Print Page Options Listen to Reading
Previous Prev Day Next DayNext

The Daily Audio Bible

This reading plan is provided by Brian Hardin from Daily Audio Bible.
Duration: 731 days

Today's audio is from the CEV. Switch to the CEV to read along with the audio.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 4:18-5:27

18 அந்தப் பையன் வளர்ந்தான். ஒரு நாள், அவனது தந்தையும் ஆட்களும் வயலில் அறுவடை செய்துகொண்டிருந்த இடத்துக்கு போனான். 19 அவன் தன் தந்தையிடம், “என் தலை வலிக்கிறது!” என்றான்.

அவனது தந்தை, “இவனைத் தன் தாயிடம் தூக்கிச்செல்லுங்கள்!” என்று வேலைக்காரனிடம் சொன்னான்.

20 வேலைக்காரன் அவனைத் தூக்கிக்கொண்டு தாயிடம் சென்றான். அவன் தாய் மடியில் மதியம்வரை இருந்து, பிறகு மரித்துப்போனான்.

அப்பெண் எலிசாவைப் பார்க்கப் போகிறாள்

21 அப்பெண் மேலறையில் போய் தேவ மனிதனின் படுக்கையில் பையனைக் கிடத்தினாள். அந்த அறையின் கதவுகளை அடைத்துவிட்டு வெளியே போனாள். 22 அவள் கணவனை அழைத்து அவனிடம், “தயவுசெய்து என்னோடு ஒரு வேலைக்காரனையும் கழுதையையும் அனுப்புங்கள். நான் தீர்க்கதரிசியான எலிசாவை வேகமாக அழைத்துக் கொண்டு திரும்பி வரவேண்டும்” என்றாள்.

23 அதற்கு அவளுடைய கணவன், “இன்றைக்கு அந்தத் தீர்க்கதரியிடம் போகவேண்டும் என்று ஏன் விரும்புகிறாய்? இன்று அமாவாசையோ அல்லது ஓய்வு நாளோ இல்லை” என்றான்.

அதற்கு அவள், “கவலைப்பட வேண்டாம் எல்லாம் சரியாகும்” என்றாள்.

24 பிறகு அவள் கழுதையின் மீது சேணத்தைக் கட்டினாள். “வேகமாகப் போ, நான் சொல்லும் போது மட்டும் மெதுவாகச் செல்” என்றாள்.

25 அவள் தேவமனிதனைப் (எலிசாவைப்) பார்க்க கர்மேல் மலைக்குச் சென்றாள்.

எலிசாவும் சூனேமியப்பெண் வெகு தூரத்திலிருந்து வருவதைக் கவனித்தான். அவன் தன் வேலைக்காரனான கேயாசியிடம், “பார், அந்த சூனேமியப் பெண் வருகிறாள். 26 அவளிடம் ஓடிப்போ. ‘என்ன காரியம்? நன்றாக இருக்கிறாயா? கணவன் நலமா? குழந்தை நலமா?’ என்று கேள்” என்றான்.

கேயாசி அவளிடம் ஓடிப்போய் இத்தனையும் கேட்டான். அதற்கு அவள், “எல்லோரும் நலம் தான்” என்றாள்.

27 ஆனாலும் சூனேமியப்பெண் மலை மீது ஏறி எலிசாவிடம் வந்தாள். அவள் அவரது பாதத்தைப் (பணிந்து) பற்றினாள். கேயாசி நெருங்கி வந்து அவளை இழுத்து விலக்கினான். உடனே தேவ மனிதன் (எலிசா), “அவளைத் தனியாகவிடு! அவள் மிகவும் கலங்கிப்போயிருக்கிறாள். அவள் ஆத்துமா துடிக்கிறது. கர்த்தர் என்னிடம் இதைப்பற்றி எதையும் சொல்லவில்லை. கர்த்தர் என்னிடம் இதனை மறைத்துவிட்டார்” என்றான்.

28 அதற்கு அந்தப் பெண், “ஐயா! நான் உம்மிடம் மகனைக் கேட்கவில்லை. ‘என்னை ஏமாற்ற வேண்டாம்’ என்றுதானே சொன்னேன்” என்றாள்.

29 பிறகு எலிசா கேயாசியிடம், “புறப்படுவதற்குத் தயார்செய்! எனது கைத்தடியை எடுத்துக் கொண்டுபோ. பேசுவதற்காக யாரையும் நிறுத்தாதே. யாரையாவது சந்தித்தாலும் நீ அவர்களை நலம் கூடி விசாரிக்க வேண்டாம். யாராவது விசாரித்தாலும் பதில் சொல்லவேண்டாம்! எனது கைத் தடியை அந்த பிள்ளையின் முகத்தில் வை” என்றான்.

30 ஆனால் அவள், “நீங்கள் இல்லாமல் நான் போகமாட்டேன்!” என்றாள்.

எனவே எலிசா எழுந்து அந்த சூனேமியப் பெண்ணோடு போனான்.

31 அவர்களுக்கு முன்னால் கேயாசி அப்பெண்ணின் வீட்டை அடைந்தான். அவன் கைத்தடியை பிள்ளையின் முகத்தில் வைத்தான். ஆனால் அந்தக் குழந்தை பேசவோ பேச்சுக்கு பதிலாக அசையவோ இல்லை. எனவே கேயாசி எலிசாவிடம் ஓடிவந்து, “குழந்தை இன்னும் எழுந்திருக்கவில்லை!” என்று கூறினான்.

சூனேமியப் பெண்ணின் மகன் மீண்டும் உயிரடைகிறான்

32 எலிசா வீட்டிற்கு வந்தான். அவனது படுக்கையில், பிள்ளை மரித்துக்கிடந்தது. 33 அவன் அறையுள் நுழைந்ததும் கதவுகளை அடைத்தான். அவ்வறையில் அவனும் பிள்ளையும் மட்டுமே இருந்தனர். எலிசா கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான். 34 அவன் படுக்கையருகில் சென்று அப்பிள்ளை மேல் படுத்து, தன் வாயை அப்பிள்ளையின் வாயோடு வைத்து, தன் கண்ணை அதன் கண்களோடு வைத்து, தன் கைகளை அதன் கைகளோடு வைத்து நீட்டிப்படுத்தான். அப்பிள்ளையின் உடல் சூடு அடைந்தது.

35 பிறகு எலிசா அறையைவிட்டு வெளியே வந்து வீட்டைச் சுற்றி முன்னும் பின்னும் நடந்தான். பிறகு (அறைக்குள்) போய் பிள்ளை மேல் குப்புறப்படுத்தான். உடனே பிள்ளை ஏழுமுறை தும்மி தன் கண்களை திறந்தான்.

36 பிறகு அவன் கேயாசியிடம், “சூனேமியப் பெண்ணை கூப்பிடு” என்றான்.

கேயாசி அவளை அழைக்க அவளும் வந்தாள். அவன் அவளிடம், “உன் மகனை எடுத்துக்கொள்” என்றான்.

37 பிறகு அந்த சூனேமியப்பெண் அறைக்குள் வந்து எலிசாவின் பாதத்தில் விழுந்து பணிந்தாள். குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.

எலிசாவும் விஷமுள்ள கூழும்?

38 எலிசா மீண்டும் கில்காலுக்கு வந்தான். அப்போது அந்நாட்டில் பஞ்சமாய் இருந்தது. தீர்க்கதரிசிகள் கூட்டமாக எலிசாவின் முன்னர் கூடினார்கள். எலிசா தனது வேலைக்காரனிடம், “பெரிய பாத்திரத்தை நெருப்பில் வை. இவர்களுக்கு கூழ் தயார் செய்” என்றான்.

39 மூலிகைத் தழைகளைச் சேகரிக்கும் பொருட்டு ஒருவன் வயல்வெளிக்குச் சென்றான். அங்கே விஷ திராட்சைக் கொடிகளைக் கண்டான். அக்கொடியில் இருந்து முதிர்ந்த பழங்களைச் சேகரித்துத் தன் மேலாடையின் பையில் நிரப்பிக்கொண்டான். திரும்பிவந்து, பானையில் வைத்து மூடினான். ஆனால் அங்கிருந்த தீர்க்கதரிசிகளுக்கு இவ்விஷயம் பற்றி எதுவும் தெரியாது.

40 பிறகு அதை குடிக்க ஊற்றினார்கள். அவர்கள் குடிக்கப்போகும்போது, “தேவ மனிதனே! இந்தப் பாத்திரத்தில் விஷம் இருக்கிறது” என்று சத்தமிட்டனர். அதனால் அவர்கள் அதனைக் குடிக்க முடியவில்லை.

41 ஆனால் எலிசாவோ, “சிறிது மாவு கொடுங்கள்” என்று கேட்க அவர்கள் கொடுத்தார்கள். அதனை அந்தப் பாத்திரத்தில் அவன் போட்டு, “இப்போது ஜனங்களுக்குச் கூழை ஊற்றுங்கள். அவர்கள் அதை குடிக்கலாம்” என்றான்.

பிறகு அந்தக் கூழில் எந்த குறையும் இல்லை!

தீர்க்கதரிசிகளுக்கு எலிசா உணவளித்தது

42 பாகால்சலீஷாவிலிருந்து ஒருவன் வந்தான். அவன் எலிசாவிற்கு முதல் அறுவடையின் வாற் கோதுமையின் 20 அப்பங்களையும் புதிய கதிர்களையும் தனது கோணிப்பையில் தேவமனிதனுக்கு (எலிசா) கொண்டுவந்தான். எலிசாவோ, “அவற்றை ஜனங்களுக்குக் கொடு. அவர்கள் உண்ணட்டும்” என்றான்.

43 அதற்கு எலிசாவின் வேலைக்காரன், “என்ன? இங்கே 100 பேர்கள் இருக்கிறார்கள். இந்த உணவை எல்லோருக்கும் எப்படி பகிர்ந்தளிக்க முடியும்” என்றான்.

ஆனால் எலிசாவோ, “இந்த உணவை ஜனங்களுக்குக் கொடு. கர்த்தர், ‘அவர்கள் உண்டபிறகும் உணவு மீதியாகும்’ என்று கூறியிருக்கிறார்” என்றான்.

44 பிறகு எலிசாவின் வேலைக்காரன் உணவை ஜனங்களுக்குக் கொடுத்தான். அத்தீர்க்கதரிசிகள் அவற்றை நன்கு உண்டனர். மேலும் உணவு மீதியானது! இவ்வாறு கர்த்தர் சொன்னபடியே நிறைவேறியது.

நாகமானின் பிரச்சனை

நாகமான் என்பவன் ஆராம் அரசனின் படைத் தளபதி ஆவான். அவன் அரசனுக்கு மிகவும் முக்கியமானவன். ஏனெனில் அவன் மூலமாகத்தான் கர்த்தர் ஆராமுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவன் மகா பராக்கிரமசாலியாக இருந்தான். ஆனால் தொழுநோயால் துன்புற்றான்.

ஆராமிய படை பல பிரிவுகளை அனுப்பி இஸ்ரவேலரோடு சண்டையிட்டது. அவர்கள் ஜனங்களை அடிமைகளாகப் பிடித்துவந்தனர். ஒரு தடவை ஒரு சிறு பெண்ணைப் பிடித்துவந்தனர். அவள் நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக இருந்தாள். அவள் தனது எஜமானியிடம், “சமாரியாவில் வாழும் தீர்க்கதரிசியை (எலிசாவை) நமது எஜமான் (நாகமான்) பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.

நாகமானும் அவனது எஜமானிடம் (அரசனிடம்) போய், இஸ்ரவேலியப் பெண் கூறியதைச் சொன்னான்.

ஆராமின் அரசனும், “இப்போதே செல், நானும் இஸ்ரவேல் அரசனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறேன்” என்றான்.

எனவே நாகமான் இஸ்ரவேலுக்குச் சென்றான். தன்னோடு சில அன்பளிப்புகளாக 750 பவுண்டு வெள்ளி, 6,000 தங்கத்துண்டுகள், 10 மாற்றுத்துணிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றான். அதோடு அரசனின் கடிதத்தையும் எடுத்துச்சென்றான். அக்கடிதத்தில், “இப்போது, என் சேவகனான நாகமானை நான் அனுப்பியிருக்கிறேன் என்பதை இக்கடிதம் காட்டும். அவனது தொழுநோயைக் குணமாக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.

இஸ்ரவேல் அரசன் கடிதத்தை வாசித்ததும் வருத்தப்பட்டு தனது ஆடைகளைக் கிழித்தான். தனது வருத்தத்தை வெளிப்படுத்த அவன், “நான் தேவனா? இல்லை. மரணத்தின் மீதும் வாழ்வின் மீதும் எனக்கு அதிகாரமில்லை. அப்படியிருக்க ஆராம் அரசன் என்னிடம் ஒரு தொழுநோயாளியைக் குணப்படுத்த ஏன் அனுப்பினான்? இதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். இது ஒரு தந்திரம்தான். ஒரு போரை ஆரம்பிக்கவே ஆராம் அரசன் முயற்சி செய்கிறான்” என்றான்.

அரசன் வருத்தப்பட்டுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டதைப்பற்றி தேவமனிதனான எலிசா அறிந்தான். உடனே தன் தூதுவனை அனுப்பி, “ஏன் உங்கள் ஆடைகளைக் கிழித்துகொண்டீர்கள், நாகமானை என்னிடம் அனுப்புங்கள். அப்போதுதான் அவர்கள் இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள்வார்கள்!” என்று தெரிவித்தான்.

ஆகவே, நாகமான் தனது குதிரைகளோடும் இரதங்களோடும், எலிசாவின் வீட்டிற்கு வந்து கதவிற்கு வெளியே நின்றான். 10 எலிசா நாகமானிடம் ஒரு தூதுவனை அனுப்பினான். அத்தூதுவன் நாகமானிடம், “போய் யோர்தான் ஆற்றில் ஏழுமுறை ஸ்நானம்பண்ணு. பின் உன் தோல் குணமாகும். நீயும் சுத்தமாவாய்” என்று கூறினான்.

11 நாகமான் மிகவும் கோபப்பட்டு வெளியேறினான். அவன், “அவர் (எலிசா) வெளியே வந்து என் முன்னால் நிற்பார். அவரது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் கூறுவார். எனது உடல் மீது தனது கைகளை அசைத்து நோயைக் குணப்படுத்துவார் என்று நினைத்தேன். 12 இஸ்ரவேலில் கிடைக்கும் எல்லா தண்ணீரையும்விடவும் ஆப்னா, பர்பாரும் ஆகிய தமஸ்குவின் ஆறுகள் சிறந்தவை. அப்படியிருக்க நான் ஏன் அவற்றில் ஸ்நானம் பண்ணி சுத்தமடையக் கூடாது?” என்றவாறு கோபத்தோடு திரும்பிப் போனான்.

13 ஆனால் நாகமானின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, “தந்தையே! தீர்க்கதரிசி உம்மிடம் சில பெருஞ்செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தால், நீர் செய்திருப்பீரல்லவா? எனவே அவர் எளிதானவற்றைச் சொன்னாலும் அதற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் (தீர்க்கதரிசி), ‘ஸ்நானம் பண்ணு நீ சுத்தமடைவாய்’ என்று கூறியிருக்கிறார்” என்றனர்.

14 எனவே நாகமான் தேவமனிதன் (தீர்க்கதரிசி எலிசா) சொன்னவாறு செய்தான். அவன் போய் யோர்தான் ஆற்றில் ஏழு தடவை மூழ்கி சுத்தமானான்! அவனது தோல் குழந்தையின் தோலைப் போன்று மென்மையாயிற்று.

15 நாகமானும் அவனது குழுவும் தேவ மனிதனிடம் (எலிசாவிடம்) திரும்பி வந்தனர். நாகமான் எலிசாவின் முன் நின்று, “உலகம் முழுவதிலும் பாரும், இஸ்ரவேலைத் தவிர வேறெங்கும் தேவன் இல்லை என்பதைத் தெரிந்துக்கொண்டேன்! இப்போது உமது வேலையாளான என்னிடமிருந்து அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!” என்றான்.

16 ஆனால் எலிசாவோ, “நான் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறேன். நான் எவ்வித அன்பளிப்புகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன், என்று கர்த்தர் மீது ஆணையிட்டுள்ளேன்” என்றான்.

நாகமான் எவ்வளவோ முயன்று பார்த்தான். எலிசாவோ அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 17 பிறகு நாகமான், “எனது அன்பளிப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எனக்காக இதைச் செய்யுங்கள். நான் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கும்படி இஸ்ரவேலிலிருந்து மண் எடுத்துச்செல்ல அனுமதிக்கவேண்டும். ஏனெனில் இனிமேல் நான் கர்த்தரைத் தவிர வேறு எந்த தெய்வங்களுக்கும் காணிக்கையும் பலிகளையும் தகன பலியையும் அளிக்கமாட்டேன்! 18 இதற்காக என்னை மன்னிக்கும்படி இப்போழுது கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன். என் எஜமான் (அரசன்) போலித் தெய்வமான ரிம்மோனின் ஆலயத்திற்குள் போய் தொழுகைச் செய்யும்போது நானும் அவனோடு போகவேண்டியதிருக்கும். என் மீது சாய்ந்துக்கொள்ள அரசன் விரும்புவான். எனவே அந்த ரிம்மோனின் ஆலயத்திற்குள் வணங்கிக் குனியவேண்டியதிருக்கும் அதற்காக இப்போதே கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.

19 பிறகு எலிசா நாகமானிடம், “சமாதானமாகப் போ” என்றான். எனவே அவன் எலிசாவை விட்டுவிட்டு கொஞ்ச தூரம் போனான். 20 ஆனால் தேவமனிதனின் (எலிசாவின்) வேலைக்காரனான கேயாசி, “பாருங்கள் எனது எஜமானன் (எலிசா) ஆராமியனான, நாகமானிடமிருந்து அவன் கொண்டுவந்த எவ்வித அன்பளிப்புகளையும் பெற்றுக்கொள்ளாமல் போக அனுமதித்திருக்கிறார்! நான் அவன் பின்னால் ஓடிப்போய் கொஞ்சம் பெற்றுக்கொள்ள வேண்டும்!” என்று கூறி, 21 நாகமானின் பின்னால் ஓடினான். இவன் வருவதைக் கவனித்த நாகமான். இரதத்திலிருந்து இறங்கி, “எல்லாம் சரியாய் உள்ளதா?” என்று கேட்டான்.

22 அதற்கு கேயாசி, “எல்லாம் சரியாக உள்ளது. எனது எஜமானர் அனுப்பினார். தீர்க்கதரிசிகளின் குழுவில் இருந்து இரண்டு இளைஞர்கள் எப்பிராயீம் மலைநாட்டிலிருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு தயவுசெய்து 75 பவுண்டு வெள்ளியும் இரண்டு மாற்று ஆடைகளையும் கொடுக்கவேண்டும்” என்றான்.

23 அதற்கு நாகமான், “தயவு செய்து 150 பவுண்டு வெள்ளியை எடுத்துக்கொள்க” என்றான். பின் அவனை (எடுக்க) அவசரப்படுத்தி இரண்டு பைகளில் இரண்டு தாலந்த வெள்ளியையும் இரண்டு மாற்று ஆடைகளையும் கட்டினான். பிறகு நாகமான் இவற்றை அவனது இரண்டு வேலைக்காரர்களிடம் கேயாசிக்குத் தூக்கி வரும்படி கொடுத்தான். 24 கேயாசி குன்றுக்கருகில் வந்ததும் வேலைக்காரர்களிடம் இருந்து அவற்றை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டான். தன் வீட்டிற்குள் அவற்றை மறைத்தான்.

25 அவன் வந்து எஜமான் (எலிசாவின்) முன் நின்றதும் எலிசா அவனிடம், “எங்கே போயிருந்தாய் கேயாசி?” எனக் கேட்டான்.

அதற்கு கேயாசி, “எங்கும் போகவில்லையே!” என்றான்.

26 எலிசா அவனிடம், “இது உண்மை இல்லை! நாகமான் இரதத்திலிருந்து இறங்கி உன்னை எதிர்கொண்டபோதே என் மனம் உன்னோடு வந்துவிட்டதே. பணம், ஆடை, ஒலிவ எண்ணெய், திராட்சை, ஆடு, பசுக்கள், ஆண்கள் அல்லது பெண்கள் அடிமைகள் போன்றவற்றை அன்பளிப்பாகப் பெறும் காலம் இதுவல்ல. 27 இப்போது நீயும் உன் பிள்ளைகளும் நாகமானின் நோயைப் பெறுவீர்கள். உனக்கு இனி எப்போதும் தொழுநோய் இருக்கும்!” என்றான்.

கேயாசி எலிசாவை விட்டு விலகியதும் அவனது, தோல் பணியைப்போன்று வெளுத்தது! அவன் தொழுநோயாளியானான்.

அப்போஸ்தலர் 15:1-35

எருசலேமில் சந்திப்பு

15 பின்பு யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்குச் சில மனிதர் வந்தனர். யூதரல்லாத சகோதரருக்கு அவர்கள் “நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள். இதைச் செய்யும்படியாக மோசே நமக்குக் கற்பித்தார்” என்று போதிக்க ஆரம்பித்தனர். பவுலும் பர்னபாவும் இந்தப் போதனையை எதிர்த்தனர். அதைக் குறித்து இந்த மனிதரிடம் அவர்கள் விவாதித்தனர். எனவே அந்தச் சபையார் பவுலையும் பர்னபாவையும், வேறு சில மனிதர்களையும் எருசலேமுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். அங்கிருந்த அப்போஸ்தலரிடமும் மூப்பர்களிடமும் இதைக் குறித்து அதிகமாகப் பேசப் போகிறவர்களாக இந்த மனிதர்கள் இருந்தார்கள்.

அவர்கள் பயணத்திற்கு சபை உதவிற்று. பெனிக்கே, சமாரியா ஆகிய தேசங்களின் வழியாக அம்மனிதர்கள் சென்றனர். யூதரல்லாத மக்கள் உண்மையான தேவனிடம் திரும்பியது குறித்த அனைத்தையும் அவர்கள் கூறினர். இது எல்லா சகோதரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. பவுலும் பர்னபாவும் பிறரும் எருசலேமை வந்தடைந்தனர். அப்போஸ்தலரும், மூப்பர்களும் விசுவாசிகள் அனைவரும் சேர்ந்து அவர்களை வரவேற்றனர். பவுலும் பர்னபாவும், பிறரும் தேவன் தங்களிடம் செய்த அனைத்துக் காரியங்களையும் கூறினர். எருசலேமின் விசுவாசிகளில் சிலர் பரிசேயர்கள். அவர்கள் எழுந்து “யூதரல்லாத விசுவாசிகள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு அவர்களுக்குக் கூற வேண்டும்” என்று கூறினர்.

அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி, “சகோதரர்களே, தொடக்கக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நீங்கள் நினைவுகூருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியைப் போதனை செய்வதற்கு அப்போது உங்களுக்கிடையிலிருந்து தேவன் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் என் மூலமாக நற்செய்தியைக் கேட்டு விசுவாசம் வைத்தனர். தேவன் மனிதரின் எண்ணங்களை அறிவார். அவர் யூதரல்லாத மக்களையும் ஏற்றுக்கொண்டார். எங்களுக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து தேவன் இதனைக் காட்டினார். இந்த மனிதர்கள் தேவனுக்கு நம்மிலிருந்தும் வேறுபட்டவர்களல்லர். அவர்கள் விசுவாசம் வைத்தபோது, தேவன் அவர்கள் இருதயங்களை பரிசுத்தமுறச் செய்தார். 10 எனவே யூதரல்லாத விசுவாசிகளிகளின் கழுத்தில் ஏன் பெரும் பாரத்தைச் சுமத்துகிறீர்கள். தேவனைக் கோபப்படுத்த நீங்கள் முயன்றுகொண்டிருக்கிறீர்களா? அந்தப் பாரத்தைச் சுமப்பதற்கு நமக்கும் நமது முன்னோர்களுக்கும் வலிமை இருக்கவில்லை! 11 நாமும் இந்த மக்களும் கர்த்தராகிய இயேசுவின் கிருபையினாலே இரட்சிக்கப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.” என்றான்.

12 அப்போது அந்தக் கூட்டம் முழுமையும் அமைதியாயிற்று. பவுலும் பர்னபாவும் பேசுவதைக் கவனித்தனர். யூதரல்லாத மக்களின் மத்தியில் தேவன் அவர்கள் மூலமாகச் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் விவரித்தார்கள். 13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.

16 “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன்.
    தாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன்.
    அது விழுந்துவிட்டது.
அந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன்.
    அவனது வீட்டைப் புதியதாக்குவேன்.
17 பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர்.
    யூதரல்லாத மக்களும் என் மக்களே.
கர்த்தர் இதைக் கூறினார்.
இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’(A)

18 “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன.

19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:

‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.

பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.

இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’

21 ஒவ்வொரு நகரத்திலும் மோசேயின் சட்டத்தைப் போதிக்கும் மனிதர்கள் இருப்பதால், அவர்கள் இவற்றைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு ஓய்வு நாளன்றும் மோசேயின் போதனைகள் ஜெப ஆலயத்தில் படிக்கப்படுகின்றன. இவ்வாறு எழுதப்படவேண்டும்” என்று கூறினான்.

யூதரல்லாத சகோதரருக்குக் கடிதம்

22 பவுல், பர்னபா ஆகியோருடன் அந்தியோகியாவுக்குச் சில மனிதர்களை அனுப்பவேண்டுமென அப்போஸ்தலரும், மூப்பரும், சபையினர் எல்லோரும் முடிவு செய்தார்கள். அக்கூட்டத்தினர் தங்களில் சிலரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பர்சபா என்ற யூதாவையும், சீலாவையும் தேர்ந்தெடுத்தனர். எருசலேமின் சகோதரர்கள் அவர்களை மதித்தனர். 23 அக்கூட்டத்தினர் அவர்கள் மூலமாக அக்கடிதத்தை அனுப்பினார்கள். அக்கடிதம் கூறியது:

அப்போஸ்தலர்கள், மூப்பர்கள், சகோதரர்களிடமிருந்து,

அந்தியோகியாவிலும், சிரியாவிலும், சிலிசியாவிலுமுள்ள

அன்பான யூதரல்லாத சகோதரருக்கு:

24 எங்கள் கூட்டத்திலிருந்து சில மனிதர்கள் உங்களிடம் வந்தார்கள் எனக் கேள்விப்பட்டோம். அவர்கள் கூறிய காரியங்கள் உங்களைத் தொந்தரவு செய்து உங்கள் மனங்களை நிலைகுலையச் செய்துள்ளன. ஆனால் அவற்றைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களுக்குக் கூறவில்லை. 25 சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்து உங்களிடம் அனுப்புவதென நாங்கள் எல்லோரும் முழு மனதாக முடிவு செய்துள்ளோம். நமது அன்பான நண்பர்களாகிய பர்னபா, பவுல் ஆகியோரோடு அவர்களும் இருப்பார்கள். 26 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சேவைக்காக பர்னபாவும் பவுலும் தங்கள் பிராணனையே கொடுத்துள்ளார்கள். 27 எனவே அவர்களோடு யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம். அவர்கள் வாய் வார்த்தைகளினால் அவற்றை உங்களுக்கு உறுதிசெய்வார்கள். 28 உங்கள் மீது இன்னும் அதிகமான பாரங்கள் விதிக்கப்படலாகாதென பரிசுத்த ஆவியானவர் முடிவு செய்தார். நாங்களும் அதை ஆமோதிக்கிறோம். நீங்கள் செய்யத் தேவையான இந்தக் காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும்.

29 விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடாதீர்கள்.

இரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களைச் சாப்பிடாதீர்கள்.

பாலியல் பாவங்களில் ஈடுபடாதீர்கள்.

இத்தகைய காரிங்களில் நீங்கள் உங்களை

ஈடுபடுத்தாதிருந்தால் நல்லது.

30 எனவே பவுல், பர்னபா, யூதா, சீலா ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்றனர். அவர்கள் அந்தியோகியாவுக்குச் சென்றனர். அந்தியோகியாவில் விசுவாசிகளைக் கூட்டி அக்கடிதத்தைக் கொடுத்தனர். 31 விசுவாசிகள் அதை வாசித்தபோது மகிழ்ச்சியடைந்தனர். அக்கடிதம் அவர்களுக்கு ஆறுதல் அளித்தது. 32 யூதாவும் சீலாவும்கூடத் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். சகோதரர்கள் வலிமைபெற உதவுவதற்காக அவர்கள் பல காரியங்களைக் கூறினர். 33 அவர்கள் சகோதரரிடமிருந்து அமைதியின் வாழ்த்தைப் பெற்றனர். யூதாவும் சீலாவும் எருசலேமில் தங்களை அனுப்பிய சகோதரரிடம் சென்றனர். 34 [a]

35 ஆனால் பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவில் தங்கினர். அவர்களும் இன்னும் பலரும் தேவனுடைய செய்தியைக் கற்பிக்கவும் உபதேசிக்கவும் செய்தார்கள்.

சங்கீதம் 141

தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று

141 கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன்.
    நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும்.
    விரைவாக எனக்கு உதவும்!
கர்த்தாவே, என் ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும்.
    எரியும் நறுமணப் பொருள்களின் பரிசைப் போலவும், மாலையின் பலியாகவும் அது இருக்கட்டும்.

கர்த்தாவே, நான் கூறுபவற்றில் கட்டுப்பாட்டோடிருக்க எனக்கு உதவும்.
    நான் கூறுபவற்றில் கவனமாக இருக்க எனக்கு உதவும்.
தீயவற்றை செய்ய நான் விரும்பாதிருக்கும்படி பாரும்.
    தீயோர் தவறுகளைச் செய்யும்போது அவர்களோடு சேராதிருக்குமாறு என்னைத் தடுத்துவிடும்.
    தீயோர் களிப்போடு செய்யும் காரியங்களில் நான் பங்குகொள்ளாதிருக்கும்படி செய்யும்.
நல்லவன் ஒருவன் என்னைத் திருத்த முடியும்.
    அது அவன் நற்செயலாகும்.
உம்மைப் பின்பற்றுவோர் என்னை விமர்சிக்கட்டும்.
    அது அவர்கள் செய்யத்தக்க நல்ல காரியமாகும்.
    நான் அதை ஏற்றுக்கொள்வேன்.
    ஆனால் தீயோர் செய்யும் தீயவற்றிற்கெதிராக நான் எப்போதும் ஜெபம் செய்கிறேன்.
அவர்களின் அரசர்கள் தண்டிக்கப்படட்டும்.
    அப்போது நான் உண்மை பேசினேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
ஜனங்கள் நிலத்தைத் தோண்டி உழுவார்கள், சேற்றை எங்கும் பரப்புவார்கள்.
    அவ்வாறே கல்லறையில் எங்கள் எலும்புகளும் எங்கும் பரந்து கிடக்கும்.
என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன்.
    நான் உம்மை நம்புகிறேன்.
    தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும்.
தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள்.
    அவர்கள் கண்ணிகளில் நான் விழாதபடி செய்யும்.
    அவர்கள் என்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தாதபடி பாரும்.
10 நான் பாதிக்கப்படாது நடந்து செல்கையில் கெட்ட
    ஜனங்கள் தங்கள் கண்ணிக்குள் தாங்களே விழட்டும்.

நீதிமொழிகள் 17:23

23 தீயவன் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக இரகசியமாகப் பணத்தைப் பெறுகிறான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center