமென உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஆனால் மனதில் புதிய எண்ணங்களால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பிறகு தேவனுடைய விருப்பத்தை உங்களால் ஏற்றுக்கொள்வது பற்றி முடிவு செய்ய முடியும். நல்லவை எவை, தேவனுக்கு விருப்பமானவை எவை என்று உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

தேவன் எனக்கொரு சிறப்பான வரத்தைக் கொடுத்திருக்கிறார். அதனால்தான் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொல்ல என்னிடம் சில காரியங்கள் இருக்கின்றன. உங்கள் நிலைமைக்கு மீறிய நினைப்பினைக்கொள்ளாதீர்கள். உண்மையாகவே நீங்கள் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின்படியே ஒவ்வொருவனும் தம்மைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சரீரம் உள்ளது. அதற்குப் பல உறுப்புகளும் உள்ளன. எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை. இது போலவே, நாம் பல வகை மக்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் நாம்அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம். நாம் அந்த சரீரத்தின் பல உறுப்புகள். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளைச் சார்ந்துள்ளன.

நமக்குப் பலவிதமான வரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வரமும் நமக்கு தேவனுடைய இரக்கத்தால் கிடைத்தது. நம்மிடையே தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தைப் பெற்றவன் அதனை தன் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். சேவை செய்வதற்கான வரத்தைப் பெற்ற ஒருவன் நன்றாக சேவை செய்வானாக. போதிக்கும் வரத்தைப் பெற்ற ஒருவன் போதிப்பானாக! மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வரத்தைப் பெற்ற ஒருவன் அவ்வாறே ஆறுதல் சொல்வானாக. மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவுகிற வரத்தைப் பெற்ற ஒருவன் ஏராளமாகக் கொடுத்து உதவுவானாக! தலைவனாக இருக்க வரத்தைப் பெற்றவன் கடுமையாகப் பணியாற்றி சிறந்த தலைவனாக இருப்பானாக! மற்றவர்களிடம் இரக்கம் காட்டும் வரத்தைப்பெற்ற ஒருவன் மகிழ்ச்சியோடு இரக்கம் காட்டுவானாக!

உங்கள் அன்பு உண்மையானதாக இருக்க வேண்டும். பாவத்துக்குரியவற்றை வெறுத்து ஒதுக்குங்கள். நல்லவற்றை மட்டும் செய்யுங்கள். 10 சகோதர சகோதரிகளைப் போன்று ஒருவருக்கொருவர் இதமாக அன்பு செலுத்துங்கள். மரியாதை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளங்கள். 11 நீங்கள் கர்த்தருக்காக உழைக்க வேண்டிய காலத்தில் சோம்பேறியாக இராதீர்கள். அவருக்குச் சேவை செய்வதிலே ஆவிப் பூர்வமாக இருங்கள். 12 உங்களுக்கு விசுவாசம் இருப்பதால் மகிழ்ச்சியாய் இருங்கள். எப்பொழுதும் பிரார்த்தனை செய்யுங்கள். 13 தேவனுடைய மக்களுக்குத் தேவை ஏற்படும்போது உதவி செய்யுங்கள். அம்மக்களுக்கு உங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுங்கள்.

14 உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்கும் நல்லதையே செய்யுங்கள். அவர்களுக்கு நல்லதைக் கூறுங்கள். அவர்களை சபிக்காதீர்கள். 15 மற்றவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்போது நீங்களும் அவர்களோடு மகிழ்ச்சியோடு இருங்கள். மற்றவர்கள் துக்கமாய் இருக்கும்போது நீங்கள் அவர்களோடு துக்கமாய் இருங்கள். 16 ஒருவரோடு ஒருவர் சமாதானமாக வாழுங்கள். எவ்வளவு ஞானம் எனக்கு உண்டு என்று மமதை கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்கு முக்கியமாய்த் தோன்றாதவர்களோடும் கூட நட்புடன் இருங்கள். சுய பெருமை பாராட்டாதீர்கள்.

17 யாரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களுக்குத் தீமையையே திரும்பிச் செய்யாதீர்கள். எல்லாராலும் நல்லவை என்று எண்ணப்படுவதையே நீங்களும் எவ்வளவு செய்ய முடியும் என்று பாருங்கள். 18 முடிந்தளவு எல்லா மக்களோடும் சமாதானமாய் இருங்கள். 19 என் அன்பு நண்பர்களே, எவரேனும் உங்களுக்குத் தீமை செய்தால் அவர்களைத் தண்டிக்க முயலாதீர்கள். தேவன் தன் கோபத்தால் அவர்களைத் தண்டிக்கும் வரையில் பொறுத்திருங்கள்.

“நானே தண்டிக்கிறேன்.
    நானே பதிலுக்குப் பதில் செய்வேன்”(A)

என்று கர்த்தர் கூறுகிறார் என்று எழுதப்பட்டுள்ளது.

20 “உங்கள் பகைவன் பசியாய் இருந்தால்
    அவனுக்கு உணவைக் கொடுங்கள்.
அவன் தாகமாய் இருந்தால் அவன்
    குடிக்க ஏதாவது கொடுங்கள்.
இதன் மூலம் அவனை வெட்கம்கொள்ளச் செய்யலாம்.”(B)

21 பாவத்திடம் தோல்வி அடைந்துவிடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள்.

சங்கீதம் 22:19-31

19 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
    நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்!
20 கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும்.
    அந்த நாய்களிடமிருந்து அருமையான என் உயிரை மீட்டருளும்.
21 சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும்.
    காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும்.

22 கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன்.
    பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன்.
23 கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே!
    அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.
    இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள்.
24 தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார்.
    கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை.
கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை.
    கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.

25 கர்த்தாவே, மகாசபையில் எனது வாழ்த்துதல்கள் உம்மிடமிருந்தே வருகின்றன.
    உம்மைத் தொழுதுகொள்வோர் முன்பாக, நான் உமக்குச் சொன்ன வாக்குறுதியான பலிகளைச் செலுத்துவேன்.
26 ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள்.
    கர்த்தரைத் தேடிவரும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
    உங்கள் இருதயம் என்றென்றும் மகிழ்வதாக!
27 தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும்.
    எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும்.
28 ஏனெனில் கர்த்தரே ராஜா.
    அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார்.
29 பெலமுள்ள, ஆரோக்கியமான ஜனங்கள் உண்டு, தேவனுக்குமுன் வணங்கியிருக்கிறார்கள்.
    எல்லா ஜனங்களும், ஏற்கெனவே இறந்தவரும், மரிக்கப் போவோரும் தேவனுக்கு முன்பாக நாம் ஒவ்வொருவரும் குனிந்து வணங்குவோம்.
30 வருங்காலத்தில், நம் சந்ததியினர் கர்த்தருக்குச் சேவை செய்வார்கள்.
    என்றென்றும் ஜனங்கள் அவரைக் குறித்துச் சொல்வார்கள்.
31 பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவனுடைய நன்மையைச் சொல்வார்கள்.
    தேவன் உண்மையாகச் செய்த நல்ல காரியங்களை அவர்கள் சொல்வார்கள்.

நீதிமொழிகள் 20:8-10

ஒரு ராஜா நியாயந்தீர்க்க ஆசனத்தில் உட்காரும்போது அவன் தன் கண்களால் சகல தீமைகளையும் கவனிக்க முடியும்.

ஒருவன் உண்மையாகவே, தான் செய்கிறவைகளைத் தன்னாலியன்றவரை நன்றாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியுமா? ஒருவன் பாவம் இல்லாதவன் என்று உண்மையில் சொல்லமுடியுமா? முடியாது.

10 தவறான அளவுக் கருவிகளையும் எடைக் கற்களையும் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center