Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CSB. Switch to the CSB to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 நாளாகமம் 16:37-18:17

37 பிறகு தாவீது, ஆசாப்பையும் அவனது சகோதரர்களையும் உடன்படிக்கைப் பெட்டியின் முன் விட்டுவிட்டு வந்தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் பெட்டிக்கு முன்பு சேவைச் செய்ய வைத்தான். 38 தாவீது, அங்கே ஆசாப்பு மற்றும் அவன் சகோதரர்களோடு ஓபேத்ஏதோமையும் 68 லேவியர்களையும் சேவைச் செய்ய விட்டு விட்டு வந்தான். ஓபேத்ஏதோமும் ஓசாவும் வாசல் காவல்காரர்கள். ஓபேத்ஏதோம் எதித்தூனின் மகன் ஆவான்.

39 கிபியோனிலுள்ள மேட்டில் இருக்கிற கர்த்தருடைய கூடாரத்தில் சேவை செய்வதற்காக தாவீது சோதாக்கையும் மற்ற ஆசாரியர்களையும் விட்டு வைத்தான். 40 ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் சோதாக்கும், மற்ற ஆசாரியர்களும் பலிபீடத்தில் சர்வாங்கதகன பலிகளைக் கொடுத்தனர். கர்த்தர் இஸ்ரவேலுக்கு எழுத்தின் மூலமாக வழங்கிய சட்டத்தின்படி அவர்கள் செய்தார்கள். 41 ஏமானையும், எதித்தூனையும், மற்ற லேவியர்களையும் கர்த்தரைத் துதித்துப் பாடுவதற்காகத் தேர்ந்தெடுத்தனர். ஏனென்றால், கர்த்தருடைய அன்பு என்றும் தொடர்ந்திருக்கும் போன்ற பாடல்களை பாட 42 ஏமானும், எதித்தூனும் அவர்களோடு இருந்தனர். அவர்களின் வேலை எக்காளத்தை ஊதுவதும், கைத்தாளம் இடுவதும் ஆகும். தேவனுக்காக பாடல்கள் பாடப்பட்டபோது அவர்கள் வேறு இசைக் கருவிகளையும் இசைத்து வந்தனர். எதித்தூனின் மகன்கள் வாசலைக் காத்தனர்.

43 விழா முடிந்த பிறகு, மிஞ்சியுள்ள ஜனங்கள் தங்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள். தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கச் சென்றான்.

கர்த்தர் தாவீதிற்கு வாக்குறுதியளித்தல்

17 தாவீது, தன் வீட்டிற்குச் சென்ற பிறகு, அவன் தீர்க்கதரிசி நாத்தானிடம், “பார், நான் கேதுரு மரங்களால் ஆன வீட்டில் இருக்கிறேன். ஆனால் உடன்படிக்கைப் பெட்டியோ கூடாரத்தில் இருக்கிறது. எனவே தேவனுக்காக நான் ஒரு ஆலயம் கட்ட விரும்புகிறேன்” என்றான்.

நாத்தான் தாவீதிற்கு, “நீர் என்ன விரும்புகிறீரோ அதனைச் செய்யும், உம்மோடு தேவன் இருக்கிறார்” என்று பதிலுரைத்தான்.

ஆனால், அன்று இரவு தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு வந்தது. தேவன்,

“போய் எனது தொண்டனான தாவீதிடம் கூறு: ‘தாவீது, எனக்காக ஆலயம் கட்ட வேண்டியவன் நீயல்ல. 5-6 இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்த நாள் முதல் இன்று வரை நான் ஒரு வீட்டிலும் வசித்ததில்லை. நான் கூடாரத்துடனேயே திரிந்து கொண்டிருந்தேன். இஸ்ரவேலர்களுக்காகச் சிறப்பான தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். அவர்கள், எனது ஜனங்களின் மேய்ப்பர்களைப் போன்றவர்கள். இஸ்ரவேலுக்குள் நான் பல்வேறு இடங்களுக்குத் திரிந்து கொண்டிருந்தபோது, நான் அந்தத் தலைவர்களிடம் எனக்குக் கேதுரு மரங்களால் ஆலயம் கட்டுமாறு சொன்னதில்லை. எனவே நீங்கள் ஏன் கேதுரு மரங்களால் ஆலயம் கட்டவில்லை?’ என்று அவர்களை நான் ஒரு பொழுதும் கேட்டதில்லை.

“இப்போது, இவற்றை என் தொண்டனான தாவீதிடம் கூறு: அவர் சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘நீ, வயல்களில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். என் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உன்னை அரசனாக்கினேன். நீ எங்கே போனாலும் அங்கெல்லாம் நான் உன்னோடு இருந்தேன். நான் உனக்கு முன்னால் போய் உன் பகைவர்களை அழித்தேன். இப்போது, உன்னைப் பூமியிலேயே மிக புகழ்ப்பெற்றவர்களில் ஒருவனாக ஆக்குவேன். இந்த இடத்தை நான் என் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கிறேன். அவர்கள் இதில் மரங்களை நடுவார்கள். அம்மரங்களுக்கு அடியில் சமாதானத்தோடு இருப்பார்கள். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். தீயவர்கள் முன்புபோல அவர்களுக்குத் தீங்கு செய்யமாட்டார்கள். 10 பல தீமைகள் உங்களுக்கு ஏற்பட்டன. ஆனால் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாக்க தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். உங்கள் பகைவர்களையும் தோற்கடிப்பேன்.

“‘கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று நான் உனக்குக் கூறுகிறேன். 11 நீ மரித்த பிறகு, உன் முற்பிதாக்களோடு சேருவாய். பிறகு, உன் சொந்த மகனைப் புதிய அரசன் ஆக்குவேன். அவன் உனது மகன்களில் ஒருவன். அவனது அரசைப் பலமாக்குவேன். 12 உனது மகன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். நான் உனது மகனின் சந்ததியை என்றென்றும் ஆட்சி செலுத்தும்படி செய்வேன். 13 நான் அவனது தந்தையாக இருப்பேன். அவன் எனது மகனாக இருப்பான். உனக்கு முன்பு சவுல் அரசனாக இருந்தான். நான் அவனுக்கு அளித்த ஆதரவை நீக்கினேன். ஆனால் நான் உன் மகன் மீது கொண்ட அன்பை நிறுத்தமாட்டேன். 14 நான் அவனை எனது ஆலயத்திற்கும் அரசாங்கத்திற்கும் என்றென்றும் பொறுப்பாளியாக்குவேன். அவனது ஆட்சி என்றென்றும் தொடர்ந்திருக்கும்!’” என்றார்.

15 நாத்தான் தான் கண்டத் தரிசனத்தை தாவீதிடம் கூறினான். தேவன் சொன்னதையும் கூறினான்.

தாவீதின் ஜெபம்

16 பிறகு தாவீது அரசன் பரிசுத்தக் கூடாரத்திற்குப் போனான். கர்த்தருக்கு முன்பு உட்கார்ந்தான்.

தாவீது, “தேவனாகிய கர்த்தாவே, நீர் எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் எவ்வளவோ செய்திருக்கிறீர். இது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை 17 இவற்றுக்கெல்லாம் மேலாக, எதிர்காலத்தில் என் குடும்பத்திற்கு என்னென்ன நடைபெறும் என்பதையும் நான் அறியுமாறு செய்துவிட்டீர். நீர் என்னை ஒரு மிக முக்கியமான மனிதனாக நடத்தினீர். 18 இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது? நீர் எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறீர். நான் உமது ஊழியன். இதை நீர் அறிவீர். 19 கர்த்தாவே, எனக்காக இந்த அற்புதங்களைச் செய்துள்ளீர். நீர் இவற்றைச் செய்தீர் ஏனென்றால், இவற்றை நீர் விரும்பினீர். 20 உம்மைப்போல் எவருமில்லை கர்த்தாவே. உம்மைத்தவிர வேறு தேவன் இல்லை. வேறு எந்தத் தெய்வமும் இதுபோல் அற்புதங்களைச் செய்ததாக நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை! 21 இஸ்ரவேலைப்போன்று வேறு நாடுகளும் இல்லை. இந்த அதிசயங்களை நீர் செய்த நாடு பூமியிலேயே இஸ்ரவேல் ஒன்று மட்டும்தான். நீர் எங்களை எகிப்திலிருந்து விடுவித்தீர், என்னைச் சுதந்தரமாக்கினீர். உமக்கே நீர் புகழ் சேர்த்தீர்! உமது ஜனங்களுக்கு முன்னால் நீர் சென்றீர். மற்ற ஜனங்கள் தமது நாடுகளை எங்களுக்காக விட்டுச்செல்லும்படி செய்தீர்! 22 இஸ்ரவேல் ஜனங்களை என்றென்றும் உமது ஜனங்களாக ஏற்றுக்கொண்டீர்! கர்த்தாவே, நீர் அவர்களின் தேவனும் ஆனீர்!

23 “கர்த்தாவே, நீர் இந்த வாக்குறுதியை எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் செய்தீர். இப்போது, உமது வாக்குறுதிகளை என்றென்றும் காப்பாற்றுவீர், சொன்னபடியே செய்யும்! 24 நம்பிக்கைக்கு நீர் உரியவர் என்பதைக் காட்டும். ஜனங்கள் உமது நாமத்தை எப்போதும் பெருமைபடுத்துவார்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இஸ்ரவேலரின் தேவன்!’ என்று என்றென்றும் ஜனங்கள் கூறுவார்கள். நான் உமது தொண்டன். எனது குடும்பத்தைப் பலமுள்ளதாக்கி என்றென்றும் உமக்குச் சேவைச் செய்ய அனுமதியும்.

25 “என் தேவனே, உமது ஊழியக்காரனாகிய என்னிடம் பேசினீர். எனது குடும்பத்தை அரச குடும்பம் ஆக்குவீர் என்பதைத் தெளிவாக்கிவிட்டீர். அதனால் நான் தைரியமாய் இருக்கிறேன். அதனால் தான் உம்மிடம் வேண்டுதல்களை வைத்த வண்ணம் இருக்கிறேன். 26 கர்த்தாவே நீரே தேவன், நீரே இந்த நன்மைகளெல்லாம் எனக்குச் செய்வதாகக் கூறிவிட்டீர். 27 கர்த்தாவே! எனது குடும்பத்தை ஆசீர்வதிக்க மனம்கொண்டீர். வாக்களிக்கும் அளவிற்குக் கருணைகொண்டுள்ளீர். எனது குடும்பம் என்றென்றும் உமக்குச் சேவைச் செய்யும் பாக்கியத்தையும் கருணையோடு தந்துள்ளீர். கர்த்தாவே, நீரே எனது குடும்பத்தை ஆசீர்வதித்துவிட்டீர். எனவே எனது குடும்பம் என்றென்றும் ஆசீர்வாதத்திற்கு உட்பட்டது!” என்றான்.

தாவீது பல நாடுகளை வெல்கிறான்

18 பிறகு தாவீது பெலிஸ்தரைத் தாக்கித் தோற்கடித்தான். காத் நகரங்களையும் அதைச் சுற்றியுள்ள சிறு நகரங்களையும் பெலிஸ்தரின் வசமிருந்து கைப்பற்றினான்.

பிறகு தாவீது மோவாப் நாட்டைத் தோற்கடித்தான். மோவாபியர்கள் தாவீதின் வேலைக்காரர்களானார்கள். அவர்கள் தாவீதிற்கு புகழுரைகளைச் செலுத்தினார்கள்.

தாவீது, ஆதாரேசரின் படைகளுக்கு எதிராகவும் சண்டையிட்டான். ஆதாரேசர் சோபா நாட்டின் அரசன். தாவீது, அப்படைகளோடு ஆமாத் நகரத்தின்வரை போரிட்டான். தாவீது இவ்வாறு செய்வதற்குக் காரணம் என்னவென்றால் ஆதாரேசர் தனது அரசை ஐபிராத்து நதிவரை பரப்ப விரும்பினான். தாவீது, ஆதாரேசரிடமிருந்து 1,000 இரதங்களையும் 7,000 இரதமோட்டிகளையும் 20,000 வீரர்களையும் கைப்பற்றினான். ஆதாரேசரின் பெரும்பாலான குதிரைகளைத் தாவீது முடமாக்கினான். அவை தேர் இழுக்கப் பயன்படுவன. ஆனால் தாவீது, அவற்றில் நூறு இரதக் குதிரைகளை மட்டும் வைத்துக்கொண்டான்.

தமஸ்குஸ் நகரத்தில் இருந்து ஆர்மீனியர்கள் ஆதாரேசருக்கு உதவி செய்யவந்தனர். ஆனால் தாவீது, அவர்களையும் தோற்கடித்து 22,000 ஆர்மீனியர்களைக் கொன்றான். பிறகு தாவீது, ஆராமில் உள்ள தமஸ்குஸ் நகரில் கோட்டை அமைத்தான். ஆர்மீனியர்கள் தாவீதின் வேலைக்காரர்களாகி அவனுக்குப் புகழுரைகளைக் கொண்டுவந்தனர். தாவீது எங்கெங்கு போனானோ அங்கெல்லாம் கர்த்தர் அவனுக்கு வெற்றிகளைத் தந்தார்.

தாவீது ஆதாரேசரின் படைத்தளபதிகளிடமிருந்து தங்கள் கேடயங்களைப் பறித்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான். திப்காத்திலும் கூனிலுமுள்ள வெண்கலத்தையும் தாவீது எடுத்து வந்தான். இந்நகரங்கள் ஆதாரேசருக்கு உரியவை. பிறகு சாலொமோன் இந்த வெண்கலத்தை ஆலயத்திற்குரிய வெண்கலத்தொட்டி, தூண், தட்டுமுட்டு போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தினான்.

ஆமாத் நகரத்தின் அரசன் தோயூ. ஆதாரேசர் சோபா நாட்டின் அரசன். தோயூ, தாவீது ஆதாரேசரின் படைகளை வென்றுவிட்டதை அறிந்தான். 10 எனவே, தோயூ அவனது மகனான ஆதோராமை அரசன் தாவீதினிடம் அனுப்பி சமாதானத்தைத் தெரிவித்து ஆசீர்வாதத்தை வேண்டினான். தாவீது ஆதாரேசரின் படைகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்கடித்ததால் அவன் இவ்வாறு நடந்துக்கொண்டான். முன்பு போர்க்களத்தில் ஆதாரேசர் தோயூவோடு இருந்தான். ஆதோராம், தாவீதிற்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவற்றால் செய்யப்பட்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். 11 தாவீது அரசன் அவற்றைப் பரிசுத்தப்படுத்தி கர்த்தருக்கு கொடுத்துவிட்டான். ஏதோம், மோவாப், அம்மோனியர், பெலிஸ்தர், அமலேக்கியர் ஆகியோரிடமிருந்து பெற்ற பொன், வெள்ளி போன்றவற்றையும் தாவீது இவ்வாறே செய்து பரிசுத்தப்படுத்தினான்.

12 உப்பு பள்ளத்தாக்கிலே செருயாவின் மகனான அபிசாயி 18,000 ஏதோமியரைக் கொன்றான். 13 அபிசாயி ஏதோமில் அரண் அமைத்தான். அனைத்து ஏதோமியரும் தாவீதின் வேலைக்காரர்களானார்கள். தாவீது செல்லுமிடங்களில் எல்லாம் கர்த்தர் வெற்றியளித்தார்.

தாவீதின் முக்கிய அதிகாரிகள்

14 தாவீது, அனைத்து இஸ்ரவேலர்களுக்கும் அரசன் ஆனான். அவன் ஒவ்வொருவருக்கும் சரியானதையும், நியாயமானதையும் செய்தான். 15 செருயாவின் மகனான யோவாப் தாவீதின் படைத்தளபதியாக இருந்தான். ஆகிலூதின் மகனாகிய யோசபாத் வரலாறு எழுதுபவனாக இருந்தான். 16 சாதோக்கும், அபிமெலேக்கும் ஆசாரியர்கள். சாதோக் அகிதூபின் மகன். அபிமெலேக் அபியதாரின் மகன். சவிஷா எழுத்துக்காரன். 17 பெனாயா, கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாய் இருந்தான். பெனாயா யோய்தாவின் மகன். தாவீதின் மகன்களும் முக்கிய அதிகாரிகளாய் இருந்தனர். அவர்கள் தாவீதின் பக்கம் தொண்டு செய்தனர்.

ரோமர் 2:1-24

யூதர்களும் பாவிகளே

மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க உன்னால் முடியும் என நீ எண்ணுவாயானால் நீயும் குற்ற உணர்விற்குரியவன்தான். பாவம் செய்பவனாகவும் இருக்கிறாய். அவர்களுக்குத் தீர்ப்பளிக்கிற நீயும் அதே பாவச் செயல்களைச் செய்கிறாய். உண்மையில் நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டமுடியும். இத்தகையவர்களுக்கு தேவன் தீர்ப்பளிப்பார். அவரது தீர்ப்பு நீதியாய் இருக்கும். அத்தவறான செயல்களைச் செய்பவர்களுக்கு நீயும் தீர்ப்பளிக்கிறாய். ஆனால் அதே தவறுகளை நீயும் செய்கிறாய். தேவனுடைய தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பது உனக்குத் தெரியுமா? தேவன் உன்னிடம் மிகக் கருணையோடும் பொறுமையாகவும் இருக்கிறார். அவரிடம் திரும்பி வருவாய் எனக் காத்திருக்கிறார். ஆனால் அவரது கருணையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். ஏனென்றால் உன் இதயத்தையும் வாழ்வையும் நல் வழியில் திருப்பும் அவரது நோக்கத்தை நீ உணர்ந்துகொள்ளவில்லை.

நீ கடினமாகவும் உறுதியாகவும் இருக்கிறாய். நீ மாற மறுக்கிறாய். உன் தண்டனையை மிகுதிப்படுத்துகிறாய். தேவனுடைய கோபம் வெளிப்படும் நாளில் நீ தண்டனையைப் பெறுவாய். அன்று மக்கள் தேவனுடைய சரியான தீர்ப்பினை அறிந்துகொள்வர். ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கேற்றபடி அவனுக்கு தேவன் நற்பலனோ, தண்டனையோ கொடுப்பார். சிலர் தேவனுடைய மகிமைக்காகவும், கனத்துக்காகவும், என்றும் அழிவற்ற வாழ்வுக்காகவும் வாழ்கிறார்கள். நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இத்தகு வாழ்வை அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நித்திய வாழ்வை தேவன் தருகிறார். மற்றவர்களோ சுய நலவாதிகளாகி, உண்மையைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். அவர்கள் பாவத்தின் வழி நடப்பவர்கள். இவர்களுக்கு தேவன் தண்டனையையும், கோபாக்கினையையும் வழங்குவார். முதலில் யூதர்களுக்கும் பின்பு யூதர் அல்லாதவர்களுக்கும், தீங்கு செய்கிற எவருக்கும் தேவன் துயரமும், துன்பமும் கொடுப்பார். 10 முதலில் யூதர்களிலும் பின்பு யூதர் அல்லாதவர்களிலும் நன்மை செய்கிற எவருக்கும் தேவன் மகிமையையும், கனத்தையும், சமாதானத்தையும் தருவார். 11 தேவன் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமாகவே தீர்ப்பளிப்பார்.

12 தேவனுடைய சட்டத்தை அறிந்தவர்களானாலும், அதைப்பற்றிக் கேள்விப்பட்டிராத மக்களாயினும் பாவம் செய்யும்போது ஒத்த நிலை உடையவர்ளாக ஆகிறார்கள். சட்ட அறிவு அற்றவர்களாகவும், பாவிகளாகவும் இருப்பவர்கள் கைவிடப்படுவார்கள். அதேபோல், சட்டம் தெரிந்தும் பாவம் செய்தவர்கள் அதே சட்டத்தின்படி தீர்ப்பளிக்கப்படுவார்கள். 13 ஒருவன் சட்ட அறிவைப் பெறுவதன் மூலம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக முடியாது. சட்டம் சொல்லும் வழி முறைகளின்படி வாழும்போது மட்டுமே தேவனுடைய முன்னிலையில் ஒருவன் நீதிமானாக வாழமுடியும்.

14 யூதரல்லாதவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லை. எனினும் அவர்கள் இயல்பாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது நியாயப்பிரமாணம் இல்லாவிட்டாலும் தங்களுக்குத் தாங்களே நியாப்பிரமாணமாய் இருக்கிறார்கள். 15 அவர்களின் மனதுக்கு எது சரி, எது தவறு என்று தெரிகிறது. அவர்களின் சிந்தனையே குற்றமுள்ளது எது என்றும், சரியானது எது என்றும் கூறுவதினால் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கேற்ற செயல்கள் தங்கள் இதயங்களில் எழுதியிருக்கிறதென்று காட்டுகிறார்கள்.

16 தேவன் மறைவான எண்ணங்களுக்கும் தீர்ப்பளிப்பார். அந்நாளில் மக்களின் மனதுக்குள் இருக்கும் மறை பொருட்கள் வெளிவரும். நான் மக்களுக்குச் சொல்லும் நற்செய்தியின்படி தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் தீர்ப்பளிப்பார்.

யூதர்களும் நியாயப்பிரமாணமும்

17 நீ என்ன செய்யப்போகிறாய்? நீ யூதனென்று சொல்லிக்கொள்கிறாய். நீ நியாயப் பிரமாணத்தில் விசுவாசம் வைத்து தேவனுக்கு நெருக்கமாய் இருப்பதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறாய். 18 தேவன் உனக்கு என்ன செய்ய விரும்புகிறார் என்று உனக்குத் தெரியும். நீ நியாயப்பிரமாணத்தைக் கற்றவனாதலால் உனக்கு எது முக்கியமானது என்றும் தெரியும். 19 என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிற மக்களுக்கு நீங்களே வழிகாட்டி என எண்ணிக்கொள்கிறீர்கள். பாவ இருட்டில் உள்ள மக்களுக்கு நீங்களே வெளிச்சம் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். 20 அறிவற்ற மக்களுக்குச் சரியானதைக் காட்ட முடியும் என்று கருதுகிறீர்கள். இன்னும் கற்கவேண்டிய அவசியம் உள்ளவர்களுக்கு நீங்களே குரு என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் நியாயப்பிரமாணம் இருப்பதால் எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்றும், எல்லா உண்மைகளும் உங்களிடம் இருப்பதாகவும் எண்ணுகிறீர்கள். 21 நீங்கள் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள். நீங்கள் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது? நீங்கள் மற்றவர்களிடம் களவு செய்யக்கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே களவு செய்கிறீர்கள். 22 நீங்கள் மற்றவர்களிடம் விபச்சாரம் செய்யக் கூடாது என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே அதே பாவத்தைச் செய்யும் பாவிகளாக இருக்கிறீர்கள். சிலைகளை நீங்கள் வெறுக்கிறீர்கள். ஆனால் அதே கோவில்களைக் கொள்ளையடிக்கிறீர்கள். 23 நீங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள். ஆனால் அதை மீறி நடந்து தேவனுக்கு அவமானத்தை உருவாக்குகிறீர்கள். 24 “யூதர்களால்தான் யூதர் அல்லாதவர்கள் தேவனைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்” [a] என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.

சங்கீதம் 10:16-18

16 உமது நாட்டிலிருந்து அவர்களை அகற்றும்.
    அப்பொழுது ஆண்டவராகிய நீரே நித்திய ராஜா என்பதை எல்லோரும் உணருவார்கள்.
17 கர்த்தாவே, ஏழை ஜனங்களின் தேவையைக் கேட்டறிந்தீர்.
    அவர்கள் ஜெபங்களைக் கேட்டு, அதன்படி செய்யும்.
18 கர்த்தாவே, பெற்றோரற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும்.
    துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களை மேலும் தொல்லைகளால் வருந்தவிடாதிரும்.
    தீயோர் இங்கு வாழாதபடி அவர்களை அச்சுறுத்தும்.

நீதிமொழிகள் 19:8-9

ஒருவன் உண்மையிலேயே தன்னை நேசித்தால், அறிவைப்பெறக் கடுமையாக உழைக்கவேண்டும். அவன் கடினமாக முயற்சிசெய்து புரிந்துகொள்ளுதலை அடையவேண்டும். அவன் அதற்குரிய வெகுமதியைப் பெறுவான்.

பொய்சாட்சி சொல்பவன் தண்டிக்கப்படுவான். தொடர்ந்து பொய்சொல்பவன் அழிக்கப்படுவான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center